Published:Updated:

இந்தியாவில் உற்பத்தி மையம் அமைக்கிறது ஜியோமி!

Vikatan Correspondent
இந்தியாவில் உற்பத்தி மையம் அமைக்கிறது ஜியோமி!
இந்தியாவில் உற்பத்தி மையம் அமைக்கிறது ஜியோமி!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, அடுத்த ஒராண்டுக்குள் இந்தியாவில் உற்பத்தி மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. தனது தயாரிப்புகளுக்காக இந்தியாவில் 100 காட்சி மையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி மையம் அமைக்கிறது ஜியோமி!

சீனாவின் ஆப்பிள் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் ஜியோமி நிறுவனம், துவங்கிய 5 ஆண்டுகளுக்குள் ஸ்மாட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு எம்.ஐ போன் மூலம் இந்திய சந்தையில் அறிமுகமான ஜியோமி, ஆன்லைன் விற்பனை மூலம் இங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோமி, தனது சந்தை பங்கை விரிவாக்கி கொள்ள மேலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இரு மடங்கு விற்பனை வளர்ச்சியை கண்ட ஜியோமி, இந்த ஆண்டு 100 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் சந்தை மதிப்பு 45 பில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய சந்தையில் தனது இருப்பை வலுவாக்கி கொள்ள, இங்கு உற்பத்தி ஆலை அமைக்கவும் ஜியோமி திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்குள் உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்று அதன் சர்வதேச செயல்பாடுகள் துணைத்தலைவர் ஹியூகோ பாரா கூறியுள்ளார்.

இந்திய சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும், இங்கு ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய சந்தையில், ஐந்தாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஜியோமி, உற்பத்தி ஆலைக்காக் பல்வேறு இடங்களை பரிசிலித்து கொண்டிருக்கிறது. உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தியும் வருவதாக பாரா தெரிவித்தார்.

இந்திய சந்தையை மிகவும் முக்கியமாக கருதுவதாக கூறியவர் , இந்தியா முழுவதும் 100 ஜியோமி ஸ்டோர்களை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த மையங்கள் மூலம் ஜியோமி போன்களை வாங்க முடியாது. இவை அதன் தயாரிப்புகளை நேரில் பார்ப்பதற்கான காட்சி விளக்க மையங்களாக மட்டுமே இருக்கும். ஜியோமி போன் தேவை எனில் ஆன்லைனில்தான் வாங்க வேண்டும்.,

இதனிடையே ஜியோமி ரெட்மி2 ( Redmi 2) மற்றும் எம்.ஐ பேட் டேப்லெட் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. எம்.ஐ பேட் ரூ.12,999 எனும் விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 ம் தேதி முதல் ஆன்லைனில் வாங்கலாம். இந்த டேப்லெட் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகமான நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகமாகிறது.

- சைபர்சிம்மன்