Published:Updated:

சூரியக் குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வாழ இன்னொரு கேலக்ஸியா? #TRAPPIST1

சூரியக் குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வாழ இன்னொரு கேலக்ஸியா? #TRAPPIST1
சூரியக் குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வாழ இன்னொரு கேலக்ஸியா? #TRAPPIST1

சூரியக் குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வாழ இன்னொரு கேலக்ஸியா? #TRAPPIST1

ஒரு புதிய அறிவிப்பு வெளியாகவுள்ளது என்ற ஆச்சர்யத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது, நாசா. இதுவரை பல நட்சத்திரங்களையும் கோள்களையும் கண்டுபிடித்து அறிவித்த நாசா, இந்த முறை வெளியிட்டுள்ள செய்தி மிகவும் ஆச்சர்யமானது. பூமியைப்போல அளவுள்ள கோள்கள் ஒரு சூரியனைச் சுற்றிவரும் நிலையில், ஒரு புதிய அமைப்பைக் கண்டறிந்துள்ளது.

ஒற்றை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தக் குடும்பத்தின் நட்சத்திரத்துக்கு,  ட்ராப்பிஸ்ட் என நாசா பெயரிட்டுள்ளது. 7 கோள்களும் பூமியைப் போன்ற ஒரே அளவுடைய கோள்களாக உள்ளன. மேலும் 7 கோள்களுக்குள்ளும் பெரிதாக வித்தியாசமில்லை என்றும், ட்ராப்பிஸ்ட்டின் பார்வையில் அனைத்து கோள்களுமே குறைந்த தூரத்திலேயே இருப்பது ஒருவேளை இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்தக் கண்டுபிடிப்பை  சிலியில் உள்ள தொலைநோக்கி மூலமாகவும், நாசாவின் ஸ்பிட்செர் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலமாகவும் கண்டறிந்ததாக நாசா கூறியுள்ளது. இதில், மூன்று கோள்கள் ஹாப்பிட்டபிள் பகுதி எனப்படும் வாழ்வாதாரங்கள் உள்ள பகுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது. காரணம், அங்கு மலைகளும்  தண்ணீரும் இருக்கக்கூடும் என்பது தொலைநோக்கிகளின் உதவியால் தெரிவருகிறது.

இந்த அமைப்பு, பூமியில் இருந்து 235 ட்ரில்லியன் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளதாக நாசா கூறியுள்ளது. ஒளி ஆண்டுகளோடு ஒப்பிட்டால், சுமார் 40 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்தக் கோள்கள் உள்ளன. இந்த விவரங்களை நாசா சிலியில் உள்ள தொலைநோக்கி மூலமாகவே கண்டறிந்துவிட்டது. இதன் தொலைவு, இந்தக் கோள்கள் என்ன அடர்த்தியில் இருக்கும் என்ற தகவல்களையெல்லாம் மேம்படுத்தி, தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நாசா. சென்ற மார்ச் 2016ல் இருந்து நாசா இந்தப் பணிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கோள்களின் கணிக்கப்பட்ட அடர்த்தியைக்கொண்டு பார்க்கும்போது, ஏழு மற்றும் கடைசிக் கோள், ஒரு பெரிய ஐஸ் கட்டியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மற்ற கோள்கள் பாறைகளால் ஆனது என்றும், தண்ணீர்த் தடங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ராப்பிஸ்ட் 1 நட்சத்திரம், சூரியனிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது, முழுவதும் குளிர்ந்த நிலையில் உள்ள நட்சத்திரம். அதனால், இதற்கு அருகில் உள்ள கோள்கள் குளிர்ந்த நிலையில் இருக்கும். போகப் போக குளிர் குறைந்து காணப்படும் என்றும் கோள்கள் மிக நெருக்கமாக இருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. அதாவது, ஒருவர் ஒரு கோளில் நின்றுகொண்டால், அடுத்த கோளின் மேக நகர்வுகளைக்கூடக் காண முடியுமாம். 

பூமி மற்றும் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களைப்போல அல்லாமல், சூரியனோடு ஒரே கோணத்தில் சுழலக்கூடியவையாக உள்ளன. அதாவது, ஒரு பகுதி சூரியனை நோக்கி உள்ளது என்றால், அதே பகுதிதான் இறுதி வரை சூரியனை நோக்கி இருக்கும். அப்படியானால், ஒரு பகுதி பகலாக மட்டுமே இருக்கும்; மற்றோரு பகுதி இரவாக மட்டுமே இருக்கும். அதிவேகமான காற்று, பகல் பகுதியிலிருந்து இரவுப் பகுதிக்கு வீசப்படும். மாறுபட்ட வெப்பநிலைகள் காணப்படும் என்கிறது நாசா.

ஸ்பிட்செர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கோள்களை உறுதிசெய்ய, நாசா ட்ரப்பிஸ்ட் 1ஐ தொடர்ந்து 500 மணிநேரம் மேற்பார்வையிட்டு, இன்ஃப்ராரெட் கதிர்கள் மூலம் தொலைவைக் கண்டறிந்தது எனப் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்பே உறுதிசெய்ததாகக் கூறப்படுகிறது. 

இன்னொரு கிரகத்தைக் கண்டறிந்து, அதில் மனிதன் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருந்தாலே, என்றாவது ஒருநாள் பூமியைத் தாண்டி வெளியே ஒரு மனிதனையாவது சந்தித்துவிட மாட்டோமா என்ற ஆவல் மனித இனத்தில் இருந்து வருகிறது. இதுபோன்ற செய்திகள் இன்னும் அதை அதிகப்படுத்துவதாக உள்ளன. இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடரும்போது, அங்குள்ள மனிதன் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்தவனாக இருந்து, நம்மைத் தொடர்புகொண்டால் எப்படி இருக்கும்.

பூமியைப் போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அறிவித்த நாசா, இந்தக் கிரகங்களின் 360 டிகிரி வீடியோவையும் வெளியிட்டுள்ளது. (காட்சிகள் சித்திரிக்கப்பட்டவை). இந்த விஷயத்தில், தேடல் தொடரும் என்கிறது நாசா.

ச.ஸ்ரீராம்
 

அடுத்த கட்டுரைக்கு