டிக்கெட் எடுக்கலாம், முன்பதிவு செய்யலாம்... ரயில் பயணத்தை எளிதாக்கும் 4 ஆப்கள்!
அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்கள் இந்த ஆப்களை மிஸ் செய்துவிடாதீர்கள்!

பஸ் கட்டண அதிகரிப்பு மற்றும் வசதி காரணமாக பெரும்பாலானோர் ரயில் பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். ரயிலைப் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் சொல்லும் ஒரு புகார் 'டிக்கெட் எடுக்க ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு' என்பதுதான். உங்களின் ரயில் பயணத்தை எளிமையாக்க உதவும் சில ஆப்ஸ்கள் இங்கே...
யூ.டி.எஸ் : ( UTS)
முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணம் செய்யப் போகிறவர்களுக்கு (Unreserved) இந்த ஆப் கை கொடுக்கும். ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து, உங்களின் மொபைல் எண், பாலினம், நீங்கள் பிறந்த ஆண்டு உள்ளிட்டவற்றை ஆப்பில் பதிவு செய்து கொள்ளவும். அதில் இருக்கும் `BOOK TICKET 'என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து, நீங்கள் புறப்படும் ரயில் நிலையத்தையும், சென்றடைய வேண்டிய ரயில் நிலையத்தையும் குறிப்பிட்டால் அதற்கான தொகையைக் காண்பிக்கும். அதன் பின் ' Payment type' என்ற ஆப்ஷனில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்களின் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் பயன்படுத்தி கட்டணம் செலுத்தி டிக்கெட் புக் செய்து கொள்ளலாம் .
அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் எனில் `RWALLET' ஆப்ஷனைப் பயன்படுத்தி மொத்தமாகக் குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ளலாம். அதன் பின் ஒவ்வொரு முறை டிக்கெட் புக் செய்யும் போதும் நீங்கள் ஏற்கெனவே ரீசார்ஜ் செய்த தொகையிலிருந்து டிக்கெட்டிற்கான கட்டணம் கழிந்து கொண்டே வரும். கட்டணத்தைச் செலுத்திய பின் `BOOK TICKET' என்பதை க்ளிக் செய்தால் டிக்கெட் புக் ஆகிவிடும். தண்டவாளத்திலிருந்து, குறைந்தபட்சம் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்தால்தான் இதில் டிக்கெட் புக் செய்ய முடியும். ரயில் நிலையத்திற்குள்ளிருந்து இதில் டிக்கெட் புக் செய்ய முடியாது.

டிக்கெட் புக் செய்த பின் அதில் இருக்கும் 'SHOW BOOKED TICKET ' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தால் நீங்கள் புக்செய்த டிக்கெட்டை உங்களால் பார்க்கமுடியும். டி.டி.ஆர் செக் செய்யும் போது இந்த டிக்கெட்டைக் காட்டினால் போதுமானது. டிக்கெட் புக் செய்த மூன்று மணிநேரத்திற்கு உங்களின் பயணத்தைத் தொடங்கி விட வேண்டும். பயணம் செய்ய முடியாத சூழலில் டிக்கெட்டை ரத்து செய்யும் ஆப்ஷன்களும் இதில் இருக்கிறது.
வேர் இஸ் மை ட்ரெயின் (Where is my Train )
'ரயில் எங்கே வருகிறது, தாமதமாக வருகிறதா', 'ஒரு கோச்சில் உங்களுடைய சீட் எங்கே இருக்கும்', 'எந்தெந்த ஸ்டேஷனில் ரயில் நிற்கும்' என்பது போன்ற ரயில் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள இந்த ஆப் உதவிகரமாக இருக்கும். நீங்கள் எந்த ரயில் பற்றிய தகவலைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ அந்த ரயிலின் பெயர் அல்லது ரயில் எண்ணைப் பதிவிட்டால் போதும்... ரயில் தற்போது எங்கு வந்து கொண்டு இருக்கிறது, எவ்வளவு சீக்கிரமாக வந்துள்ளது, எவ்வளவு நேரம் தாமதமாக வந்துகொண்டிருக்கிறது என அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

"Destination Alarm" என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து நீங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தைத் தேர்வுசெய்து, அந்த ரயில் நிலையம் வருவதற்கு எத்தனை நிமிடங்கள் முன் அலாரம் அடிக்க வேண்டும் என்பதை செட் செய்துகொள்ளமுடியும். அதன்படி குறிப்பிட்ட ரயில் நிலையம் வரும்முன் உங்கள் மொபைலில் அலாரம் அடித்துவிடும். அதனால் ஊர் வந்துவிடுமோ எனப் பதறாமல் இரவில் நிம்மதியாக உறங்கலாம், தெரியாத ஊர்களுக்குக் கூட நிம்மதியாகப் பயணம் செய்யலாம். 'Fare Enquiry' என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பயணம் செய்ய எவ்வளவு கட்டணம் என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும். 'Train schedules' என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி நீங்கள் பயணம் செய்ய வேண்டிய தேதிகளில் ஏதேனும் சிறப்பு ரயில் இருப்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
IRCTC Rail Connect
டிக்கெட் முன்பதிவு செய்து ரயில் பயணம் செய்ய வேண்டுமெனில் நீங்கள் அவசியம் IRCTC ஆப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த ஆப்பை டவுன்லோடு செய்து உங்களின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், மெயில் ஐடி போன்றவற்றைக் கொடுத்து உங்களுக்கான அக்கவுன்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் எங்கிருந்து எங்கு பயணம் செய்யப்போகிறீர்கள், எந்தத் தேதியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்ற தகவலைப் பதிவிட்டு சம்பந்தப்பட்ட தேதியில் ரயிலில் முன்பதிவு செய்ய டிக்கெட் இருக்கிறதா என்பதை செக் செய்யுங்கள்.
டிக்கெட் இருக்கும் பட்சத்தில் உங்கள் ஐடி பாஸ்வேர்டு கொடுத்து உங்களின் பெயர், வயது, எங்கிருந்து எங்கு பயணம் செய்யப்போகிறீர்கள் என்ற தகவலைப் பதிவிட்டு உங்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் பயன்படுத்தி கட்டணம் செலுத்தவும். டிக்கெட் புக் ஆனதும் நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வரும். அதை டிக்கெட்டாகப் பயன்படுத்தி பயணம் செய்யலாம்.

உங்களுடைய ஒரு ஐடிக்கு மாதம் ஆறு டிக்கெட் வரை மட்டுமே புக் செய்ய முடியும். திடீர் பயணத்திற்கு பிளான் செய்கிறீர்கள் எனில் தட்கல் முறையைப் பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யலாம். அதாவது உங்களுடைய நாளைய பயணத்திற்கு இன்று டிக்கெட் புக் செய்ய முடியும். ஏசி வகுப்புகளின் முன்பதிவுகள் முந்தைய நாள் காலை 10 மணிக்கும் ஏசி அல்லாத வகுப்புகளின் முன்பதிவு முந்தைய நாள் காலை 11 மணிக்கும் தொடங்கும். இதில் 'Current ticket' என்ற மற்றுமொரு வசதியும் உள்ளது. அதாவது ரயில் புறப்படும் 4 மணிநேரத்திலிருந்து இந்த வசதியைப் பயன்படுத்தலாம், நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலில் கடைசி நேரத்தில் டிக்கெட் இருக்கும் பட்சத்தில் 'Current Availability' என்று டிக்கெட்கள் இருக்கும். அதில் எப்போதும் போன்று டிக்கெட் புக் செய்துகொள்ளமுடியும்.
CMRL (CHENNAI METRO RAIL LIMITED)
சென்னைவாசிகள் பலரும் இன்று மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அப்படி மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு இந்த CMRL ஆப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் எந்தெந்த நேரங்களில் ரயில்கள் வரும், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, பார்க்கிங் வசதி எப்படியானதாக இருக்கும் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்கள், ஏதேனும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் டெபாசிட்டாக ஐம்பது ரூபாய் செலுத்தி பயண அட்டை ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். இந்தப் பயண அட்டையின் பின்புறம் எண் ஒன்று இருக்கும். அது என்னவென்று பார்த்து இந்த ஆப்பில் பதிவிட்டு உங்களின் டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பயண அட்டையை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஆனால், ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்த பின்பும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருக்கும் ரிசார்ஜ் இயந்திரத்தில் கார்டினைச் செலுத்தி `Web Recharge' என்ற பகுதிக்குச் சென்று அப்டேட் செய்தால் மட்டுமே உங்கள் பயண அட்டையில் அந்தத் தொகை சேரும். மேலும், உங்கள் மொபைலில் NFC வசதி இருந்தால், பயண அட்டையை மொபைலில் வைத்தாலே அதில் இன்னும் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்று பார்க்க முடியும்.