Published:Updated:

இது மட்டும் இந்தியாவுக்கு வந்தால் பறந்து பறந்து பிரேக்கிங் நியூஸ் போடுவாங்களே! #Ehang

இது மட்டும் இந்தியாவுக்கு வந்தால் பறந்து பறந்து பிரேக்கிங் நியூஸ் போடுவாங்களே! #Ehang
இது மட்டும் இந்தியாவுக்கு வந்தால் பறந்து பறந்து பிரேக்கிங் நியூஸ் போடுவாங்களே! #Ehang

"58, 59... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நேயர்களே! 2022-ம் வருடம் கோலாகலமாகப் பிறந்திருக்கிறது. நான் இப்ப மெரினா பீச் மேல ட்ரோன்ல பறந்துக்கிட்ருக்கேன். எந்த பக்கம் பார்த்தாலும் மக்கள் கூட்டம். எல்லாரும் கேமராவ பார்த்து 'ஹேப்பி நியூ இயர்'னு கத்திக்கிட்டே கை அசைக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு வாழ்த்துகள பரிமாறிக்கிறாங்க. XYZ செய்திகளுக்காக பறந்துகொண்டே செய்திகள் வாசிப்பது கார்த்திக்" என இன்னும் 5 வருடங்கள் கழித்து செய்திகள் ஒளிபரப்பாகத்தான் போகிறது. என்னடா 5 வருசம் கழிச்சு நடக்கப் போறதப்பத்தி இப்ப எதுக்காக எழுதிக்கிட்ருக்காங்கன்னு பார்க்கிறீங்களா? ஆமாங்க. 5 வருசம் கழிச்சு செய்தி சேனல்கள் இப்படித்தான் செய்தி வாசிப்பாங்க. இப்படி நான் சொல்ல ஒரு காரணம் இருக்குங்க! அது என்ன தெரியுமா?

ஆளில்லா தானியங்கி வானூர்தி (Unmanned Aerial Vehicle - UAV) எனப்படும் ட்ரோன், பலருக்கும் முதன்முதலாக தமிழ்ல 'நண்பன்' படத்தில் அறிமுகமாகி இருக்கும். சென்னை வெள்ளத்தின் போதும், வர்தா புயலின் போதும் ட்ரோன் மூலமாக நேரலையில் செய்திகள் ஒளிபரப்பாகின. சினிமாவிலும் பலவிதமான ஷாட்கள் இதன் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, திரையரங்கில் டாடா சுமோக்களை பின் தொடர்கிறது. ராணுவத்தைப் பொறுத்தவரை உளவு பார்க்கவும் ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பலவிதமாக ட்ரோன் உபயோகமாக உள்ளது. போற போக்கை பார்த்தால் குழந்தைகளுக்கு பொம்மை கார் வாங்கித் தர்றது மாதிரி, விளையாட ட்ரோன் வாங்கித் தந்தாலும் ஆச்சர்யமில்லை.

ஆனால் ஆளில்லா தானியங்கி வானூர்தியாக இருந்த ட்ரோன் இனி ஆளை சுமந்துகொண்டு பறக்கப் போகிறது. ட்ரோன் தயாரிப்பில் அசத்திவரும் நிறுவனமான சீனாவைச் சேர்ந்த பெய்ஜிங் இ-ஹாங் கிரியேசன் சயின்ஸ் & டெக்னாலஜி லிமிட்டட் (Beijing Yi-Hang Creation Science & Technology Co., Ltd), கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பயணியை சுமந்துகொண்டு பறக்கும் 'E-Hang 184' மாடல் ட்ரோனை வெற்றிகரமாக வடிவமைத்ததாக அறிவித்தது. தனிநபர் வானூர்தியைப் பயன்படுத்தப் போகும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை துபாய் தட்டிச்செல்லவிருக்கிறது. துபாய் சாலை மற்றும் போக்குவரத்து நிறுவனம் இவ்வகை ட்ரோனை வரவிருக்கும் ஜூலை மாதத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இ-ஹாங் நிறுவனம் இதற்காக இந்த ட்ரோனை துபாயில் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதித்துப் பார்த்திருக்கிறது. 'நானோ' கார் அளவிற்கு இருக்கும் இந்த ட்ரோனில், ஒரேயொரு நபர் (அதிகபட்சமாக நூறு கிலோ எடைகொண்ட நபர்) மட்டுமே பயணிக்க முடியும். முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் முறையில் இயங்குவதால், இந்த ட்ரோனை ஆன் செய்துவிட்டு, லேண்டிங் செய்யும்போது மட்டும் பட்டனைத் தட்டினால் போதும். பயணிக்கும் நபர் இதில் இருக்கும் கன்ட்ரோல் பேனல் மூலமாக எங்கு செல்ல வேண்டும் என்பதை உள்ளீடு செய்துகொள்ளலாம். ஆனால் துபாய் நிறுவனம் இதை தரையில் இருக்கும் கன்ட்ரோல் ரூம் மூலமாக இயக்கவிருக்கிறது. 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இதை கட்டுப்படுத்த முடியும். மணிக்கு 100 மைல் வேகத்தில் இயங்கும் இதில், அரை மணி நேரம் வரை தாங்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மின்சக்தி மூலம் இந்த பேட்டரியை ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். 'அடப்பாவிகளா! பறக்கும்போது பாதிலயே பேட்டரி தீர்ந்துபோச்சுன்னா என்ன பண்ணுவாங்க'-னு தான யோசிக்கிறீங்க. 'எந்த அவசர கதியிலும், அருகே உள்ள பாதுகாப்பான இடத்தில் லேண்ட் செய்துகொள்ளும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளதால் கவலை வேண்டாம்' என்கிறது இதை வடிவமைத்திருக்கும் நிறுவனம்.

2 முதல் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை இதன் விலை இருக்கும் எனத் தகவல். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது ட்ரோன் மூலமாக பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. கனடாவிலும் ட்ரோன் மூலமாக டெலிவரி செய்ய சில நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, செய்தி நிறுவனங்கள் தான் ட்ரோனை வர்த்தக ரீதியில் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்திய மதிப்பில் இதற்கு கோடிக்கணக்கில் செலவாகும்.யார் கண்டது?  'E-Hang 184' ட்ரோனை ஏதாவது ஒரு செய்தி நிறுவனம் கூட சில வருடங்களில் வாங்கிப் பயன்படுத்தலாம். இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இதுபோல இன்னும் பல நிறுவனங்கள் மனிதர்களைச் சுமந்து செல்லும் ட்ரோன்களை வடிவமைக்கலாம். அப்போது இவற்றின் பயன்பாடுகள் இன்னும் அதிகரிக்கும். ஆனா ஒண்ணுங்க..அப்படியொரு சம்பவம் மட்டும் நடந்தா...இந்த நியூஸ் சேனல்ஸ் எல்லாம் பறந்து பறந்து பிரேக்கிங் நியூஸ் போடுவாய்ங்களே! அதை நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு! மத்தபடி ஐ சப்போர்ட் ட்ரோனுங்க!

இது தொடர்பான வீடியோ :

- கருப்பு