மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APP

கேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APP
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APP

கேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APP

``இந்தியப் பெற்றோர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், அதுவே கொஞ்சம் அதிகமாகி பிள்ளைகள்மீது அழுத்தத்தைத் தந்துவிடும். அந்தப் பிரச்னைக்கு இப்போது நீங்களும் ஒரு காரணம் ஆகிவிட்டீர்கள் என நினைக்கிறீர்களா?”

கேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APP

பைஜூ ரவீந்திரனால் இந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. தேர்வறையில், கேள்வித்தாளில் இருந்த கேள்விக்குப் பதில் தெரியாத மாணவர்போல சில நொடிகள் முழித்தார். ரவீந்திரனின் பதில் என்னவெனத் தெரிந்துகொள்ளும் முன் அவரைப் பற்றியும் அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என்பதையும் நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

Byju’s என்பது இந்தியாவின் மிக முக்கியமான, மிகப்பெரிய கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப். Fall in love with learning (கற்றலைக் காதலிப்போம்) என்பதுதான் அவர்கள் டேக்லைன். இன்றைய தேதியில் அவர்களின் மதிப்பு 2 பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதாகக் கணிக்கப்படுகிறது. இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 15,000 கோடி.

ரவீந்திரனின் சொந்த ஊர் கேரளாவில் இருக்கும் ஒரு கிராமம். அங்கே குடும்பம் என்பது மொத்த ஊரும்தான். கம்யூனிசக் குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, சமூகத்தின் மீது அதிக கவனம் சிறுவயது முதலே. அப்பாவும் ஆசிரியர்; அம்மாவும் ஆசிரியர். ஒருவர் ஆசிரியராக இருந்தாலே “படி படி” என்பது மட்டுமே ஆசையாக, விருப்பமாக, எதிர்பார்ப்பாக, கட்டளையாக இருக்கும். ஆனால், ரவீந்திரனின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்களாக இருந்தும் அவர்கள் ``படி படி” என நச்சரிக்கவில்லை. அவரை, அவருக்குப் பிடித்த விளையாட்டுகளில் கவனம் செலுத்த அனுமதித்தனர். விளையாட்டுதான் ரவீந்திரனுக்கு முதல் விருப்பம்; கல்வி இரண்டாவதுதான். ரவீந்திரனின் விருப்பம்தான் அவர் பெற்றோருக்கு முதன்மை; கல்வி அடுத்ததுதான். வகுப்பறைக்கு வெளியேதான் வாழ்க்கைக்கல்வி இருக்கிறது என்பதை மகனும் பெற்றோரும் உணர்ந்திருந்தார்கள். விளையாட்டுதான் தனக்குத் தலைமைப்பண்பையும், டீம் வொர்க்கையும் சொல்லித் தந்தது என்கிறார் ரவீந்திரன். இருந்தாலும் விளையாட்டை அவர் வாழ்க்கையாகக் கருதவில்லை. பள்ளிக்காலம் முடிந்ததும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். படித்து முடித்ததும் வேலை கிடைத்தது. பெரும்பாலும் வெளிநாட்டிலே சுற்றும் வேலை. 

கேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APP

ரவீந்திரனுக்குக் கணக்கு பிடிக்கும். அதனால், கணக்கின் அடிப்படையில் வரும் கேள்விகளுக்குப் பதில் தருவது அவருக்கு விருப்பமான பொழுதுபோக்கானது. ஐ.ஐ.டி உட்பட இந்தியாவின் முன்னணிக் கல்வி நிலையங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CAT தேர்வில் அப்படி நிறைய கேள்விகள் வரும். அது ரவீந்திரனுக்கு விருப்பமான தேர்வு. அவர் நண்பர்களில் CAT தேர்வு எழுத விரும்பியவர்கள் ரவீந்திரனிடம் உதவி கேட்டனர். ``கரும்பு தின்னக் கூலியா” என அவரும் ஜாலியாக அந்த வேலையைச் செய்தார். “சும்மா நாமும் எழுதிப் பார்க்கலாமே” என அவரும் CAT தேர்வை எழுத, அவர் அடித்தது செஞ்சுரி. அவர் பாடமெடுத்த நண்பர்களுக்கும் நல்ல மதிப்பெண்கள். அதன்பின், மீண்டும் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 2005-ல் இந்தியாவுக்குத் திரும்பியவரை இன்னும் சில நண்பர்கள் மொய்த்தார்கள். அவர்களுக்கும் CAT தேர்வில் வெல்ல வேண்டுமென ஆசை. ரவீந்திரன் ‘நோ’ சொல்லவில்லை. அவர்களும் வெற்றிபெற்றார்கள். அதுதான் ரவீந்திரனின் திருப்புமுனைத் தருணம். அவர் `ஜீபூம்பா’ வெளியே குதித்த தருணம். “அப்பா அம்மா மாதிரி நாமளும் நல்ல ஆசிரியர்தான் போலிருக்கே” என நினைத்தார் ரவீந்திரன். பள்ளியில் விளையாட்டுதான் முக்கியம் என நினைத்தபோது அதைச் செய்தவர், நல்ல வேலையிலிருக்கும்போது “நமக்குச் சொல்லிக்கொடுக்குறதுதான் செட் ஆகும்” என நினைத்தார். நினைத்ததைச் செய்வதுதான் ரவீந்திரனின் பழக்கம். வேலையை விட்டுவிட்டார்.

கேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APP

மற்ற கோச்சிங் கிளாஸ்களிலிருந்து, மற்ற ஆசிரியர்களிடமிருந்து அவர் பாணி எங்கே வேறுபடுகிறது எனக் கவனித்தார். மற்றவர்கள் முந்தைய ஆண்டுக் கேள்வித்தாள்களிலிருந்து ஒரு பேட்டர்னைக் கண்டறிகிறார்கள். அதனடிப்படையில் மாணவர்களைத் தயார் செய்கிறார்கள். ஆனால் ரவீந்திரனோ, கேள்வியின் அடிப்படையை ஆராய்ந்தார். அதை மாணவர்களுக்குச் சொல்லித் தந்தார். ``நிறைய கேள்விகள் கேட்பதுதான் கற்றலின் அடிப்படை. அதை சக மாணவர்களிடம் கேட்பதைவிட, ஆசிரியர்களிடம் கேட்பதைவிட, உங்களுக்கு நீங்களே கேளுங்கள்” என்பார் ரவீந்திரன். கற்றலின் மீது ஆர்வம் அதிகமானால்தான் அது சாத்தியம். அதை வளர்க்கவே ரவீந்திரன் விரும்பினார்.

பள்ளி, கல்லூரிகளில் எந்த செமினாரும் எடுக்காதவருக்காக எல்லா ஊரிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருந்தார்கள். ஊர் ஊராகப் பறந்தார். முதல் வகுப்பு இலவசம். அது பிடித்திருந்தால் அடுத்து அட்வான்ஸ் வகுப்பு. அதற்குப் பணம் கட்டினால் போதும். பைஜூவின் இலவச வகுப்பில் கற்ற மாணவர்கள் யாரும் அதை வேண்டாமெனச் சொன்னதில்லை. அவருக்குத் தெரியாமலே “பைஜூஸ் கிளாஸஸ்” என்பது ஒரு பிராண்டாக மாறியது. ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் உருவானது. அப்போது தன் வகுப்புகளை வீடியோவாக மாற்ற முடிவு செய்தார். அது இன்னும் கூடுதல் வருமானம் தந்தது. இந்தியாவில், ஓர் ஆசிரியர் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு பைஜூ சம்பாதித்தார். ஒரு சிறிய அறையில் தொடங்கிய பைஜூவின் வகுப்பறை வெளியே ஹாலுக்கு வந்தது; பின் கொஞ்சம் பெரிதாகி ஒரு வீட்டையே ஆக்கிரமித்தது. இன்னும் வளர்ந்து ஒரு ஆடிட்டோரியமே வகுப்பறையாக மாறிப்போனதெல்லாம் ரவீந்திரன் என்ற ஆசிரியரின் மிகப்பெரிய சாதனை.

`பைஜூஸ் கிளாஸ்’ பற்றிக் கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களில் ஒருவர்தான் பிரகாஷ். பிரகாஷுக்கு CAT தேர்வு எழுதுவது ஒரு வித அடிக்‌ஷன். தான் விரும்பிய மதிப்பெண் அடையும்வரை, ஐந்தாண்டுகள் தொடர்ந்து எழுதினார். ஆனாலும், இந்தியாவின் முன்னணிக் கல்வி நிலையங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை. ரவீந்திரனிடம் வந்தார். அந்த ஆண்டு அவருக்குக் கிடைக்காத கல்லூரியே இல்லை. நன்றி சொல்வதற்காக ரவீந்திரனை அழைத்தவருக்கு, ஆச்சர்யம் காத்திருந்தது. “என்கிட்ட வேலைக்குச் சேர்ந்துக்கிறியா?” என்றார் ரவீந்திரன். பிரகாஷ் யோசிக்கவேயில்லை. 2011-ல் பைஜூ நிறுவனமாக வளர்ந்தது. பைஜூவின் மார்க்கெட்டிங் பிரிவுக்கு பிரகாஷ் பொறுப்பேற்றார்.

பைஜூ நிறுவனத்தின் மிக முக்கியமான பொறுப்பிலிருக்கும் எல்லோருமே ரவீந்திரனின் மாணவர்கள் என்பதுதான் சிறப்பு. இன்னொரு மாணவியான திவ்யா கோகுல்நாத்தும் அப்படித்தான். ரவீந்திரனின் கற்றல் முறையில் ஈர்க்கப்பட்ட திவ்யா, பைஜூ நிறுவனத்துடன் மட்டுமல்ல, பைஜூவுடனே கைகோத்தார்.  இன்று, திவ்யா ரவீந்திரனின் மனைவி.

தொழில்நுட்பம் உலகை மாற்றிய மிக முக்கியமான கருவி. பலரால் புரிந்துகொள்ள முடியாத, சாத்தியமில்லாத பல விஷயங்களை எளிமையாக்கியது தொழில்நுட்பம்தான். கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு பெரியது. அது, கற்றல்மீது மாணவர்களுக்கு இருக்கும் ஒவ்வாமையைப் போக்கும் என நம்பினார் ரவீந்திரன். கைப்பேசிகள் உலகை ஆக்ரமித்துவிட்டதை உணர்ந்தவர் 2015-ல் `பைஜூஸ்’ செயலியை உருவாக்கினார். அதே கான்செப்ட்தான். ஆப் இலவசம்; அதன்பின் வகுப்புகளைக் காண, பணம் கட்ட வேண்டும்.

கற்றல் என்பது ஒரு குணம். அது சிறுவயதிலே வளர்க்கப்பட வேண்டியது என பைஜூஸ் டீம் நம்பியது. எனவே அவர்கள் கவனம் பள்ளிகளின்  பக்கமாகத் திரும்பியது, பைஜூஸ் ஆப் வந்தபோது பட்டதாரிகளுக்கு மட்டுமன்றி 6 - 12 வகுப்புகளுக்கான பாடங்களையும் சேர்த்துக்கொண்டார்கள்.

பைஜூஸ் வளர முதலீடு தேவை. முதலீட்டுக்கு ஆள் வேண்டும். “கல்விக்காக இவ்வளவு தொகையைப் பெற்றோர்கள் செலவு செய்வார்களா” என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றியது கல்விதான். கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களை வறுமையிலிருந்து தரமுயர்த்தியது கல்விதான். ஒரு சராசரி நடுத்தர இந்தியப் பெற்றோர் கார் வாங்க முடிந்தால்கூட யோசிப்பார்கள்; நிலம் வாங்கிப்போடத் தயங்குவார்கள். ஆனால், பிள்ளைகளின் கல்விக்காகத் தாலியை அடகு வைக்கக்கூடத் தயங்க மாட்டார்கள். பைஜூ, கல்வியின் முக்கியத்துவத்தையும் இந்தியப் பெற்றோர்களின் மனநிலையையும் எடுத்துச் சொன்னார். அதேசமயம், மற்ற ஸ்டார்ட் அப்கள்போல இதில் வருமானம் முதல் நோக்கமாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படையாகச் சொன்னார். புரிந்துகொண்டவர்கள் கோடிகளைக் கொட்டினார்கள். பைஜூ வேகமாக வளர்ந்து இன்று இந்தியாவின் வலிமையான கல்விசார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக மாறியிருக்கிறது.  இந்தியா தாண்டி மேலும் பல நாடுகளுக்கு பைஜூ விரிவடைந்திருக்கிறது.

கற்றல் குறித்து மாணவர்கள் பயப்படத் தேவையில்லை. மன அழுத்தம் தேவையில்லை. தேர்வில் வெற்றி என்பது பெற்றோருக்கு விருப்பமாக இருக்கலாம். ஆனால், அதை மகிழ்ச்சியுடன் செய்வதே மாணவர்களின் விருப்பம். பைஜூ என்ற பிராண்ட் பெற்றோர்களால் உருவானதல்ல, அது மாணவர்களால் உருவாக்கப்பட்டது. ரவீந்திரனால் கற்றல் என்பது அவர்களுக்குப் பிடித்துப்போனது. அதனால்தான் சக மாணவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தினார்கள்.

`பைஜூ பெற்றோர்களை பயமுறுத்திப் பணம் சம்பாதிக்கிறது, அது ஒரு ஆன்லைன் ட்யூஷன் சென்டர்’ என ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப் படுகிறது. தன் பெற்றோர்கள் மூலம் அதற்கு விடை சொல்கிறார் ரவீந்திரன். அவர்கள், ரவீந்திரன் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தந்தபோது சரியெனச் சொன்னவர்கள். அதுதான் ரவீந்திரனை உருவாக்கியது; வெற்றிபெற உதவியது. அதை ரவீந்திரன் என்றும் மறக்க மாட்டார்.

முதல் பத்தியில், ரவீந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் இதுதான்: “நான் மாணவர்களை மேலும் மேலும் பயமுறுத்தும் ஆசிரியர் இல்லை. கற்றலைக் காதலிக்க வைக்கும் ஆசிரியர்.”

பைஜூவுக்குக் கிடைக்கும் லட்சக்கணக்கான பரிந்துரைகளே அதை நிஜமெனச் சொல்கின்றன.

கார்க்கி பவா