Published:Updated:

இளையராஜா பாடல்களை லீகல் ஆக கேட்க ஒரு அட்டகாச ஆப்! #MaestrosMusic

இளையராஜா பாடல்களை லீகல் ஆக கேட்க ஒரு அட்டகாச ஆப்! #MaestrosMusic
இளையராஜா பாடல்களை லீகல் ஆக கேட்க ஒரு அட்டகாச ஆப்! #MaestrosMusic

இளையராஜா பாடல்களை லீகல் ஆக கேட்க ஒரு அட்டகாச ஆப்! #MaestrosMusic

ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக இருந்தால் என்ன செய்வீர்கள்? சிலர் பிரியாணி சாப்பிடுவார்கள். ரகுவரன் டைப் ஆட்களுக்கு டம்ளர் தண்ணீர் போதும். சிலர் காரை எடுத்துக் கொண்டு டிரைவ் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான தமிழர்களுக்கு...ராஜாதான் மருந்து. சந்தோஷமோ, சோகமோ.. என்ன நடந்தாலும் ட்ரீட் கேட்பதுதான் நம் வழக்கம். ஆனால் ட்ரீட்டை விட அதிகமாக கேட்கப்படுவது ராஜா பாடல்கள். அந்த சொர்க்க உலகுக்கு முறையான டிக்கெட்டுடன், சொகுசான சவாரியாக அழைத்துச் செல்கிறது ஒரு மொபைல் ஆப் “Maestro’s Music”.

இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்பது சில ஆண்டுகளாக நமக்கு தெரிந்த விஷயம் தான். அது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கு மட்டும்தானா.. அல்லது தனிப்பட்ட முறையில் கேட்பதற்குமா என்ற கேள்விகளும், விவாதங்களும் அவ்வபோது ஆன்லைனில் நடப்பதுண்டு. ”லீகலாவே கேளுங்கப்பா” என இளையராஜா தரப்பில் இருந்து இந்த மொபைல் ஆப்-பை அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கான விளம்பரத்தில் இளையராஜாவே நடித்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது இந்த ஆப்:
ராஜா பாடல்கள் நன்றாக இருக்கும் என்பதெல்லாம் நாம் சொல்ல வேண்டுமா? அந்த அற்புத இசையை ஹை-குவாலிட்டியில் தருகிறது இந்த ஆப். இவ்வளவு துல்லியத்தோடு, தரத்தோடு ராஜாவின் பழைய பாடல்களை இதற்கு முன் நாம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த விஷயத்தில் முதல் சிக்ஸர் அடிக்கிறது மேஸ்ட்ரோ'ஸ் மியூசிக்.

சோகம், காதல், சந்தோஷம் என ஒவ்வொரு மூடுக்கும் ஓராயிரம் பாடல்களை போட்டு வைத்திருக்கிறார் இந்த இசை ராட்சஷன். அத்தனையையும் ரகவாரியாக பிரித்து வைத்திருப்பது சிறப்பு. என்ன வேண்டுமோ, அதை க்ளிக் செய்து இசையில் மூழ்கலாம்.
”இந்தப் பாட்டு அந்தப் பாட்டுலாம் இல்ல. எனக்கு எல்லா பாட்டுமே ஸ்பெஷல்தான்” என்கிறீர்களா? உங்களுக்காக நான் ஸ்டாப் ரேடியோவும் உண்டு.

லாக் ஸ்க்ரீனில் இருந்தே Play, Skip, pause எல்லாம் செய்ய முடிகிறது. ஒவ்வொரு முறையும் ஸ்க்ரீன் திறந்து ஆப்புக்கு செல்லவேண்டிய அவசியமில்லை.

ஜிமெயில் அல்லது ஃபேஸ்புக் மூலம் லாக் இன் செய்து நமக்காக ஸ்பெஷல் ப்ளேலிஸ்ட் தயார் செய்துகொள்ளலாம். 
wifi இருக்கும்போது ஒகே. பேருந்தில் செல்லும்போது என்ன செய்வது? நமக்கு வேண்டிய பாடல்களை டவுண்லோடு செய்துகொள்ளும் வசதியும் தருகிறது இந்த ஆப். அத்தனையும் சட்டப்படி.

ராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் மட்டும் வேண்டுமா? Artists பகுதிக்கு சென்று அவர்கள் பெயரைத் தேடி, அவர் பாடிய பாடல்களை மட்டும் கேட்கலாம். 

படத்தின் பெயரையோ, அல்லது பாடலின் பெயரையோ தேடி அதைக் கேட்கலாம்.

தனுஷ், கமல் மற்றும் இளையராஜாவின் ஃபேவரைட் பாடல்களைக்கொண்ட தனித்தனி ப்ளே லிஸ்டுகளும் இருக்கின்றன.

முதலில் சில நாட்களுக்கு இலவசம். அதன் பின் அன்லிமிட்டெட் டவுண்லோடுக்கு மாதம் 99ரூபாய் கட்டணம் கேட்கிறது ஆப். ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் .

”வாவ்” விஷயங்கள் பல இருந்தாலும் இந்த ஆப் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணமும் எழச் செய்கிறது. 

இளையராஜாவின் படங்களில் பல முக்கியமானவற்றை இந்த ஆப்-ல் காணவில்லை. அதற்கு காப்பிரைட் பிரச்னை காரணமாக இருக்கலாம் என்பது புரிகிறது. அத்தனை ஆர்வமாக, “இசையில் தொடங்குதம்மா”வை தேடினால், அதை காணவில்லை. விரைவில் எல்லா பாடல்களும் இந்த ஆப்-ல் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்வோம்.

எப்போதும் ராஜாதானே நம் டிரைவிங் தோழன்? அப்படி ப்ளூடூத் மூலம் பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்லும்போது சில சமயம் ஜிபிஎஸ்-ம் ஆன் செய்து வைத்திருப்போம். அதுதான் நமக்கு வழிகாட்டி. ”Take right" என ஜி.பி.எஸ் சொல்லும்போது பொதுவாக ம்யூஸிக் ஆப்ஸ்கள் தனது சத்தத்தை தானே குறைத்துக் கொள்ளும். ஆனால், மேஸ்ட்ரோஸ் ம்யூஸிக், அப்படி குறையாமல் சத்தமாகவே ஒலிக்கிறது. அதனால், ஜி.பி.எஸ் சொல்லும் வழியை நம்மால் சரியாகக் கேட்க முடிவதில்லை.இதே போல சமயங்களில் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும்போது, கால் வந்தாலும் பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சில படங்களின் பெயர்களும் அதற்கான படங்களும் தவறாகப் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. 

-கார்க்கிபவா


 

அடுத்த கட்டுரைக்கு