பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo

கேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo

கேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo

கேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo

`எதிர் நீச்சல்’  படம் பார்த்திருக்கிறீர்களா?  சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் இல்லை. இது நாகேஷ் நடித்தது.  மாடிப்படி மாதுவாக நாகேஷ், ரசிகர்களை அழவைத்த திரைப்படம். வாடகைக் குடித்தனங்கள் நிறைந்த ஒரு பெரிய வீட்டின் வேலைக்காரர் அவர். `மாடிப்படி மாது’ என்ற அந்த கேரக்டர் செய்யாத வேலை கிடையாது. இஸ்திரிக்குத் துணி கொடுப்பது, குழந்தைகளைப் பள்ளியில் விடுவது, வங்கியில் பாஸ்புக் அப்டேட் செய்வது, காய்கறி வாங்கி வருவது என எந்த வேலையென்றாலும் எல்லோரும் அழைப்பது “மாது.” அத்தனை வேலைகளையும் மறக்காமல், எதை முதலில் செய்ய வேண்டும், எந்த வரிசையில் அலைச்சல் மிச்சம், அதை யாரிடம் சொல்ல வேண்டும் என எல்லாவற்றையும் கணினியைப்போல ஒழுங்குபடுத்திச் செய்யும் மாதுவின் மூளை. இவ்வளவையும் செய்தால் அவருக்குக் கிடைப்பது மாடிப்படியின் கீழ் ஒண்டிக்கொள்ள ஓரிடம்; சாப்பிட, மீதமான உணவு. 1968-ல் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் அது.

கேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo

அப்படியே 50 ஆண்டுகள் கடந்து வருவோம். 2015. இப்போது மாதுக்கள் கிடைப்பதில்லை. ஆனால், செய்ய வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. மும்பையைச் சேர்ந்த 32 வயதான கபீர் பிஸ்வாஸ் பெங்களூரில் ஓர் உணவகத்தில் அமர்ந்துகொண்டே யோசித்தார். “சொன்ன வேலைகளையெல்லாம் செய்துகொடுக்க ஒருவர் இருந்தால் எப்படியிருக்கும்? நாம் நம் வேலையை மட்டும் பார்க்கலாம்” என்ற அந்த யோசனை அவரைத் தூங்கவிடவில்லை. அதாவது, மாதுவின் டிஜிட்டல் வெர்ஷன். ஏற்கெனவே ஸ்டார்ட் அப் மீது ஆர்வமும் அனுபவமும் அவருக்குண்டு.  எம்.பி.ஏ முடித்ததும்  ஏர்டெல் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார் கபீர். சில ஆண்டுகளுக்குப் பின் Hoppr என்ற ஒரு ஸ்டார்ட் அப்பைத் தொடங்கினார். Hike நிறுவனம் அதை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டது.அதனால் கபீரிடம் கொஞ்சம் பணமும் நிறைய நம்பிக்கையும் அப்போதிருந்தன. அந்தக் காரணத்தால் இதையும் முயன்று பார்த்துவிடலாமென முடிவெடுத்தார்.

முதலில் வாட்ஸ் அப் குரூப்பாகத்தான் தொடங்கினார். அந்த குரூப்பிலிருப்பவர்கள் அவர்களுக்கு என்ன வேலை நடக்க வேண்டுமெனச் சொன்னால் போதும். கபீர் அதைச் செய்து முடிப்பார். ஒருமுறை, தொழிலதிபர் ஒருவர் டிரெயின் டிக்கெட்டை மறந்துவிட்டு ரயில் நிலையம் சென்றுவிட்டார். அது இ-டிக்கெட்டும் கிடையாது. அந்த டிக்கெட் இல்லையென்றால் அபராதம்தான் ஒரே வழி. உட்கார இடம்கூடக் கிடைக்காமற்போகலாம். ரயில் கிளம்ப இருந்ததோ 35 நிமிடங்கள். அதற்குள் அவரால் வீட்டுக்கு வந்துவிட்டும் செல்ல முடியாது. அவர் நண்பர் ஒருவரை அழைக்க, அவர்தான் கபீரின் வாட்ஸ் அப் சேவை பற்றிச் சொன்னார். அவரே மெசேஜும் அனுப்பினார். ரயில் கிளம்புவதற்குள் டிக்கெட் அவர் கைக்கு வந்து சேர்ந்தது. அவரே ஒரு தொழிலதிபர் என்பதால் “இந்த ஐடியா க்ளிக் ஆகும்” என நண்பரிடம் பாராட்டினார். இது போன்ற உற்சாக வார்த்தைகள் கபீரை அடுத்த கட்டத்திற்கு அனுப்பியது. தினமும் 100 பேரின் தேவைகளுக்குக் கபீரின் ஐடியா உதவியது. வாட்ஸ் அப் குரூப்பை மொபைல் ஆப்பாக மாற்றும் வேலைகளில் இறங்கினார் கபீர். அவருக்குத் துணையாகச் சிலர் தேவைப்பட்டனர்.

கேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzoஏற்கெனவே பழக்கமான முகுந்த் ஜா, தால்விர் சுரி, அன்குர் அகர்வால் என மூன்று பேர் இந்த ஐடியாமீது நம்பிக்கை வைத்தனர். ஒருவர் நால்வர் ஆனதும் வேலைகள் வேகமெடுத்தன. 4.4 கோடி ரூபாய் முதலீடும் கிடைத்தது. `நாம் போகும் வழி சரியானது’ என்ற நம்பிக்கை கபீருக்கு அதிகரித்தது.

நிறுவனத்துக்கு டன்ஸோ (Dunzo) எனப் பெயர் முடிவானது. டன்ஸோ என்றால் ஆங்கிலத்தில் Done, over, finished - வேலை முடிந்தது என்று அர்த்தம். நம்மிடம் வருபவர்களுக்கு அந்த நம்பிக்கையை விதைக்க வேண்டுமென்பதால் அதையே பெயர் ஆக்கினார் கபீர். டன்ஸோவுக்கென மொபைல் ஆப் தயாரானது. ஆரம்பித்தபோது தொழில்நுட்பத்தை அவ்வளவாக கபீர் பயன்படுத்தவில்லை. வாட்ஸ் அப் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து மனிதர்கள்தாம் எல்லா வேலைகளையும் வடிவமைத்தனர். சில நூறு பேருக்கு சேவை செய்ய அதுபோதும். ஆனால், நம் சேவை லட்சக்கணக்கான பேரிடம் செல்ல இந்த வேகம் போதாது என்பதால் செயற்கை நுண்ணறிவின் உதவியை கபீர் நாடினார். அதன் அடிப்படையில் மொபைல் ஆப் உருவானது. இப்போது டன்ஸோவின் சேவையில் 10% தான் மனிதர்களின் தலையீடு.

மற்ற டெலிவரி பாய்களைப் போன்ற வேலையல்ல டன்ஸோவுடையது. ஒருநாள் ஏர்போர்ட் சென்று டிக்கெட் வாங்க நேரிடலாம்; அடுத்த நாள் யாராவது ஜெராக்ஸ் போடச் சொல்லலாம். அதனால் இவர்களை வெறுமனே டெலிவரி பாய் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. அதனால், டன்ஸோ தன் பார்ட்னர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு சர்வீஸ் முடிந்ததும் அவர் பெறும் ஸ்டார் ரேட்டிங் பொறுத்துதான் எந்த வேலைக்கு யார் என்பதை டன்ஸோ அல்காரிதம் முடிவு செய்கிறது. இவர்களுக்கு மணி நேரத்துக்குத்தான் பணம். ஒரு மணி நேரத்துக்கு ஏறத்தாழ 80 ரூபாய் வரை இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்கிறது டன்ஸோ.

ஸ்விகி போன்ற சேவைகளில் ஒரே வாடிக்கையாளரே பலமுறை வாங்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், டன்ஸோவில் அதற்கு வாய்ப்பு குறைவு. எப்போதாவதுதான் டிக்கெட்டை மறப்போம்; எப்போதாவதுதான் பணம் செலவு செய்து குழந்தைகளுக்கு மதிய உணவு தந்து அனுப்புவோம். அதுதான் டன்ஸோவின் மிக முக்கியமான சவால். ஆனால், நிறைவான வாடிக்கையாளர் சேவையால் அதைச் சமாளித்தது டன்ஸோ. ஒட்டுமொத்த டீமும் அந்த இலக்கை நோக்கியே பயணித்ததால் அது சாத்தியமானது. ‘நம்பி ஒரு வேலையைக் கொடுக்கலாம் பாஸ்’ என்ற அந்த விஷயம் வாடிக்கையாளர்களைத் திரும்பத் திரும்ப டன்ஸோவின் சேவைகளைப் பெற வைத்தது.  

கேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. முன்பு, பணத்தை மிச்சப்படுத்துவதற்காகப் பல கிலோமீட்டர்கள் நடந்தே போனவர்கள் நிறைய பேர். இன்று, நேரத்தை மிச்சப்படுத்த அதிக பணம் தந்து டாக்ஸியில் செல்பவர்கள் நிறைய பேர். நேரம் என்பது கிட்டத்தட்ட பணம் என்றாகிவிட்ட சூழலில், டன்ஸோ போன்ற சேவைகளின் தேவையும் அதிகரித்துவருகிறது. அதைக் கபீரும் அவர் டீமும் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதே நேரம், உள்ளே வந்த ஒரு வாடிக்கையாளர் ஒருவரை இழந்தால் அது ஒருவர் என்று அர்த்தமல்ல, அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் அந்த விஷயம் பல ஆயிரம் பேரைச் சென்றடையும். அவர்கள் யாரும் டன்ஸோ பக்கம் வர மாட்டார்கள். ஏனெனில், டன்ஸோவின் டிசைன் அப்படி.

யோசித்துப் பாருங்கள். நீங்கள் நண்பனின் வீட்டில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வீட்டுச் சாவி உங்களிடமிருக்கிறது. மேட்ச் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அப்போது உங்கள் அம்மா ஊரிலிருந்து வந்துவிட்டார். அவருக்குச் சாவி வேண்டும். அதைக் கொடுக்க நீங்கள் போனால், கிரிக்கெட் பார்க்க முடியாது. ஆனால், அம்மாவைக் காத்திருக்க வைக்கவும் முடியாது. டன்ஸோ வரும்வரை இதற்கு வேறு வழியே இல்லாமலிருந்தது. ஆனால், இப்போது டன்ஸோவிடம் சொன்னால் உங்கள் நண்பன் வீட்டிலிருந்து சாவியை வாங்கிக்கொண்டு போய் உங்கள் அம்மா இருக்கும் இடத்தில் அதைக் கொடுத்துவிடுவார்கள். கிரிக்கெட்டும் பார்க்கலாம். அம்மாவுக்கும் பிரச்னையில்லை. இப்படி ஒரு சேவை இருக்கிறதெனத் தெரிந்தால் நிச்சயம் டன்ஸோவிடம்தான் அந்த வேலையைக் கொடுப்பார்கள். ஆனால், ஒருமுறை டன்ஸோ சொதப்பினால் அவ்வளவுதான். ஏனெனில், இது போன்ற வேலைகள் நம் அன்றாடங்களில் நடக்காத ஒன்று. எமர்ஜென்ஸி போலதான். அதனால், நம்பிக்கை என்ற விஷயம் இந்தச் சேவையில் மிக மிக முக்கியம். அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல இயங்கியதுதான் கபீரின் ஜீபூம்பா. ஐடியா இரண்டாம்பட்சம்தான்.

டன்ஸோ இன்னும் 1000 கோடி ரூபாய் நிறுவனமாக வளரவில்லை. ஆனால், அதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தியிருக்கிறது. கூகுள் நிறுவனம் சில மாதங்களுக்கும் முன் டன்ஸோவில் ஏறத்தாழ 75 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இந்திய ஸ்டார்ட் அப்புகளில் கூகுள் முதலீடு செய்த முதல் நிறுவனம் டன்ஸோதான். அவர்கள் தந்த பணத்தின் உதவியால் இப்போது டன்ஸோ தன் சேவைகளை பெங்களூரு தாண்டி சென்னை, டெல்லி, புனே மற்றும் ஹைதராபாத்துக்கு விரிவு செய்திருக்கிறது.

இருக்கும் துறையிலே புதிதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது ஒரு பாணி. ஏர்டெல் இருக்கும்போதே வோடோஃபோன் வந்ததுபோல. இருக்கும் துறையின் போக்கையே மாற்றியெழுதுவது இன்னொரு பாணி(Disruption); ஃபாஸ்ட் டிராக் இருந்தபோது ஓலா வந்ததைப் போல. இல்லவே இல்லாத ஒரு சேவைக்குப் புதிய நிறுவனம் தொடங்கி அதற்கு வாடிக்கையாளர்களைத் திருப்புவது என்பது முற்றிலும் வேறு பாணி, டன்ஸோவைப் போல. இதில் ரிஸ்க்கும் அதிகம், ரீச்சும் அதிகம். இரண்டில் எது கிடைக்கும் என்பது அவரவர் திறமை மற்றும் உழைப்பு சார்ந்தது. கபீர் இரண்டிலும் ‘வெரி குட் பாய்’ என்பதால் டன்ஸோ சிக்ஸர் அடித்திருக்கிறது.

கார்க்கிபவா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி