Published:Updated:

ஆபத்தானவையா ஒன்ப்ளஸ் மற்றும் ஷியோமி மொபைல்கள்... #SAR

SAR மதிப்பை ஒவ்வொரு நாடும் அவர்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயித்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ற வகையில்தான் ஒவ்வொரு மொபைலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும்.

ஆபத்தானவையா ஒன்ப்ளஸ் மற்றும் ஷியோமி மொபைல்கள்... #SAR
ஆபத்தானவையா ஒன்ப்ளஸ் மற்றும் ஷியோமி மொபைல்கள்... #SAR

ஒரு மொபைல் போனை வாங்கும் பொழுது நம்மில் பெரும்பாலானோர் கவனிக்க மறக்கும் ஒரு விஷயம் அதன் SAR மதிப்பு. கேமராவின் தரம், டிஸ்ப்ளேவின் அளவு, பேட்டரி, விலை போன்ற சில விஷயங்கள்தான் ஒரு ஸ்மார்ட்போனின் விற்பனையைத் தீர்மானிக்கின்றன என்பதால் இது பெரிய அளவில் கவனிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. இன்னும் பலருக்கு இதைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் சமீபத்தில் முன்னணி நிறுவனங்களின் மொபைல்களின் SAR மதிப்பு தொடர்பாக வெளியான செய்தி ஒன்று பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ஒரு மொபைலை வாங்கும் போது கவனத்தில் கொள்ளும் அளவுக்கு முக்கியமானதா இந்த SAR மதிப்பு. இது அதிகமானால் பாதிப்பு ஏதாவது இருக்குமா ?

SAR மதிப்பு என்றால் என்ன ?

'

ஒரு மொபைலை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனித உடலால் எவ்வளவு கிரகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே SAR (Specific Absorption Rate) மதிப்பு என்பது கணக்கிடப்படுகிறது. தலை மற்றும் உடல் பகுதிகளை கணக்கில் கொண்டு இது அளவிடப்படும். இந்தியாவைப் பொறுத்தவரையில் 1 கிராம் அளவு மனித திசுவுக்கு SAR மதிப்பு அதிகபட்சமாக 1.6 W/kg இருக்க வேண்டும் எனத் தொலைத்தொடர்பு ஆணையம் நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த அளவை ஒவ்வொரு நாடும் அவர்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயித்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ற வகையில்தான் ஒவ்வொரு மொபைலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும்.

ஒரு மொபைலின் SAR மதிப்பைக் கண்டறிவது எப்படி ?

மொபைல் நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு மொபைலுக்குமான SAR மதிப்பைத் தெளிவாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது அரசின் வழிகாட்டுதலாக இருக்கிறது. அதன்படி மொபைல் பேக் செய்யப்பட்டிருக்கும் அட்டைப் பெட்டியின் வெளிப்புறத்தில் இந்த விவரங்கள் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். மேலும் உள்ளே இருக்கும் கையேட்டிலும் இந்த விவரங்கள் இருக்கும். இது தவிர்த்து மொபைல் நிறுவனங்களின் இணையதளத்திலும் இதைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் மொபைலில் *#07# என்று டயல் செய்து SAR மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

அதிர்ச்சியளித்த ஷியோமி மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

இப்படிப் பல்வேறு நிறுவனங்களின் மொபைல்கள் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்ற தகவல்களை ஆய்வு செய்து அது தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தது Bundesamt für Strahlenschutz என்ற அமைப்பு. இது ஜெர்மன் அரசின் ஒரு பகுதியாகும், கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் வெளியிடப்பட்ட SAR மதிப்பு தொடர்பான தகவல்களைத் தொகுத்து வெளியிட்டிருந்தது Statista என்ற தரவுத்தளம். அதுதான் தற்பொழுது SAR தொடர்பான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. வெளியிடப்பட்டுள்ள அந்தப் பட்டியல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களை மட்டுமன்றி ஆப்பிள், ஒன்பிளஸ் போன்று விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் அதிக கதிர்வீச்சு கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரிசையில் அதிக இடங்களைப் பிடித்திருப்பது ஷியோமி மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்தாம்.

Statista தரவுத்தளம் பட்டியலிட்டுள்ள அதிக கதிர்வீச்சு கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது ஷியோமி நிறுவனத்தின் Mi A1 (1.75W/kg)ஸ்மார்ட்போன்தான். இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது ஷியோமியின் முதல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்பதால் இதற்குச் சந்தையில் பெரிய அளவில் வரவேற்பும் இருந்தது. தற்பொழுது இதற்கு அடுத்தபடியாக Mi A2 என்ற ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஷியோமியின் Mi Max 3 (1.58W/kg) ஸ்மார்ட்போன் மூன்றாவது இடத்தையும், Mi Mix 3 (1.45W/kg)ஆறாவது இடத்தையும் மற்றும் Redmi Note 5 (1.29W/kg)பதினைந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய வரவான ஒன்பிளஸ் 6T (1.55W/kg ) ஸ்மார்ட்போன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மூன்று ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. இது தவிர முன்னணி நிறுவனமான ஆப்பிள், சோனி, ஹெச்டிசி மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் குறைவான அளவு கதிர்வீச்சைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கேலக்ஸி நோட் 8 ( 0.17W/kg )ஸ்மார்ட்போன் முதலிடம் பிடித்துள்ளது. அது மட்டுமன்றி மொத்தமுள்ள பதினாறு இடங்களில் எட்டு இடங்களை சாம்சங் ஸ்மார்ட்போன்களே பிடித்துள்ளன. மற்ற இடங்களை மோட்டோரோலா, எல்ஜி, ஹெச்டிசி மற்றும் ZTC நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பிடித்துள்ளன.

ஆபத்தானவையா ஷியோமி மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்?

 ஷியோமி மற்றும் ஒன்பிளஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களாக இருந்தாலும் கூட இந்தியா அவற்றின் முக்கியச் சந்தையாக இருந்து வருகிறது. இரண்டு நிறுவனங்களும் சில ஆண்டுகளுக்கு முன்னால் கால் பதித்தாலும் கூட அதி வேகத்தில் வளர்ச்சியடைந்தன. தற்பொழுது ஷியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது, ஒன்பிளஸ் மிட்ரேஞ்ச் செக்மெண்டில் முன்னிலையில் இருக்கிறது. பட்ஜெட் செக்மெண்டில் அதிக பேர் வாங்க விரும்புவது ஷியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களைத்தான். அதை விடக் கொஞ்சம் அதிக பணம் செலவழித்து ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களே சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்நிலையில் SAR மதிப்பு தொடர்பாக வெளியான இந்தத் தகவல் இந்த இரண்டு நிறுவனங்களின் போன்களை வைத்திருப்பவர்களையும், வாங்க நினைத்திருந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், பலரும் நினைப்பது போல பெரிய அளவிலான குழப்பம் எதுவும் இந்த விஷயத்தில் ஏற்படவில்லை. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஜெர்மனிக்கான SAR மதிப்பும், இந்தியாவுக்கான SAR மதிப்பும் வெவ்வேறானவை. இந்தியாவில் SAR மதிப்பு 1.6 W/kg என்ற அளவுக்குக் குறைவாகவே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஜெர்மனியில் அதிகபட்சமாக 2 W/kg என்ற அளவுக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கான மதிப்புடன் ஒப்பிடும் போது சற்று அதிகமானதுதான். எனவே இரண்டு நாடுகளிலும் மொபைல் நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதன் SAR மதிப்புகள் வேறுபட்டுத்தான் இருக்கும்.

எடுத்துக்காட்டாக அதிக கதிர்வீச்சு கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் Mi A1 ஸ்மார்ட்போனின் SAR மதிப்பு 1.75W/kg. இது ஜெர்மனியின் 2 W/kg என்ற SAR மதிப்பின் படிப் பார்த்தால் அதற்குக் குறைவாகவே இருக்கிறது. அதே வேளையில் இந்தியாவுக்கான SAR மதிப்பான 1.6 W/kg என்பது படி பார்த்தால் இது அதிகமானது. இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ஜெர்மனியில் விற்பனை செய்யப்படும் Mi A1 ஸ்மார்ட்போனும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் Mi A1 ஸ்மார்ட்போனும் வசதிகளில் ஒன்றாக இருந்தாலும் SAR மதிப்பு விஷயத்தில் வெவ்வேறானவை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் Mi A1 ஸ்மார்ட்போனின் SAR மதிப்பு 1.6 W/kg என்ற அளவில்தான் இருக்கிறது. இதை ஜெர்மனியின் அளவுகளின்படி ஒப்பிட்டால் மிகவும் குறைவாகவே இருக்கும். Mi A1 ஸ்மார்ட்போனை இந்திய அரசு நிர்ணயித்திருக்கும் SAR மதிப்புகளுக்கு உட்பட்டே தயாரித்து விற்பனை செய்கிறது ஷியோமி நிறுவனம். அதேபோலத்தான் ஒன்பிளஸ் நிறுவனமும் இந்தியாவிற்கு ஏற்ற வகையில்தான் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது. எனவே அவற்றின் SAR மதிப்பும் பட்டியலில் உள்ளதை விடவும் மிகக்குறைவாகவே இருக்கும் என்பதால் இந்த விஷயத்தில் பயப்படத் தேவையில்லை.