Published:Updated:

உங்கள் ஆதார் தகவல்களை பிறர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி? #Aadhaar #MustKnow

உங்கள் ஆதார் தகவல்களை பிறர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி? #Aadhaar #MustKnow
உங்கள் ஆதார் தகவல்களை பிறர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி? #Aadhaar #MustKnow

ரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயமா இல்லையா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் கேஸ் இணைப்பு பெற, சிலிண்டர் மானியம் பெற, வங்கிக் கணக்கை துவக்க, பி.எப். கணக்கு துவக்க, பாஸ்போர்ட் பெற, இவ்வளவு ஏன் ரேசன் பொருள்கள் வாங்கக்கூட ஆதார் அட்டை கட்டாயம் என்கிறது மத்திய அரசு. திருப்பதியில் குறிப்பிட்ட சில தரிசனங்களுக்காக முன் பதிவு செய்யக்கூட ஆதார் எண்ணை கேட்கிறார்கள்.

ஆதார் எண் இருந்தால் 15 நிமிடங்களில் உங்கள் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக சர்வீஸ் ஆக்டிவ் செய்யப்படும் என சமீபத்தில் ஒரு பிரபல தனியார் மொபைல் சேவை நிறுவனம் தெரிவித்தது. உங்கள் கை ரேகையை வைத்தால், உங்கள் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு உடனுக்குடன் சர்வீஸ் ஆக்டிவ் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். சிலிண்டர் மானியம் பெறுவதற்காக பலரும் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைத்திருப்போம். சுருக்கமாக சொல்லப்போனால் விரைவில் நம் ஜாதகமே ஆதார் அட்டையில் அடங்கிவிடும்.

2010-ம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை 103 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைக்காக உங்கள் கை ரேகையும், கருவிழியும் ஸ்கேன் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்டிருக்கும். இது பயோ-மெட்ரிக் தகவல் என்றழைக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட பயோ-மெட்ரிக் தகவல்கள் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பகிரப்படாது என அரசு தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், பயோ-மெட்ரிக் வழியாக உங்கள் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்பட்டது என  UIDAI-ல் இருந்து பலருக்கும் சமீபத்தில் மெயில் வந்திருக்கிறது. ஒருவேளை நம் தகவல்கள் பாதுகாப்பாக இல்லையென்றால் என்ன விபரீதம் எல்லாம் நடக்கும் என யோசித்துப் பாருங்கள். ஆனால் இதை நம்மால் தடுக்க முடியும். பயோ-மெட்ரிக் தகவல்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.

இந்திய தனித்துவ அடையாள அதிகார ஆணையம் (UIDAI) தான் ஆதார் தகவல்களை சேகரித்து வருகிறது. இதிலிருக்கும் நமது பயோ-மெட்ரிக் தகவல்களை சில வழிகள் மூலம் லாக் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் தகவல்களை வேறு யாரும் பரிசோதிக்கவோ / பயன்படுத்தவோ முடியாது. நமக்குத் தேவைப்படும் நேரத்தில் எளிதாக அன்லாக் செய்யவோ மீண்டும் லாக் செய்யவோ முடியும்.

ஆதார் தகவல்களை லாக் செய்யும் வழிமுறைகள் :

  • ஆதார் அட்டைக்கு நீங்கள் பதிந்த மொபைல் எண்ணை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் https://uidai.gov.in/ இணையதளத்திற்கு செல்லுங்கள். இந்த இணையதளத்தின் இடது மூலையில் நமக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.
  • அதில் ஆங்கிலத்தில் 'Lock/Unlock Biometric' என்றும், தமிழில் 'உடற்கூறு பதிவுகளை மூடுதல்-திறத்தல்' என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் https://resident.uidai.net.in/biometric-lock என்ற தளத்திற்கு செல்லும்.
  • அதன்பிறகு உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை முதல் பெட்டியில் தரவும்.
  • அதன் கீழே பெட்டியில், படத்தில் உங்களுக்கு காண்பிக்கும் செக்யூரிட்டி கோட் தந்தால் நீங்கள் பதிந்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் பாஸ்வேர்ட் குறுந்தகவலாக அனுப்பப்படும்.
  • ஒருமுறை கடவு எண்... அதாங்க OTP-யை தந்து 'Verify' கொடுத்தால் நீங்கள் லாக் செய்யும் பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
  • அதன்பின் பயோமெட்ரிக் தகவல் ஆப்சனுக்கு அருகில் உள்ள கட்டத்தை க்ளிக் செய்து, Enable கொடுப்பதன் மூலம் உங்கள் தகவல்களை லாக் செய்து கொள்ளலாம். இதன்பின் உங்கள் தகவல்களை உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் பாஸ்வேர்ட் மூலமாக நீங்கள் மட்டும் தான் அணுக முடியும்.
  • உங்கள் தகவல்களை லாக் செய்தபிறகு, மீண்டும் அன்லாக் செய்ய விரும்பினால் மேற்சொன்ன வழிமுறைகளின் படி உள்நுழைந்து அன்லாக் செய்து கொள்ள முடியும்.

'அப்புறம் பார்த்துக்கலாம்' என வழக்கம்போல தள்ளிப்போடாமல் முதல் வேலையாக இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்க முடியும். இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், பதிவுசெய்துவிட்டு ஆதார் எண் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்களுக்காக தற்போது தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. உங்களுக்கு அருகே இருக்கும் முகாமிற்குச் சென்று பயன்பெறலாம் பாஸ்!

- கருப்பு

அடுத்த கட்டுரைக்கு