Published:Updated:

AI-ஐ விவாதத்தில் தோற்கடித்த ஹரீஷ்... வரலாற்றில் முதல் சம்பவம்!

உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவை IBM கணினி தோற்கடித்த சம்பவம் நினைவிருக்கிறதா? தற்போது அதே போல ஒரு சம்பவம் அண்மையில் நடந்திருக்கிறது. க்ளைமாக்ஸ் மட்டும் வேறு.

AI-ஐ விவாதத்தில் தோற்கடித்த ஹரீஷ்... வரலாற்றில் முதல் சம்பவம்!
AI-ஐ விவாதத்தில் தோற்கடித்த ஹரீஷ்... வரலாற்றில் முதல் சம்பவம்!

AI நமது வருங்காலத் தொழிநுட்பம். உலகம் ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே நகர்கிறது. எதிர்காலத்தில் நம்மை ஆட்கொள்ள உள்ள மிகப்பெரிய சக்தி என இதை வியக்கின்றனர் நிபுணர்கள். நமது அனைத்து அன்றாட வேலைகளை AI எளிதாக்கி விடும். நமக்காகவும் அதுவே சிந்தித்து சுயமாய்ச் செயல்படும். உலகின் பல முடியாதவற்றை வெற்றிகரமாகச் செய்து முடித்த எலான் மஸ்க் பயப்படுவதே இதை நினைத்துத்தான்! தன்னை உருவாக்கிய மனிதனை மிஞ்சிவிடும் என்பதே இதன் எதிர்ப்பாளர்களின் முக்கிய வாதம். AI எதிர்காலம் குறித்த விவாதங்கள் இப்படிப் போய்க்கொண்டிருக்க, வாதத்திறமையால் அந்த AI-ஐயே தோற்கடித்திருக்கிறார் ஒருவர். அதுவும் அவர் தமிழர். நம்மூர் சென்னைக்காரர். ஹரிஷ் நடராஜன் என்பது அவரின் பெயர். கடந்த வாரம் சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வில் ஹரீஷ் IBM project Debater AI-ஐ தன் வாதத் திறமையால் வென்றுவிட்டார்.

IBM project Debater AI ஆனது இணையத்தில் உள்ள தகவல்களை முழுதாக கிரகித்து, அதைச் சரியான முறையில் வார்த்தைகளால் கோத்து குரலாக மாற்றி, பின்னர் எதிராளிக்கு மாற்றுக் கருத்தை தெரிவிக்கும். அதேநேரம், பிற சமயங்களில் இது மக்களுக்கு நடுநிலைமையோடு முடிவு எடுக்கவும் உதவி செய்யும். இது 2 மீட்டர் அளவு உயரமுள்ள செங்குத்தாக நிற்கவைக்கப்பட்ட பென்சில் பாக்ஸ் போல் இருக்கும். அதிலுள்ள நீல நிற பட்டையிலிருந்து பெண் குரல் கேட்கும். இதுதான் முதல் முதலாக மனிதனிடம் வாதிடும் திறமை கொண்ட AI. இது 2012-ல் தொடங்கப்பட்டு தற்போது வரை தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்கிறது. அத்தகைய AI-யிடம் விவாதம் புரியும் நிகழ்வு சமீபத்தில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. அதற்கு எதிராக விவாதம் புரிய தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஹரீஷ் நடராஜன். விவாதம் தொடங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு இருதரப்பினருக்கும் தலைப்பு கொடுக்கப்பட்டது. ``We should subsidize preschools" என்பதுதான் கொடுக்கப்பட்ட தலைப்பு.

ஹரீஷ் அதனை எதிர்க்கவும், AI அதனை ஆதரிக்கவும் எனக் கூறப்பட்டது. இருதரப்பினருக்கும் சமமாக 10 நிமிடம் தரப்பட்டது. 4 நிமிடம் முன்னுரைகளுக்கும், 4 நிமிடம் மற்றவர் கூறியதற்கு மறுப்பும், பின் 2 நிமிடங்களில் தங்கள் கருத்தைச் சுருக்கமாகக் கூறவேண்டும். விவாதம் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் மக்களின் கருத்து கேட்கப்படும். அவ்வாறு கேட்கப்பட்டபோது முதலில் ஆதரவாக 79 சவீதமும் எதிராக 13 சதவீதமும் பெறப்பட்டது. இறுதியாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆதரவாக 62 சதவீதமும் எதிர்ப்பாக 30  சவீதமும் தரப்பட்டது. அந்த மாறி அளிக்கப்பட்ட 17 சதவீதம்தான் ஹரிஷ் வெற்றியைத் தீர்மானித்தது. வெற்றியும் பெற்றுத்தந்தது. யார் இந்த ஹரீஷ்? 31 வயதாகும் ஹரீஷ் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பு முடித்தவர். இவரது பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர் சிறுவயது முதலே யுகே வில் வளர்க்கப்பட்டவர் .2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய விவாத மாநாட்டில் முதல் இடத்தையும், 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக விவாத மாநாட்டில் இறுதிச் சுற்றுவரை சென்றுள்ளார். இதற்கு முன்னதாக IBM உருவாக்கிய கணினி செஸ் விளையாட்டில் முன்னாள் உலக சாம்பியன் காஸ்பரோவை தோற்கடித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது அதேபோல இந்தச் சம்பவம் மாறியிருக்கிறது.

இது குறித்து ஹரீஷ் கூறியது ``வெற்றிக்குக் காரணமாக நான் நினைப்பது 3 விஷயங்கள்.

1. கருத்துகளுக்குத் தேவையான சரியான தகவல்களைத் திரட்டுவது.

2. திரட்டிய தகவல்களைக் கொண்டு, அந்த வார்த்தைகளைச் சரியாகக் கோப்பது, 

3. மிக முக்கியமானது உணர்ச்சிகள்;

ஒவ்வொரு முறையும் நான் வாதிடும்பொழுது உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். அது மக்களைச் சரியான முறையில் சென்றடைந்தன. அதுமட்டுமன்றி, விவாதம் முழுதும் குரல் சீரான அளவில் இருந்ததும் உதவியது. இதுவரை உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மனிதன் Vs AI யில் அனைத்தையும் AI-யே வென்றுள்ளது. ஆனால், இந்த முறை அது மாறியிருக்கிறது.