Published:Updated:

1 TB மெமரி, 12 GB ரேம், ஸ்டைலிஷ் டிசைன்... மிரட்ட வருகிறது #SamsungGalaxyS10

பிரிமியம் மொபைல்களில் அடுத்த லெவலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது சாம்சங்.

1 TB மெமரி, 12 GB ரேம், ஸ்டைலிஷ் டிசைன்... மிரட்ட வருகிறது #SamsungGalaxyS10
1 TB மெமரி, 12 GB ரேம், ஸ்டைலிஷ் டிசைன்... மிரட்ட வருகிறது #SamsungGalaxyS10

சாம்சங் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதன் கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஹைஎன்ட் ஸ்மார்ட்போனான S சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகமாக இருக்கும். இந்த வருடத்தின் கேலக்சி S சீரிஸ் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S10-ஐ அடுத்த வாரம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். கேலக்ஸி S10 ப்ளஸ், S10 மற்றும் கேலக்ஸி 10e என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் வசதிகள் இவை.

டிஸ்ப்ளேவுக்கு அடியில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார்

டிஸ்ப்ளேவுக்கு அடியில் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை கொடுப்பதுதான் ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் இப்போதைய டிரெண்டாக இருந்து வருகிறது. ஒப்போ, விவோ, ஷியோமி எனப் பல சீன நிறுவனங்கள் இந்த வசதியைக் கொடுத்து பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த வரிசையில் தற்போது சாம்சங் நிறுவனமும் இணையப்போகிறது. ஆனால், கேலக்ஸி S10 ஸ்மார்ட்போனில் இருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பல விதங்களில் மேம்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி S10 ப்ளஸ், S10 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளேவுக்கு அடியில் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும், கேலக்ஸி 10e ஸ்மார்ட்போனில் பவர் பட்டனுடன் இணைந்த ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் கொடுக்கப்படலாம்.

புதிய இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே

நாட்ச் என்பது ஸ்மார்ட்போன்களில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை நாட்ச் கொடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள S10 வரிசை ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேவில் நாட்ச் இடம் பெறப்போகிறது. ஆனால், முற்றிலும் வேறுபட்டதாக இந்த நாட்ச் இருக்கும். இதற்கு ‘Infinity-O’ எனப் பெயரிட்டிருக்கிறது சாம்சங். அதன்படி டிஸ்ப்ளேவின் மேற்பகுதியில் வலது மூலையில் கேமராவுக்காக மட்டும் சிறிய அளவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். சாம்சங் அதன் மொபைல்கள் அனைத்திலும் AMOLED வகை டிஸ்ப்ளேக்களையே பயன்படுத்தி வருகிறது. எனவே வரப்போகும் மூன்று ஸ்மார்ட்போன்களிலும் அந்த வகை டிஸ்ப்ளேக்களே இருக்கப்போகிறது. கேலக்ஸி S10 பிளஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 6.3-இன்ச் டிஸ்ப்ளே, அடுத்ததாக S10 ஸ்மார்ட்போனில் 6.1-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 10e ஸ்மார்ட்போனில் 5.8-இன்ச் டிஸ்ப்ளேவும் கொடுக்கப்படலாம். டிஸ்ப்ளேவின் அளவைப் பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படலாம் என்பதால் கேலக்ஸி S10 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை அதிகமாகவும், 10e ஸ்மார்ட்போனின் விலை குறைவாகவும் இருக்கும்.

பேட்டரி

சில வருடங்களுக்கு முன்னால் நோட் 7 ஸ்மார்ட்போனின் பேட்டரி வெடித்த சம்பவங்களைத் தொடர்ந்து பேட்டரி விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தது சாம்சங். பின்னர், நோட் 9 ஸ்மார்ட்போனில்தான் பேட்டரியின் திறனை அதிகப்படுத்தியது. தற்போது இதுவரை கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் அதிகபட்ச திறன் கொண்ட பேட்டரிகளை புதிய கேலக்ஸி S10 வரிசை ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்போகிறது. மூன்று ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாகக் கேலக்ஸி S10 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 4,100 mAh பேட்டரி, S10-னில் 3,400 mAh பேட்டரி மற்றும் 10e-னில் 3,100 mAh பேட்டரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்படவுள்ளது.

புராஸசர்
மூன்று ஸ்மார்ட்போன்களிலும் Exynos 9820 புராஸசரே பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புராஸசர் 8nm என்ற தயாரிப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே புராஸசர் என்றாலும் இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ரேம் இன்டெர்னல் மெமரி போன்றவை வெவ்வேறாக இருக்கும்.

கேலக்ஸி 10e ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம்/ 128ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் / 256ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வேரியன்ட்களிலும் . S10 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம்/ 128ஜிபி இன்டெர்னல் மெமரி, 8 ஜிபி ரேம் / 512ஜிபி இன்டெர்னல் மெமரி என்ற இரண்டு வேரியன்ட்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம். மூன்றாவது ஸ்மார்ட்போனான கேலக்ஸி S10 பிளஸ் ஸ்மார்ட்போனை கொஞ்சம் ஸ்பெஷலாக உருவாக்கியுள்ளது சாம்சங். அதற்கு ஏற்றவாறு இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேமையும் 1TB இன்டர்னல் மெமரியையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் போலவே இந்த ஸ்மார்ட்போன்கள் தொடர்பான பல தகவல்கள் இணையத்தில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உண்மையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களோடு சம்சங்கின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்படக் கூடும் என்பதால் வரும் 21-தேதியில் நடைபெறும் அறிமுக விழாவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் சாம்சங் ரசிகர்கள்.