Published:Updated:

4000 ரூபாய் ஸ்மார்ட் போன், நீலக்கடல் வியூகம்... முகேஷ் அம்பானியின் 2021 பிளான் என்ன தெரியுமா?!

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தியா முழுவதுமே சீன எதிர்ப்பு மனநிலை நிலவி வருவதால் இந்த போன்கள் முழுவதுமாக 'Made in India' தயாரிப்பாக இருக்கும் என்கிறார்கள்.

அறிமுகமாகி சில வருடங்கள்தான் ஆகின்றன என்றாலும், இன்று ரிலையன்ஸ் குழுமத்தின் மிக முக்கிய அங்கமாக இருப்பது ஜியோதான். வெறும் டெலிகாம் நிறுவனமாக மட்டுமில்லாமல் இந்தியாவின் மிக முக்கிய டெக் நிறுவனமாகவும் வளர்ந்து நிற்கிறது ரிலையன்ஸ் ஜியோ. அதை நிரூபிக்கும் விதமாக இந்த கொரோனா காலத்திலும் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் பலவும் ஜியோவில் முதலீடு செய்திருக்கின்றன. டெக் உலகின் மும்மூர்த்திகளான கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக் நிறுவனங்களுடனும் ஏதோ ஒரு வகையில் கூட்டணி அமைத்திருக்கிறது ஜியோ. சமீபத்தில் விர்ச்சுவலாக நடந்த ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கூட மார்க் சக்கர்பெர்க், சுந்தர் பிச்சை கலந்துகொண்டு வருங்கால திட்டங்கள் குறித்துப் பேசினார்கள்.

5G, கூகுள் கூட்டணி, MR க்ளாஸ்... ஜியோவின் புதிய டெக் திட்டங்கள்! #AGM2020
ஜியோ-கூகுள்
ஜியோ-கூகுள்
ஏற்கனவே டெலிகாம் சந்தையில் தனிப்பெரும் நிறுவனமாக உயர்ந்து நிற்கும் ஜியோ சமீபத்தில் அதன் அதிரடி திட்டங்கள் மூலம் பிராடுபேண்ட் சந்தையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துவருகிறது. இப்படி அடிக்கும் பந்துகளையெல்லாம் சிக்ஸருக்கு தூக்கும் ஜியோவின் அடுத்த டார்கெட் ஸ்மார்ட்போன் சந்தைதானாம்!

இந்த வருட இறுதிக்குள் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ஜியோ அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சந்தையில் இருக்கும் ஜியோ போன் பற்றி இந்நேரம் நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட பேசிக் போன் போன்று இருந்தாலும், குறைந்த விலையில் 4G சேவைகளை அனைவருக்கும் எடுத்துவந்தன இந்த ஜியோ போன்கள். முதல் தலைமுறை இணைய பயன்பாட்டாளர்கள் பலரும் பயன்படுத்தும் ஒரு போனாக அது அமைந்தது.

ஜியோ
ஜியோ

ஆனால், அடுத்து வெளிவரவிருக்கும் ஜியோ போன் பக்கா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்குமாம். கூகுள் உடனான கூட்டணி என்பதால் இந்த போனுக்கென பிரத்யேகமாக ஆண்ட்ராய்டில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே பட்ஜெட் போன்களுக்கென இருக்கும் ஆண்ட்ராய்டு கோ (Android Go) இயங்குதளத்தில் இருக்கும் அம்சங்களுடன் இந்த ஜியோ போன் வெளிவரும். பிரபல ப்ராஸசர் சிப்செட் நிறுவனமான குவால்கம் நிறுவனமும் ஜியோவில் முதலீடு செய்திருப்பதால் பிரத்யேகமான பட்ஜெட் ஸ்னாப்டிராகன் சிப்பும் இந்த போனில் இடம்பெரும் என எதிர்பார்க்கலாம்.

Android
Android

இந்தியா முழுவதுமே சீன எதிர்ப்பு மனநிலை நிலவி வருவதால் இந்த போன்கள் முழுவதுமாக 'Made in India' தயாரிப்பாக இருக்கும் என்கிறார்கள். இதற்காக ஜியோ இங்கு இருக்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான லாவா, கார்பன் மொபைல்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கைகோக்க உள்ளது. டிக்ஸன் (Dixon) போன்ற ஸ்மார்ட்போன் அசெம்பிளி நிறுவனங்களுடன் இதற்காக கூட்டணி அமைக்கவுள்ளது ஜியோ. தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பொறுத்தவரையில் பட்ஜெட் ஏரியாவில் ஷாவ்மி, ரியல்மீ, விவோ போன்ற சீன நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. குறைந்த விலையில் நிறைவான வசதிகளைத் தருவது இந்த நிறுவனங்களின் USP-யாக இருக்கிறது. இந்த நிலையை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போடும் ஜியோவின் என்ட்ரி. சீனா எதிர்ப்பு மனநிலையை அப்படியே அதற்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது ஜியோ.

