Published:Updated:

எப்படி இருக்கு 251 ரூபாய் போன்?

எப்படி இருக்கு 251 ரூபாய் போன்?
எப்படி இருக்கு 251 ரூபாய் போன்?

ன்று மொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கும் வார்த்தை ‘ஃப்ரீடம் 251’. பல ஆயிரம் ரூபாய்க்கான செல்போன்கள் வெளிவந்துகொண்டிருக்க, 500 ரூபாய்க்குள் செல்போன் கிடைக்கும் என்று அறிவித்து, ஆச்சர்யத்தைக் கிளப்பியது ரிங்கிங் பெல்ஸ் மொபைல் நிறுவனம்.

'ஃப்ரீடம் 251' என்ற அந்த போனை, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கார் அறிமுகப்படுத்தி, அதன் விலை 251 ரூபாய் என்று சொல்லியபோது மொத்த செல்போன் மார்க்கெட்டும் சற்று ஆடித்தான் போனது. ஒரு மாதத்திற்கான இன்டெர்நெட் பேக்கை விடவும் மலிவாகக் கிடைக்கும் இந்த போனிற்கான பதிவு தொடங்கப்பட்டிருக்கும் நிலையில்,  பல கோடி இந்தியர்கள் இந்த செல்போனை வாங்க கம்ப்யூட்டர் முன் அமர்ந்துள்ளனர்.

என்ன இருக்கு இந்த போனில்?

கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாடிவிட்டு,  ஸ்கைப்பில் உரையாடும் இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற அம்சங்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும், 251 ரூபாய்க்கான தேவைகளை நிறைவேற்றுகிறது ஃப்ரீடம் 251. 4 இன்ச் ஸ்கிரீனில், 540 x 960 பிக்சல் ரெசல்யூசனில் கிடைக்கிறது இந்த போன். மலிவான விலையாக இருப்பினும் 1.3 GHz குவாட் கோர் பிராசசர் பொருத்தப்பட்டுள்ளதால், இதன் செயல்பாடுகள் வேகமாகவே இருக்கும். மேலும் 10,000 ரூபாய் போன்களில் இருப்பது போலவே 8GB இன்டெர்னல் மெமரி ஸ்டோரேஜ் உள்ளது. 32 GB வரை மெமரி கார்டுகள் பொருத்திக்கொள்ளலாம். ஆன்ட்ராயிடின் லேட்டஸ்ட் வெர்ஷனான லாலிபாப் ஓ.எஸ் சில்தான் இப்போன் செயல்படுகிறது. இந்த போனின் மிகப்பெரிய குறைபாடுகள் என்றால் அவை பேட்டரியும், கேமராவும்தான்.

எப்படி இருக்கு 251 ரூபாய் போன்?

வெறும் 1450mAh பேட்டரியே பொருத்தப்பட்டுள்ளது. லாலிபாப் ஓ.எஸ் சில் பல ஆப்கள் பின்னணியில் செயல்படும் என்பதால் பேட்டரி வெகுநேரம் நீடிக்க வாய்ப்பில்லை. செல்ஃபி மோகம் அதிகரித்து வரும் இந்நாட்களில் குறைந்தபட்சம் 8MP ஃப்ரன்ட் கேமராவை எதிர்பார்ப்பார்கள் இளசுகள். ஆனால் இதன் பிரைமரி கேமராவே 3.2MP தான் உள்ளது. ஃப்ரன்ட் கேமரா அதிலும் மோசமாக 0.3MP உள்ளது. இதில் போட்டோ எடுத்தால் ஆதார் கார்டில் மட்டுமே போட முடியுமே ஒழிய ஃபேஸ்புக்கில் புரொஃபைல் பிக்சராகவெல்லாம் போட முடியாது. ரேம் மெமரி 1GB யே உள்ளதால் சில கேம்கள் கூட இதில் விளையாட முடியாது. என்னதான் இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் 251 ரூபாய்க்கு இதெல்லாம் ஏற்புடையதே. டூயல் சிம்கள் இருப்பதும் ஒருவகையில் இந்த போனிற்கு ஆதாயமே.
 
எளியவன் கைகளுக்காக

ஃப்ரீடம் 251 போனை அறிமுகப்படுத்தும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம்,  2015 ல்தான் அமைக்கப்பட்டது. நொய்டாவில் அமைந்திருக்கும் இந்நிறுவனம்,  குறைந்த விலையில் செல்போன்கள் தயாரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 4u, மாஸ்டர், ஸ்மார்ட் 101 என்று இதுவரை மூன்று மாடல்களில் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றுள் ஸ்மார்ட் 101, இந்தியாவிலேயே மலிவான 4ஜி மொபைல் ஆகும். அதன் விலை வெறும் 2,999 ரூபாய் தான்.

“மேக் இன் இந்தியா” திட்டம் காரணமாக அனைத்து பாகங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதால்,  13.8 சதவிகிதம் உற்பத்தி செலவு குறைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அஷோக் சந்தா தெரிவித்தார். மேலும் முதலில் ஆன்லைனில் விற்பதன் மூலம் விநியோக செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்திய செல்போன் மார்க்கெட்டில் 30 சதவிகிதத்தைப் பிடிக்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த செல்போன் தயாரிக்கும் ஆலைகளை உத்தரகாண்ட் மற்றும் நொய்டாவில் சுமார் 250 முதல் 350 கோடி ரூபாய் செலவில் இந்நிறுவனம் அமைக்கவுள்ளது.

எப்படி இருக்கு 251 ரூபாய் போன்?

எங்க வாங்கலாம்... எப்படி வாங்கலாம்?

ஃப்ரீடம் 251 செல்போனை நாம் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இன்று காலை 6

எப்படி இருக்கு 251 ரூபாய் போன்?

மணிக்குத் தொடங்கியுள்ள ரெஜிஸ்ட்ரேஷன், வரும் 21ம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுமாம். ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் ஆர்டர் செய்வது போன்ற எளிமையான முறைதான்.

www.freedom251.com என்ற இணையதளத்தில்தான் ரெஜிஸ்ட்ரேஷன் நடைபெறுகிறது. மொபைலை டெலிவரி செய்ய,  40 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. அதையும் சேர்த்து 291 ரூபாயை நாம் ஆன்லைனில் செலுத்திவிட்டால் போதும்,  வரும் ஜூன் 30ம் தேதி, 'ஃப்ரீடம் 251'  நம் கைகளில் இருக்கும். பதிவுகள் தொடங்கியவுடனேயே கோடிக்கணக்கில் மக்கள் குவிந்ததால், இந்நிறுவன வலைதளத்தின் செயல்பாடு ஸ்தம்பித்துள்ளது.

“கடைக்கோடி இந்தியனுக்கு எல்லாமும் கிடைக்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் ஏழை எளியவர்களையும் அடைய வேண்டும்” என்று இந்த போன் பற்றிப் பேசையில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

சில நாட்கள் முன்பு வெறும் 35 அமெரிக்க டாலர்களுக்கு ஆகாஷ் என்ற டேப்-ஐ இந்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய மொபைல் மார்க்கெட்டான இந்தியாவை வைத்து பணம் பார்த்து வந்த சீனா மற்றும் கொரிய கம்பெனிகளிடமிருந்து ஃப்ரீடம் பெற்றுத்தரப் போகிறது இந்த ஃப்ரீடம் 251. இந்தியாவின் தொழில்நுட்பப் புரட்சியின் மிக முக்கிய மைல்கல்லாய் இது அமையும் என்பதில் ஐயமில்லை.

1,5000 ரூபாய்க்குக் குறையாமல் நம்மால் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியாது. ஆனால் அதைவிட ஐந்து மடங்கு குறைவாக, ஒரு மாத நெட் பேக்கை விடவும் கம்மியான விலையில் கிடைக்கிறது இந்த அரிய செல்லிடைபேசி.

உங்க எதிர்த்த வீட்ல இருக்கு…பக்கத்து வீட்ல இருக்கு…உங்க வீட்ல இருக்கா???

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு