பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap

கேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap

கேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap

கேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap

``மச்சான்... இந்த நியூ இயர்க்கு கோவாவுக்குப் போறோம்!” 

ண்பர்கள் மத்தியில் பிரபலமான வசனம் இது. இந்திய இளைஞர்களால் பல ஆண்டுகள் செய்ய முடியாமலே இருக்கும் Bucket list-ல் கோவாவுக்குத் தனியிடம் உண்டு. ஆனால், நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் கோவாவுக்குப் போக மட்டும் திட்டமிடுவதில்லை. பலர் தங்கள் வாழ்க்கையையே மாற்றும் ஐடியாக்களுக்கு ஒன்றாகச் சேர்ந்தும் திட்டமிடுவதுண்டு. அப்படிப்பட்ட நண்பர்கள்தாம் அபிராஜ் பால் மற்றும் வருண் கேத்தான்.  இருவரும் ஐ.ஐ.டி-யில் படித்தபோதிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

கேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap

கல்லூரி முடித்ததும் அமெரிக்காவில் ஒரு பிரபல கன்சல்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டுமென்பதுதான் கனவு, லட்சியம், நோக்கம், விருப்பம் எல்லாம். அமெரிக்காவில் நல்ல சம்பளம் வாங்கும் இளைஞர்கள் வார இறுதியில் செய்ய வேண்டிய எதையும் இவர்கள் செய்யவில்லை. இருவரின் யோசனையெல்லாம் ஸ்டார்ட் அப்புக்கான ஐடியாவை யோசிப்பது... அதைப்பற்றி பேசுவது  மட்டுமே. எந்த ஜீபூம்பா தங்கள் வாழ்க்கையை மாற்றும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடத்திலிருந்தது.

இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. வயதும் ஏறிக்கொண்டிருந்தது. சாதிக்க வயது எப்போதும் தடையில்லை. ஆனால், ஆற்றல் என்பது எல்லா வயதிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 28-30 வயது என்பது அனுபவமும் வேகமும் ஒன்றாகச் சேரும் வயது எனலாம். நாம் என்ன செய்கிறோம் என்ற தெளிவும் அதைச் செய்து முடிக்க வேண்டுமென்ற வேகமும் அந்த வயதிலிருக்கும். அபிராஜும் வருணும் இனியும் காலம் தாழ்த்த வேண்டாமென முடிவெடுத்தார்கள். ஒன்று, நாம் களத்திலிறங்கி முயற்சி செய்துவிட வேண்டும். அல்லது, நமக்கு தைரியம் இல்லையென்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டில் எது என்ற கேள்விக்கு இருவருமே முதல் செக் பாக்ஸில் டிக் அடித்தார்கள். அடுத்த நாள் வேலையை விட்டார்கள். அடுத்த மாதம் இந்தியாவுக்கு விமான டிக்கெட் புக் செய்துவிட்டார்கள். இரண்டு திறமையான ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த இந்தியா, இரண்டாயிரம் ஊழியர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய இரண்டு உற்சாகமான தொழில் முனைவோரைத் திரும்பப்  பெற்றுக்கொண்டது.

இந்தியா வந்ததும் காலதாமதமின்றி வேலைகள் தொடங்கின. cinemabox என்ற முதல் முயற்சியில் இரண்டு நண்பர்களும் 24 மணி நேரமும் பிஸி ஆனார்கள். பேருந்து, டிரெயின், விமானம் என நாம் பயணிக்கும் எல்லா இடங்களிலும் நம்மை மகிழ்விப்பதுதான் சினிமாபாக்ஸின் ஐடியா. கையிலிருக்கும் மொபைலில் ஆளுக்கொரு தியேட்டரையே  சுமந்து திரியும் காலத்தில், இந்த ஐடியா வேலைக்காகவில்லை. பூதம் வெளிவரும் என நினைத்த நேரம், வெறும் புகை மட்டுமே வெளிவந்தது. ஆனாலும், அற்புத விளக்கைத் தேய்க்கும் முயற்சியிலிருந்து நண்பர்கள் பின்வாங்கவில்லை.

அடுத்த முயற்சியாக buggie.com என்ற ஆட்டோ ரிக்‌ஷாக்களை புக் செய்யும் ஆப் ஒன்றை உருவாக்கினார்கள். ம்ஹூம். அதுவும் புகையாக மட்டுமே போனது. 2014-ல் இரண்டு தொழில்களையும் மூடினார்கள். வருணின் அப்பா இந்த இளைஞர்களைத் தோல்வியடைந்தவர்களாகப் பார்க்கவில்லை. அவர் பத்துக்கும் மேற்பட்ட தொழில்களைத் தொடங்கி வெற்றிபெற முடியாமல் போனவர். அவருக்குத் தெரியும்; ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஏதோ ஒரு பாடத்தைச் சொல்லிக்கொடுத்துவிட்டே போகுமென. அதை வருணும் அபிராஜும் சரியாகப் புரிந்துகொண்ட பின்தான் முதல் இரண்டு முயற்சிகளைக் கைவிட்டனர். தங்களுக்குத் தேவை, தொழில்நுட்பம் தெரிந்த ஒரு பார்ட்னர் என்ற முடிவுக்கு வந்தார்கள். நண்பர்கள் இருவருமே தொழில்நுட்பப் பின்புலம் அற்றவர்கள். அதனால், அந்த ஏரியாவிலிருந்து ஒருவர் கைகோத்தால் வானம் வசப்படும் என முடிவு செய்தார்கள். வந்து சேர்ந்தார் ராகவ் சந்திரா. ட்விட்டரில் வேலை செய்தவர். இரண்டு மூன்றானது; நம்பிக்கை பல மடங்கானது.

கேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclapஅப்போது வருணின் சகோதரிக்குத் திருமணம் முடிவாகியிருந்தது. பூக்கட்டுவதிலிருந்து சமையல் கேட்டரிங் வரை பல வேலைகளுக்கு ஆள் தேடினார்கள். உள்ளூரில் இதுபோன்ற சேவைகள் தருபவர்களை ஒருங்கிணைக்கப் பல வழிகள் இருந்தன. Yellow pages தொடங்கி, பலர்  அப்படிப்பட்ட ஆட்களை நோக்கிக் கைகாட்டினர். ஆனால், யாருமே அந்தச் சேவைகள் சரியாக நடக்குமென்பதற்கு உத்தரவாதம் தரவில்லை. இந்த ஏரியாவில் கொஞ்சம் யோசிக்கலாம் என்ற வருணின் ஐடியாவை நண்பர்கள் ஏற்றார்கள். ஜீபூம்பா அற்புத விளக்குக்குள் ஒளிரத் தொடங்கின.

இந்தியா முழுவதும் தேடிப் பார்த்தார்கள். ஆட்டோவோ காரோ பிடிப்பது எளிதான காரியமாக இருந்தது. வீட்டுக்கே உணவு தேடி வந்தது. வாடகைக்கு வீடு தேடுவது, மருத்துவர்களின் அப்பாய்ன்மென்ட் பெறுவது என எல்லாவற்றுக்கும் மொபைல் ஆப் தீர்வு தந்தது. ஆனால், வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளான பிளம்பர், எலக்ட்ரீஷியன் முதலிய சேவைகளை யாரும் சரியாகத் தரவில்லை.

2014 டிசம்பர் மாதம். ஆளுக்கு 10 லட்சம் என 30 லட்சம் முதலீடு தயாரானது. urbanclap உருவானது. மூவரின் முதல் சாய்ஸ் urbanclap என்ற பெயர் கிடையாது. prohunt.com என்ற தளத்தைத்தான் வாங்கியிருந்தார்கள். ஆனால், வெறும் தேடுதல் சேவை மட்டுமே கொடுத்தால் தாங்களும் கூட்டத்தில் ஒருவர் ஆகிவிடுவோம் எனத் தோன்றியது. சேவைகளைக் கொடுப்பவர்களை நோக்கிக் கைகளை மட்டும் காட்டாமல் அவர்களைப் பயன்படுத்தி சேவைகளைத் தரும் நிறுவனமாக மாற வேண்டுமென்ற அந்த யோசனைதான் உண்மையான ஜீபூம்பா.

இந்தியா முழுவதுமிருந்து சேவைகள் தரும் டெக்னீஷியன்களை ஒன்றிணைத்தார்கள். அவர்களை அர்பன்கிளாப் பார்ட்னர் ஆக்கினார்கள். அவர்களுக்குச் சில பயிற்சிகளைத் தந்தார்கள். விலை, சேவை போன்ற ஏரியாக்களைத் திட்டமிட்டார்கள். ஒரு மணி நேரம் பிளம்பர் தேவையென்றால் இந்த விலை. வேலை சீக்கிரம் முடிந்தால் செலவு குறைவு. அந்த ஒரு மணி நேரம் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை வாடிக்கையாளரே பார்ப்பார் என்பதால் பிரச்னையில்லை. சேவை தருபவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தபோதே வாடிக்கை யாளர்களுக்கான இணையதளமும் செயலியும் தயாராகின. ஒரே வருடத்தில் அர்பன்கிளாப் தயாரானது. சரி, இந்த பிசினஸ் மாடலில் வருமானம் எப்படி?

உதாரணமாக, அழகுக்கலை நிபுணரை எடுத்துக்கொள்வோம். ஓர் அழகு நிலையத்தில் அவர் வேலை செய்தால், வாடிக்கையாளர் தரும் கட்டணத்தில் 80% அந்த அழகு நிலையம் எடுத்துக்கொள்ளும். நிபுணருக்கு 20% கிடைக்கலாம். அவரே அர்பன்கிளாப்புடன் இணைந்தால், வாடிக்கையாளர் வீட்டுக்கே சென்று சேவையைத் தரலாம். ஆனால், கட்டணத்தில் 75-80% பெறலாம். மீதிமிருக்கும் தொகை அர்பன்கிளாப்புக்கு. மொபைல் மூலம் வாடிக்கையாளரைப் பிடிப்பதால், அழகு நிலையத்துக்குக் கிடைக்கும்  வாடிக்கையாளர் எண்ணிக்கையைப்போலப் பல மடங்கு அதிகமானோர் கிடைக்கலாம். ஆனால், செலவு குறைவு. தொழில்நுட்பத்தின் உதவியால் இந்த சப்ளை செயினிலிருக்கும் வாடிக்கையாளர், சேவை நிபுணர், அர்பன் கிளாப் என மூவருக்கும் லாபம்.

நண்பர்களின் வேகத்தையும், இந்தத் தொழிலிலிருந்த வாய்ப்புகளையும் புரிந்துகொண்ட சிலர் முதலீடு செய்ய முன்வந்தனர். இது அர்பன்கிளாப்பின் பயண வேகத்தை அதிகரித்தது. தொடங்கிய ஒரே ஆண்டில் இந்த வேலையிலிருந்த அத்தனை நிறுவனங்களையும் அர்பன்கிளாப் முந்தியது.  `யார் சாமி இவங்க’ என அனைவரின் கண்களும் இவர்கள் மேல் விழுந்தன. அர்பன்கிளாப் பலரின் கிளாப்ஸை அள்ளியது. 2015 முடிவுக்குள் அதிகமான முதலீட்டைப் பெற்ற சேவை நிறுவனமானது அர்பன்கிளாப்.

இவர்கள் வளர்ச்சியைப் பார்த்து இன்னும் பலர் லோக்கல் சர்வீஸ் புரொவைடர்களை ஒருங்கிணைக்கும் ஆப்களை உருவாக்கினர். அமேசானும் அப்படியொரு நிறுவனத்தில் முதலீடு செய்தது. ஆனால் அவர்களாலும் அர்பன்கிளாப்பை நெருங்க முடியவில்லை. `ஆன்லைன் ஷாப்பிங்ல நீங்க மாஸா இருக்கலாம்... ஆனா, இங்க நாங்கதான் பாஸு’ என்றது அர்பன்கிளாப். அதற்கு முக்கிய காரணம், சேவை நிபுணர்களை அவர்கள் தேர்வு செய்யும் முறைதான். அர்பன்கிளாப்புடன் இணைய வருபவர்களில் 75% பேரை வேண்டாமெனச் சொல்லிவிடுகிறார்கள். கடுமையான தேர்வுகளுக்குப் பிறகே அவர்கள் அர்பன்கிளாப்புடன் இணைய முடியுமென்ற விஷயம்தான் வெற்றிக்குக் காரணமானது.

அர்பன்கிளாப்பின் வளர்ச்சியும், தொழில் நேர்த்தியும் ரத்தன் டாடா கவனத்துக்கு வந்தது. யோசிக்காமல் டாடா அர்பன்கிளாப்பில் முதலீடு செய்தார். இது முதலீட்டாளர்கள் மத்தியிலும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அர்பன்கிளாப்பின் மதிப்பை உயர்த்தியது. இன்று தினமும் 1,50,000 பேருக்குச் சேவைகளை வழங்கிவருகிறது அர்பன்கிளாப். 30 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு லட்சம் சேவை நிபுணர்கள் தரும் 107 சேவைகளை அர்பன்கிளாப் வழங்குவதால் இதில் `ரிப்பீட் கஸ்டமர்ஸ்’ அதிகம். சென்னை, புனே, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், ஜெய்ப்பூர், ஹைதை, சண்டிகர், பெங்களூரு போன்ற இந்திய நகரங்களிலும் துபாயிலும் அர்பன்கிளாப் சேவைகள் கிடைக்கின்றன.

பொதுவாக ஸ்டார்ட் அப் ஆர்வலர்கள் ஒரு கட்டத்தில் நல்ல விலைக்கு அதை விற்க முடிவெடுப்பார்கள். ஆனால், அர்பன் கிளாப் நிறுவனர்களுக்கு அந்த எண்ணமேயில்லை. “விற்பதற்காக இதை நாங்கள் தொடங்கவில்லை. முதலீடு தேவையென்றால் பங்குச் சந்தையில் நுழையவும் நாங்கள் விரும்புவோம். ஏனெனில், இது நிச்சயம் லாபம் தரும் விஷயம்” என்கிறார் அபிராஜ்.

வருணின் அப்பா இப்போது அர்பன்கிளாப் வெற்றியை அவருக்குத் தெரிந்தவர்களிடம் பெருமையுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவருக்குத் தோல்வி தந்த 10 முயற்சிகள், வருண் மற்றும் நண்பர்களின் முதல் 2 தோல்விகள் ஆகியவற்றின் மீதுதான் அர்பன்கிளாப் என்ற மாளிகை இன்று கம்பீரமாக நிற்கிறது. எந்தத் தோல்வியும் நமக்குத் தோல்வியை மட்டுமே தருவதில்லை. ஏதோ ஒரு பாடத்தையும் விட்டுச் செல்கிறது. அதைப் புரிந்துகொண்டவர்கள் மட்டுமே வரலாறு படைக்கிறார்கள். துவண்டு போகிறவர்களுக்கு வரலாறு கனிவு காட்டுவதில்லை.

கார்க்கி பவா