Published:Updated:

கையைக் கருக வைத்ததா ஆப்பிள் வாட்ச்... பயனருக்கு நேர்ந்தது என்ன?

இவரின் இந்தக் குற்றச்சாட்டை நம்மால் முற்றிலுமாக மறுக்கமுடியாது. தெளிவாக ஆராய்ந்து என்ன பிரச்னை எனக் கண்டுபிடிக்கவேண்டியது ஆப்பிளின் கடமையும்கூட. 

கையைக் கருக வைத்ததா ஆப்பிள் வாட்ச்... பயனருக்கு நேர்ந்தது என்ன?
கையைக் கருக வைத்ததா ஆப்பிள் வாட்ச்... பயனருக்கு நேர்ந்தது என்ன?

டந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வெறும் மொபைல்களுடன் நின்றுவிடாமல் பல தளங்களில், பல வடிவங்களில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. இதில் வீட்டின் சுவரில் மாட்டியிருக்கும் டிவிகள் தொடங்கி கைகளில் அணியும் வாட்ச்கள் வரை அனைத்தும் ஸ்மார்ட்டாக மாறியிருக்கிறது. இது அனைவருக்கும் சந்தோஷம்தான். ஆனால், உடலில் அணியும் `Wearable' கேட்ஜெட்களுக்கும் மற்ற கேட்ஜெட்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற கேட்ஜெட்கள் டெக்னிக்கல் விஷயங்களில் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும். ஸ்மார்ட்வாட்ச், ஃபிட்னெஸ் பேண்ட் போன்ற கேட்ஜெட்கள் மனிதர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மேலும் சூடாவது போன்று மொபைல்களில் ஏற்படும் கோளாறுகள் இந்தச் சாதனங்களில் ஏற்பட்டால் அணிந்திருப்பவரை அது பாதிக்கும். அப்படிதான் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்த ஒருவர் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் மருத்துவ நுண்ணுயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் தமிழரான Dr. விக்னேஷ் ராம் 2016 முதல் ஆப்பிளின் முதலாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அணிந்துவருகிறார். உடற்பயிற்சி தொடங்கி பல விஷயங்களில் இந்த வாட்ச் அவருக்கு உதவிகரமாக இருந்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் ஒரு நாள் திடீரென வாட்ச் அணிந்திருக்கும் இடத்தில் வெப்பத்தை உணர்ந்துள்ளார். உடனடியாக வாட்சை கழற்றியிருக்கிறார். வாட்ச் அணிந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி ஆப்பிள் வாடிக்கையாளர் சேவையிடமும் தெரிவித்துள்ளார். இது சற்றே முக்கியமான பாதுகாப்புப் பிரச்னைதான் என்று உணர்ந்த ஆப்பிள் அந்த வாட்ச் அணிவதை நிறுத்துமாறும் அந்தக் காயத்தைப் படம்பிடித்து அனுப்புமாறும் கூறியுள்ளது. வாட்ச்சை பரிசோதிக்க வேறு ஒரு நாட்டுக்கு அதை அனுப்பவேண்டியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது ஆப்பிள். நாளடைவில் வாட்ச் அணியாமலேயே இந்தக் காயம் பெரிதாகியுள்ளது. 

இதற்குப் பிறகு தொடர்புகொண்ட ஆப்பிள் நிறுவனம் புகைப்படங்களை வைத்து இது ஏதோ அலர்ஜியால் ஏற்பட்டதுதான், தங்கள் வாட்ச்சில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறி இந்தப் பிரச்னையை முடித்துள்ளது. இப்படி வாட்சை வாங்கி பரிசோதிக்கக்கூட செய்யாமல் ஆப்பிள் அவசர அவசரமாக இந்தப் பிரச்னையை முடித்தது விக்னேஷ் ராமுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அவர். அவரைத் தொடர்புகொண்டோம்.

``இரண்டரை ஆண்டுக்கும் மேலாக இந்த வாட்சைதான் அணிந்து வருகிறேன். இதுவரை வராத அலர்ஜி எப்படித் திடீரென வரும். மருத்துவத் துறையில் இருக்கும் எனக்கு அந்த வித்தியாசம் தெரியாதா? இந்தக் காயம் ஏற்பட்டதுக்கு அந்த வாட்சில் அதிகமான வெப்பம்தான் காரணமாக இருக்கமுடியும். `Second Degree Burn' எனப்படும் இந்தக் காயம் தோலின் உள்ளே வரை சென்றுள்ளது. அதனால்தான் காயம் அடுத்தடுத்த நாள்களில் பெரிதாகியுள்ளது. இதைக் கூறியதற்கு மருத்துவரிடம் பரிசோதித்து ஒரு சான்றை அனுப்பமுடியுமா என்று கேட்டது ஆப்பிள். அதையும் செய்துவிட்டேன். நான் வைத்திருக்கும் முக்கிய சாதனங்கள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்துடையதுதான். இதற்குக் காரணம் அவர்கள்மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான். ஆனால், இந்த விஷயத்தில் அவர்கள் இப்படி நடந்துகொண்டது வருத்தமளிக்கிறது. இதுதொடர்பாக ஓர் ஆய்வறிக்கையை விரைவில் ஏதேனும் சர்வதேச அறிவியல் இதழில் பதிவுசெய்வேன்" என்றார் அவர்.

இதற்கு முன்பும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் சூடாவதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு பெரும்பாலும் பேட்டரிதான் காரணமாக இருக்கும். போன்கள் வெடித்த நிகழ்வுகள்கூட இங்கு உண்டு. சமீபத்தில் ஒரு ஐபோன் அமெரிக்காவில் வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரின் இந்தக் குற்றச்சாட்டை நம்மால் முற்றிலுமாக மறுக்கமுடியாது. தெளிவாக ஆராய்ந்து என்ன பிரச்னை எனக் கண்டுபிடிக்கவேண்டியது ஆப்பிளின் கடமையும்கூட. 

ஸ்மார்ட்வாட்ச் வாங்கும் முன் நாம் என்ன செய்யலாம்?

இவர் விஷயத்தில் வேறு பிரச்னை இருந்திருந்தாலும், ஆப்பிள் கூறும் அலர்ஜி பிரச்னைகளும் பலருக்கு இருந்திருக்கின்றன. ஏன் சாதாரண வாட்ச் அணிபவர்களுக்கே அலர்ஜி ஏற்படுவதை நாம் கண்டிருக்கிறோம். இந்தப் பிரச்னையைப் பற்றி முன்பே தனது வாடிக்கையாளர் ஃபோரமில் உடலோடு தொடர்புகொண்டிருக்கும் எல்லாப் பொருள்களையும் கடுமையான சோதனைக்குப் பிறகே வடிவமைத்துள்ளோம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது ஆப்பிள். என்ன சோதனைகள் செய்ததெனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிள் குறிப்பிட்ட சோதனைகள்

இத்துடன் சில உலோகங்கள் வெகு சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம் என்றும் தெரிவித்தது அந்த நிறுவனம். ஆப்பிள் மட்டுமல்லாது பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்கள் வாட்ச்களில் சிறிதளவில் நிக்கல் இருக்கும். இது சிலருக்கு ஒவ்வாமல் போகலாம். ஸ்ட்ராப்புகலில் பயன்படுத்தப்படும் பொருள்களும் இப்படி ஒரு சிலருக்கு ஒவ்வாமல் போகலாம். 

பலருக்கும் தெரியாத இன்னொரு விஷயம் இந்த ஸ்மார்ட்வாட்ச்களுக்கென்று மொபைல்களைப் போன்று சிறப்பு கவர் மற்றும் கேஸ்கள் கிடைக்கின்றன. அதன்மூலம் எந்தப் பிரச்னையும் வராமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம். 

இதனால் இந்த `Wearable' கேட்ஜெட்களை வாங்கும்முன் நமக்கு அவற்றால் ஏதேனும் பாதிப்பு வருமா என்பதை செக் செய்துகொள்வது நலம். தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் `Wearable' கேட்ஜெட்களில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டால் மேலும் சிறப்பு!