மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 27 - ID

கேம் சேஞ்சர்ஸ் - 27 - ID
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 27 - ID

கேம் சேஞ்சர்ஸ் - 27 - ID

கேம் சேஞ்சர்ஸ் - 27 - ID

``ஸ்டார்ட் அப் ஒன்று தொடங்க வேண்டும். என்ன செய்யலாம்?” என யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்? சோஷியல் மீடியா? செயற்கை நுண்ணறிவு நிறுவனம்? மொபைல் ஆப்? இவை மட்டும்தான் ஸ்டார்ட் அப்பா? ஒரு தோசை சாப்பிட்டுக்கொண்டே இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதன்பின் இந்தக் கதையை வாசிக்கலாம்.  

கேம் சேஞ்சர்ஸ் - 27 - ID

கேரளாவைக் கடவுளின் தேசம் என்பார்கள். ஆனால், அங்கு வாழும் எல்லா மக்களுக்கும் கடவுள் கருணை காட்டிவிடுவதில்லை. வறுமையின் பிடியில் சிக்கும் குடும்பங்களும் அங்குண்டு.  வயநாடு பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்தபாவின் குடும்பமும் அதிலொன்று.

1980களில் வயநாட்டுப் பகுதியிலிருந்த பல கிராமங்களுக்குச் சாலை வசதிகள் கிடையாது. சில கிராமங்களுக்கு மின் இணைப்புகூடக் கிடையாது. முஸ்தபாவின் அப்பா தினக்கூலி. அவருக்குச் சம்பளமே தினப்படி என்றபோது முஸ்தபாவுக்கு பாக்கெட் மணியெல்லாம் ஏது? சிறு வயதிலே அப்பாவுக்குத் துணையாக வேலைக்குப் போக நேர்ந்தது. உழைப்பு ஒன்றுதான்; கூலிதான் மாறுபடுகிறது என அந்த வயதிலே உணர்ந்த முஸ்தபா, தன் மாமாவிடம் 100 ரூபாய் கடன் கேட்டார். கோடை விடுமுறையில் மிட்டாய்க்கடை ஒன்றை நடத்துவதற்கான முதலீடு அது. முஸ்தபாவின் அந்த முதல் முயற்சி செம ஹிட். அதன்பின் அப்பாவிடம் கல்விக்கோ பாக்கெட் மணியாகவோ பணம் கேட்கவில்லை முஸ்தபா.

கேம் சேஞ்சர்ஸ் - 27 - IDபள்ளி திறந்ததும் அந்த ‘ஸ்டார்ட் அப்’ மூடப்பட்டது; படிப்பில் கவனம் சிதறியது. ஆறாம் வகுப்பில் தேர்ச்சியடையவில்லை அந்த இளம் தொழிலதிபர். ``உனக்குப் படிப்பு வரல... வேலைக்கு வந்துடு” எனத் தந்தை சொல்வார் என முஸ்தபா எதிர்பார்க்கவில்லை. அவரை எதிர்த்துப் பேசவும் அவரால் இயலவில்லை. கடவுளின் தேசத்தில் கடவுள் அப்படியெல்லாம் ஒரேயடியாகக் கைவிட மாட்டார். ஏதாவது ஒரு மேஜிக் நிகழ்ந்தே தீரும். முஸ்தபாவிடம்  ‘டோன்ட் வர்ரி முஸ்தபா’ என்றவர் அவரின் கணக்கு ஆசிரியர் மேத்யூ. முஸ்தபா கணக்கில் புலி. ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் எலி. மொழி அறிவாகாது என ஆசிரியருக்குத் தெரியாதா? அவரே முஸ்தபாவின் தந்தையிடம் பேசி முஸ்தபாவை மீண்டும் ஆறாம் வகுப்பில் சேர்த்தார். கணக்கு ஆசிரியரே மற்ற பாடங்களையும் தனிக் கவனம் எடுத்துச் சொல்லித் தந்தார். ஏழாம் வகுப்பில் பள்ளியிலே முதல் மாணவனாக வந்தார் முஸ்தபா.

‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பதற்கு முஸ்தபாவின் வாழ்க்கைப் பயணம் நெடுக ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. அவர் கல்லூரிப் படிப்புக்குப் பணமும் தங்க இடமும் அவர் நண்பர்களே ஏற்பாடு செய்தார்கள். முஸ்தபாவின் வேலை படிப்பது மட்டுமே. முஸ்தபாவால் வந்த வருமானமும் இல்லாமற்போனதால், குடும்பத்தின் கடன்சுமை லட்சத்தைத் தாண்டியது.

கல்லூரி முடிந்ததும் முஸ்தபாவுக்கு மோட்டோரோலாவில் வேலை கிடைத்தது. இரண்டே மாதங்களில் அவரை அயர்லாந்துக்கு அனுப்பினார்கள். அங்கே அவரின் முதல் மாதச் சம்பளமே லட்சத்தைத் தாண்டியது. அதை அப்படியே நண்பன் மூலம் அப்பாவுக்கு அனுப்பினார். தன் வாழ்நாள் கடனை, தன் மகனின் ஒரே மாதத்துச் சம்பளம் அடைத்துவிட்டது என்றறிந்த முஸ்தபாவின் தந்தை, அன்று முழுவதும் அழுதுதீர்த்தார். ``அவனின் படிப்பையா நிறுத்த நினைத்தோம்?” என்ற குற்றவுணர்வு அவரை அழுத்தியிருக்கும்.   

கேம் சேஞ்சர்ஸ் - 27 - ID

பின், முஸ்தபாவின் வாழ்க்கை  துபாயில் வேலை, திருமணம், குழந்தைகள் என்றானது. அவரைச் சார்ந்த எல்லோரும் முஸ்தபா விருப்பப்படி எல்லாம் நடந்துவிட்டது என நிம்மதிப்  பெருமூச்சு விட்டனர். ஆனால், முஸ்தபா மட்டும் அப்படி நினைக்கவில்லை. 10 வயதில் மிட்டாய்க்கடை நடத்தி வெற்றிபெற்றவர் இல்லையா? அந்தத் தேடல் மிச்சமிருந்தது. சொல்லப்போனால், அந்தக் கனலை அணையாமல் இவ்வளவு நாள் பாதுகாத்திருந்தார் முஸ்தபா. கடனில்லை; கையில் சேமிப்பு, ஊரில் சொந்த வீடு. இனியும் தாமதிக்கக்கூடாது என முடிவெடுத்தவர் தன் கனவுகளைத் துரத்தத் தொடங்கினார். முதல் இலக்கு எம்.பி.ஏ பட்டம். அதன்பின் ஒரு ஸ்டார்ட் அப்.

வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பி ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ சேர்ந்தார். அப்போது அவரின் கஸின்ஸ் பலருடன் நேரம் செலவிட முடிந்தது. அதிலொருவர்தான் ஷம்சுதீன். ஒருநாள் ஷம்சுதீன், பிரபலமாகிவரும் தோசை மாவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நாமும் அதைச் செய்து பார்க்கலாம் என முடிவு செய்தார்கள் பங்காளிகள். முதல் முதலீடாக முஸ்தபா 25,000 தந்தார். 500 சதுர அடி இடம், ஒரு கிரைண்டர், ஒரு சீலிங் மெஷின். அவ்வளவுதான். செலவேயில்லாமல் ஒரு பெயரை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்றார் முஸ்தபா. ID எனப் பெயர் முடிவானது. Idli & Dosai என்பதன் சுருக்கமாக ID. முதலில் 20 கடைகளுக்கு மாவு பாக்கெட்டை விநியோகம் செய்தார்கள். எந்த ஸ்டார்ட் அப்புக்கும் நடக்காத ஒன்று அவருக்கு நடந்தது. தொழில் தொடங்கிய முதல் நாளிலேயே லாபம் கிடைத்தது. அதுதான் உணவு சார்ந்த தொழிலிலிருக்கும் நல்ல விஷயம். லாபமோ, நஷ்டமோ... தினம் தினம் தெரிந்துவிடும். போட்ட பணம் உடனே கிடைத்ததும் அடுத்த கட்டமாக சேமிப்பிலிருந்து ஆறு லட்சத்தை எடுத்தார் முஸ்தபா. இடம் பெரிதானது. கிரைண்டர்கள் அதிகமாகின.  

கேம் சேஞ்சர்ஸ் - 27 - ID

முதல் நாள் 10 கிலோ மாவு செய்தவர்கள் இன்று தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாக்கெட்டுகளை விற்கிறார்கள். பெங்களூரின் ஒரே ஒரு ஏரியாவிலிருந்து இன்று கடல் கடந்து போயிருக்கிறார்கள். ஆறு பேரின் உழைப்பு இப்போது ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 25,000 ரூபாய் முதலீட்டுடன் தொடங்கிய தொழிலின் அடுத்த ஆண்டு இலக்கு 400 கோடி.

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோசை மாவு வியாபாரம் எல்லா ஊரிலும் தொடங்கப்பட்டன. ஆனால், எல்லோரும் ஐடி போல விஸ்வரூபம் எடுக்கவில்லை. அங்குதான் முஸ்தபா தனித்துத் தெரிகிறார். 2007-ல் எம்.பி ஏ முடித்ததும் முழுநேரமாக ஐடி-க்குள் இறங்கினார் முஸ்தபா. அதுவரை அவர்களுக்குத் தேவையான கிரைண்டர்களைக் கோவையிலிருந்துதான் வாங்கினார்கள். அது நிறைய மனித உழைப்பைக் கோரியது. அதனாலே, தரத்தில் நிறைய வித்தியாசம் இருந்தது. இதைத் தடுக்க, ஐடி டீமே புதிய இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார்கள். அதன் உதவியுடன் எத்தனை கிலோ மாவு என்றாலும் ஒரே தரத்தில் தயாரிக்க முடிந்தது. இது வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

அடுத்தது பேக்கிங். இவர்களின் இன்ஸ்டன்ட் வடை மாவு பாக்கெட் இதற்குச் சரியான உதாரணம். அதைப் பயன்படுத்தும்போது மாவு நம் கைகளிலே படாது. நேரிடையாக பாக்கெட்டிலிருந்து எண்ணெய்க்குள் வடையாக ஊற்றிவிடலாம். பதப்படுத்த எந்த வேதியியல் பொருளும் சேர்க்காமல் செய்வதால் தொடர் வாடிக்கையாளர்கள் ஐடி-க்கு அதிகம்.

எம்.பி.ஏ இல்லையா முஸ்தபா? ஐடி-க்கு என நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்ததும் முதலீட்டாளர்களிடம் அதைக் கொண்டு சேர்த்தார். ப்ளிப்கார்ட், ஓலாவுக்குக் கிடைத்தது போல கோடிக்கணக்கான பணம் இவர்களுக்கும் கிடைத்தது. அதை வைத்து இந்தியா முழுவதும் ஐடி-யை விரிவுபடுத்தினார். சேவை, பொருள் என்னவாக இருந்தாலும் சரியான தொழில் முறையும், மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களும் இருந்தால் முதலீடு செய்ய உலகம் முழுவதும் ஆட்கள் இருக்கிறார்கள். ஸ்டார்ட் அப் என்றாலே இணையம் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றியவர்களில் முஸ்தபா முக்கியமானவர். அதே சமயம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எல்லாத் தொழிலிலும் அடுத்த கட்டத்தை நோக்கிய பாய்ச்சல் நிகழ வேண்டும் என்பதையும் ஐடி எடுத்துச் சொல்லியது.

இன்று இட்லி, தோசை மாவு மட்டுமல்ல, காபி டிகாக்ஷன், வடை மாவு, பனீர், தயிர், ரெடிமேடு சப்பாத்தி மற்றும் பரோட்டா என ஏகப்பட்ட பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். உணவுச் சந்தையின் மிகப்பெரிய பலம் நம்பிக்கைதான். அதைப் பெற்றுவிட்டால் அதன்பின் கொண்டு வரும் பொருள்களை நம்பி வாங்குவார்கள். ஆனால், சவாலும் அதுதான். ஒருமுறை அந்த நம்பிக்கை போய்விட்டால் அதன்பின் மீண்டும் வாங்க வைப்பது என்பது முடியவே முடியாத காரியம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் தினம் தினம் அந்த நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டே போகிறது ஐடி. முஸ்தபாவின் ஜீபூம்பா என அதைத்தான் சொல்ல வேண்டும்.

ஐடி முதலில் வடை மாவை அறிமுகப் படுத்தியபோது அதை முஸ்தபா எங்கே அறிவித்தார் தெரியுமா? அமெரிக்காவிலிருக்கும் ஹார்வர்டில். “Everybody can vada” என அவர் தந்த பிரசன்டேஷன் வீடியோ அன்றிரவே வைரல் ஆனது. வடையின் அழகு அதன் வடிவத்திலிருக்கிறது. அதற்கு மாவின் பக்குவம் அவசியமாகிறது. ஐடி-யின் வடைமாவும் அதன் பாக்கெட்டும் இதற்கு உதவுகின்றன. அதனால் யார் வேண்டுமென்றாலும் அழகான வடை செய்யலாம் என்ற விஷயம் உலகையே கவனிக்க வைத்தது. ஒரு வடைக்குப் பின்னால் இவ்வளவு பெரிய விஷயமா என நீங்கள் ஆச்சர்யப்படலாம். அல்லது அலட்சிய மாகக் கடக்கலாம். ஆனால், அந்த வடை மாவுதான் இன்று ஐடி-யின் அடையாளமாக மாறியிருக்கிறது. முஸ்தபாவின் ஒரு மந்திரத்தைச் சொன்னால் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.

“வாய்ப்பு எல்லா இடங்களிலு மிருக்கிறது. அதைக் கண்டறிய கொஞ்சம் காமன் சென்ஸ் வேண்டும்.”

முஸ்தபாவுக்கு அது பத்து வயதிலிருந்தே இருக்கிறது.

கார்க்கிபவா