Published:Updated:

'ஓ' போட வைக்குமா ஆண்ட்ராய்டின் அடுத்த அப்டேட்?! #AndroidO

'ஓ' போட வைக்குமா ஆண்ட்ராய்டின் அடுத்த அப்டேட்?! #AndroidO
'ஓ' போட வைக்குமா ஆண்ட்ராய்டின் அடுத்த அப்டேட்?! #AndroidO

ண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்ஷனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது கூகுள். N வரிசையில் ஆண்ட்ராய்டு நௌகட் கடந்த வருடம் வெளியான நிலையில், இந்த வருடம் ஆண்ட்ராய்டு O வெளியாகவிருக்கிறது. இதன் டெவலப்பர் ப்ரிவ்யூவை தற்போது வெளியிட்டுள்ளது கூகுள். இன்னும் இதன் பெயர் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. வழக்கம்போல இந்த முறையும் பெயர் விஷயத்தை சர்ப்ரைஸாக வைத்திருக்கிறது கூகுள். ஆண்ட்ராய்டு O-வின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் இங்கே...

பேட்டரி திறன் மேம்பாடு:

போனின் பேட்டரி திறனைக் குறைவாக செலவு செய்யும்படி இதனை வடிவமைக்கிறது கூகுள். இதற்காக திரைக்குப் பின்னால் இயங்கும் ஆப்ஸ்களின் செயல்பாடுகள், லொக்கேஷன் அப்டேட்ஸ் போன்றவற்றில் இன்னும் அதிகக் கட்டுப்பாடுகளை கொண்டுவரவிருக்கிறது. இதன் மூலம் போனின் பேட்டரி திறனை நீட்டிக்கலாம்.

நோட்டிபிஃகேஷன் சானல்ஸ்:

ஆண்ட்ராய்டு நௌகட்டிலேயே நோட்டிஃபிகேஷன்களை எளிதாகக் கையாள்வதற்கு புதிய வசதிகளை கொண்டுவந்திருந்தது கூகுள். இந்த முறையும் ஆப்ஸ்களின் நோட்டிஃபிகேஷன்களை எளிதாகக் கையாள புதிய வசதிகளை சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக குவியும் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து விடுதலை பெறுவதோடு, நீங்கள் அதிகம் விரும்பும் அல்லது பயன்படுத்தும் ஆப்ஸ்களின் நோட்டிஃபிகேஷன்களையும் எளிதாகக் காணலாம்.

ஆட்டோஃபில் API:

உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, கிரெடிட் கார்டு விவரங்கள் போன்றவற்றை ஒவ்வொரு முறை பதிவு செய்யும் போதும், முழு விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும். ஆனால் குரோம் போன்ற பிரவுசர்களில் ஆட்டோசேவ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வைத்திருந்தால், பாஸ்வேர்டுகள் தானாகவே என்டர் ஆகிக்கொள்ளும். இந்த முறை பாதுகாப்பானது கிடையாது. ஆனால் இதையே ஆட்டோஃபில் API மூலம் செய்யவிருக்கிறது ஆண்ட்ராய்டு O. ஏனெனில் இதில் உங்கள் பாஸ்வேர்டு மற்றும் சுயவிவரங்கள் அனைத்தும் மிகப் பாதுகாப்பாக இருக்கும் என்கிறது கூகுள். 

பிக்சர் இன் பிக்சர் மோட்:

இதன் மூலம் நீங்கள் வேறு ஆப்ஸ் உபயோகிக்கும் போதோ அல்லது சாட்டிங் செய்யும் போதோ கூட, டிஸ்ப்ளே ஓரத்தில் வீடியோக்களை ப்ளே செய்ய முடியும். 

ஐகான் வடிவங்கள்:

ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் ஐகான்கள் ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தில் இருக்கும். அவை அனைத்திற்கும் ஏற்றபடி வட்டம், சதுரம், முக்கோணம் என தானாகவே ஐகான்களின் வடிவம் மாறிவிடும். அத்துடன் ஆப் ஐகான்களை க்ளிக் செய்யும் போது, சாதாரணமாக இல்லாமல், சின்னதாக ஒரு அனிமேஷனும் இருக்கும்.

இந்த டெவலப்பர் ப்ரிவியூவை  தற்போது Nexus 5X, Nexus 6P, Nexus Player, Pixel, Pixel XL or Pixel C வைத்திருப்பவர்கள் மட்டுமே இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். தற்போது இந்த ப்ரிவ்யூ வெர்ஷனில் நிறைய குறைகள் நிச்சயம் இருக்கும். அவை அனைத்தையும் மே மாதம் நடக்கவிருக்கும் Google I/O நிகழ்விவிற்கு முன்பே தீர்க்கும் முயற்சியில் இருக்கிறது கூகுள். 

இன்னும் இந்த வெர்ஷனுக்கு பெயரிடப்படாத நிலையில், அதுகுறித்த ஹேஷ்யங்களும் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. எப்போதும் உணவுப்பொருட்களின் பெயரையே தனது அப்டேட்டிற்கு சூட்டும் கூகுள், இம்முறை எந்த உணவுப் பொருளின் பெயரை அதற்கு சூட்டும் என ஆர்வத்துடன், தங்களது விருப்பங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் ஆண்ட்ராய்டு பயனாளர்கள். அதில் அதிக லைக்ஸ் குவித்திருப்பது ஓரியோ. உணவுப்பொருள் மட்டுமின்றி, கிட்கட் எனப்படும் வணிக ரீதியான உணவுப்பொருளின் பெயரையும் இதற்கு முன்பு கூகுள் வைத்திருந்தது. அதோடு ஒப்பிட்டு இந்த முறை ஓரியோதான் ஜெயிக்கும் என்கின்றனர் நெட்டிசன்ஸ். இதுதவிர வேறு என்னென்ன பெயரெல்லாம் வைக்கலாம் என்ற யூகங்கள் சில..

1. ஆண்ட்ராய்டு ஆரஞ்ச்

2. ஓட்மீல் குக்கீ

3. ஆரஞ்ச் ஜூஸ்

4. ஆண்ட்ராய்டு ஓரியோ

5. ஓ ஹென்றி

6. ஆர்பிட்

7. ஆண்ட்ராய்டு ஆனியன்

8. ஆலிவ்

9. ஆய்ஸ்டர்

10. ஆனியன் பவ்டர் 

என றெக்க கட்டிப் பறக்கின்றன யூகங்கள். ஒருவேளை உணவுப்பொருளுக்குப் பதிலாக வேறுவிதமாக கூகுள் யோசித்தால், ஒபாமா, ஓப்ரா, ஆர்க்கிட், ஆக்டோபஸ், OMG போன்ற சுவாரஸ்யமான ஆப்ஷன்களை கூகுள் தேர்வு செய்யலாம். கடந்த முறையே N என்ற எழுத்திற்கு இந்திய உணவான நெய்யப்பம் என பெயர் வைப்பார்கள் என செய்தியைப் பரப்பி, இறுதியில் அது நௌகட் ஆனது. இந்தமுறை நம்மூர் சார்பில் வேண்டுமானால் ஆனியன் ரோஸ்ட், ஊத்தாப்பம் ஆகியவற்றை சொல்லி வைக்கலாம்!

- ஞா.சுதாகர்.