கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

சிக்ஸர் அடிக்கும் சிஸர்!

சிக்ஸர் அடிக்கும் சிஸர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்ஸர் அடிக்கும் சிஸர்!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 13 - தொடர்

ந்தக் கத்தரிக்கோலைப் பாருங்கள்... எவ்வளவு அழகாக இருக்கிறது? தலையில் தண்ணீரைச் சில்லென்று ஸ்ப்ரே செய்து, ஒரு கையில் சீப்பையும் மறுகையில் கத்தரிக்கோலையும் வைத்து `கறக் கறக்’  என்று தலை முடியை வெட்டும் ஒலி, ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறதல்லவா? ஒரு கையால் சீவி விட்டுக்கொண்டே மறுகையால் கத்தரியை வைத்துக்கொண்டு ஸ்டைலாக காற்றை வெட்டும் முடிதிருத்துநரை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம். துணிக்கடையில், பெரிய சைஸ் கத்தரிக்கோலால் துணியை ஒரே நேர்க்கோட்டில் சர்ரென்று கிழிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். அந்தக் கத்தரிக்கோல் நல்ல கனமானதாகவும் நெடுநாட்கள் உழைத்ததால், பழுப்படைந்ததாகவும் இருக்கும். துணிக்கடைக்கு வெளியே டெய்லர் கடைகளில், அதே போன்ற ஒரு கனமான கத்தரி, நிதானமாக வளைந்து வளைந்து துணி மீது வரையப்பட்ட கோடுகளைத் துல்லியமாக நறுக்கும். சிறிய பெரிய அளவுகள்; பல்வேறுபட்ட பயன்பாடுகள்; வெகுவாகப் புரிந்துகொண்டு எளிதாகக் கையாளும் வடிவமைப்பு; பார்க்கத்தான் எத்தனை அழகு... கச்சிதமாக பேலன்ஸ் செய்யப்பட்ட கோணங்கள்.

சிக்ஸர் அடிக்கும் சிஸர்!

3,000 அல்லது 4,000 ஆண்டுகளுக்கு முன்பே மெஸபடோமியர்கள் ஸ்ப்ரிங் மாதிரியான கத்தரியை உபயோகித்ததற்கான தரவுகள் உள்ளன. சீனர்கள் ஒரு வகையான கத்தரியை 1660-களில் தயாரித்துள்ளனர். ஆனால், நாம் இப்போது பயன்படுத்தும் X வடிவிலான கத்திரியை 1761-ம் ஆண்டிலிருந்தே தயாரிக்கப்பட்டு, உலகம் முழுதும் பயன்பட ஆரம்பித்துள்ளது. 250 ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் அன்றாட வாழ்வின் பல்வேறு சிக்கல்களை எளிதாக்கியது மட்டுமல்ல... மிக பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. பார்க்கக் கவர்ச்சியான இந்த சிஸர், தன் இனிமையான, இலகுவான வடிவமைப்பினால் சிக்ஸராக அடித்தும் தள்ளுகிறது.

பிள்ளைப் பிராயத்தில் இந்த ஊக்கோடு விளையாடாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். SAFETY PIN என அழைக்கப்படும் இந்தச் சின்னஞ்சிறு பொருள், பெயரைப் போலவே பாதுகாப்
பானது.

டாக்குமென்டேஷன் எனும் பத்திரப் பதிவு உலகை ‘ஜெராக்ஸ் மிஷின்’ புரட்டிப்போட்டுவிட்டது. டாக்குமென்ட்டின் உலகை ஜெராக்ஸுக்கு முன் / ஜெராக்ஸுக்குப் பின் என இரண்டாகப் பிரித்து விடலாம். ஜெராக்ஸ் என்ற நிறுவனத்தின் பெயராலேயே காப்பியர் என்ற இந்த சாதனம் இன்றும் அழைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததுதான். ஆனால், இந்தக் கருவி பயனுக்கு வருவதற்கு முன்பான காலங்களில், நகலெடுக்கும் தேவைகள் இருந்தே வந்திருக்கின்றன. பள்ளிச் சான்றிதழ்கள், நிலப்பத்திரங்களுக்கான அத்தாட்சிகள், நிறுவனங்கள் தங்கள் தஸ்தாவேஜ்களில் நகல்களைக் கையாண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லியே ஆக வேண்டும்.

சாஃப்ட் லக்கேஜ் எனும் மிருதுவான நெகிழும் தன்மையுள்ள பெட்டிகள் உலகெங்கிலும் பயண அனுபவத்தை வசதியாக, மகிழ்வாக மாற்றிவிட்டன என்பதை உணர முடியும். அதிலும் கீழே சக்கரங்களோடும் இழுத்துச் செல்ல கைப்பிடியோடும் கூடிய வண்ணமயமான வடிவமைப்பு வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்திய வர்த்தகமும் பயணங்களின் அதிவேகப் பெருக்கமும் லக்கேஜ் தொழிலை ஒரு மாபெரும் வர்த்தகமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. 2000-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஆண்டுக்கு 18 சதவிகிதத்துக்கும் மேல் வளர்கிறது. கென் ரிசர்ச் என்கிற நிறுவனத்தின் கணிப்பின்படி நடப்பு நிதி ஆண்டில் இந்திய Luggage Industry 102,857 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள வணிக உச்சத்தை எட்டிவிடும்.

உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, மக்கள் வாழ்வில் மாபெரும் நேர்த்தியை நேர்திசையில் நிகழ்த்திக் காட்டிய பல்வேறு சாதனங்களை சற்றே அலசிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய சாதனங்கள் கண்டுபிடிப்பா அல்லது வடிவமைப்பா என்ற கேள்வி எழலாம். இரண்டும்தான் என்பதே பதிலாக வருகிறது. பதில் எப்படியாயினும் இப்பேர்ப்பட்ட வடிவமைப்புகள் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தன என்பது மறுக்க முடியாத உண்மை. தொழிற்புரட்சியின் விளைவாகப் பல பெரும் நிறுவனங்கள் தோன்றி வளர்ந்தன. அவற்றின் வழியாக பெரும் வேலை வாய்ப்புகள் உருவாகி, உலகெங்கிலும் மனிதர்கள் தொழிற்சாலைகளை நோக்கிக் கொத்துக் கொத்தாக உழைக்கச் சென்றார்கள். பொருளாதாரம் எல்லா நிலைகளிலும் வளர்ந்தது. பெரு நிறுவனங்கள் தாங்கள் ஈட்டிய அளவற்ற வருவாயில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை RESEARCH & DEVELOPMENT பிரிவுக்கு ஒதுக்கி, மேலும் மேலும் பல புதிய வடிவமைப்புகள் சாதனங்கள் முதலியவற்றை நோக்கி ஆராய்ச்சிகளை முன்னெடுத்தனர். உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான முயற்சிகள், பல கோணங்கள், பல பகுதிகளாக அவை வார்த்தெடுக்கப்பட்டன. ஒரு வடிவமைப்பை, கருவை மேலும் மெருகேற்றி எளிமைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தேறியவை சில... தோல்வியில் முடிந்தவை பல. ஆயினும் முயற்சிகள் தொடர்ந்தன.

இப்படியாகப் பல வடிவமைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டன. உதாரணமாக, சாஃப்ட் லக்கேஜில் பயன்படுத்தப்படும் ஜிப் என்கிற ஜிப்பர் இல்லாத சூட்கேஸ் சாத்தியமா? அது போலவே தையல் இயந்திரம்.  ஒரு சாஃப்ட் சூட்கேஸில் பல தையல்மெஷின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்பர் எப்படி அடிப்படையில் ஒரு தனித்துவமான வடிவமைப்போ, அதில் சற்றும் குறையாதது தனித்து இயங்கும் தையல் மெஷின். இருவேறு தனித்தனி துணிகளை அழகாக, உறுதியாக எளிதாக நூல் கொண்டு இணைத்துவிடுகிறது. இரண்டு வேறு தன்மையுள்ள பொருட்களையும் தைத்துவிடுவது இதன் பலம். ஜிப்பரை தோல்பொருட்களில் தைத்து விடுகிறோம். துணியையும் தாண்டி, தோல்பொருட்கள், நெகிழிப் பொருட்கள் என இதன் Versatilityயை வியந்துகொண்டே செல்லலாம்.

நாட்டின் வளர்ச்சிக்கு R&D-க்கும் பெரும் பங்கு உண்டு. பெரு நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் புதிய ஆராய்ச்சிகளுக்கும், தனித்துவமான வடிவமைப்புக்கும் தொடர்பு உண்டு. மேற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் வடிவமைப்பை இறக்குமதி செய்கிறோம். தொழில்நுட்பத்தையும் நகலெடுக்கவே இன்னும் நம் Research and Developmentகள் முயற்சிக்கின்றன. படிப்படியாகத் தனித்துவமான, நல்ல பாதிப்பை ஏற்படுத்தும் புதிய பொருள்களை, வழிமுறைகளை ஆய்ந்து தேர்ந்து வடிவமைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

சிக்ஸர் அடிக்கும் சிஸர்!

தீப்பெட்டி முதலாக, மனிதக் குலத்துக்கும் பெருந்தொண்டாற்றிய சில சாதனங்களின் வழியாக வடிவமைப்பை விளங்கிக்கொள்ள முயன்றோம்.

வடிவமைப்பு என்பது வடிவியலும், தொழில்நுட்பவியலும், அழகியலும், மக்கள் பயன்பாட்டிலும் எதிர்கால நன்மையை நோக்கிய தத்துவ ஆராய்ச்சியலும் ஒன்றாக இணையும் புதிய புலம். இங்கே புதுமைக்கே முதல் மரியாதை.
இன்றைய புதுமை நாளைய பழைமையாகும் என்கிற உண்மையால், வடிவமைப்பு என்னும் புலம் தன்னை ஒவ்வொருமுறையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். மனிதக் குலமும் அப்படித்தான் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது. இதற்குச் சம்பிரதாயங்கள், கலாசாரங்கள் கூட விதிவிலக்கல்ல.

இங்கே நாம் விவாதித்த அத்தனை வெற்றி கரமான வடிவமைப்புக்குப் பின்னாலும், மாபெரும் சிந்தனைகளும், பரிசோதனைகளும், வாழ்வியல் சோதனைகளும், தோல்விகளும், வலிகளும், அதை மீறிய விடாமுயற்சிகளும் இருக்கின்றன. இன்று நம் கைகளில் தவழும் எந்த தயாரிப்புக்கும் பின்னணியில் அசாத்திய உழைப்பும், விசாலமான பார்வையும், ஆரோக்கியமான பொதுநோக்கமும் இருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை, வரலாற்றை ஆர்வத்தைத் தூண்டும் கதைகளாக, சித்திரங்களாக சின்னஞ்சிறார்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற கனவு எனக்கு உண்டு.

வடிவமைப்பு மட்டுமல்லாது அறிவியல், கணிதம் போன்ற பாடங்களையும் சுவாரஸ்யமான குறும்படங்களாக்கி, காட்சிமொழியில் அறிவைக் கடத்தும் காலம் தொலைவில் இல்லை.

இதுவரை நாம் கண்ட மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, மறுக்க முடியாத வடிவமைப்புகளின் பட்டியல் இன்னும் நீளமானது. பிரமிப்பான நீளத்துடன் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது. வளர்வது மட்டுமல்ல... அதிசயமான ஆச்சரிய
மூட்டும் நீராவி இன்ஜினைப்போல நகர்ந்துகொண்டும் இருக்கிறது.

ஏனென்றால், இத்தகைய புதிய டிசைன்களுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதுவே மனித குலத்துக்கும் இயற்கைக்குமான உடன்பாடு. இந்த உடன்பாட்டைக் காலமும், தேவையுமே முடிவு செய்கிறது. கடந்த 10, 20 ஆண்டுகளில் இப்படிப்பட்ட தேவையை முன்வைத்து நம்மிடம் வந்து சேர்ந்த புதிய சாதனங்கள் குறித்துச் சிந்தித்தால், இந்தக் காலமும் தேவையும் முடிவு செய்யும் டிசைன் உடன்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.

அலைபேசியும், தொடுதிரையும், பென் ட்ரைவ் என்னும் நகத்தளவில் கடல் தகவலும் என நீளும் நவீன வடிவமைப்பில் LED, OLED, QLED என நீளும் தொழில்நுட்பமும் நமக்குச் சொல்லும் உண்மை என்ன? இவை எங்கிருந்தோ வந்து, நம்மை நோக்கிக் கேட்கிற கேள்வி ஒன்றுதான்.

புதியனவற்றை உருவாக்குவது பெருமையா? உற்பத்தி செய்வது பெருமையா?

நாம் பிடிக்க வேண்டிய பஸ் கிளம்பிவிட்டது... அது நகர ஆரம்பிக்கிறது.... பிடித்துவிட்டால் பெருமைதான்!

- வடிவமைப்போம்


க.சத்தியசீலன்