Published:Updated:

``போட்டிக்கு நாங்க வரலாமா?"- இந்திய ஆடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் களமிறங்கும் யூடியூப்!

``போட்டிக்கு நாங்க வரலாமா?"- இந்திய ஆடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் களமிறங்கும் யூடியூப்!
``போட்டிக்கு நாங்க வரலாமா?"- இந்திய ஆடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் களமிறங்கும் யூடியூப்!

சமீபத்தில் ஸ்பாட்டிஃபை தனது சேவையை இந்தியாவில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் வெளிநாடுகளில் கொடுத்துவந்த யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் பிரீமியம் சேவைகள் இனி இந்தியாவிலும் கிடைக்கும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தியர்கள் பலரும் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளைவிட யூடியூப்பில்தான் அதிக அளவில் இசை கேட்கின்றனர் என்பது கடந்த வருடம் நடத்தப்பட்ட நீல்சன் ஆய்வில் தெரியவந்திருந்தது. யூடியூப்பில் அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட சேனலுக்கான போட்டியில் எப்போதும் இந்தியாவின் டி-சீரிஸ் சேனல் இருக்கிறது. இதுவரை பதிவேற்ற வீடியோக்கள் அனைத்தையும் சேர்த்து ஆறாயிரம் கோடி வியூஸ்களை பெற்றுள்ளது இந்த சேனல். அந்த அளவுக்கு இந்தியாவில் யூடியூப் மவுசு இருக்கிறது. இப்போது ஏற்கெனவே பலர் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் ஆடியோ ஸ்ட்ரீமிங் சந்தையிலும் இந்த சேவையின் மூலம் கால்பதிக்கவுள்ளது யூடியூப்.

விளம்பரங்களுடனான யூடியூப் மியூசிக் சேவை இலவசமாகக் கிடைக்கும். விளம்பரம் வேண்டாம், அதிக தர இசை வேண்டுமென்றால் யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தா தனியாக மாதம் 99 ரூபாய்க்கும், யூடியூப் பிரீமியம் சந்தா மாதம் 129 ரூபாய்க்கும் கிடைக்கிறது. யூடியூப் பிரீமியம் சந்தாவில் இப்போது இருக்கும் யூடியூப் சேவை தொடர்பான புதிய வசதிகளும்,  யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையும், யூடியூப் ஒரிஜினல்ஸ் நிகழ்ச்சிகளும் கிடைக்கும். சமீபத்தில் யூடியூப் ஒரிஜினல்ஸ் தயாரிப்பதில் இந்த நிறுவனம் மும்முரமாக உள்ளது. ரஹ்மானை வைத்து 'Arrived' என்னும் ரியாலிட்டி ஷோவை தயாரித்து வெளியிட்டிருந்தது. 6 பேர் பயன்படுத்தமுடியும் பேமிலி சந்தா மாதம் 189 ரூபாய்க்கும் கிடைக்கும். கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் கொடுத்தால் 3 மாதம் இலவசமாகவும் சேவைகளைத் தருகிறது யூடியூப்.

இப்படி ஸ்பாட்டிஃபை,  யூடியூப் மியூசிக் என புது சேவைகள் களமிறங்கியுள்ளதால் ஆடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அளவில் அது இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.