Published:Updated:

`பாதுகாப்பான இணையத்துக்கு இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால் போதும்!’ - #SaferInternetDay

இணையம் என்னும் நிழல் உலகத்தில் இன்னும் பாதுகாப்பானதாக மாற்றுவது எப்படி?

`பாதுகாப்பான இணையத்துக்கு இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால் போதும்!’ - #SaferInternetDay
`பாதுகாப்பான இணையத்துக்கு இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால் போதும்!’ - #SaferInternetDay

இணைய சேவையும் ஆண்ட்ராய்டு மொபைல்களும் பரவலாகத் தொடங்கியதிலிருந்து மனிதர்களாகிய நாம் இருவேறு உலகங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒன்று, ரத்தமும் சதையுமாக நாம் வாழும் நிகழ் உலகம். இன்னொன்று, நம் அசலான வாழ்க்கையையே விழுங்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய இணைய உலகம். அந்த அளவுக்கு இணையம் நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைய சேவையைக் குறைந்த கட்டணத்தில் வழங்கத் தொடங்கியதும் இது தீவிரம் அடைய ஒரு முக்கியமான காரணம்.

பிரச்னை என்னவென்றால், இணையம் என்பது ஒரு சுதந்திர வெளி. சுதந்திரத்தைச் சரியாகக் கையாளும் திறன் என்பது எல்லோருக்கும் வாய்க்காது. அதனால், இணையப் பயன்பாட்டாளர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேர்கிறது. பலருக்கும் அவர்களின் வேலை இடமோ குடும்பமோ கொடுக்காத அளவுக்கு மன உளைச்சலை இன்று இணையம்தான் கொடுத்துக்கொண்டிருக்கிறதென்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இணையத்தில் உலவும் ஏமாற்றுக்காரர்களிடம் ஏமாந்துபோகும் மக்களும் இங்கு கணிசமாக உள்ளனர். 

இணையம் நம் வாழ்வுகளில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுகிறதென்றால், அதற்குக் காரணங்கள் உண்டு. நாம் நிஜ வாழ்வில் செய்யக்கூடிய பெரும்பாலான பணிகளை அது எளிமையாக்கியிருக்கிறது. கடைக்குக் கால் கடுக்க நடந்துசென்று எதையும் வாங்கி வர வேண்டியதில்லை. நினைக்கும் நேரத்தில் நினைத்த பொருள்களை வீடு தேடி வரச் செய்ய முடிகிறது. நூலகத்துக்குச் சென்று மணிக்கணக்கில் தேடி அலைந்து ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக இணையத்தில் சுலபத்தில் தேடி அறிந்துகொள்ள முடிகிறது. வங்கிப் பக்கம் செல்லாமலே நொடிப் பொழுதில் பணப் பரிவர்த்தனைகளை நிகழ்த்த முடிகிறது. 

இப்படி வாழ்வின் பல்வேறு அம்சங்களில் நம்மைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் இன்று இணையம் ஒரு நிகர் நிழல் உலகமாக வளர்ந்து நிற்கிறது. நன்மையும் தீமையும் ஒருசேர இயங்குவதுதானே உலகம்? அப்படித்தான் இணையத்திலும் தீமைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வல்லமை நமக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. அந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதத்தில் இணையப் பாதுகாப்பை உறுதிசெய்யும் தினமாக இன்று (பிப்ரவரி 5) அனுசரிக்கப்படுகிறது. 

முன்பெல்லாம் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி ஊட்டிவிடுவார்கள். இன்று தங்கள் கைகளில் இருக்கும் செல்பேசிகளில் குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் விஷயங்களைக் காட்டி எளிதில் அவர்களைச் சாப்பிட வைத்துவிடுகிறோம். அந்த அளவுக்குக் குழந்தைகளைத் தங்கள் இளமையில் இருந்தே இணைய உலகுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறோம். நிகழ் உலகில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குப் பல விஷயங்களை நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். உதாரணமாக, மனிதர்களுடன் எப்படிப் பேசிப் பழக வேண்டும், சாலையை எவ்வாறு கடக்க வேண்டும், உடலையும் சுற்றத்தையும் எப்படிச் சுத்தமாகப் பேண வேண்டும் என. ஆனால், இணையத்தில் எப்படிப் பாதுகாப்பாக இருப்பது என நாம் சொல்லிக்கொடுக்கத் தவறிவிடுகிறோம். 

இணையப் பாதுகாப்பு என்பது, குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. இணையத்தைப் பயன்படுத்தும் யாவரும் இணைய உலகுக்குக் குழந்தைகளே. ஏனெனில், இணையம் நம் வாழ்வில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிடவில்லை. எனவே, இணையப் பயன்பாட்டாளர்கள் அனைவரும் இணையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைகள் என சில இருக்கின்றன. இவற்றைப் பின்பற்றினால், பாதுகாப்பான இணைய வாழ்வை உறுதிசெய்ய முடியும் என உளவியலாளர்கள் கருதுகிறார்கள்.

கனிவான பேச்சு

சமூக வலைதளங்களில் நாம் சொல்லும் சொற்களை வாசித்துக்கொண்டிருப்பவரும் நம்மைப் போன்ற ஒரு மனிதரே. நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் எத்தகைய மரியாதையையும் கண்ணியத்தையும் எதிர்பார்க்கிறோமோ, அதையே நாம் இணையத்திலும் வழங்க வேண்டும். நாம் சொல்லும் சொற்கள் மீண்டும் நம்மை நோக்கி வருவதற்கு நீண்ட நேரம் ஆகாது அல்லவா. எனவே யாரையும் தரக்குறைவாகப் பேசும் வசைகளைக் கருத்தாகச் சொல்லாமல் இருப்பது பிறருக்கு மட்டுமல்ல, நமக்குமே நல்லதுதான். 

இணைய வன்முறையைத் துணிந்து எதிர்த்தல்

நாம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கையில் திடீரென யாரோ சில சமூக விரோதிகள் தாக்குகிறார்கள். அந்த வன்முறையை நாம் உடலால் உணர முடியும். இணையத்தில் நடக்கும் வன்முறைகளோ நமக்குத் தெரியாமல் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிரும்போதோ கருத்தைச் சொல்லும்போதோ, யாரோ சிலர் நம் மனம் நோகும்படி அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள். இப்போதெல்லாம் அவைக் கலாய்த்தல் எனும் பெயரில் நடக்கின்றன. நாமும் காலப்போக்கில் அவர்கள் சொல்வது உண்மையென நம்பத் தொடங்குகையில் நமக்குள் தாழ்வு மனப்பான்மை தொடங்கிவிடுகிறது. 

இதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்கவே கூடாது. பெரும்பாலான சமூக ஊடகங்களில் block செய்யும் வாய்ப்பும் report செய்யும் வாய்ப்பும் இருக்கின்றன. நம்மைத் தொந்தரவு செய்பவர்களிடத்தில் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு நம்மையே சேரும்!

கடவுச் சொற்கள்

கடவுச் சொற்களை மிகக் கவனமாகக் கொள்ள வேண்டியதன் அவசியம் எல்லோரும் அறிந்ததே. சொற்கள், எண்கள் மற்றும் *, @, _, & போன்ற சின்னங்களில் ஏதேனும் ஒன்று போன்றவை ஒரு கடவுச்சொல்லில் இருப்பது சிறப்பு. டூத் பிரஷை எப்படி அடிக்கடி மாற்றுகிறோமோ அதேபோல பாஸ்வர்டையும்  மாற்ற வேண்டும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். நாம் டூத் பிரஷை அடிக்கடி மாற்றுகிறோமா என்பதே இங்கு சந்தேகம்தான் என்று இருக்கையில் என்ன செய்ய!

வேகத்தைவிட முக்கியம் விவேகம்

சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்கு முன்பு ஓரிரு நிமிடங்கள் யோசிக்க வேண்டும். நம் பதிவுகளை உடனடியாக நீக்கிவிடலாம்தான். ஆனால், நீக்குவதற்கு முன்பே யாரேனும் அதைப் பிரதி எடுத்து வைத்திருந்தால் அது எத்தனை முறை வேண்டுமானாலும் யார் மூலமாகவும் பகிரப்படக்கூடும். எனவே, ஒவ்வொரு பதிவுக்கும் முன்பும் சில கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நம் பதிவை யாரெல்லாம் பார்க்க முடியும்? (Privacy settings) நம் பதிவு யாரையேனும் புண்படுத்துமா. நாம் போடும் பதிவு கொஞ்சம் காலத்துக்குப் பிறகு, பார்த்தால் நமக்கோ வேறு யாருக்கோ அவமானத்தைக் கொடுக்கும்? இவற்றையெல்லாம் யோசித்த பிறகு, பதிவு செய்தோமென்றால் சமூக வலைதளம் ஆரோக்கியமாக இருக்கும். 

உஷாரய்யா உஷாரு

இணையத்தில் யாரை ஏமாற்றலாம் என ஒரு கும்பல் எப்போதும் கழுகுப் பார்வையோடு நோட்டம் விட்டுக்கொண்டேயிருக்கும். அவர்களிடம் சிக்கினால் சின்னாபின்னம்தான். பணப் பரிவர்த்தனைகள் செய்யும்போது நம்பத்தகுந்த ஊடகங்கள் வழியே மட்டுமே செய்ய வேண்டும். சமூக ஊடகங்களில்கூட, யார் யாரிடம் என்ன பேசுகிறோம் எனும் தெளிவு முக்கியம். நம் கண் முன்னால் நிற்கும் ஒருவரை எடை போடுவதற்கே தடுமாறும் நாம், இணையத்தில் பழகும் யாரோ ஒருவரை நம்பும்போது கவனமாக இருக்க வேண்டும். 

இப்படியெல்லாம் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முடியும்தான். அதையும் கடந்து நம் இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரவே செய்யும். இணைய உலகம் அவ்வளவு பிரமாண்டமானது. போன வருடம் இதே தினத்தில் கிரண் பேடி, அனுபம் கேர் ஆகியோரின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்ட நிகழ்வே இதற்குச் சாட்சி. எனவே, இணையத்தைத் தேவையான அளவு மட்டும் பயன்படுத்துதல் நலம். நமக்கு ரத்தமும் சதையுமாக ஓர் அசலான வாழ்க்கை இருக்கிறது. அதை அதிகமாக வாழ்ந்து பழகுவோம்!