Published:Updated:

``பையன் பப்ஜி விளையாடுறானா?’’ - பெற்றோருக்கு மோடி சொன்ன அட்வைஸ்!

``பையன் பப்ஜி விளையாடுறானா?’’ - பெற்றோருக்கு மோடி சொன்ன அட்வைஸ்!
``பையன் பப்ஜி விளையாடுறானா?’’ - பெற்றோருக்கு மோடி சொன்ன அட்வைஸ்!

விரைவில் தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, Pariksha Pe Charcha என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது மத்திய அரசு. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், டெல்லியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினர். அந்த நிகழ்ச்சி, Pariksha Pe Charcha 2.0 என்ற பெயரில் இந்த வருடம், இன்று நடந்தது. இதில் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி சவூதி அரேபியா, ரஷ்யா, ஈரான், நேபாளம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டனர். 

2000 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுடன் இணைந்து அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.  அவர்களில் ஒரு பெண்மணி மோடியிடம், "என்னுடைய மகன் நீண்ட நேரமாக ஆன்லைன் கேம்கள் விளையாடிக்கொண்டிருக்கிறான். இதனால் படிப்பில் அவனால் கவனம்செலுத்த முடிவதில்லை. இதற்கு என்ன செய்யலாம்?" என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மோடி, "என்ன, பப்ஜி விளையாடுறானா?" என்று கேட்க, அரங்கம் முழுக்க சிரிப்பொலி எழுந்தது.

அதைத் தொடர்ந்து பதிலளித்த மோடி, "நம்முடைய குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து தள்ளிவைப்பதன்மூலம், அவர்களை இந்த உலகத்திலிருந்தே தள்ளிவைக்கிறோம். அவர்கள், பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறார்களா, இல்லையா என்பது மிக முக்கியம். எனவே. பெற்றோராகிய நீங்களும் வீட்டில் அன்றாட தொழில்நுட்பங்கள் பற்றி அவனுடன் உரையாடுங்கள். அப்போதுதான் அவன் தயக்கமின்றி அதுகுறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்வான். அவனும் அதில் மூழ்கிவிடாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

இப்போது, இந்த அரங்கில்கூட சிலர் என்னுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மீதமிருப்பவர்கள் மொபைல் மூலம் நான் பிரதமர்கூட இருக்கிறேன் என அவர்களுடைய நண்பர்களுக்கு அப்டேட் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.