Published:Updated:

சீனா இதற்குக் கூட ட்ரோன்களைத்தான் பயன்படுத்துகிறது..!

சீனா இதற்குக் கூட ட்ரோன்களைத்தான் பயன்படுத்துகிறது..!
சீனா இதற்குக் கூட ட்ரோன்களைத்தான் பயன்படுத்துகிறது..!

சீனா இதற்குக் கூட ட்ரோன்களைத்தான் பயன்படுத்துகிறது..!

வித்தியாசமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் சீனர்கள் நம்மை ஆச்சரியப்படுத்த எப்பொழுதும் தவறுவதில்லை. 

தற்போதைய சூழ்நிலையில் குறுகிய தெருக்களாலும், அடுக்குமாடி குடியிருப்புகளாலும் நிறைந்துவிட்ட சீனக் குடியிருப்பு பகுதிகளில் பெரும் பிரச்சனையாக இருப்பது மாடிகளில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயர்மின் அழுத்த கம்பிகளில் சிக்கிக் கொண்டு தொங்கும் குப்பைகள். இதனை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதல்ல. மனிதர்கள் ஏறி சுத்தம் செய்ய வேண்டும் என்றால் அந்த பகுதியில் மின்தடையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் மின்தடை செய்வது பெரும் அசௌகரியத்தை உருவாக்கும். இதற்குத் தீர்வாகத்தான் நெருப்பை உமிழும் ஆளில்லா குட்டி விமானம் என்றழைக்கப்படும் ட்ரோன் (Drone) கருவியை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன், உயர்மின் அழுத்த கம்பிகளில் தொங்கிக்கொண்டு இருக்கும் குப்பையின் அருகே பறந்து சென்று அதன் மீது நெருப்பை பீச்சி அடித்து அந்த குப்பைகளை அங்கேயே எரித்து சாம்பலாக்கி விடுகிறது. 11 கிலோ எரிபொருளை இந்த ட்ரோன் சுமந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இதில் இருந்து வரும் நெருப்பு 400° செல்சியஸ் வரை வெப்பமாக்கும். 

இது சுற்றுசூழலை பாதிக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறினாலும், உயர்மின் அழுத்த கம்பிகளில் ஏறி மனித உயிரை பணயம்வைப்பதை விட இது எளிது என்று கூறுகிறது இந்த ட்ரோன் நிறுவனம்.

உலகளவில் ட்ரோன்கள் பல துறைகளில் பயன் படுத்தப்படுகிறன. உயர் ரக இயந்திர துப்பாக்கிகளை ஏந்தி சென்று எதிரி தளத்தை தாக்கும் ட்ரோன்கள் தற்பொழுது ராணுவத்தில் பிரபலமடைந்து வருகிறன. 

தீவிரவாதிகளும் ட்ரோன் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் ட்ரோன் போர் முறையை உலக நாடுகள் சில எதிர்க்கின்றன.

ராணுவ ட்ரோனின் செயல்திறனை இந்த வீடியோவில் காணலாம்.

அமேசான் நிறுவனம் தங்களின் சேமிப்பு கிடங்கின் அருகில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 13 நிமிடத்தில் சிறு பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை சோதனை ஓட்டமாக பயன்படுத்தி வருகிறது. 

நம் நாட்டிலும் ட்ரோன்களின் வருகை ஆரம்பித்துள்ளது. தற்பொழுது  சினிமாத் துறையில் ட்ரோன் கேமராக்கள் பெரிதும் பிரபலமடைந்து வருகிறன. வானத்தில்  இருந்து ஏடுக்கும் காட்சிகளில் இது பெரும் பொருட்செலவையும், நேரத்தையும் மிச்சப் படுத்துகிறது. இப்பொழுதெல்லாம் Ariel Shot இல்லாத  சினிமாக்களே வருவதில்லை என்று சொல்லிவிடலாம். சினிமாவில் மட்டுமல்ல குறும்படங்களில், பெரும்பாலான திருமண வீடியோக்கள் முதற்கொண்டு ட்ரோன்கள் பயன் படுத்தப்படுகின்றது. 

எதிர் எதிர் புறத்தில் சுழலும் நான்கு இறக்கைகள் ஒரு பொருளை மேல் எழும்பச் செய்யும் என்ற ஒரே அடிப்படை விதி தான். ஆனால் பலன்கள் பல. அவசர காலங்களில் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப ( சென்னை வெள்ளத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும்), காடுகளில் விதைகளைத் தூவ, செல்ஃபி  எடுக்க என்று ட்ரோன்களின் பரிமாணங்கள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன. 

உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தேனிக்களின் அழிவால் குறையும் மகரந்த சேர்கையை  செய்யவும் விஞ்ஞானிகள் ட்ரோன் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். வரும் காலங்களில் இதன் வீச்சு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை 

மகரந்த சேர்க்கை ட்ரோன் வீடியோவைக் காண .

 தற்பேதைய வாழ்வியலின் ஓர் அங்கமாகவே மாறி வரும் ட்ரோன்களை கூடிய விரைவில் நம் ஊர் வானங்களிலும் காணலாம். 

ஆனால் நம் நாட்டில் இன்றையத் தேதி வரை ட்ரோன்களை  பயன்படுத்துவதை குறித்து தெளிவான சட்ட வரைமுறைகள் இல்லை. ட்ரோன்களை எளிதாக தீய வழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் தெளிவான சட்ட திட்டங்கள் அவசியம் தேவை.

எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் மனித மலத்தை அள்ள மனிதனையே இறக்கும் கொடுமைக்கு இன்னும் ஒரு முடிவு வரவில்லை என்பதுதான் சோகம்.

-க.விக்னேஸ்வரன் (மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு