
கேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule
2013. புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான தேர்வு நடந்துகொண்டிருந்தது. 50 வயதை நெருங்கும் பெரியவர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் கேள்வி கேட்ட ஆசிரியர் “இந்த வயசுல இசையில பிஹெச்.டி வாங்கணும்னு ஏன் தோணுச்சு?” என்றார்.
அந்த `இளம் மாணவர்’ சொன்ன பதில் “சிம்பிள். எனக்கு இசை பற்றி இன்னும் நிறைய தெரிஞ்சிக்க ஆசை. அதான்!”
முனைவர் பட்டம் வாங்குவது எளிதான காரியமல்ல. அதற்குப் பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதன் மேல் தீராத காதல் இருக்க வேண்டும். 4 வயதிலிருந்தே பியானோ வாசிக்கத் தெரிந்த அந்த மாணவருக்கு அவை இருந்தன. அதனால்தான் அந்த வயதிலும் நல்ல மதிப்பெண்ணுடன் முனைவர் பட்டம் பெற்றார். அவர் பெயர் ஜெஃப்ரி கிறிஸ்டோபர் ஸ்மித் (Jeffrey Christopher Smith). ஸ்மூல் (Smule) நிறுவனத்தை நண்பர் வாங் என்பவருடன் சேர்ந்து 2008-ம் ஆண்டு நிறுவியவர்.

ஜெஃப்ரி கிறிஸ்டோபர் ஸ்மித்
ஸ்மூல் நமக்கு அறிமுகமான செயலிதான். நாம் விரும்பும் பாடலை நாமே பாடி அப்லோடு செய்ய உதவும் ஒரு செயலி. பாடலின் கரோக்கி டிராக் ஸ்மூலிலே கிடைக்கும். நாம் பாடினால் இசையுடன் கோத்துக் கொடுத்துவிடும் ஸ்மூல். கூடவே சில அனிமேஷன் எல்லாம் சேர்த்து சுவாரஸ்யமான வீடியோவாகவும் மாற்றிவிடும். அதை நம் ஃபாலோயர்கள் பார்த்து ரசிக்கலாம். அது டூயட் பாடல் என்றால் நமக்குத் தேவையான ஜோடியும் ஸ்மூல் மூலமே கிடைக்கும். அவருடன் சேர்ந்து டூயட்டும் பாடலாம். உலகம் முழுவதும் இருக்கும் பாத்ரூம் பாடகர்களை சமூக வலைதளங்களுக்கு இழுத்து வந்து இசையில் ஒரு புரட்சியே செய்த ஆப் என்றால் அதில் எந்த மிகையும் கிடையாது; முற்றிலும் உண்மை.
ஸ்மூலை சிலர் டிக்டாக் போலத்தானே எனத் தவறாக நினைப்பதுண்டு. டிக்டாக்கில் எல்லாம் இருக்கும், சத்தத்துக்கேற்ப நாம் வாயை மட்டுமே அசைப்போம். ஸ்மூலில் நாம் பாடுவோம். நம் குரல்தான் வரும்.
இசையை உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் இசையை நுகரும் தன்மை என்பது மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இசை கேட்பதற்காகக் கோயிலுக்குச் சென்றிருக்கிறோம். திருமணங்களுக்குச் சென்றிருக்கிறோம். இசைக்கலைஞர்கள் நம்மைத் தேடி வந்த வரலாறும் உண்டு. அவர்களைத் தேடி ரசிகர்கள் சென்ற வரலாறும் உண்டு. இசைமீதான காதல் மாறியதில்லை; ஆனால், இசையை நாம் எப்படி நுகர்கிறோம் என்பது மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஜெஃப்ரி அதைத்தான் யோசித்தார். மற்ற ஸ்டார்ட் அப்புகளைப்போல இது திடீரென எழுந்த ஐடியா கிடையாது. 100 ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ஓர் இசை ஆராய்ச்சிதான் ஸ்மூலுக்கான ப்ளூ பிரின்ட்.

அப்போது ஒரே பாடலை வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தவர்களிடம் பாடச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் இசைக்கும் ஸ்காட்லாந்து நாட்டு மக்களின் இசைக்கும்கூட ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. சில விஷயங்களில் வேறுபட்டாலும் அந்த இசைக்குள் ஒற்றுமை இருந்ததை 100 ஆண்டுக்கு முன்பே ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள். இது ஜெஃப்ரியின் மூளைக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. உலகம் முழுவதுமிருக்கும் பல்வேறு பின்னணியைக் கொண்ட மக்களை ஒன்றிணைத்து, அவர்கள் இசையைப் பாடச் செய்தால் எப்படியிருக்கும் என யோசித்தார். 2008-ல் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் இருந்தாலும் அவை ஜெஃப்ரி நினைத்ததைச் சாத்தியப்படுத்த வில்லை. யூட்யூப் கூட, தனித்தனியே பாடு பவர்களை இசைப்பவர்களைத்தான் ஊக்குவித்தது. ஸ்மூல்தான், இந்தோனேசியாவில் ஒரு பர்தாவுக்குள் முகம் மறைத்துக்கொண்டிருந்த பெண்ணையும் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த ஓர் ஆணையும் ஒன்றாகப் பாடச் செய்தது.

இசையில் முனைவர் பட்டம்தான் அப்போது ஜெஃப்ரியின் இலக்கு. ஆனால்,ஜெஃப்ரிக்கு ஸ்டார்ட்அப் புதிதல்ல. 1980களில் மென்பொருள் பொறியாளராக வேலையைத் தொடங்கிய ஜெஃப்ரி 90களிலே சின்னச் சின்ன நிறுவனங்களைத் தொடங்கிவிட்டார். அதில் சில ஹிட் ஆனாலும் பல தோல்வியடைந்தன. ஹிட் ஆன ஒரு ஐடியாவை கூகுள் நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டதெல்லாம் நடந்தது. ``இனி இப்படி ஓடி ஓடி ரன் குவிப்பதெல்லாம் ஆகாது; அடிச்சா சிக்ஸ்தான்” என ஜெஃப்ரி நினைத்தபோது கிடைத்த ஜீபூம்பாதான் ஸ்மூல்.
ஸ்மூலுக்காக ஜெஃப்ரி நிறைய உழைத்தார். 90களில் இருந்ததைப்போல உலகம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். முன்பு நிறைய வாடிக்கையாளர்கள் என்பதுதான் லாபத்துக்கான அடிப்படையாக இருந்தது. ஆனால், இணைய உலகம் அப்படியில்லை. இங்கே விசுவாசத்துக்கெல்லாம் இடமில்லை. ஒரே சேவையை, இன்னும் எளிமையாக வேறொருவர் தந்தால் ஒரே நாளில் இடம் மாறிவிடுவார்கள். இது ஜெஃப்ரிக்குப் புரிந்தது. புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வதைவிட, இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியதைச் செய்தார். எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான். அதைத்தான் ஸ்மூலும் ஃபேஸ்புக்கும் நெட்ஃப்ளிக்ஸும் பகிர்ந்துகொள்ள வேண்டும். எனவே இசைமீது காதல் இருப்பவர்களைக் கவர்ந்தால் போதுமென நினைத்தார். ஸ்மூலின் வெற்றி இந்தத் தீர்க்கமான முடிவுகளிலே உறுதியானது. ஜெஃப்ரியின் மற்ற ஸ்டார்ட்அப்களுக்குக் கிடைத்த முதலீடு, வரவேற்பைவிட ஸ்மூல் அதிகம் பெற்றது. இதுதான் தனது வாழ்நாளுக்குமான சாதனை என ஜெஃப்ரி நினைத்தார். அதனால்தான் ஸ்மூலை நல்ல விலைக்குச் சிலர் கேட்டபோது ஜெஃப்ரி விற்கவில்லை.
கடந்த ஆண்டு டிஜிட்டல் தளத்தில் உருவாக்கப்பட்ட இசை வீடியோக்களை உருவாக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 13-24 வயதுக்குட்பட்ட வயதினர். இவர்களுக்கு இசைதான் எல்லாமே. முந்தைய தலைமுறையைவிட அதிகமாக இவர்கள் இசை கேட்கிறார்கள்; உருவாக்குகிறார்கள். தொழில்நுட்பம் இதற்கு முக்கிய காரணம். இசையை நாம் நுகரும் வழிகளை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கியிருக்கிறது டெக்னாலஜி. அதனால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எனவே, இசை தொடர்பான ஸ்டார்ட் அப்புகள் இன்னும் நிறைய வரும் என நம்பலாம்.
அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஸ்மூலுக்கு அங்கே கிடைக்கும் வரவேற்பைவிட மற்ற நாடுகளில் அதிகம் கிடைப்பது எதிர்பார்க்காத ஒன்றுதான். ஆனால், அப்போதும் ஸ்மூல் லாபத்தை அள்ளிக் குவிக்கிறது. ஒவ்வொரு மாதமும் உலக மக்களில் ஐந்து கோடிப் பேர் ஸ்மூல் மூலம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்மூலில் இலவச சேவையும் உண்டு. கட்டணச் சேவையும் உண்டு. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் மாதா மாதம் பணம் கட்டி ஸ்மூலின் அத்தனை சேவைகளையும் பயன்படுத்துகிறார்கள். இலவசமாகவே (நம்ம டேட்டாவை எடுத்துக்கிட்டுதான்) கிடைக்கும் சமூக வலைதளங்களின் மத்தியில் ஸ்மூலின் இந்த விஷயம்தான் தனித்துத் தெரிகிறது.

சென்ற ஆண்டுதான் இந்தியச் சந்தையைக் குறி வைத்தது ஸ்மூல். 150 கோடி ரூபாய் முதலீடு கிடைக்க, அதில் கணிசமான தொகையை விளம்பரங்களுக்காகச் செலவு செய்திருக்கிறது. சில இசை நிகழ்ச்சிகளின் ஸ்பான்ஸர் ஆகியிருக்கிறது. இந்திய இசை ரசிகர்கள் விரும்பும் பல்வேறு இசைக்கோவைகளைத் தன் டேட்டாபேஸில் சேர்த்திருக்கிறது. ஸ்மூல் எதிர்பார்த்த வரவேற்பை இந்தியர்களும் தந்திருக்கிறார்கள்.
மக்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு என நம்புகிறார் ஜெஃப்ரி. ஸ்மூலும் ஃபேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைதளம்தானே என நினைத்துவிட முடியாது. மற்ற சமூக வலைதளங்களோடு ஒப்பிடும்போது ஸ்மூலில் கலாட்டாக்களும் சண்டைகளும் குறைவுதான். ஃபேஸ்புக்கிலோ மற்ற சமூக வலைதளங்களிலோ நமக்குத் தெரியாத ஒருவருக்கு நம் புகைப்படத்தை அனுப்பிவிட மாட்டோம். ஆனால், ஸ்மூலில் தெரியாத ஒருவருடன் இணைந்து டூயட்டே பாடலாம். கோடிக்கணக்கானோர் அப்படித்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ``ஸ்மூல் ரொம்பப் பாதுகாப்பான, ஜாலியான ஓரிடம்” என்கிறார் ஜெஃப்ரி. அது உண்மையும்கூட. அதற்கான கிரெடிட் எடுத்துக்கொள்ளாமல்’எல்லாப் புகழும் இசைக்கே’ என சிரித்துக்கொண்டே சொல்கிறார் ஜெஃப்ரி.
`ஸ்டார்ட்அப் ஆர்வலர்களுக்கு ஐந்து டிப்ஸ் சொல்லுங்களேன்’ என ஒருமுறை ஜெஃப்ரியிடம் கேட்டார்கள். நான்கு முக்கியமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே வந்த ஜெஃப்ரி ஐந்தாவதாகச் சொன்னது “எப்போதும் புன்னகைக்க மறக்காதீர்கள்.” கேள்வி கேட்டவர் “வாட்?” என அதிர்ச்சியாக, புன்னகையையே பதிலாகத் தந்தார் ஜெஃப்ரி. கேள்வி கேட்டவரும் புன்னகைக்க அந்தப் பேட்டி சிரிப்புடன் முடிந்தது. அதுதான் ஜெஃப்ரி. இந்த வாழ்க்கை சாதிப்பதற்காக மட்டுமல்ல; மகிழ்ந்து சிரிப்பதற்காகத்தான் என்னும் கட்சி ஜெஃப்ரி.
சீரியஸான பிஸினஸ் விஷயங்களில்தான் ஒரு பிஸினஸ் ஸ்டார்ட் அப் இருக்கும் என்பதில்லை. உங்கள் பொழுதுபோக்கு என்ன என்றால் ‘Listening Music’ என்று பலர் சொல்வதுண்டு. ஜெஃப்ரி கிறிஸ்டோபர் ஸ்மித்தும் அப்படிச் சொல்லியிருக்கக்கூடும். ஆனால் அந்தப் பொழுதுபோக்கு, தீராத ஆர்வமாக மாறி அதிலிருந்து ஒரு ஸ்டார்ட் அப்புக்கான பொறி, ஜெஃப்ரிகுப் பிறந்தது அல்லவா.. அந்தப் பொறிதான் ஸ்டார்ட் அப் துவங்க நினைப்பவர்களுக்கும் பற்றிக்கொள்ள வேண்டிய பொறி.
-கார்க்கிபவா