சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com

கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com

கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com

கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com

ந்தியாவில் ஒருவர் தொழில் செய்து முன்னேறுவது அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. கோடியில் ஒருவர் அதைச் சாத்தியப்படுத்தினால், மற்றவர்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருந்தது. ஒரு நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு மூன்று விஷயங்கள் அடிப்படை. அரசியல், தொழிலதிபர்கள், ஊடகம். புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களை அதிகாரவர்க்கம் ஊக்குவிக்க வேண்டும். அது 20 ஆண்டுகளுக்கு முன்புவரை எளிதானதாக இருக்கவில்லை. தொழிலதிபர்களும் தங்கள் தொழில்களைப் பாதுகாக்க, அதற்குப் போட்டியாக வளர்பவர்களைப் பணத்தால் வளைத்துப் போடவே முயன்றார்கள். ஊடகங்களும் வெற்றிபெற்றவர்கள் பக்கம் மட்டுமே அப்போது அதிக கவனம் செலுத்திவந்தன.  

கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com

21-ம் நூற்றாண்டில் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின. இணையம் பரவலானதும் இந்தியாவில் ஒரு தொழில் தொடங்க இங்கே இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமற்போனது. வேறொரு நாட்டில் இருந்துகொண்டே இங்கே வாடிக்கையாளர்களைப் பெறலாம் என்ற நிலை அதிகரித்தது. இந்தியாவில் இளைஞர்களை முடக்கக்கூடிய சக்திகளின் கைகளுக்கு அப்பால் பல விஷயங்கள் மீறிச் சென்றன. சமூக வலைதளங்கள் ஊடகங்களைவிட அதிகமான திறமைகளை உலகிற்கு அடையாளம் காட்டின. இந்தக் காரணங்களால் வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் இந்தியாவின் பக்கம் திரும்பினர். டாலர்களைக் கொட்டித் தந்த வேலையை விட்டுவிட்டு, தாயகம் திரும்பித் தொழில் தொடங்கினர். எந்தத் தொழில் சார்ந்த பின்புலமும் இல்லாதவர்கள் இந்தியாவின் பல தொழில்துறைகளை முற்றிலுமாக மாற்றி எழுதினர்.  ஜாம்பவான்கள் பலரும் இதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது; அல்லது அந்த இளைஞர்களின் முயற்சிக்கு முதலீடு தந்து அவர்களோடு கரம்கோக்க மட்டுமே முடிந்தது. இந்தியாவில் தொழில்துறை வரலாற்றில் இந்தக் காலம் மிக முக்கியமான காலம் எனலாம். இந்தக் காலத்தில் முத்திரை பதித்த இன்னொரு முக்கியமான ஸ்டார்ட் அப் ஹீரோதான் பியூஷ் பன்சால்.

இந்தியத் தந்தைகள் கொஞ்சம் சுயநலமிக்கவர்கள். நிறைவேறாத தங்கள் கனவுகளைத் தங்கள் மகன்கள் அல்லது மகள்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளவே விரும்புவார்கள். அப்படியொருவர்தான் பியூஷின் தந்தை. அவரே ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்தான். இருந்தாலும், தன் மகன் இன்னும் அதிகம் சம்பாதிக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார். அமெரிக்காவோ, லண்டனோ... இந்தியா வேண்டாமென்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதற்குத் தேவை கல்விதானே? தன் சுகதுக்கங்களை மறந்து பியூஷின் படிப்புக்காக மெனக்கெட்டார். அப்பாவின் அத்தனை கனவுகளையும் நனவாக்கினார் பியூஷ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்தார்.

`அப்பாவுக்காக’ என பியூஷ் செய்தவை சில ஆண்டுகளில் அவருக்குப் பிடிக்காமல்போயின. இனி தன் கனவுகளின் பின்னால் ஓடவேண்டும் என நினைத்தார். தனக்கொரு மகன் பிறந்து அவன் தலையில் தன் சுமையை வைக்க வேண்டாமென பியூஷ் நினைத்திருக்கலாம். அவர் பெற்றோரும் அவரைப் புரிந்துகொண்டு ஊக்கமளித்தனர். 2007-ல் இந்தியாவிற்குத் திரும்பினார் பியூஷ். நிறைய கனவுகள் என்பதைவிட நிறைய ஐடியாக்கள் பியூஷிடம் இருந்தன. அவற்றில் எது பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும் என அவருக்கு அப்போது தெரியாது. அதனால் அத்தனையையும் முயற்சி செய்து பார்த்துவிட வேண்டுமென முடிவெடுத்தார்.

முதல் முயற்சி, searchmycampus.com என்ற இணையதளம். கல்லூரி வளாகத்திலிருக்கும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், கார் ஷேரிங் தகவல்கள், பகுதி நேர வேலைகள் எனப் பல சேவைகளை அந்த இணையதளம் மூலம் பெறலாம். பெரிய லாபம் வரவில்லையென்றாலும் நிறைய பேர் அந்தச் சேவைகளைப் பயன்படுத்தினார்கள். இணையம் மூலம்தான் தன் வாழ்க்கை மாறும் என நம்பிய பியூஷ் Lenskart.com, Jewelry.com, WatchKart.com, and Bags.com போன்ற பல தளங்களைப் பதிவு செய்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பொருளை விற்கும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களாக வளர்ப்பதுதான் ஐடியா.

ஒவ்வொரு பொருள் பற்றியும் பல தகவல்களைத் திரட்டினார் பியூஷ். அதில் ஒன்றுதான் கண்ணாடி. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் கண்ணாடி அணிய வேண்டியவர்கள். ஆனால், அந்த எண்ணிக்கையில் 25% மட்டுமே கண்ணாடி அணிகிறார்கள். தரமான கண்ணாடிகள் கிடைக்காததாலும் வாங்கக்கூடிய விலைகளில் அவை இல்லாததாலும் மற்றவர்கள் கண்ணாடி அணிவதில்லை என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதே சமயம், அந்தத் துறையிலிருக்கும் வாய்ப்புகளையும் பியூஷ் கவனிக்கத் தவறவில்லை. மற்றவர்களுக்கு அவுட் ஆஃப் ஃபோகஸாகத் தெரிந்த விஷயத்தில் தன் ஃபோகஸை அதிகப்படுத்தினார். 

கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com

இந்தியர்கள் கண்ணாடி அணியாமல் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவை ஸ்டைலாக இருப்பதில்லை. அவர்கள் அணியும் உடைக்கு ஏற்றதாகக் கண்ணாடிகள் இருப்பதில்லை. ஒரு கண்ணாடிக்கே ஆயிரக்கணக்கில் ஆகுமென்பதால் ஒருவரே பல கண்ணாடிகளை வாங்கி வைக்கும் பழக்கமும் இங்கில்லை. குறைந்த விலையில், நல்ல தரமான கண்ணாடிகள் தருவது இதில் பல பிரச்னைகளைத் தீர்க்குமென பியூஷ் நம்பினார். கண்ணாடி வாங்குபவர்களின் எண்ணிக்கையும், ஒருவரே பல கண்ணாடிகள் வாங்குவதும் அதிகரிக்க வேண்டும். அதற்குக் கண்ணாடி வாங்கும் முறையில் மாற்றம் வேண்டுமென நினைத்தார் பியூஷ்.

முன்பு எப்படி இருந்தது இந்தச் சந்தை? அப்பாவுடனோ அம்மாவுடனோதான் கடைகளுக்குச் செல்ல வேண்டும். கண்ணாடிக் கடைகள் பெரும்பாலும் சிறியனவாகவே இருக்கும். அதனால் நிறைய மாடல்கள் இருக்காது. கண்ணாடியும் முன்பு மருத்துவம் சார்ந்த பொருளாகவே இருந்ததால், பெரும்பாலும் பேரம் பேசவும் மாட்டார்கள். அதனால் விலையும் அதிகமாகவே இருக்கும். இருப்பதில், நம் வசதிக்கேற்ற ஒரு மாடலோடு வீடு திரும்ப வேண்டியதுதான். இணையம்மூலம் கண்ணாடிகளை விற்றால் நிறைய மாடல்களை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட முடியும். அதிக எண்ணிக்கையில் கண்ணாடிகளை விற்க முடியுமென்பதால் சீனா போன்ற நாடுகளிலிருந்து ஃப்ரேம்களை இறக்குமதி செய்யலாம். அது, விலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். எத்தனை கண்ணாடிகள் தேவைப்படுமென்பதை இணையம்மூலம் எளிதில் கணிக்கலாம் என்பதால் அதிகப் பணத்தை முதலீடு செய்து அதை இன்வென்டரியாகச் சேர்த்து வைக்கும் வேலை மிச்சம். இதுதான் தனக்கான ஜீபூம்பா என முடிவெடுத்தார் பியூஷ். lenskart.com பிறந்தது.

எல்லாம் சரிதான். கண்ணாடி சரியாகப் பொருந்துகிறதா என்ற சந்தேகம் வாடிக்கை யாளர்களுக்கு எழுந்தால்? ஆன்லைனில் மட்டுமே நாமிருந்தால் இந்த விஷயத்தில் மக்களின் ஆதரவைப் பெறுவது சிரமம் எனத் தெரிந்தது. Franchisee model-ல் ஆஃப்லைன் கடைகளையும் திறக்க முடிவெடுத்தார். கண்ணாடியைத் தொட்டுப் பார்த்து, அணிந்து பார்த்து வாங்க நினைப்பவர்கள் அங்கே வாங்கலாம். ஒருமுறை லென்ஸ்கார்ட்டில் வாங்கிவிட்டால், அதன்பின் அளவு பற்றிய பயம் வராது. இணையம் மூலம் குறைந்த விலையில் நிறைய கண்ணாடிகளை வாங்கலாம். இந்த ஐடியா வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்க உதவியது. ஆஃப்லைன் கடைகள் விளம்பரங்களாகவும் பிராண்ட் ரீச்சை அதிகரிக்கச் செய்தன. 

கேம் சேஞ்சர்ஸ் - 24 - Lenskart.com

2018 ஆண்டுக் கணக்கின்படி, தினமும் பல லட்சம் பேர் லென்ஸ்கார்ட் தளத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் மூன்று லட்சம் கண்ணாடிகளுக்கும் மேல் விற்றிருக்கிறது லென்ஸ்கார்ட். டர்ன் ஓவர் ஆயிரங்கோடியைத் தாண்டிவிட்டது. இப்போது 60-70% கண்ணாடிகள் இணையம் மூலமே விற்கப்படுகின்றன. விரைவில் இந்தியா முழுவதும் 500 நகரங்களில் 2,500 கடைகள் திறக்க வேண்டுமென லென்ஸ்கார்ட் முடிவெடுத்திருக்கிறது.

இதைச் சாத்தியப்படுத்தியது இணையம் மூலம் கண்ணாடி என்ற ஜீபூம்பா மட்டுமல்ல, அதன் பின்னால் பியூஷ் செய்த சில மேஜிக்குகளும் தான். ரோபோட்டிக்ஸ் மூலம் துல்லியமான லென்ஸ்களை உருவாக்குவது, வீட்டுக்கே வந்து கண்ணாடிகளைத் தருவது, 3டி முறையில் இணையதளத்தில் கண்ணாடிகளைப் பார்க்க வசதி செய்தது, பிரச்னை என வந்துவிட்டால் சரியான தீர்வு தரும் வாடிக்கையாளர் சேவை என பியூஷின் வியாபார முறைகளும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள். அவையில்லையெனில் போட்டியாளர்கள் எப்போதோ இவரை முந்தியிருப்பார்கள்.

லென்ஸ்கார்ட்டின் முக்கியமான போட்டியாளர் டைட்டன் ஐ. இது டாடா நிறுவனத்தைச் சேர்ந்தது. எந்தத் தொழில் குடும்பத்தையும் சேராத, 33 வயதே ஆன இளைஞர் ஒருவர், நூற்றாண்டுகளைக் கடந்த பிரமாண்டத் தொழில் சாம்ராஜ்ஜியத்தோடு போட்டி போடுகிறார். விரைவில் அவர்களைக் கடந்தும் போய்விடலாம். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியக் கண்ணாடிச் சந்தையில் 50% லென்ஸ்கார்ட் வசமிருக்குமெனக் கணிக்கிறார்கள் வல்லுநர்கள். இவையெல்லாம் பியூஷ் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும்போது அவர் கனவாக இருந்தவை. அவை நடக்குமென ஒரே ஒருவர்தான் நம்பினார்; அவர் பியூஷ் பன்சாலேதான். அந்த நம்பிக்கைதான் அவரை மாற்றியது; பிறகு உலகை மாற்றியது.

கார்க்கிபவா