Published:Updated:

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

Trump and Xi Jinbing
News
Trump and Xi Jinbing

வாவே நிறுவனத்தை இன்று அமெரிக்கா ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறதே, அதற்கு வெறும் வர்த்தக காரணங்கள் மட்டுமல்ல; அரசியல் காரணங்களும் இருக்கின்றன. ட்ரம்ப் இன்று நடத்திக்கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப பனிப்போர் எங்கிருந்து, எப்படி தொடங்கியது? முழு கதை.

We choose to go to the Moon! அமெரிக்க அதிபர் கென்னடியின் உலகப்புகழ் பெற்ற வாக்கியம் இது. விண்வெளிக்குச் செல்லும் கனவில் அமெரிக்கா முதல் அடியை எடுத்துவைக்கும் முன்பே, அன்றைய சோவியத் ரஷ்யா, முதல் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி விண்வெளியில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தது. அடுத்தும் அமெரிக்காவின் முறை அல்ல; சோவியத்துடையதுதான். முதன்முதலில் யூரிககரினை விண்ணுக்கு அனுப்பி, விண்வெளிக்குச் சென்ற முதல்மனிதன் ரஷ்யன் என்ற பெருமையையும் தட்டிச்சென்றது. வல்லரசுப்போட்டியில் இப்படி ஒருநாடு மட்டுமே கோலோச்சினால் என்னாகும்? இன்னொன்றின் பிம்பம் சரியும்தானே? அப்படி விண்வெளிப் போட்டியில் அமெரிக்காவின் பிம்பம் சரிந்தது. இந்தச் சமயத்தில்தான் அதிபராக பொறுப்பேற்றார் கென்னடி. அறிவியலுக்காக மட்டுமல்ல; அரசியல்ரீதியாகக்கூட விண்வெளிப்போட்டியில் ரஷ்யாவை வீழ்த்தவேண்டியிருந்தது.

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

காரணம், அன்றைய அமெரிக்கா முழுவதும் விண்வெளிப்போட்டியில் ரஷ்யர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணமும், அமெரிக்கா தொடர்ந்து பின்தங்கியிருக்கிறது என்ற பிம்பமும் மேலோங்கியிருந்தது. இந்தப் பெருமையை எப்பாடுபட்டேனும் ஈட்டும் முயற்சியில் இறங்கினார் கென்னடி. ஏற்கெனவே ரஷ்யா செய்துமுடித்த விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது, அங்கே விண்வெளி ஆய்வுமையம் அமைப்பது போன்றவற்றையெல்லாம் தவிர, ஒரு கவர்ச்சிகரமான திட்டம் தேவைப்பட்டது. அப்படி அமெரிக்கா தேர்ந்தெடுத்ததுதான், மனிதனை நிலவுக்கு அனுப்புவது. அதைப் பற்றி மாணவர்களிடம் பெருமையாக உரையாற்றிய ஓரிடத்தில்தான் We choose to go to the Moon! என்ற வார்த்தைகளை உதிர்த்தார் அவர். இறுதியில் அந்த வார்த்தைகள் பலிக்கவே, வரலாற்றில் இடம்பிடித்தன இந்த வாக்கியங்கள். இதேபோன்ற சில வார்த்தைகளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் உதிர்த்துள்ளார். அவை என்னென்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

