Published:Updated:

வாங்க சிக்கனம் பழகலாம்...

அசத்தல் ஆண்ட்ராய்டு ‘ஆப்ஸ்’கள்!சேமிப்பு சிறப்பிதழ்வரவு - செலவு

பிரீமியம் ஸ்டோரி
##~##

'எழுதாத கணக்கு, அழுதாலும் திரும்பாது' என்பார்கள். அது, உண்மைதானே! 'சேமிக்க வேண்டும்... சேமிக்க வேண்டும்' என்று பேசிக்கொண்டே, செய்யும் செலவுகளைக் கணக்கெழுதி கண்காணிக்காவிட்டால்... எங்கிருந்து மிச்சம் பிடிப்பீர்கள். பிறகு, எப்படி சேமிப்பீர்கள்?

''சிக்கலே... வரவு - செலவு கணக்கு எழுதுவதில் இருக்கும் நடைமுறை பிரச்னை, நேரமின்மை ஆகியவை தானே'' என்கிறீர்களா?

விட்டுத்தள்ளுங்கள்.. இனி அந்தப் பிரச்னையே இல்லை. கம்ப்யூட்டரும் ஸ்மார்ட் போனுமாக உலகம் உள்ளங்கைக்குள் சுருண்டுவிட்ட இந்தக் காலத்தில், பக்கம் பக்கமாக புரட்டி கணக்கெழுதத் தேவையே இல்லை. உங்கள் உள்ளங்கை செல்போனே போதும்! ஆம், வீட்டு வரவு - செலவு கணக்குகளை செல்போனில் பராமரிப்பது, மிக எளிதானது. இதற்கு கைகொடுக்கிறது... ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்!

இதைச் சொன்னதுமே... ஏதோ கம்ப்யூட்டர் சமாசாரம் என இல்லத்தரசிகள் மலைத்துவிட வேண்டாம். வீடியோ கேம்ஸ் விதிமுறைகள்போல முதல் முறை மட்டும் உற்றுக் கவனித்தால் போதும், பிறகு... டி.வி ரிமோட் கருவி போல உங்களுக்குச் சுலபமாகிவிடும்.

வாங்க சிக்கனம் பழகலாம்...

அடிப்படைத் தேவை!

மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களில் தரமான கம்பெனி ரகங்கள் 4,000 ரூபாயில் இருந்தே துவங்கு கின்றன. இந்த ஸ்மார்ட் போன்கள் இயங்குவதற்கான மென்பொருள் அடிப்படையை, 'இயங்குதளம்' என்கிறார்கள். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களின் இயங்குதளம் ஆண்ட்ராய்டு. இதை குறிவைத்து எக்கச்சக்கமான அப்ளிகேஷன்கள் (சுருக்கமாக ஆப்ஸ்) இலவசமாகக் கிடைக்கின்றன. இதில் ஒரு ரகம்தான்... வீட்டு வரவு - செலவுகளுக்கான ஆப்ஸ். இவற்றைப் பெற நமக்குத் தேவையானவை இணைய இணைப்புடனான ஒரு ஸ்மார்ட் போன். 3ஜி அளவுக்குகூட தேவையில்லை. மாதம் 50 ரூபாய் செலவில் கட்டுப்படியாகும் அரை ஜி.பி அளவுக்கான சாதாரண இணைய இணைப்பே அதிகபட்சம்!

ஆப்ஸை அள்ளுங்கள்!

ஸ்மார்ட் போன் மூலமாக, ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களுக்கான சந்தையான 'கூகுள்ஸ் ப்ளே’வை நாடவேண்டும். இதில் கிடைக்கும் இலவச ஆப்ஸ்களில் உங்களுடைய தேவையை தெரிவித்து, பொருத்தமான ஆப்ஸ்களை அலசி ஆராய்ந்து உசிதமானதை உங்கள் மொபைலில் நிறுவிக்கொள்ளலாம். இதற்கு முன்பாக, குறிப்பிட்ட ஆப்ஸ் குறித்து வழங்கப்பட்டிருக்கும் விவரங்களை ஒரு முறை வாசிப்பதும், ஏற்கெனவே பயன்படுத்துபவர்கள் பதிந்திருக்கும் கருத்துக்களையும் பார்த்துவிடுவதும் நலம்.

வீட்டு வரவு - செலவு மற்றும் பட்ஜெட் நிர்வாகத்துக்கு பிரசித்தியான சில ஆப்ஸ்கள்: ஆன்ட்ரோ மணி (Andro Money), ஈஸி மணி (Easy Money), டெய்லி மணி (Daily Money), ஃபினான்ஸிஸ்டோ (Financisto), ஹோம் பட்ஜெட்(Home Budget). உங்களுக்கு பிடித்த ஒன்றிரண்டு ஆப்ஸ்களை நிறுவி, சில தினங்கள் வெள்ளோட்டம் பார்த்துவிட்டு தேவையற்றதை நீக்கிக்கொள்ளலாம்.

இனி, ஸ்மார்ட்டாக  கணக்கெழுதலாம்.

ஆப்ஸ் நிறுவியதும், அதன் செட்டிங்குகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது கரன்சி மாற்றம். அப்போதுதான் நாம் பதிவு செய்யும் கணக்குகள் நமது நாட்டு ரூபாய் மதிப்பில் அமையும். அடுத்து உங்களுக்கே உங்களுக்கான பாணியில் கணக்கு எழுதும் வகை தொகைக்கு பட்டியல்களைப் பிரித்து வைத்துக் கொள்ளலாம். மளிகை, போக்குவரத்து, உணவு, செய்தித்தாள், பொழுதுபோக்கு என பல நிலைகளில் ஏற்கெனவே அதில் பிரிவுகள் இருக்கும். ஆனாலும், உங்கள் தனித்துவத்துக்கு உகந்த வகையில் மாற்றங்களைக் கூடுதலாக உருவாக்கிக் கொள்ளலாம்.

செலவு மட்டுமல்ல வரவு, சேமிப்பு போன்றவற்றையும் பிரித்து நம் வசதிக்கு வைத்துக் கொள்ளலாம். செலவுகளை வங்கிக்கணக்கு, கைக்காசு, கிரெடிட் கார்டு என்று மூலங்களை பிரித்தும் வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்... இனி, அன்றாட வரவு செலவு கணக்குகளை உங்கள் மொபைலில் ஏற்றுவது சுலபம். தனியாக நேரம் ஒதுக்கக்கூட தேவையில்லை. பயணத்தில், காத்திருப்பில், டி.வி சீரியல் விளம்பர இடைவெளியில் கூட வாழ்வின் அத்தியாவசியகடமையாற்றலாம்.

உருப்படியான உபயோகங்கள்

வழக்கமாக வரவு - செலவு கணக்குகளை எழுதுவதின் அனுகூலங்களை தாண்டியும் இந்த மொபைல் ஆப்ஸில் பயன்பாடு உண்டு. எழுதுவது, எழுதுவதை திருப்பிப் பார்த்து நமது நடைமுறை தவறுகளைத் திருத்துவது, செலவுகளின் ஓட்டைகளை அடைப்பது, அநாவசிய செலவுகளை சேமிப்பாக மடைமாற்றுவது என்பதில் வெறும் எண்களாக அல்லாது, பட விளக்கங்களாகவும் பார்த்து சிரமமின்றி புரிந்து கொள்ளலாம். வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் அந்த விளக்கப்படங்கள், அதன் கருத்தை ஆழமாக நமக்கு உணர்த்திவிடும். ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அந்த மாத பட்ஜெட்டை திட்டமிட்டு அதற்கான வரம்பை, செலவுகள் எட்ட முற்படும்போது எச்சரிக்கை செய்யும்படியும் அமைக்கலாம்.

கணக்கு பராமரிப்பும் பாதுகாப்பும்

பெரும்பாலான வரவு - செலவு கணக்குக்கான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் பாஸ்வேர்டு வசதியுடன் வருகின்றன. இதனால் உங்கள் அனுமதியின்றி பாட்டுக் கேட்கிறேன் பேர்வழியென்று எவரும் உங்கள் பர்சனல் நிதி விவகாரங்களை தோண்ட முடியாது. முந்தைய தினசரி கணக்குகளை எளிதில் அணுக முடிவதோடு, பல வருடக் கணக்குகளை எழுதுவது, பராமரிப்பது, பாதுகாப்பது என அனைத்துமே சுலபம்.

பிறகென்ன... காலத்துக்கு ஏற்ற நவீன உபகரணங்களில் பாரம்பரிய கணக்கெழுதும் கடமையைத் தொடர்வோம். தடம் புரளாத நிதி நிர்வாகத்தை பின்பற்றுவோம்!  

- எஸ்.கே.நிலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு