சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஆன் லைன்... ஆஃப் லைன் - 6

ஆன் லைன்... ஆஃப் லைன் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன் லைன்... ஆஃப் லைன் - 6

எமோஜி

ஆன் லைன்... ஆஃப் லைன் - 6

டிஜிட்டல் காலம் எனச் சொல்லப்படும், 2000த்துக்குப் பின்னேயான ஆண்டுகள் இருக்கட்டும். அதற்கு முன் வாழ்ந்தவர்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வீட்டில் புதிதாகத் தொலைக்காட்சி ஒன்றை வாங்கினால் அதில் நாமே எல்லாவற்றையும் செய்வோமா? வாஷிங் மெஷினை வீட்டிலிருக்கும் அனைவரும் கையாள்வோமா? சி.டி.ப்ளேயருக்கு எவ்வளவு சீன் போட்டிருப்போம்? ஆனால் இன்று, மாதம் ஒரு கேட்ஜெட் வாங்குகிறோம். வீட்டிலிருக்கும் சுட்டிக்குழந்தைகள் முதல் அனைவரின் கைகளுக்கும் அவை வருவதுண்டு. மின்னணுப் பொருள்களைக் கையாள்வதில் முன்னேறிவிட்டோம் என்பது உண்மையா? அதன் மேனுவல்கூட இப்போதெல்லாம் பாக்ஸோடு வருவதில்லை. இணையத்தில் தேடிப் படித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். நாம் படிப்பதுமில்லை; சரியாகக் கையாள்வதுமில்லை என்பதுதான் யதார்த்தம். மொபைல் என்பது எளிமையான கேட்ஜெட்தான். ஆனால், அதை நாம் முழுமையாக, ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் கேள்வி.

புதிதாக ஒரு மொபைல் வாங்கியதும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை இந்த வாரம் பார்ப்போம். அவற்றில் எத்தனை விஷயங்களை சரியாகச் செய்கிறீர்கள் எனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

- மொபைல் பாக்ஸ் வீட்டுக்கு வந்ததும் மொபைலை வெளியே எடுப்போம். சார்ஜரை எடுப்போம். மற்றவற்றை? உங்கள் வீட்டிலிருக்கும் மொபைல் பாக்ஸை இப்போது எடுத்துப் பாருங்கள். உள்ளே ஹெட்போன் கேப், கனெக்டர் என ஏதாவது ஒரு சின்ன இணைக்கருவி உள்ளே இருக்கக்கூடும். மொபைல் என்றில்லை; எந்த கேட்ஜெட் வாங்கினாலும் அந்த பாக்ஸ் உள்ளே என்னவெல்லாம் இருக்குமென்ற பட்டியலும் பாக்ஸிலே அச்சிடப்பட்டிருக்கும். ஒவ்வொன்றின் பயன் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். 

ஆன் லைன்... ஆஃப் லைன் - 6

-ஆன்லைனில் வாங்கப்படும் பொருள்களில் எப்போதாவது பிரச்னை வருவதுமுண்டு. அதனால், நீங்கள் வாங்கிய கேட்ஜெட் புதிதாக, கீறல்கள் ஏதுமின்றி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

-மொபைலை எடுத்ததும் முதலில் சார்ஜ் போட வேண்டும். மொபைலிலே எப்படியும் கொஞ்சம் சார்ஜ் இருக்கும். இருந்தாலும், பேட்டரியின் ஆயுள் அதிகரிக்க முழுமையாக ஒரு முறை சார்ஜ் போட்டுவிட்டுப் பயன்படுத்துங்கள். அந்தந்த மொபைலுக்குரிய சார்ஜர் மற்றும் அடாப்டரையே பயன்படுத்தவும். 100% சார்ஜ் ஆனதும் முழு சார்ஜும் தீரும்வரை பயன்படுத்தவும். மொபைல் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆன பிறகு மீண்டும் சார்ஜ் செய்யவும்.

- சிலர் செகண்ட் ஹேண்ட் மொபைல் வாங்கிப் பயன்படுத்துவதுண்டு. அவர்கள் முதலில் அந்த மொபைலை Factory reset செய்வது அவசியம். இல்லையேல் நமக்கே தெரியாமல் ட்ராக்கிங் ஆப் ஏதாவது இருக்கக்கூடும். அது நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துவிடும்.

- ஆண்டிராய்டு மொபைல்களுக்கு கூகுள் கணக்கு தேவை. நீங்கள் எந்த கூகுள் ஐ.டி.யை மொபைலுக்கெனப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். முந்தைய மொபைலிலிருந்த அதே கணக்கைப் பயன்படுத்தி னால் உங்கள் ஆப்ஸ் மற்றும் கான்டாக்ட்களை எளிதில் பெறலாம்.

- இப்போதுவரும் மொபைல்களில் டீஃபால்ட்டாகச் சில செயலிகளை இன்ஸ்டால் செய்தே தருகிறார்கள். அவற்றை முதலில் பார்த்து, தேவையற்றவற்றை அன்இன்ஸ்டால் செய்துவிடவும். இவை உங்கள் மெமரியைத் தின்றுவிடும்.

- சில பழைய மாடல் மொபைல்கள் விலை குறைவாகக் கிடைக்கும்போது வாங்கினால், அதன் ஓ.எஸ். அப்டேட்டைச் சோதிக்க வேண்டும். புது அப்டேட் இருந்தால் அதை டவுன்லோடு செய்துவிட்டுப் பின்னர் மொபைலைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

ஆன் லைன்... ஆஃப் லைன் - 6

-சில கடைகளில் மொபைலுடன் இன்ஷூரன்ஸும் தருகிறார்கள். அதற்கான ஃபார்மாலிட்டிகளை முடித்து அதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

-ஆன்லைனில் வாங்கிய மொபைல்களை, குறிப்பிட்ட நாள்களுக்குள் ரிட்டர்ன் தரும் வசதியுண்டு. எனவே மொபைல் கைக்கு வந்ததும் அதைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். நாம் தான் பாக்ஸையே பிரிக்கவில்லையே என நினைத்தால் அந்தக் கெடு முடிந்துபோகக்கூடும்.

- நாம் எடுக்கும் புகைப்படங்களை மொபைலில் சேமிக்கலாம். அதன் பேக்கப் கிளவுடில் சேமிக்கப்படலாம். அந்த செட்டிங் என்னவென்பதைக் கவனித்து Permission தர வேண்டும். இல்லையேல், அழிக்கப்பட்டதாக நீங்கள் நினைத்திருக்கும் அந்தரங்கப் புகைப்படம், கூகுள் டிரைவிலோ டிராப்பாக்ஸ் போன்ற கிளவுடு சேவைகளிலே உயிருடன் இருக்கக்கூடும்.

-அடுத்து, மொபைலுக்குத் தேவையான இணைக்கருவிகளை வாங்க வேண்டும். உலகில் அதிக கிருமிகள் இருக்கும் பொருளென ரூபாய் நோட்டையும் மொபைல்களையும் சொல்கிறார்கள். குழந்தைகள் கையில் மொபைல் கொடுப்பீர்களென்றால், அவை கடித்தாலும் மொபைல் மேல் படாத மொபைல்கேஸ்கள் வாங்கிப் போடுங்கள். அவ்வப்போது அவற்றை மட்டும் கழற்றி, தண்ணீரில் சுத்தம் செய்யலாம்.

- உங்கள் IMEI எண்ணைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மொபைல் காணாமல் போனால் இது உதவக்கூடும். பாக்ஸின் மீதே IMEI எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது *#06# என டயல் செய்தால் IMEI எண் திரையில் தெரியும்.

- எந்த ஒரு புதிய செயலியை இன்ஸ்டால் செய்தாலும் அது என்னென்ன அனுமதி கேட்கிறது எனக் கவனியுங்கள். எல்லாவற்றுக்கும் சரி எனச் சொல்லிவிட்டுப் பின்னர் வருந்துவது ஸ்மார்ட் மூவ் கிடையாது!

- ஸ்மார்ட் ஆவோம்..

 ஓவியங்கள்: ரமணன்