Published:Updated:

சூரியனுக்குப் பதில் எல்.ஈ.டி... குறைந்த தண்ணீர்... அதிக மகசூல்..! விவசாயத்துக்கென ஒரு சாஃப்ட்வேர்

சூரியனுக்குப் பதில் எல்.ஈ.டி... குறைந்த தண்ணீர்... அதிக மகசூல்..! விவசாயத்துக்கென ஒரு சாஃப்ட்வேர்
சூரியனுக்குப் பதில் எல்.ஈ.டி... குறைந்த தண்ணீர்... அதிக மகசூல்..! விவசாயத்துக்கென ஒரு சாஃப்ட்வேர்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் அனைத்து துறைகளும் அடுத்தக்கட்டத்துக்கு நகர, விவசாயம் மட்டுமே அதனால் பாதிக்கப்பட்டு வந்தது. பூச்சிக்கொல்லிகளை அறிமுகம் செய்ததே அறிவியல் தான். இந்த கறையை நீக்க, புதிய தொழில்நுட்பத்துடன் களம் இறங்கியிருக்கிறது போவெரி (Bowery) என்னும் நவீன விவசாய நிறுவனம். 

அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தி அறிவியல் முறைப்படி ஒரு சக்ஸஸ் ஃபார்முலாவை கண்டறிந்திருக்கிறது. அதன்படி, விதைகளில் இருந்து, விளைபொருட்கள் டெலிவரி ஆகும் வரை ஒவ்வொரு கட்டமாக உன்னிப்பாக கவனிக்கிறது இந்த புராசஸ். சரியான சூழலில் விளையும் பொருட்களின் தரம் நிச்சயம் உயர்ந்ததாக இருக்கும். அப்படி ஒரு சூழலை ஒவ்வொரு விதைக்கும் கொடுக்கிறது போவெரி.

உலகின் 70 சதவிகித தண்ணீர் விவசாயத்துக்கு தான் பயன்படுகிறது. போவெரி விவசாய முறைப்படி மற்ற விவசாய முறைகளை விட 95%குறைவான தண்ணீரே தேவைப்படுகிறது. போலவே, வழக்கமாக தேவைப்படும் நேரத்தை விட பாதியே போதுமானதாக இருக்கிறது. அதாவது ஆறு மாதங்களில் கிடைக்கும் விளைபொருட்கள், போவெரி விவசாயத்தில் மூன்று மாதங்களிலே கிடைத்துவிடும். அதை விட ஆச்சர்யம் இதற்காக தேவைப்படும் நிலத்தின் அளவுதான்.

100 ஏக்கரில் விளையும் பொருட்களை, ஒரே ஒரு ஏக்கரிலே அறுவடை செய்கிறது போவெரி.  இயற்கை விவசாயத்தில் கூட அனுமதிக்கப்பட்ட சில இயற்கை பூச்சிக்கொல்லிகளை சிலர் பயன்படுத்துவார்கள். போவெரி விவசாயத்தில் அதுவும் கிடையாது.

போவெரி நிறுவனம் மாடர்ன் டெக்னாலஜிபடி பூச்சிக்கொல்லிகள் இல்லாமல், உள்ளரங்கிலே (indoor) விவசாயம் செய்கிறது. ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் கணினியின் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கிறது. அப்படியென்றால் சூரிய ஒளி தேவையில்லையா?

தேவைதான். ஆனால், அதற்கு மாற்றாக எல்.ஈ.டி ஒளியை முன் வைக்கிறார் போவெரியின் நிறுவனர்களில் ஒருவரான இர்விங் ஃபெயின். “கடந்த 5 வருடங்களில் எல்.ஈ.டி விளக்குகளின் வளர்ச்சியை பாருங்கள். மலிவாகிக் கொண்டிருக்கிறது.அதே சமயம் சக்தி வாய்ந்தஒளியை அது தருகிறது. எங்கள் இண்டோர் ஃபார்மிங்குக்கு நாங்கள் எல்.ஈ.டி விளக்குகளை பயன்படுத்துகிறோம். அது இரண்டு மடங்கு பலனை தருகிறது” என்கிறார் இர்விங்.

போவெரி ஓ.எஸ் என்னும் மென்பொருள் அமைப்பு, செடிகள் வளர ஏதுவான சூழலை உருவாக்குகிறது. ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் கவனித்து, அலசி, அதற்குத் தேவையான ஒளியையும், தண்ணீரையும் தருவதால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது. வளர்வதற்கு தேவையான ஒளியை எல்.ஈ.டி விளக்குகள் வழங்குகின்றன. பாதி வேலையை இந்த போவெரி ஓ.எஸ் ஆட்டோமேஷன் செய்வதால், மனித உழைப்பும் பாதிக்கும் மேல் குறைவாகவே தேவைப்படுகிறது. ஒவ்வொரு செடியின் அறுவடை நேரத்தையும் கணினி மூலம் சரியாக கணித்து அறுவடை செய்கிறார்கள். இதனால் கழிவுகள் கணிசமாக குறைகின்றன. 

“வளர்ந்து வரும் மக்கள் தொகையை கவனித்தால் 2050க்குள் உலகின் மொத்த உணவுத்தேவையை பூர்த்தி செய்ய நிலங்கள் போதாமல் போகும். மேலும் 70% மக்கள் நகரப்பகுதிக்குள் தான் வசிப்பார்கள். கிராமங்களில் இருந்து உணவுத்தாவரங்களை நகருக்கு எடுத்துச் சென்றால் இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஆகும். அவை ஃப்ரெஷாக இருக்காது. அதனால், எங்கு அதிக பயன்படுத்துகிறார்களோ, அதற்கு அருகிலே தயாரிக்கப்பட வேண்டும். அதற்கு போவெரி உதவும்” என சொல்கிறார் இர்விங். தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உற்பத்தி செய்து,  நியூ யார்க் பகுதிகளுக்கு சப்ளை செய்து வருகிறது. 

தற்போது 80க்கும் அதிகமாக கீரைகள் மற்றும் காய்கறிகளை போவெரி உற்பத்தி செய்து வருகிறது. இதன் எண்ணிக்கையை விரைவில் அதிகரிக்க இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஏற்கெனவே வெற்றிகரமான இயங்கி வரும் போவெரி, விவசாயத்தில் மாபெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இது மற்ற நாடுகளுக்கு எப்படி பரவ போகிறது என்பதும், அந்த நாடுகளில் இதன் செலவு தொகை எவ்வளவு மலிவானது என்பதும் தான் போவெரியின் நிஜ வெற்றியை தீர்மானிக்கும்.

தண்ணீரை மிச்சப்படுத்தும் என்பதே போவெரிக்கு மிகப்பெரிய சந்தையை உலகம் முழுவதும் திறக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், உலகில் இருக்கும் அத்தனை நாடுகளும் சந்திக்கப்போகும் மிகப்பெரிய பிரச்னை தண்ணீர்தான். 

-கார்க்கிபவா