Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

Published:Updated:
கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo
பிரீமியம் ஸ்டோரி
கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

2009. அடிக்கும் அலார சத்தத்தை அணைத்துவிட்டு, ‘இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமா?’ என ஏங்கும் மனிதனைப்போல, உலகம் பொருளாதார மந்தநிலையிலிருந்து எழ முயன்றுகொண்டிருந்தது. ஸ்டார்ட்அப்கள் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தன. அந்தக் களேபரச் சூழலில், தான் ஆரம்பித்த ஸ்டார்ட்அப் என்ன ஆகுமோ என மும்பையின் அரபிக் கடலோரம் நடந்துகொண்டே யோசித்துக்கொண்டிருந்தார் ஷஷாங்க். அந்தக் கடற்கரைக்கு நேரெதிரில்தான் அவர் அலுவலகம். “அடுத்து என்ன செய்யப் போகிறோம்?” என்ற யோசனை, அப்போது ஷஷாங்க்கின் 24 மணி நேரத்தையும் தின்றுகொண்டிருந்தது. 

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

2007-ம் ஆண்டில் தன் தந்தையின் மருத்துவத் தேவைக்காக அலைந்துகொண்டிருந்தார் ஷஷாங்க். `அறுவை சிகிச்சைதான் ஒரே வழி’ என ஒரு மருத்துவர் சொல்லிவிட, `செகண்டு ஒப்பினியன்’ கேட்கலாமென இன்னொரு மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தார். ஏகப்பட்ட ரிப்போர்ட்கள், பிரிஸ்கிரிப்ஷன்கள், மருந்துகள். எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போக வேண்டும். எந்த ரிப்போர்ட் எதற்காக, எப்போது எடுக்கப்பட்டது என எந்தத் தகவலும் எளிமையாக இருக்கவில்லை. ஒவ்வொரு மருத்துவமனையும் ஒவ்வொருவிதமாகச் செயல்பட்டன. `இதையெல்லாம் அழகாக ஒருங்கிணைக்கலாமே...’ என ஷஷாங்க்கின் மூளைக்குள் பொறிதட்டியது. `அப்பா குணமாகட்டும்; பிறகு மருத்துவத் துறையைக் குணப்படுத்த முயற்சிக்கலாம்’ எனக் காத்திருந்தார்.

ஷஷாங்க் நன்றாகப் படிக்கும் மாணவர். அப்போது என்.ஐ.டி-ல் கணினி அறிவியல் படித்துக்கொண்டிருந்தார்.  ஸ்டார்ட்அப் தொடங்க வேண்டுமென்பதெல்லாம் அவர் கனவாக அப்போது இருந்ததில்லை. `பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதே நம் வேலை’ என வாழ நினைத்த இன்னோர் இன்ஜினீயர் அவர். தந்தைக்காகப் பல மருத்துவமனைகள் ஏறியபோது, `மருத்துவத் துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஏன் தீர்வு இல்லை?’ என யோசித்தார். பிரச்னையை மிக நெருக்கத்தில் சந்தித்ததாலோ என்னவோ, அதற்குத் தீர்வு அவருக்கு எளிதாகத் தெரிந்தது.

ஷஷாங்க் தன் சக மாணவன் அபினவ் லாலுடன் பேசினார். இருவரும் சேர்ந்து ‘பிராக்டோ ரே’ (Practo ray) என்ற மென்பொருளை உருவாக்கினார்கள்.  மருத்துவமனையோ, கிளினிக்கோ... என்னென்ன பிரச்னைகளை அவை சந்திக்கும் என அவர்கள் நினைத்தார்களோ அதற்கெல்லாம் அந்த மென்பொருளில் தீர்வுகள் இருந்தன. ஓர் இன்ஜினீயர் மென்பொருளை உருவாக்கலாம். அதைப் பயன்படுத்த மருத்துவர்தானே வேண்டும்? உடன் படித்தவர்களெல்லாம் வேலைக்காக ஐ.டி நிறுவனங்களுக்கு நடந்துகொண்டிருக்க, இவர்கள் இருவரும் கிளினிக் கிளினிக்காக அலைய ஆரம்பித்தார்கள், எந்த நோயும் இல்லாமலே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

ஷஷாங்க், தான் சந்தித்த முதல் மருத்துவரை மறக்கவே மாட்டார். “அந்த கிளினிக் எதோ ஒரு சந்துல இருந்துச்சு. இந்தியாவின் பெரும்பாலான கிளினிக்போல அந்த இடம் சின்னதாவும் நோயாளிகள் நிறைய பேரும் இருந்தாங்க. `இத்தனை பேருக்கு நடுவுல நம்மைச் சந்திக்கிற டாக்டர் என்ன மனநிலையில இருப்பார்... நாம சொல்றதைக் கேட்பாரா... கேட்டாலும் புரிஞ்சிப்பாரா?’ எனக்குள்ள நிறைய கேள்விகள். அவரைச் சந்திச்சப்ப அவரோட பிரச்னைகளைச் சொன்னாரு. நிறைய புதுசா இருந்துச்சு. அடுத்த தடவை அவரை சந்திக்கப் போனப்ப, எங்க புராடக்டோட போனோம். நம்பவே இல்லை. அன்னைக்கே செக்ல கையெழுத்துப் போட்டு தந்தாரு” என அந்தச் சம்பவத்தை விவரிக்கிறார் ஷஷாங்க்.

அப்போது, இந்திய மருத்துவத் துறை எந்த அளவுக்கு பிரச்னைகளுடன் இயங்கி கொண்டிருந்தது என்பதற்கு இதுதான் சான்று. இந்தியாவின் பல துறைகளும் தொழில்நுட்பத்தின் உதவியால் கடந்த சில பத்தாண்டுகளாக மாறிவருகின்றன. அவற்றில், அதிகம் மாற்றம் பெறாத அல்லது தாமதமாக மாறிய துறையென்றால் அது மருத்துவத்துறைதான். நோயாளிகளின் பிரச்னைகள் பற்றி யோசிக்கத்தான் மருத்துவர்களுக்கு நேரமிருந்தது. `அந்தத் துறையின் பிராக்டிக்கல் பிரச்னைகளைத் தீர்க்க ஒருவர் வருவார்’ என எல்லா மருத்துவர்களும் விரும்பினார்கள். அந்த வகையில் அவர்கள் அனைவரும் பேஷன்ட் ஆகக் காத்திருந்தார்கள். அவர்களுக்குக் கிடைத்த டாக்டர்கள்தான் ஷஷாங்க்கும் அபினவும்.

பிராக்டோ ரே, நோயாளிகள் பற்றிய தகவல்களை டிஜிட்டலாக மாற்றியது. எங்கிருந்து வேண்டுமென்றாலும், பிராக்டோ ரே வைத்திருப்பவர்கள் ஒரு நோயாளியின் மருத்துவத் தகவல்கள் அனைத்தையும் அணுக முடிந்தது. மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இது வரப்பிரசாதமானது. கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகள் பிராக்டோ ரே மென்பொருளை வாங்கத் தொடங்கின. முதலீடும் வரத் தொடங்கியது. அப்போது, `பிராக்டோ ரே B2B’ எனப்படும் தொழிலாக இருந்தது. அதாவது, தொழில் செய்பவர்களுக்குத் தேவைப்படும் சேவைகளை அளிக்கும் நிறுவனம். நேரிடையாக வாடிக்கையாளர்கள் பிராக்டோவின் தயாரிப்புகளைப் பயன்படுத்தவில்லை. மென்பொருள் துறையில் `SaaS’ என்பார்கள். `Software as a service’ என்பதன் சுருக்கம் அது. பிராக்டோ அப்படித்தானிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பிராக்டோ வளரத் தொடங்கியது. அப்போது உலகம் ஸ்மார்ட்போனில் முடங்கியதால் பிராக்டோ, தனது அடுத்த தயாரிப்பு குறித்து யோசிக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவானது. உண்மையில், பிராக்டோவை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்றிய ஜீபூம்பா அப்போதுதான் வெளிவந்தது.

கேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo

ஒவ்வொரு நோயாளியும் சரியான மருத்துவரைத் தேடிப் பிடிக்கத்தான் அதிக சிரமப்படுகின்றனர். அடுத்து, அந்த மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்க அலைகின்றனர். ஒரு வாரத்தில் நான்கு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மருத்துவர்கள் இங்கே ஏராளம். அதனால் அவரைப் பார்க்க எங்கே செல்ல வேண்டுமென்ற குழப்பமும் அதிகம். இதையெல்லாம் கணக்கில்கொண்டு ஒரு செயலியைக் கொண்டு வந்தது பிராக்டோ. மருத்துவர் பெயரைவைத்துத் தேடுவது அல்லது நோயைக் குறிப்பிட்டு அதற்கான மருத்துவரைத் தேடுவது, அவரின் கட்டணம் எவ்வளவு என அறிவது, அந்த மருத்துவருக்கு அவரின் பேஷன்ட்ஸ் என்ன ரேட்டிங் கொடுத்திருக் கிறார்கள் (கைராசி முக்கியமில்லையா?) எனப் பார்ப்பது, அவரிடம் அப்பாய்ன்ட்மென்ட்  வாங்குவது, அவர் தரும் மருத்துவக் குறிப்புகளை டிஜிட்டலாகச் சேமிப்பது... என எல்லாவற்றுக்கும் பிராக்டோ செயலி தீர்வுகள் தந்தது. 2013-ம் ஆண்டில் பிராக்டோ செயலியைச் சந்தைக்குக் கொண்டு வந்தார்கள். பிராக்டோவிலிருக்கும் ஒவ்வொரு மருத்துவரையும் பிராக்டோவே ஸ்க்ரீனிங் செய்துதான் சேர்க்கிறார்கள். இந்தச் செயலிக்காக மருத்துவரிடமோ, நோயாளியிடமோ பிராக்டோ எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. மருத்துவர்கள் தங்கள் பெயரோ, தங்கள் மருத்துவமனையின் பெயரோ தனியாகத் தெரிய வேண்டுமென்றால் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலமும், அந்த மருத்துவமனைகளிடம் தன்னுடைய பிராக்டோ ரே மென்பொருளை விற்பதன் மூலமும் வருமானம் ஈட்டுகிறது பிராக்டோ.

2008லிருந்து 2018-ம் ஆண்டு வரையிலான பிராக்டோவின் வளர்ச்சி மிகப் பெரியது. இன்று, இந்திய மருத்துவமனைகளுக்கான மென்பொருள் சேவை சந்தையில் 90 சதவிகிதம் பிராக்டோ வசம் உள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த 2.5 கோடி பேர் பிராக்டோ பயன்படுத்துகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 5 கோடி அப்பாய்ன்ட் மென்ட்கள் பிராக்டோ செயலி மூலம் முடிவு செய்யப்படுகின்றன. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் பிராக்டோவுடன் கைகோத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி பேர் பிராக்டோவில் சர்ச் செய்கிறார்கள். 1,500 ஊழியர்களுடன் பிராக்டோ இதைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் ஓராண்டில் பில்லியன் டாலர் (7,000 கோடி) என்ற மேஜிக்கல் மார்க்கை பிராக்டோ தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராக்டோவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்ற ஐடியாக்கள் எவையுமே அதன் அலுவலக மீட்டிங் அறையில் உருவானவை கிடையாது. ஷஷாங்க்கும் அவர் சகாக்களும் எந்த கிளினிக் போனாலும், நோயாளிகளும் அவர்களுடன் வந்தவர்களும் என்ன பேசுகிறார்கள் என உற்றுக் கேட்பார்கள். அவர்களின் தேவைதான் அங்கே புலம்பலாக ஒலிக்கும். அந்தப் புலம்பலுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதுதான் பிராக்டோவின் வேலை. ஒரு பிரச்னைக்கு எந்த அளவுக்கு அருகிலிருக்கி றோமோ அந்த அளவுக்கு அதன் தீர்வுக்குப் பக்கத்திலிருக்கிறோம் எனச் சொல்லலாம். இது எல்லா தொழில்களுக்கும் பொருந்தக்கூடிய சூத்திரம். பிராக்டோ டீமுக்கு இது தெரிந்திருந்தது.

பிராக்டோ, இப்போது சர்வதேச நிறுவனம். தெற்காசியா மட்டுமின்றி அமெரிக்க நாடுகள்வரை பிராக்டோ வளர்ந்திருக்கிறது. இந்தியச் சந்தைதான் பிராக்டோவின் முக்கிய இலக்கு. ஆனால், `இந்தியாவைவிட அமெரிக்காவில் வளர்ச்சி வேகமாக இருக்கிறது’ என்பது ஷஷாங்க்கின் கணிப்பு. ``ஒரு ஸ்டார்ட்அப் உருவாகி, பங்குச் சந்தையில் நுழைந்து, மிகப் பெரிய நிறுவனமாக வளர ஆகும் நேரம் இந்தியாவைவிட அமெரிக்காவில் குறைவு’’ என்கிறார் ஷஷாங்க். இந்தியாவில் தொடங்கி, இந்தியாவிலேயே பில்லியன் டாலர் நிறுவனமாக விரைவில் வளர்ந்த ஸ்டார்ட்அப்  உண்டு. ஆனால், அவை எண்ணிக்கையில் குறைவு. அமெரிக்காவில் அதிகம். ஆனால், இந்தப் பிரச்னை இப்போது இந்தியாவில் குறைந்து கொண்டே வருகிறது.

நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் மனிதர்கள் வாழ மருத்துவ விஷயத்தில் அவர்கள் எடுக்கும் சின்னச் சின்ன முடிவுகள்கூட முக்கியம். அந்த முடிவைச் சரியாக எடுக்கத் தொழில் நுட்பத்தால் உதவ முடியுமென ஷஷாங்க் நம்பினார். அதைச் செயல்படுத்தியும் காட்டினார். ஷஷாங்க் போன்ற கேம் சேஞ்சர்கள் இன்னும் நிறைய பேர் வேண்டும். ஸ்டார்ட்அப்களால்தான் இந்தியா, சமீபகாலமாக நிறைய மாறியிருக்கிறது. இளைஞர்கள் பலர் உலகை மாற்றும் கேம் சேஞ்சர்களாக மாறும் சூழல் இங்கேயும் எளிதாகும் என நம்புவோம்.

- கார்க்கிபவா