Published:Updated:

`Zombie மட்டுமல்ல; இன்னும் நிறைய வரும்!’ பப்ஜி புது அப்டேட்ஸ் #VikatanExclusive

பப்ஜி மொபைல் இந்தியாவுக்கு வந்து முழுமையாக ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால், இன்னும் பப்ஜி மோகம் கொஞ்சமும் இங்கே குறையவில்லை. பள்ளி, கல்லூரி எனப் பல இடங்களில் பப்ஜிக்கு ரெட் கார்டே விழுந்தது; அப்போதும் பப்ஜியின் ரெக்கார்டுகளுக்கு எந்தப் பாதிப்புமில்லை. இந்தளவுக்கு இந்தியர்களை வெறியேற்றியிருக்கும் இந்த கேமின் வரலாறு என்ன? இந்தியாவிற்கென இன்னும் என்னவெல்லாம் திட்டங்கள் வைத்திருக்கிறது பப்ஜி டீம்? விரிவாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.

`Zombie மட்டுமல்ல; இன்னும் நிறைய வரும்!’ பப்ஜி புது அப்டேட்ஸ் #VikatanExclusive
`Zombie மட்டுமல்ல; இன்னும் நிறைய வரும்!’ பப்ஜி புது அப்டேட்ஸ் #VikatanExclusive

பிரேக்அப்; அதற்குப் பிறகும் பிரேசிலிலேயே தங்கியிருப்பதற்கு பிரண்டனிடம் எந்தக் காரணமும் இல்லை; திரும்ப சொந்த ஊரான அயர்லாந்துக்கே செல்வதற்கு கையில் பணமில்லை என்பதைத் தவிர. என்ன செய்யலாம்? இங்கேயே தங்கி ஏதாவது வேலை பார்க்கலாமா, ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த வெப் டிசைனர் வேலையையே தொடரலாமா, போட்டோகிராபியும் தெரியுமே... அதை வைத்து அப்படியே வாழ்க்கை நடத்திவிடலாமா? இப்படியெல்லாம் எக்கச்சக்க கேள்விகள் பிரண்டனின் மூளைக்குள் அன்று அலைபோல் அடித்துக்கொண்டிருக்கின்றன. இறுதியில், தேவைப்படும்வரை சம்பாதித்துவிட்டு, மீண்டும் ஊருக்கே திரும்பிவிடலாம் என முடிவெடுக்கிறார் பிரண்டன். பிரேக்அப் சோகத்தைத் தள்ளிவைத்துவிட்டு வெப் டிசைனிங், போட்டோகிராபி எனப் பிரேசிலிலேயே பிசியாகிறார். இடையே பொழுதுபோக்குக்காக மட்டும் கொஞ்சமே கொஞ்சம் கேமிங். இவ்வளவுதான் பிரண்டனின் பிரேசில் வாழ்க்கை. இப்படி ஒரே கோடாகச் சென்றுகொண்டிருந்த இவரின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியமைக்கிறது ஒரு கேம். அதன் பெயர் DayZ. இன்றைக்கு நாம் விளையாடும் பப்ஜியை பிரண்டன் உருவாக்கியிருக்கலாம்; ஆனால் விதை DayZ போட்டது.

ராஜா கைய்ய வச்சா..!

DayZ சம்பவம் குறித்து தெரிந்துகொள்ளும் முன்னர் Mod கேம்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கிவிட்டு, அதை மேலும் 10 லட்ச ரூபாய் செலவு செய்து மாடிஃபை செய்யும் நபர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதே கதைதான் இங்கேயும். சந்தையில் ஒரு கேம் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும். அதன் மேம்போக்கான கான்செப்ட்டை மட்டும் எடுத்துக்கொண்டு, அதே கேமை நமக்கேற்ற கான்செப்ட்டுக்கு மாற்றுவதுதான் Mod கேம்கள். அப்படி ARMA 2-வின் Mod-டாக உருவானதுதான் DayZ. ஜோம்பிக்களிடம் இருந்து தப்பித்து, உயிர்பிழைப்பதே இந்த DayZ-ன் கான்செப்ட். இது ஆரம்பத்தில் புதுமையாக இருந்தாலும், போகப்போக போர் அடிக்கத்தொடங்கியது. கேமின் சூட்சுமங்களை எளிதாக யூகிக்க முடிந்ததால் சுவாரஸ்யம் குறைந்தது. இப்போதுதான் நம் ஹீரோ பிரண்டனுக்கு ஒரு ஐடியா வருகிறது. ``நாமளே ஏன் DayZ-க்கு ஒரு Mod உருவாக்கக் கூடாது?’’ கொஞ்சம்கூட கோடிங் தெரியாத பிரண்டன் இதற்காக மெனக்கெட்டு கோடிங் கற்கிறார். கேமிங் Mod-கள் பற்றி தெரிந்துகொள்கிறார். டெக்னிக்கலாக ஒரு Mod கேமை உருவாக்கும் அளவுக்கு வளர்கிறார். ஆனால், இங்கே ஒரு சிக்கல். 

DayZ-ன் அதே ஷூட்டிங், கிராபிக்ஸ், டெக்னிக்கல் வசதிகள் அனைத்தும் இந்த Mod-ல் வர வேண்டும். ஆனால், DayZ போல சில நாள்களிலேயே சலித்துவிடக் கூடாது. அப்படி ஒரு `நச்’ கான்செப்ட் பிடிக்க வேண்டும். இதைத் தேடி ஓடிக்கொண்டிருந்தபோதுதான் 'Battle Royale' படம் கைகொடுக்கிறது. ஒரு தீவில் இறக்கிவிடப்படும் அனைவரும், மற்றவர்களோடு சண்டையிட்டுக் கொன்றுவிட்டு, இறுதியாக யார் விஞ்சுகிறாரோ அவர்தான் வெற்றியாளர் என்பதுதான் அந்த ஜப்பானியப் படத்தின் ஒன் லைன். இந்த சர்வைவல் கதை பிரண்டனுக்குப் பிடிக்கவே உடனே 'DayZ: Battle Royale' எனப் பெயர் வைத்து கேமைத் தயாரிக்கிறார். கேம் அதிரிபுதிரி ஹிட். இத்தனைக்கும் பிரண்டன் அந்தப் படத்திலிருந்து எடுத்துக்கொண்டது வெறும் ஒன்லைன் மட்டும்தான். ஒரு தீவு, கொஞ்சம் மனிதர்கள், அவர்களுக்கான ஆயுதங்கள் என்பதைத் தாண்டி பெரிதாக எதையும் காப்பியடித்துவிடவில்லை. அப்படி செய்தால் காப்புரிமை பிரச்னை வரும் என்பதும் ஒரு காரணம். இந்த கேம் ஹிட் ஆகவே பிரண்டனுக்கு நம்பிக்கை கூடுகிறது. Mod கேம்களை சட்டரீதியாக விற்கவோ, அதன்மூலம் பணம் வசூலிக்கவோ கூடாது. அப்படிச் செய்தால் அந்த கேமின் உரிமையாளர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். எனவே வருமானம் எதுவும் இல்லாவிட்டாலும் இந்த வெற்றி கொடுத்த உற்சாகமே போதுமென இருந்தார் பிரண்டன். கேமின் சர்வர்களுக்குக்கூட சொந்தப் பணம்தான். கதை இப்படிப் போய்க்கொண்டிருக்க, அதுவரைக்கும் Mod கேமாக இருந்த DayZ முழுவடிவம் பெற்று தனி கேமாகவே வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த கேமை அப்படியே விட்டுவிட்டு அயர்லாந்துக்கே ரூட் பிடித்தார் பிரண்டன்.

பப்ஜி: அத்தியாயம் ஒன்று

ஆனாலும், கேமிங் ஆர்வம் விடவில்லை. ARMA 3 என்ற கேம்க்கு அடுத்த Mod டிசைன் செய்யத்தொடங்கினார். இப்போது இருக்கும் பப்ஜியின் டீசர் என இதைச்சொல்லலாம். 'Winner winner Chicken Dinner' எல்லாம் இங்கேயே அறிமுகமாகிவிட்டது. இந்த சமயத்தில் சோனி நிறுவனமும் ஒரு 'Battle Royale' வகை கேம் ஒன்றை டிசைன் செய்யும் முடிவில் இருந்தது. அவர்களுக்கு பிரண்டனின் இந்தத் திட்டம் தெரியவரவே, ``இதுவரைக்கும் இதை இலவசமாகத்தானே செஞ்சீங்க? இப்போ நாங்கள் பணமும் தர்றோம். ஒகேவா?’’ என்றது சோனி. டீலிங் பிடித்துப்போகவே ஐடியாவை சோனிக்கு கைமாற்றினார் பிரண்டன். H1Z1 என்ற கேம் உருவானது. இதெல்லாம் நடந்தது 2015 வாக்கில். இந்த டீலிங்கெல்லாம் அயர்லாந்தில் நடந்துகொண்டிருந்த சமயம்தான் கொரியாவிலிருந்த கிம் சங் ஹானுக்கு மூக்கு வியர்த்தது.

காரணம், அவருடைய Bluehole கம்பெனியும் ஒரு 'Battle royale' கேமை உருவாக்கும் திட்டத்தோடு உழைத்துக்கொண்டிருந்தது. இந்த விஷயத்தில் ஏற்கெனவே கில்லியான பிரண்டனை தென்கொரியாவுக்கு கூப்பிட்டார் கிம். ``ஒரு வருஷம்தான் டைம். எனக்கு ஒரு `Battle Royale' கேம் முழுசா வேணும். முடியுமா?’’ - பிரண்டனிடம் கிம் கேட்டது இது மட்டும்தான். Mod கேம்கள் ஏற்கெனவே உருவான கேம்களின் அடித்தளத்தில் உருவாகுபவை. அவற்றின் மேல்பூச்சு வேலைகள் மட்டும் நாம் பார்த்தால் போதும். ஆனால், ஒரு முழு கேமை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிது கிடையாது. அதுவும் ஒரு வருடத்தில். இருந்தாலும் கிம்மின் டீம் மீது நம்பிக்கை இருந்தது. ஓகே சொன்னார் பிரண்டன். உருவானது பப்ஜி!

கிம்மின் ப்ளூஹோல் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட்டாக கொரியாவுக்குப் பறந்தார் பிரண்டன். கேமிங்கில் இவர் தொட்டதெல்லாம் ஹிட் என்றாலும், பிரண்டனுக்கு கேமிங்கில் பெரிய ஈடுபாடோ அறிவோ எப்போதும் இருந்ததில்லை. ஆனால், கேமின் சைக்காலஜி மட்டும் அத்துப்படி. ட்ரெண்டிங்கில் இருக்கும் எல்லா ஷூட்டர் கேம்களும் `Battle Royale’ கேம்களும் பிரண்டனுக்கு ஒரே மாதிரிதான் தெரிந்தன. ஒரு தீவு, உடன் 99 பேர், எல்லோர் கையிலும் ஆயுதங்கள். இறுதியில் யார் நிற்கிறார்களோ அவரே வெற்றியாளர். இந்த கான்செப்ட் ஏற்கெனவே இருந்தாலும், ஒன்று மட்டும் மிஸ் ஆனது. எல்லா கேம்களிலும் சில அம்சங்கள் ஒரே மாதிரி இருந்தன. சில கேம்களில் நாம் இறந்துவிட்டால் உடனே அடுத்த லைஃப் கிடைத்துவிடும். சில கேம்களில் கொஞ்ச நாள்களிலேயே நாம் எங்கே தவறு செய்கிறோம், எதிரிகள் யார் என்பதெல்லாம் தெரிந்துவிடும். மேப்களும் சிறிதாக இருப்பதால் கேம் முழுவதும் மனப்பாடம் ஆகிவிடும். இது அனைத்துமே கேமர்களின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது என நினைத்தார் பிரண்டன். ஒவ்வொரு கேமரும், எளிதில் ஜெயிக்க முடியாத, செம திரில்லான, சவாலான கேம்களையே விளையாட விரும்புகின்றனர். ஆனால், இப்போதைய 'Battle Royale' கேம்கள் அவர்களுக்குத் தீனி போடுவதில்லை என்பது புரிந்தது. இந்த சைக்காலஜியை அப்படியே டீமுக்கு கடத்தினார். இந்த ஐடியா அப்படியே பப்ஜியாக வளர்ந்தது. பிரண்டன் இதற்கு முன்பு Mod கேம்களை உருவாக்கியபோது அவரின் ஐ.டி `Player1.’ பின்னர் அதையே கொஞ்ச மாற்றி `PlayerUnknown’ என மாற்றினார். இங்கிருந்துதான் பப்ஜியின் பெயர் வந்தது. பப்ஜியின் முதல் மேப்பான எராஞ்சல் அனைவருக்கும் தெரியும். அந்த மேப்புக்கு ஒரு பின்கதையும் இருக்கிறது.

சோவியத் படையினாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் அங்கு நடந்த கிளர்ச்சியால் கைவிடப்பட்ட ஒரு தீவுதான் எராஞ்சல். இதெல்லாம் நடந்தது 1950-களில். அந்த மேப்புக்கான கற்பனைக் கதை இது. இதை அப்படியே நினைவூட்டும் வகையில் 1950-களின் கட்டட மாதிரிகள், நில அமைப்புகள், வயல்கள் போன்றவற்றை உருவாக்கியிருக்கின்றனர். இதற்கடுத்து வந்தவைதான் மிராமர், ஷானோக், விகெண்டி எல்லாம். முதல் இரண்டு மேப்களும் பெரிதாக இருக்கவே, அதற்கு மாற்றாக சின்னதாக உருவாக்கப்பட்ட மேப்தான் ஷானோக். அடர்ந்த வனம், பசுமையான நிலப்பரப்பு போன்றவற்றைக் காட்டும் வகையில் பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மேப் இது. இதை துல்லியமாக உருவாக்குவதற்காக `Photogrammetry’ என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய பப்ஜி டீம். இதற்காக நேரடியாகவே அந்தப் பகுதிகளுக்குச் சென்று புகைப்பட மாதிரிகள் எடுத்துவந்து, பின்னர் கிராபிக்ஸாக மாற்றினர். இதற்கு அடுத்து சமீபத்தில் உருவான விகெண்டி ஐரோப்பிய பனிப்பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டது. முந்தைய மேப்கள் போல, வெறும் நிலப்பரப்பு மட்டுமன்றி, அதற்கேற்ற வாகனங்கள், உடைகள் என இதில் புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது பப்ஜி டீம். சரி, மீண்டும் பிரண்டன் கதைக்கு வருவோம்.

இது `BattleRoyale’ பேட்ட!

கிம்மின் ஒரு வருட அவகாசம் முடிந்து 2017-ல் ஸ்டீம் என்னும் கேமிங் பிளாட்பார்மில் 30 டாலருக்கு விற்பனைக்கு வந்தது. இத்தனைக்கும் அப்போது பப்ஜி முழுதாகத் தயாராகக்கூட இல்லை. ஆனால், அந்த வெர்ஷனே ஸ்டீமில் செம ஹிட்டாக, பெஸ்ட் செல்லிங் கேமாக முதல் சிக்ஸர் அடித்தது பப்ஜி. இதற்கடுத்து PC, எக்ஸ்பாக்ஸ், பி.எஸ்.4 எனத் தொட்டதெல்லாம் தங்கமே. ப்ளூஹோல் நிறுவனத்துக்கு பப்ஜி கொடுத்த உற்சாகத்தால், அந்நிறுவனத்திலிருந்து பப்ஜியைப் பிரித்து பப்ஜி கார்ப்பரேஷனை உருவாக்கினார் கிம். இப்படி உலகம் முழுவதும் பப்ஜி கேமிங்கில் கிங்கானாலும் இந்தியாவில் கடந்த வருடம் வரை கப்சிப்தான். ஆனால், மார்ச் மாதம் மொபைல் வெர்ஷனை வெளியிடவும் இங்கேயும் வெடித்தது பப்ஜி கிரனேடு. சடசடவென டவுன்லோடைக் குவிக்க, 1.5 GB கேம் என்றாலும் த்ரில்லிங் அனுபவத்தால் நெட்டிசன்கள் மொத்த பேரையும் கட்டிப்போட்டது பப்ஜி. விளைவு, ஊரெங்கும் பப்ஜி டோர்னமென்ட், விதவிதமான பப்ஜி வாட்ஸ்அப் க்ரூப், ஃபேஸ்புக் பேஜ், ட்ரெண்டிங் மீம்... இவ்வளவு ஏன், மோடியின் பேச்சில்கூட ரெஃபரன்ஸாக மாறிப்போனது இந்த கேம். இப்படி ஒருபக்கம் சிவப்புக் கம்பள வரவேற்பு என்றாலும், மறுபக்கம் பல பள்ளிகள், கல்லூரிகளில் பப்ஜிக்கு ரெட் கார்டுகள் விழுந்துகொண்டிருக்கின்றன. ஆனால், `எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பாரு ரெக்கார்டு’ என இந்தியாவில் இன்னும் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது பப்ஜி ஜுரம்.

எத்தனையோ கேம்கள் இதுவரைக்கும் இப்படி டிரெண்ட்டாகிக் கடந்திருந்தாலும் பப்ஜி அளவுக்கு எதுவும் மக்களின் மனதுக்குள் இந்தளவுக்கு ஊடுருவிப் பாய்ந்ததில்லை. அதற்கு காரணம், பிரண்டன் சொன்ன அதே சைக்காலஜிதான். ஒவ்வொரு முறை கேமுக்குள் நுழையும்போதும் வெறுங்கையுடன் நுழைகிறோம். அடுத்த சில நொடிகளில் 99 எதிரிகள் நம்மோடு தீவுக்குள் குதிக்கிறார்கள். காணும் ஒவ்வொருவரும் எதிரிதான். கிடைக்கும் ஒவ்வொரு ஆயுதமும் முக்கியம்தான். சின்ன தோசைக்கல் தொடங்கி ஸ்னைப்பர் வரை எல்லாமே ஏதாவதொரு வகையில் பயன்படும். 99 எதிரிகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய குறைய பதற்றம் கூடும். கடைசி சில நிமிடங்கள் என்றால் பயமே எகிறும். எல்லாம் முடித்து ஜெயித்தால் சிக்கன் டின்னர். தோற்றால் உடனே அடுத்த மேட்சுக்கு மனம் ஓடும். மீண்டும் ஆரம்பித்தால், அதே கதைதான். கையில் ஒரு கம்பிகூட இல்லாமல், அத்தனையும் தேடித்தேடித்தான் பெற வேண்டும். கூட இருக்கும் போட்டியாளர்களும் பெரும்பாலும் நிஜப் போட்டியாளர்களே. எனவே AI, Bot போல காமாசோமா ஆட்டமெல்லாம் இதிலிருக்காது. அதிலும், ப்ளேயரின் லெவல் ஏற ஏற இன்னும் போட்டி கடுமையாகும். இதெல்லாமே ஒரு ஆக்ஷன் சினிமாவுக்கான உணர்வைத் தரவல்லவை. இதையெல்லாம்விட இன்னொரு ஈர்க்கும் அம்சம், லைவ் சாட்டிங். உடன் மூன்று நண்பர்கள் இருந்தால் அவர்களையும் உள்ளே இழுத்துப்போட்டு லைவ் ஆக்ஷனில் இறங்கலாம். ஒரு த்ரில்லர் மிஷன்போல, நண்பர்களை வைத்து எதிரிகளை போட்டுத்தள்ளலாம். எதிரிகளிடமிருந்து லாகவமாகக் காப்பாற்றலாம். கேம் முடிந்தாலும்கூட சுவாரஸ்யம் தீர்ந்திடாத விஷயங்கள் இவை. இன்று பப்ஜி விளையாடுபவர்களில் பாதிப்பேர் இப்படி நண்பர்களின் பப்ஜி ரெக்வஸ்ட்டால் உள்ளே வந்தவர்கள்தான்.

ஸ்ட்ரீமிங் உலகம்

இந்த சைக்காலஜி இத்தோடு முடிந்துவிடுவதில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம் பப்ஜி ஸ்ட்ரீமிங். கேம் விளையாடும் நபர்களைப் போலவே, கேம் விளையாடுவதை வீடியோக்களில் பொழுதுபோக்காகப் பார்க்கும் ரசிகர்களும் கேமிங் உலகில் உண்டு. இவர்களுக்காகவே ஸ்ட்ரீமர்கள் உலகம் முழுக்க உண்டு. அப்படி ஸ்ட்ரீமிங்குக்கென்றே பிரபலமான தளம் ட்விட்ச் (Twitch). 2017-ம் ஆண்டு வரைக்கும் இதில் சீனர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. ஆனால், பப்ஜி செய்த மாயத்தால் ஒரே ஆண்டில், ட்விட்சில் சீனர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தைத் தாண்டியது. இதேபோல இப்போது இந்தியாவிலும் ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் பப்ஜியை லைவ் செய்துகொண்டிருக்கின்றனர் பப்ஜியன்ஸ். அதுவும் எக்ஸ்பாக்ஸ், PS4 வெர்ஷன்களைவிடவும் மொபைல் வெர்ஷனுக்குதான் அதிக ரசிகர்கள் என்பதால் பப்ஜி மொபைல் வெர்ஷனை சிமுலேட்டர்கள் மூலம் ஸ்ட்ரீமிங் செய்கின்றனர் இவர்கள். இதற்காக, பணம் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். கேமிங்கில் இருக்கும் புதுப்புது அப்டேட்கள், உத்திகள் போன்றவற்றை இந்த ஸ்ட்ரீமர்கள்தான் முதலில் உலகுக்குச் சொல்லிக்கொடுகிறார்கள் என்பதால் யூடியூபிலேயே இவர்களுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இது தவிர, விளையாடுபவர்களை வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்களும் உண்டு. அவர்களுக்கு அது ஒருவகையான திருப்தி. இப்படி கேமிங் மட்டுமன்றி, ஸ்ட்ரீமிங்கும் தனி பிசினஸாகப் போய்க்கொண்டிருக்கிறது. 

`Battle Royale’ கேம்களில் பப்ஜியின் இடத்தைப் பார்த்து வியந்துபோன, எபிக் கேம்ஸ் நிறுவனம் தன்னுடைய `Fortnite’ கேமிலும் `Battle Royale’ வெர்ஷனை வெளியிட்டது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் வெளியிடப்பட்ட இதற்கும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள். பப்ஜி முழுக்க முழுக்க யதார்த்தமான ஆக்ஷன் களம் என்றால், `Fortnite’ ஒரு காமிக்ஸ் தன்மையுடன் இருக்கும். ஆனால், இந்தியாவில், அதுவும் மொபைல் கேம்களில் இப்போது பப்ஜிதான் ராஜா. `Battle Royale’ கேம்களுக்கு வரவேற்பு இருக்கும் சரியான நேரத்தில் உருவானது, கேமர்களின் சைக்காலஜியை சரியாகக் கணித்தது, இந்தியாவில் 4G-யின் வரவு மற்றும் அதிக ஸ்பெக்ஸ் கொண்ட பட்ஜெட் மொபைல்களின் வரவை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது எனப் பப்ஜியின் வெற்றிக்கான காரணங்கள் நிறைய உண்டு. சரி, இனியும் இந்தியாவில் தொடர்ந்து நிலைத்து நிற்க, மற்ற கேம்களைச் சமாளிக்க என்ன திட்டங்களை வைத்திருக்கிறது பப்ஜி டீம்? அடுத்த சில நாள்களில் வரப்போகும் zombie Mode, MK 47, ஷானோக் மேப்பில் டுக்ஷாய் வண்டி தவிர இன்னும் என்னென்ன அப்டேட்கள் வரவிருக்கின்றன? அவர்களிடமே பிரத்யேகமாகப் பேசினோம்.

``ஒவ்வொரு நாளும் நிறைய புதிய கேம்கள் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். இருந்தாலும் பப்ஜி மீதான ஆர்வமும் விருப்பமும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதை வருங்காலத்திலும் புதிய அப்டேட்கள் மூலமாகத் தக்கவைப்போம். எனவே, Zombie மட்டுமல்ல; நிறைய புதிய மேப்கள், புதிய ஆயுதங்கள், சின்னச் சின்ன சுவாரஸ்யமான அம்சங்கள் போன்றவற்றை வருங்காலத்தில் நிறையவே எதிர்பார்க்கலாம். எத்தனை ஆண்டு ஆனாலும் அந்தந்த டிரெண்ட்டுக்கு ஏற்ப அப்டேட்டானால் யாருக்கும் எந்தப் பிரச்னையுமில்லை. பப்ஜியும் அப்படித்தான் இருக்கும்’’ என்கிறது பப்ஜி டீம்.

டீக்கடை, அலுவலகம், பேருந்து, தியேட்டர், பள்ளி, கல்லூரி என சமூகத்தில் இடமும் இன்டர்நெட்டும் கிடைக்கும் எல்லா இடங்களிலும் ஆங்காங்கே நின்று களமாடிக்கொண்டிருக்கிறார்கள் பப்ஜியன்ஸ். எனவே, பப்ஜி மோகம் இன்னும் சில மாதங்களில் குறைந்துவிடுமா என்றால் பதில், `வாய்ப்பில்ல ராஜா!’