இதற்காக 'Blue Ocean Strategy' என்னும் யுக்தியை ஜியோ கையில் எடுக்கப்போகிறது என்கிறது Counterpoint Research என்னும் ஆய்வு நிறுவனம். சரி, அது என்ன 'Blue Ocean Strategy'?

ஒரு நிறுவனம் ஒரு வித்தியாசமான தயாரிப்பைக் குறைந்த விலையில் அறிமுகம் செய்து சந்தையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்கி அதற்கென வாடிக்கையாளர்களிடம் தேவையை உருவாக்குவதுதான் 'Blue Ocean Strategy'. இது ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களை மொத்தமாகக் காணாமல் போகச் செய்யும். இதைத்தான் ஸ்மார்ட்போன் சந்தையில் செய்யப்போகிறது ஜியோ. டெலிகாம் சந்தையில் ஜியோவின் அதிரடி வருகையால் எத்தனை நிறுவனங்கள் காணாமல் போயின என்பது அனைவருக்கும் தெரியும்!

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள்

கொரோனாவிற்கு பிறகு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் தேவையும் அதிகரித்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி அனைத்திற்கும் இன்று ஸ்மார்ட்போன் கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால் அனைவராலும் 10,000 விலைகொடுத்து ஸ்மார்ட்போன்கள் வாங்க முடியாது. முதல்கட்டமாக அப்படியான வாடிகையாளர்களையே குறிவைக்கிறது ஜியோ. முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்கப்போகும் வாடிக்கையாளர்களும், வீட்டில் குழந்தைகள் படிப்பு போன்ற தேவைகளுக்காக கூடுதலாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களும்தான் ஜியோவின் டார்கெட். இதனால் ஜியோவின் இந்த ஆண்ட்ராய்டு போனின் விலை 4,000 ரூபாய்தான் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்திய வாடிக்கையாளர்களைக் கவர விலையை விட ஜியோவிடம் ஒரு முக்கிய ஆயுதம் இருக்கிறது. அதுதான் டேட்டா. ஜியோ போன் வாங்குபவர்களுக்கு 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை அளவற்ற டேட்டாவை ஜியோ கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஒரு காரணத்திற்காகவே ஜியோவின் இந்த ஆண்ட்ராய்டு போன்கள் பெருமளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானி அடுத்த 2 வருடங்களில் 20 கோடி போன்களை தயாரிக்கவேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறாராம். இது நடந்தால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஷாவ்மி, விவோ போன்ற நிறுவனங்களுடன் ஜியோவுக்கும் ஒரு தனி இடம் கிடைக்கும்.

ஜியோ 4000 ரூபாய் ஆண்ட்ராய்டு போன்
ஜியோ 4000 ரூபாய் ஆண்ட்ராய்டு போன்

"இந்தியாவில் ஜியோவின் 5G சேவைகள் வெகு விரைவில் தொடங்கப்படும். உலகத்தரத்திலான இந்த 5G சேவை தொடக்கப்புள்ளியிலிருந்து இங்கே நம் நாட்டில் வடிவமைக்கப்பட்டது. 100% இந்தியத் தொழில்நுட்பங்களை மட்டுமே இதற்குப் பயன்படுத்தியிருக்கிறோம். இப்போது அனைத்தும் தயாராக இருக்கிறது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட உடன் சோதனை ஓட்டம் தொடங்கிவிடும்" எனச் சமீபத்தில் தெரிவித்திருந்தார் முகேஷ் அம்பானி. இதன்படி 5G-யும் விரைவில் இந்தியாவில் வந்துவிடும் என் நம்பலாம். ஆனால், முதல்கட்டமாக வெளியாகும் இந்த ஜியோ போன்களில் 5G சப்போர்ட் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் விரைவில் 5G போன் ஒன்றையும் நிச்சயம் வெளியிடும் ஜியோ.

இப்படித்தான் ஜூமின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போது ‘ஜியோ மீட்’ அறிமுகமானது. ஆனால், அது ஜூம் ஆப்பின் அப்பட்டமான காப்பி எனப் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடம் வேண்டுமென்றால் புதுமையாகவும் நிறைவான வசதிகளுடன் ஜியோ களம்காண வேண்டும். என்ன டெக்னிக்கல் ஸ்பெசிஃபிகேஷன் ஜியோவின் இந்த ஆண்ட்ராய்டு போனில் இருக்கிறதென பார்த்தால்தான் இன்னும் தெளிவாக போனை பற்றி கருத்து தெரிவிக்க முடியும். ஆனால், ஒரு கேம் சேஞ்சராக உருவெடுக்க எல்லா சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது இந்த போன். காத்திருப்போம்!

ஜியோவின் இந்த பட்ஜெட் ஆண்ட்ராய்டு போனை வாங்குவீர்களா... கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு