Published:Updated:

ஐபோனின் செல்லக்குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்..! #VoiceofSIRI

ஐபோனின் செல்லக்குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்..! #VoiceofSIRI
ஐபோனின் செல்லக்குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்..! #VoiceofSIRI

"இன்றைய நாள் எப்படி இருக்கிறது", "நான் இருக்கும் இடத்துக்கு அருகில் காஃபி ஷாப் எங்கு உள்ளது", "இன்னிக்கு மழை பெய்யுமா?" அப்படினு ஒருத்தர்கிட்ட நொய்நொய்னு கேள்வி கேட்டுட்டே இருந்தா கடுப்பா இருக்கும்ல. ஆனா என்னதான் கோக்குமாக்கா கேள்வி கேட்டாலும் சளைக்காம பதில் சொல்றதுக்கு ஒரு ஆள் இருக்குனா அது ஐபோன் பர்சனல் வாய்ஸ் அசிஸ்டெண்ட் சிரிதான். அமெரிக்க அதிபர் யாருங்கறதுல ஆரம்பிச்சு பக்கத்துத் தெரு கவுன்சிலர் வரைக்கும் எல்லாமே சிரிக்கு தெரியும். இது வழக்கமா இருக்கறதுதானே இதுல என்ன புதுசுன்னு கேக்குறீங்களா? இந்த வாய்ஸ் யாரோடது(VoiceofSIRI). இத எப்படி பதிவு பண்ணாங்கங்கறதுதான் சுவாரஸ்யமான விஷயம்.

 2011ம் ஆண்டுதான் ஐபோன்களில் சிரி அறிமுகமானது. அதற்கான வாய்ஸ்  சுசான் பென்னட் எனும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டுடையதுதான். இதில் ஹைலைட் என்னவென்றால் சுசான் ஐபோன் சிரிக்காகத்தான் தனது குரலைப் பதிவு செய்தார் என்பது அவருக்கே தெரியாதாம். 

2005ம் ஆண்டு பாடகியாக விளம்பரங்களுக்கு ஜிங்கில்கள் பாடும் வேலையைச் செய்து வந்து சுசான். அவர் பணியாற்றிய ஸ்டுடியோவில் ஒருநாள் சுசான் உங்கள் குரல் தொனி பாடல்களுக்கு ஏற்றதாக இல்லை. சில வாசகங்களைப் படித்துப் பதிவு செய்யும் வேலை இருக்கிறது பார்க்கிறீர்களா எனக் கேட்க சுசானும் சம்மதித்திருக்கிறார். 

ஒரு மாதம் முழுவதும், தினமும் 4 மணி நேரத்துக்கும் மேலாக ரெக்கார்டிங் நடந்துள்ளது. அதில் வாக்கியங்களும், அதனை தனித்தனி உச்சரிப்புகளாகவும் பிரித்து பதிவு செய்துள்ளனர். ஆரம்பத்தில் சுசான் ”என்ன இது... இப்படி ஒரு ரெக்கார்டிங்... இதனை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்” என்று நினைத்திருக்கிறார். பின்னர் சுசானுக்கு இந்த விஷயம் பிடித்துப் போக பணம் எடுக்கும் ஏடிஎம் மிஷின்களுக்கான குரல், வங்கி பரிவர்த்தனைகளுக்கான குரல் என கணினி தானியங்கிகளுக்கான குரலைப் பதிவு செய்து வந்துள்ளார்.

2011ம் ஆண்டில் ஐபோனில் சிரி அமைப்பு உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. ஆனால் சுசானுக்கு அதில் இருப்பது அவரது குரல்தான் என்பது தெரியாது. காரணம் அவர் ஐபோன் யூஸர் இல்லை. ஒருநாள் சுசான் பென்னட்டின் சக வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் போன் செய்து ஐபோனில் வருவது உன் குரலா எனக் கேட்க, பின்பு விசாரித்ததில் ஆம் அது சிரிக்காகப் பதிவு செய்யப்பட்ட குரல்தான். அதனை ஒரு ஸ்டுடியோவிடம் கொடுத்துச் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அந்தத் தேர்வில் சுசானின் குரல் ஆப்பிளுக்குப் பிடித்துப் போனதால் சிரி அமைப்பை இவரது குரலிலேயே உருவாக்கியுள்ளனர். 

”இது ஒரு தற்செயலாக நடந்த சம்பவம். ஆனால் மிகப்பெரிய அங்கீகாரம். என்னிடம் ஐபோன் இல்லை. ஆனால் என் கணவரிடம் உள்ள ஐபோனில் கேட்டிருக்கிறேன். என் குரல் எனக்கே பதில் சொல்லும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்”  என்கிறார் சுசான். தற்போது ஐஓஎஸ் 7வது வெர்ஷனில் சிரி குரல்கள் மேம்படுத்தப்பட்டுவிட்டன. ஆனாலும் எனக்கு சிரி தந்த இந்த வாய்ப்பு பெருமையாக இருக்கிறது.அதனைத் தொடர்ந்து செய்து வருவேன் என்று கூறி சிலாகிக்கிறார் சுசான் பென்னட்.

ஸ்டீவ் ஜாப்ஸ் புதுமைகளுக்கான ஒரு நபர் என்பதை இந்தச் சம்பவம் ஆணித்தரமாகக் காட்டுகிறது. 2005லேயே 2011க்கான வேலையைத் தொடங்கி இன்று எல்லாரையும் அப்டேட்டாக வைத்திருப்பதற்கான விதையை விதைத்திருக்கிறார். ஐபோனின் செல்லக்குரலுக்கான தேடலில் ஹிட் அடித்த சுசான் பென்னட் தான் முதல் சிரி வாய்ஸுக்கு சொந்தக்காரர். 

ச.ஸ்ரீராம்