Published:Updated:

பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.!

பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.!
பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.!

மொபைல் போன்களின் பயன்பாடு ஆரம்பித்த காலகட்டத்தில் மொபைல் உலகின் ஜாம்பவான் என்ற பெருமையுடன் கம்பீர நடைபோட்டது பிளாக்பெர்ரி நிறுவனம். இதன் முக்கிய அம்சமே அவ்வளவு எளிதில் பிளாக்பெர்ரி போனை ஹேக் செய்துவிடமுடியாது என்பதுதான். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப்பின், விற்பனைச் சந்தையில் தன் இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் சமீபத்தில் தன் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த முடிவு, உலக அளவில் பிளாக்பெர்ரி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது பிளாக்கபெர்ரியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.

அதற்கு காரணம், கடந்த புதன் கிழமை லாஸ் வேகாஸ் நகரத்தில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் CES 2017 என வெளியிடப்பட்ட புதிதாக விற்பனைக்கு வரவுள்ள பிளாக்பெர்ரியின் ஸ்மார்ட் போன் பற்றிய அறிவிப்புதான். இதுவரை ப்ளாக்பெர்ரி நிறுவனத்திற்காக மொபைல் போன்களை தயாரித்து வந்த டி.சி.எல் கம்யூனிகேசன்ஸ் டெக்னாலஜி (TCL Communications Technology) என்ற நிறுவனம் பிளாக்பெர்ரியின் அனுமதியோடு இனி பிளாக்பெர்ரி மொபைல் போன்களை தன்னிச்சையாக தயாரிக்க உள்ளது.

இந்த புதிய பிளாக்பெர்ரி மொபைல் போனின் அதிகாரப்பூர்வமான பெயர் வெளியிடப்படவில்லைஎன்றாலும், டெக் உலகில் இந்த மொபைல் போனின் அறிமுகத்தை Blackberry Mercury என்றே அழைக்கின்றனர். இந்த புது பிளாக்பெர்ரி மொபைலின் பிரதான சிறப்பம்சம் பிளாக்பெர்ரி இயங்குதளம்தான். ஆனால், இது வழக்கமாக இயங்கும் பிளாக்பெர்ரியின் பிரத்யேக இயங்குதளத்தில் இயங்காமல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிளாக்பெர்ரி பயன்பாட்டாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் மென்பொருள்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் பிப்ரவரி மாதம் பார்ஸிலோனாவில் நடவிருக்கும் Mobile World Congress நிகழ்ச்சியில் அதிகார பூர்வமாக வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மொபைல் 4.6-இன்ச் முழுஅகல திரை மற்றும் குவர்ட்டி கீபோர்டுடன் வரவுள்ளது. இந்த கீபோர்ட், பட்டன்களை கொண்டிருந்தாலும் இதன் மீது ஸ்வைப் (swipe) செய்யும் பொழுது திரையின் செயலை கட்டுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீபோர்டில் உள்ள ஸ்பேஸ்பார் (Spacebar) பட்டனில் கைரேகை வசதிகொண்ட(Finger Print) ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

அலுமினியம் கேசிங் செய்யப்பட்டுள்ள இந்த மொபைல், ஸ்னாப்டிராகன் 625 ப்ராசசர் மற்றும் 4GB ரேமுடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்பக்கத்தில் 18 மெகாபிக்சல் கேமராவும் முன்பக்கம் 8மெகாபிக்சல் கேமராவும் இடம்பெற இருக்கின்றன. இது 3400 mAh சக்தி கொண்ட பேட்டரி மூலம் இயங்கவுள்ளது. "எங்கள் நிறுவனம் ஒரு மாபெரும் தொழில்நுட்ப புரட்சியின் மத்தியில் உள்ளது, மக்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்து அதிகப்படியான செயல்திறனை எதிர்பார்க்கின்றனர். அதனை நாங்கள் பூர்த்தி செய்வோம்" என்று டி.சி.எல் கம்யூனிகேசன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர், ஸ்டீவ் சிஸ்டுள்ளி தெரிவித்துள்ளார். ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்குவது என்ற முடிவு விவேகமானது என்று டெக் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகே புதிய பிளாக்பெர்ரியின் வெற்றி என்பது தீர்மானிக்கப்படும். பிளாக்பெர்ரி தான் இழந்த இடத்தை புதிய வெளீயீட்டின் மூலம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

-க.விக்னேஸ்வரன். (மாணவ பத்திரிகையாளர்)