Go… 3000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிய கண்டத்தில் விளையாடப்பட்டுவரும் ஒரு விளையாட்டு. கிட்டத்தட்ட செஸ் போலவேதான். ஆனால், `கோ’வில் ஜெயிக்க செஸ்ஸை விடவும் பலமடங்கு சாதுர்யமும், புத்திக்கூர்மையும் தேவை. செஸ்ஸின் தொடக்கத்தில் ஒரு வீரருக்கு, ஒரு மூவ் செய்வதற்கு இருக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை 20. `கோ’வில் அது 361. செஸ்ஸில் இருக்கும் சிறிய சதுரங்களின் எண்ணிக்கை 64. `கோ’வில் அது 324. இப்படி ஒவ்வோர் அம்சத்திலும் விளையாட செஸ்ஸைவிட பலமடங்கு கடினமானது கோ. இந்தக் கதையெல்லாம் இங்கே எதற்கு என்கிறீர்களா? இன்றைக்கு வாவேவை அமெரிக்கா ஓடஓட விரட்டிக்கொண்டிருக்கிறதே... அதற்கான காரணம், தெரிய வேண்டுமென்றால் கதையை இங்கிருந்துதான் தொடங்கியாக வேண்டும். எப்படி 1996-ல் ஐ.பி.எம் செஸ் விளையாட்டில் கேஸ்பரோவை `டீப் ப்ளூ' கணினிமூலம் தோற்கடித்ததோ, அதேபோல இந்த `கோ’ விளையாட்டிலும் ஒரு மனிதனை கணினி மூலம் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் 2000-ம் ஆண்டு சமயத்தில், பல AI ஆராய்ச்சியாளர்களுக்கு அசைன்மென்ட். ஆனால், அதெல்லாம் அப்போதைய AI தொழில்நுட்பங்களைக் கொண்டு சாத்தியமே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காரணம், `கோ'வை வெல்ல வெறுமனே கணிதத்திறன் மட்டும் கணினிகளுக்குப் போதாது. அதைத்தாண்டி சுயமாக சிந்திக்கவும் தெரிய வேண்டும். அதைச் சாதிக்க எந்த டெக் ஜாம்பவான்களாலும் முடியவில்லை. ஆனால், இரண்டே இரண்டு இளைஞர்களுக்கு மட்டும் அதற்கான வழி தெரிந்திருந்தது. டேவிட் சில்வர், ஹஸபீஸ் ஆகிய இருவர்தான் அவர்கள். கூகுள் வளைத்துபோட்டுக்கொண்ட `Deepmind' நிறுவனத்தின் நிறுவனர்கள்.

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

96-ல் டீப் ப்ளூ கணினி, கேஸ்பராவைத் தோற்கடித்தது `Brute Force' என்ற அல்காரிதம் மூலம். அதாவது, ஒரு சாவிக்கொத்தில் 10 சாவிகள் இருந்து, எது சரியான சாவி எனத் தெரியவில்லையெனில் பத்தையும் வைத்து பூட்டைத் திறக்க முயற்சி செய்வோமே? அதுதான் இந்த புரூட் ஃபோர்ஸ் டெக்னிக். உதாரணமாக செஸ்ஸில் காஸ்பரோவுக்கு எதிராக, டீப் ப்ளூ ஒரு மூவ் செய்யவேண்டுமென்றால், அது சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்காது. மாறாக, ஏற்கெனவே அதனுடைய மெமரியில் பதிந்துவைக்கப்பட்டிருக்கும் செஸ் மூவ்களோடு தன்னுடைய மூவ்களை ஒப்பிட்டுப் பார்க்கும். அதில் எந்த மூவ்க்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருக்கிறதோ, அதையே டீப் ப்ளூ தேர்ந்தெடுக்கும். இங்கே முடிவெடுக்க கணினிக்குத் தேவை, ஏராளமான செஸ் டேட்டாசெட்களும், அவற்றை புராசஸஸ் செய்வதற்கான இயங்குதிறனும். அன்றைக்கு ஐ.பி.எம் இன்ஜினீயர்கள் இந்த உலகிற்கு காட்டவிரும்பியதும் அதைத்தான். அதாவது, ஒரு கணினியால் மின்னல்வேகத்தில் முடிவெடுக்கமுடியும். அதைக்கொண்டு எளிதாக உலக செஸ் சாம்பியனையே தோற்கடிக்கமுடியும். அதைச் சாதிக்கவும் செய்தது. ஆனால், இந்த டெக்னிக், லாஜிக் எதுவுமே 'கோ'வுக்குப் பொருந்தாது. காரணம், செஸ் போல `கோ'வின் மொத்த மூவ்களையும் கணினிகளுக்கு Feed செய்வது என்பது நடக்கவே நடக்காத விஷயம். `கோ' விளையாட்டில் சாத்தியமுள்ள மொத்த மூவ்களின் எண்ணிக்கை, இந்த உலகில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகம் என்கிறது கணிதம். இதனால்தான் கணினிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது `கோ'. பிறகு எப்படித்தான் கணினிகளைப் பயிற்றுவிப்பது? 'கோ'வை ஜெயிப்பது? இங்கேதான் என்ட்ரி கொடுக்கிறது 'Reinforcement Learning'. கணினிகளுக்கு உங்களால் கற்றுக்கொடுக்க முடியவில்லையா? விட்டுவிடுங்கள்; அவை தானாகக் கற்றுக்கொள்ளட்டும். இதுதான் இந்த RL-ன் அடிநாதம். மேலே பார்த்த இரண்டு இளைஞர்களும் கூகுள் நிறுவனரான லாரி பேஜிடம் சொன்னதும் இதைத்தான். ``நாம் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். இன்னும் சில ஆண்டுகளில் `கோ'வை வீழ்த்திவிடலாம்.'' ஆனால், அப்போதும் லாரி பேஜிற்கு அது அசாத்தியமான ஒன்றாகவே தோன்றியது. இருந்தாலும் இருவருக்கும் ஊக்கம் கொடுத்தார்.

2016-ம் ஆண்டு மார்ச் மாதம். தென்கொரியாவின் ஒரு நட்சத்திர ஹோட்டல். `கோ’ விளையாட்டின் உலகின் தலைசிறந்த வீரர் லீ சிடோல். தென்கொரியாவின் `கோ’ சூப்பர்ஸ்டார். அவருக்கும் டீப் மைண்டு நிறுவனத்தின் `ஆல்பாகோ’ கணினிக்கும் இடையேதான் அந்த உலக முக்கியத்துவம் வாய்ந்த `கோ’ போட்டி நடந்தது. முதல் 36 மூவ்கள் போட்டியில் எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், 37-வதாக ஒரு அசாதாரணமான ஒரு மூவ் செய்தது ஆல்பாகோ. ஒருவேளை அந்த இடத்தில் மனிதன் இருந்திருந்தால் அந்த மூவ் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியொரு மூவ் அது. இறுதியாக தோல்வியை ஒப்புக்கொண்டார் லீ. கணினி வரலாற்றில் புதிய மைல்கல். `கோ’ விளையாட்டையும் கணினிகள் வீழ்த்திவிட்டன. ``நாங்கள் நிலவில் கால்பதித்துவிட்டோம்" என இதுகுறித்து அப்போது ட்வீட் தட்டினார் ஹஸபீஸ். மனிதன் நிலவில் கால்வைத்ததற்கு ஒப்பான சாதனை என இதைக் கொண்டாடின ஊடகங்கள். அதுவரைக்கும் வெல்லவே முடியாது எனக் கணினிகள் திணறிய `கோ’வை வீழ்த்தியதல்ல அன்றைய செய்தி. முதன்முதலாக AI சுயமாக ஒரு முடிவெடுத்திருக்கிறது. சினிமா பாஷையில் சொன்னால், ``சிட்டிக்கு கோவம் வருது வசீ!”

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

AI என்பது வெறுமனே கணினிகளை, டேட்டாவின் அடிப்படையில் புராசஸஸ் செய்யவைப்பது அல்ல; நல்லது கெட்டதுகளைப் பகுத்தறிந்து முடிவெடுக்க வைப்பது. எப்படி ஐ.பி.எம் கணினிக்கு செஸ் டேட்டாசெட்கள் வழங்கப்பட்டனவோ, அதேபோல ஆல்பாகோவிற்கும் `கோ’ டேட்டா செட்கள் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றை மட்டுமே வைத்து அதனால் வெற்றிபெற்றுவிடமுடியாது. வெற்றிபெற வேண்டுமென்றால் மனிதனைப் போல `கோ’வைக் கற்றுக்கொள்ள வேண்டும். இங்குதான் RL கைகொடுத்தது. தேர்ந்த `கோ’ வீரர்களுடன் ஆல்பாகோ விளையாடியது. நிறைய தோற்றது; அவ்வப்போது சிறிய வீரர்களுடன் ஜெயித்தது. இதெல்லாம்விட முக்கியம். ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மூவிலும் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது எனக் கற்றுக்கொண்டது. அந்தப் பாடங்கள்தான் 38-வைத்து மூவில் ஜெயிக்கவைத்தது. `கோ’வைப் பொறுத்தவரை எக்கச்சக்க மூவ்கள் அடுத்தடுத்து இருக்கும் என்பதால், யாராலும் வெறும் கணக்குமட்டுமே போட்டு ஜெயித்துவிடமுடியாது. எந்த மூவ் சரியாக இருக்கும் எனச் சிந்தித்து செயல்பட உள்ளுணர்வும் அவசியம். அங்கேதான் தன்னுடைய கடந்தகால தவறுகளிலிருந்து RL மூலம் பாடம் கற்றுக்கொண்டு சுயமாக முடிவெடுத்து, லீயை வீழ்த்தியிருக்கிறது ஆல்பாகோ. AI-யை ஒரு நிலவாக உருவகம் செய்துகொண்டால், அதில் முதல் அடியை எடுத்துவைத்திருப்பது கூகுள்; அதாவது அமெரிக்கா. AI வரலாற்றில் பிறநாடுகளோடு ஒப்பிட்டால் இது மாபெரும் பாய்ச்சல். என்னது... ஒரு கணினி விளையாட்டில் மனிதனை வீழ்த்திவிட்டது... இதற்குப் பெயர் மாபெரும் பாய்ச்சலா, இதனால் மனிதனுக்கு என்ன பயன்? இந்தக் கேள்வி உங்களுக்குள்ளும் எழுகிறதா? ஒரு நீர்த்தொட்டிக்குள் ஒரு இரும்புக்குண்டை எடுத்துப்போட்டால், அதன் எடைக்கு சமமான நீர் வெளியேறுமே? அதுதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தின் தத்துவம். இங்கே தொட்டியும், இரும்புக்குண்டும் ஒரு பரிசோதனைதான். ஆனால், அந்தத் தத்துவத்தின் பயன்தான் நீர்மூழ்கிக்கப்பல். அதேதான் இங்கேயும். இந்த ஆல்பாகோ, இன்றைய யுகத்திற்கான AI பலத்தைக் காட்டும் சோதனையே. இன்றைக்கு மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி எனப் பல இடங்களில் AI-தான் ராஜா. இங்கெல்லாம் அதன் திறன் பன்மடங்கு பெருகும். எனவே இப்போது யார் AI ரேஸில் முன்னணியில் இருக்கிறார்களோ, அவர்களே பிற தொழில்நுட்பங்களிலும் விரைவாக முன்னேறமுடியும். யாரெல்லாம் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் இப்போதே கவனம் செலுத்துகிறார்களோ, அவர்களால்தான் பொருளாதார ரீதியாகவும், பின் அரசியல்ரீதியாகவும் பலம்பெறமுடியும். யாரெல்லாம் பொருளாதார ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பலம்பெற்று விளங்குகிறார்களோ, அவர்களால்தான் உலகின் நம்பர் 1 வல்லரசாகவும் விளங்கமுடியும். இந்தப் போட்டியில்தான் ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உலகின் இன்றைய வல்லரசு நாடுகள் அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் பிரிட்டனும், ரஷ்யாவும்கூட கொஞ்சம் பின்தங்கிவிட்டன. எனவே, இப்போது நம்பர் 1 வல்லரசுக்கான போட்டியில் இரண்டே பேர்தான். அமெரிக்கா, சீனா.

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

உண்மையில் ஆல்பாகோ, லீயை வென்றபோது கூகுள் மட்டும் கொண்டாடவில்லை. அமெரிக்காவின் வெள்ளைமாளிகையே குதூகலித்தது. ஓர் அமெரிக்க கணினி, ஆசியாவின் 3000 ஆண்டுகள் பழைமையான விளையாட்டைத் தோற்கடித்துவிட்டதே எனப் பெருமைகொண்டது. ஆனால், அதன்பின்னர் தேசத்தில் AI-யை ஊக்குவிக்க ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. அப்போது அதிபராக இருந்தவர் ஒபாமா. அதற்குப் பின்னர் பதவியேற்ற ட்ரம்ப்பும் AI-யை மிக சீரியஸாகவெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. வழக்கம்போல நடக்கும் ஆராய்ச்சிகள் மட்டும் நடக்கட்டும் என அலட்டாமல் இருந்துவிட்டார். இப்படியேபோனால் நமக்கும் பிரச்னை என முதலில் ட்ரம்ப்பை உசுப்பேற்றியது அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன்தான். அதன்பின்தான் AI மீது ட்ரம்பின் பார்வை கொஞ்சம் கூடுதலாகப் பட்டது. ரேஸில் ஒருநாடு இப்படியென்றால், இன்னொருநாடு? அசுரவேகத்தில் AI ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம்போட்டது சீனா. 2025-க்குள் எலக்ட்ரானிக் சிப்களுக்கான செமிகண்டக்டர் ஆராய்ச்சி, AI, 5G, தானியங்கி வாகனங்கள், IoT ஆகியவற்றில் எப்படியும் தன்னிறைவு பெற்றுவிடவேண்டும் என ப்ளூபிரின்ட் போட்டு உழைத்துக்கொண்டிருக்கிறது அந்த தேசம். 2017-ல் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ஜின்பிங் இவற்றை வெளிப்படையாகவே அறிவித்தார். இந்த உரையைத்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடியின் வார்த்தைகளோடு ஒப்பிட்டு சிலாகித்துக்கொண்டிருக்கின்றனர் சீனர்கள். ரஷ்யா முதன்முதலில் செயற்கைக்கோள் அனுப்பினாலும்கூட, கென்னடியின் வருகைக்குப் பிறகு அமெரிக்காவும் நிலவில் கால்பதித்தது. அதேபோல `கோ'வை முதன்முதலில் ஜெயித்தது வேண்டுமானால் அமெரிக்காவாக இருக்கலாம். ஆனால், இறுதி ரேஸில் ஜெயிக்கப்போவது நாங்கள்தான் என்பது சீனர்கள் சொல்லும் லாஜிக். தற்போது வாவேவைப் போட்டு வறுத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க - சீன டெக் பனிப்போர் இப்படித்தான் தொடங்கியது!

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

உண்மையில் அமெரிக்கா, ரஷ்யா போல சீனாவும், அமெரிக்காவும் பரம எதிரிகளெல்லாம் இல்லை. இந்த இரு நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியில், இருவருக்கும் சரிசமமாகப் பங்குண்டு. எப்படி அமெரிக்காவின் பல்வேறு ஐ.டி தேவைகளை, இந்தியா இங்கிருந்து அவுட்சோர்ஸிங் செய்துகொண்டிருக்கிறதோ அதேபோல, அமெரிக்காவின் பெரும்பாலான உற்பத்தி தேவைகளை சீனா நிறைவுசெய்தது. புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் வளராமல், உற்பத்தித் துறையில் மட்டுமே சாதித்துக்கொண்டிருந்த சீனாவிற்கு அமெரிக்காவின் சிலிக்கான் வேலி நிறுவனங்களும் உதவின. இதுபோக பல்வேறு வர்த்தகத் துறைகளில் இரண்டு நாடுகளும் பரஸ்பரமாக உதவிக்கொண்டன. ஆனால், இந்த உறவு 21-ம் நூற்றாண்டில் கொஞ்சம் சிக்கலாகத் தொடங்கியது. அமெரிக்காவின் நிறைய அறிவுசார் சொத்துகளை (காப்புரிமை போன்றவை) சீனா திருடுவதாக அவ்வப்போது சலசலப்புகள் எழுந்தன. அமெரிக்க நிறுவனங்களும் அவ்வப்போது இதற்கு எதிராக சட்டப்போராட்டங்கள் நடத்திவந்தன. இன்னொருபுறம், கடும்விதிமுறைகளை விதித்து பல அமெரிக்க டெக் நிறுவனங்களை நாட்டைவிட்டே அனுப்பியது சீனா. உலகெங்கும் இன்று கோலோச்சும் அமேசான், கூகுள், ஃபேஸ்புக் உட்பட பல நிறுவனங்கள் சீனாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறியவை அல்லது விரட்டப்பட்டவை. இவற்றின் சேவைகளுக்கு மாற்றாக தன் நாட்டு நிறுவனங்களையே ஊக்குவித்தது. இ-காமர்ஸ், இன்டர்நெட், மென்பொருள்கள், சமூக வலைதளங்கள் என எல்லாத் துறையிலும் அந்நாட்டு நிறுவனங்களையே வளர்த்தெடுத்தது.

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

வர்த்தகப்போட்டிகள் மட்டுமே இதற்கு காரணமல்ல; சொந்தமக்களின் கருத்துரிமை மீது சீன அரசு கடைபிடித்துவரும் அடக்குமுறைகளும் காரணம். வருங்காலத்தில் இதே ரூட்டில் சென்று, எல்லாவற்றையும் சீனமயமாக்குவதுதான் அவர்களின் திட்டம். இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும்வகையில்தான் அந்நாட்டு நிறுவனங்களும் நடந்துவருகின்றன. அதில் ஒன்றுதான் வாவேவும். இப்படி அமெரிக்காவிற்குப் பல்வேறு வகைகளில் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்த சீனாவிற்கு எதிராக, ட்ரம்ப் எடுத்த ஆயுதம்தான் டிரேடு வார். இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அத்தனைக்கும் கடுமையான வரி விதிக்கப்படும். இருநாட்டு வர்த்தக உறவும் பெருமளவில் பாதிப்படையும். அதேபோல இருநாடுகளும் பாதிக்கப்பட்டன. இப்படி சீனாவின் பொருளாதாரத்தில் கைவைத்துவிட்டோம்; தொழில்நுட்பத்தில் மட்டும் விடலாமா? அங்கேயும் கைவைத்தார் ட்ரம்ப். அப்படித்தான் வாவே உதிரிபாகங்களை அமெரிக்காவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாங்குவதைத் தடை செய்தார். அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் வாவேவுடன் கொண்டிருக்கும் வர்த்தக உறவைத் துண்டித்தார். எனவே, இனிமேல் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் வாவேவிற்குத் தங்கள் பொருள்களையோ, சேவைகளையோ விற்கமுடியாது. இந்த டெக் பனிப்போரின் முதல் பலி ZTE நிறுவனம். சீனாவிற்கு உளவுவேளை பார்க்கிறது எனச்சொல்லி அந்நிறுவனத்திற்கு ரெட்கார்டு போட்டு, சீனாவிற்கு முதல்அடி கொடுத்தது அமெரிக்கா. இப்போது இரண்டாவது அடி, வாவே. கொஞ்சம் பெரிய அடி!

1987-ம் ஆண்டு ரென் ஜெங்ஃபீ என்ற பொறியாளரால் தொடங்கப்பட்டதுதான் இந்த வாவே. தொடக்கத்தில் மொபைல் போன்களுக்கான எலெக்ட்ரிக்கல் பாகங்களைத் தயாரித்த வாவே, கால ஓட்டத்தில் சீனாவின் தொலைத்தொடர்புத் துறையிலும் கால்பதித்தது. அந்த நேரத்தில் சீன அரசும் தொலைத்தொடர்புத் துறையில் புதுரத்தம் பாய்ச்ச விரும்பியதால், நிறைய தனியார் நிறுவனங்களை உரம்போட்டு வளர்த்தது. அதில் மிக முக்கியமானது வாவே. இன்று உலகளவில் தொலைத்தொடர்பு, மொபைல் உற்பத்தி, கணினி உற்பத்தி எனப் பலதுறைகளில் வாவே பிரமாண்டமாக வளர்ந்துநிற்கிறது என்றால், அதில் சீன அரசின் நேரடி மற்றும் மறைமுக ஒத்துழைப்புகள்தான் முக்கிய காரணம். இப்படி நேரடியாகவே சீனாவின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு நிறுவனம், அமெரிக்காவில் அகலக்கால் வைத்தால் அந்நாடு சும்மா இருக்குமா? ஒருபக்கம் வாவே வளர்ந்துகொண்டே போக, மறுபக்கம் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தீவிரமாக மோப்பம் பிடித்தன அமெரிக்காவின் உளவு அமைப்புகள். இறுதியில் அமெரிக்காவின் மீது அடிக்கடி நடக்கும் சீன ஹேக்கிங் தாக்குதல்களுக்கு வாவேவும் ஒரு காரணம் என்றன. இந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கைப் பயன்படுத்தி சீனா அமெரிக்காவை உளவு பார்க்கிறது என்றன. இந்தக் காரணத்துக்காகவேதான் சீன ராணுவம், வாவேவிற்கு உதவிசெய்கிறது என்றன. மொத்தத்தில் அமெரிக்காவின் நெட்வொர்க்கில் வாவே இருப்பதே ஆபத்து என்றன. ஆனால், இதெல்லாம் சுத்தப்பொய் என்றது வாவே. காரணம், வாவே சீனாவிற்காக அமெரிக்கர்களை உளவுபார்க்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் இதுவரை அமெரிக்கா சமர்ப்பிக்கவில்லை. அடுத்த குற்றச்சாட்டு, சீன ராணுவம் உதவுகிறது என்பது. இதையும் வெவ்வேறு பதில்கள் சொல்லி சமாளித்தது வாவே. ``சீனாவிலிருக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி செய்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்காக அரசு செய்யும் உதவியை, இப்படி உளவுபார்ப்பதற்காக எனச் சொல்லக் கூடாது. ஒருவேளை நாளையே சீன அரசு எங்களை உளவுபார்க்கச் சொன்னால்கூட கண்டிப்பாக மறுத்துவிடுவோம்" என்கிறது அந்நிறுவனம். ``அட அட அட... சீன ராணுவம் கேட்குமாம்; இவர்கள் மறுப்பார்களாம். ஒருவேளை நாளையே சீனா அப்படி கேட்டால் அதைச் செய்வதைத் தவிர வாவேவிற்கு வேறுவழியே இல்லை. அந்நாட்டு சட்டங்கள் அப்படி." என இதை மொத்தமாக மறுக்கிறது அமெரிக்கா. இதையெல்லாம்விட அமெரிக்கா சொல்லும் இன்னொரு காரணம், வாவேயின் நிறுவனரே ஒருகாலத்தில் சீன ராணுவத்தில் இருந்தவர்தான். அந்த விஸ்வாசம் இல்லாமல் போய்விடுமா என்ன?

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

இப்படி வாவே மீது பழிசொல்ல அமெரிக்காவிற்குப் பலநூறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது உடனடியாக தடைசெய்யக் காரணம், அந்த நிறுவனம் 5G தொழில்நுட்பத்தில் காட்டும் வேகம்தான். எரிக்ஸன், நோக்கியா மற்றும் வாவே ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் உலகளவில் 5G ரேஸில் முன்னணியில் இருக்கின்றன. இதில் வாவே மட்டுமே பல்வேறு நாடுகளில் 5G நெட்வொர்க்குகளை அமைப்பதற்காக சுமார் 40 ஒப்பந்தங்கள் கையொப்பமிட்டுள்ளன. இப்படியே விட்டால் அமெரிக்காவைவிடவும், சீனாதான் 5G ரேஸில் ஜெயிக்கும். அதைவிடவும் முக்கியம் பல்வேறு நாட்டின் 5G நெட்வொர்க்கில் சீனாவின் ஆதிக்கம்தான் இருக்கும். இங்கிருந்துதான் வாவேவிற்கு எதிரான யுத்தத்தை வலுவாகத் தொடங்கியது அமெரிக்கா. உள்நாட்டு 5G பரிசோதனைகளிலிருந்து வாவேவை ஒதுக்கிவைத்ததுடன், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன் உட்பட தன்னுடைய நட்புநாடுகளிடமும் வாவேவின் 5G-யை தடைசெய்யச் சொன்னது. சில நாடுகள் தடைசெய்தன. சில நாடுகள் தயங்கின. ``அமெரிக்கா சொல்வதைக் கேட்டு தடைசெய்தால் சீனாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே?" என யோசித்தன. இப்போது அமெரிக்காவே வாவேவை முழுமையாக நெட்வொர்க்கிலிருந்து நீக்க முடிவுசெய்துவிட்டாலும்கூட பிற உலகநாடுகள் இன்னும் தீர்க்கமாக முடிவெடுக்கவில்லை. ஆனால், அமெரிக்காவோ ``நாளையே சீனா நினைத்தால் உங்கள் நெட்வொர்க்குகளை மொத்தமாக முடக்கிவிடமுடியும். இதனால் உங்களின் பொருளாதாரமே சரியலாம். சிந்தித்து முடிவெடுங்கள்" என்கிறது. இப்படி இரண்டு நாட்டின் பனிப்போரில் நிறைய சின்னச் சின்ன நாடுகள் தலையை உருட்டிக்கொண்டிருக்கின்றன.

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

இந்தத் தடையால் இனிமேல் வாவே மொபைல்களில் கூகுள் பிளே சர்வீஸ் கிடைக்காது. மேலும், கூகுள் மட்டுமன்றி எந்தவோர் அமெரிக்க நிறுவனமும் வாவேவிற்குத் தன்னுடைய சேவைகளை வழங்கமுடியாது. எனவே, வாவே அதற்கெனத் தனியாக ஒரு ஆப் ஸ்டோரே உருவாக்கினாலும்கூட அதில் பிரபல அமெரிக்க நிறுவனங்களின் சேவைகள் எதுவும் கிடைக்காது. எனவே, சீனாவைத் தவிர அதற்கு வரவேற்பும் இருக்காது. இதுதவிர உதிரிபாகங்களை வாங்கமுடியாது என்பதால் மொபைல் உற்பத்தியிலும் பாதிப்புதான். ``இதெல்லாம் நடக்கும் என முன்பே தெரியும் என்பதால் போதுமான உதிரிபாகங்களை ஏற்கெனவே வாங்கி சேமித்துவைத்திருக்கிறோம். இதனால் எங்களின் 5G சேவைக்கு எந்தவொரு பாதிப்பும் வராது" என்கிறது அந்நிறுவனம். இந்தத் தடை ஒருபக்கம் சீனாவுக்குப் பெரும் பின்னடைவு என்றாலும், இன்னொருபக்கம் நல்லதும் நடக்கும் என்கின்றனர் சீனத் தொழில்நுட்ப வல்லுநர்கள். ஏற்கெனவே AI, 5G போன்றவற்றில் தன்னிறைவு அடைய நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் சீனாவிற்கு இது உத்வேகத்தை அளிக்கும். எனவே டெக் துறையில் எதிர்பார்த்ததைவிடவும் சீனா முதலிடத்தைத் தொட்டுவிடும் என்பது அவர்களின் கணக்கு. அதுவும் உண்மைதான். சீனாவோடு ஒப்பிட்டால் அமெரிக்கா பயணிக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய. உதாரணத்திற்கு ஒன்று. புதிய சர்ச் இன்ஜின் சேவை ஒன்றை உருவாக்க சீன அரசோடு சத்தமின்றி வேலைசெய்துகொண்டிருக்கிறது கூகுள். ஆனால், அமெரிக்க பென்டகனோடு பணிபுரிந்தால் ஏகப்பட்ட எதிர்ப்பலைகளை அமெரிக்காவிலேயே சந்திக்கிறது. இதற்குக் காரணம், ட்ரம்ப். அவரோடு இணைந்து பணிபுரிய சிலிக்கான்வேலிக்கே பெரும் விருப்பமில்லை எனும்போது அங்கே என்னதான் செய்யமுடியும்? இப்படிப்பட்ட அரசியல் சவால்களும் அமெரிக்காவிற்கு இருக்கின்றன.

சீன உளவாளி, AI அச்சம்... வாவே நிறுவனத்தை ட்ரம்ப் ஓட ஓட விரட்டுவது ஏன்? #LongRead

இப்படி இருநாடுகளும் எதிரும் புதிருமாக நின்றாலும்கூட இன்னுமே வர்த்தக, தொழில்நுட்ப உறவுகள் முற்றிலுமாக அறுந்துவிடவில்லை. ஏன்... இந்தச் சமயம் அமெரிக்காவையும், சீனாவையும் இன்டர்நெட்டில் இணைக்கும் கடலுக்கடியில் இருக்கும் கேபிள்கள்கூட வாவே நிறுவனத்துடையதுதான். அவற்றையெல்லாம் அமெரிக்க துண்டித்துவிடவில்லை. இப்படி இப்போதைக்கு தொடர்ந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்ப உறவு முற்றிலுமாக அறுந்துவிடலாம். அப்போது இந்த உலகில் மொத்தம் இரண்டு இன்டர்நெட் மாடல்கள் இருக்கும். ஒன்று, அமெரிக்க நிறுவனங்களின் சேவைகளோடு, அமெரிக்க நிறுவனங்களின் கட்டமைப்புகளோடு சுதந்திரமாக இருக்கும். இன்னொன்று சீன நிறுவனங்களின் சேவைகளோடு, அவற்றின் தொழில்நுட்பக் கட்டமைப்புகளோடு கட்டுப்பாடுகள் மிகுந்ததாக இருக்கும். ரஷ்யா போன்ற சில வல்லரசுகளைத் தவிர்த்து, பிற நாடுகள் அனைத்தும் இந்த இரண்டு மாடல்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இந்தப் பனிப்போரில் ஏதேனும் ஒருபக்கம் நின்றாக வேண்டும். தற்போது 5G-யிலேயே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.  இந்தப் போரில் அமெரிக்காவோ, சீனாவோ... இறுதியில் யாரின் கை ஓங்குகிறது என்பது வெற்றியல்ல; பலத்த நஷ்டத்தைத் தாண்டியும், எவ்வளவு ஆண்டுகள் யார் நிலைத்து நிற்கிறார் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. பரஸ்பர நஷ்டங்களைத் தவிர, எவ்வித லாபங்களையும் பனிப்போர்கள் தந்ததில்லை. அதே தீர்ப்பையே வரலாறு மீண்டும் எழுதலாம்.