Published:Updated:

ஐபோனை ஹேக் செய்ய ஒரே ஒரு பாடல் போதும்..! தப்பிக்க என்ன செய்வது?

ஐபோனை ஹேக் செய்ய ஒரே ஒரு பாடல் போதும்..! தப்பிக்க என்ன செய்வது?
ஐபோனை ஹேக் செய்ய ஒரே ஒரு பாடல் போதும்..! தப்பிக்க என்ன செய்வது?

ஆபத்தே இல்லாத மொபைல் என நினைக்கும் ஆப்பிள் யூஸர்களே... ஒன் மினிட் ப்ளீஸ்..!

இந்தக் கட்டுரையை மேற்கொண்டு படிக்கும் முன் உங்கள் ஆப்பிள் மொபைலுக்கு அப்டேட் வந்திருக்கிறதா எனப் பாருங்கள். IOS 10.3 அப்டேட் ஆகிவிட்டிருந்தால் ஒகே. இல்லையேல் அப்டேட்டை டெளன்லோடு போட்டுவிட்டு தொடர்ந்து படியுங்கள்.

ஒரே ஒரு பாட்டு மூலம் ஓஹோன்னு வாழ்க்கையை உயர்த்திய தமிழ் ஹீரோக்களைத்தானே நமக்கு தெரியும்? அந்த ஒரே ஒரு பாட்டு நம் ஐபோனை மொத்தமாக ஹேக் செய்யலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

பெயர் தெரியாத ஹேக்கர் ஒருவர் எப்படியாவது ஆப்பிளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிப் போய், ’ஸ்டைலா... கெத்தா’ ஒரு சேர் போட்டு உட்கார வேண்டும் என நினைத்திருக்கிறார். எந்த மாறுவேடம் போட்டுச் சென்றாலும் “கொண்டையை மறைடா பாடிசோடா”ன்னு வெளியேற்றியிருக்கிறது ஆப்பிள். விடாத விக்ரமாதித்தனாக தொடர்ந்த ஹேக்கருக்கு கிடைத்த துருப்புச்சீட்டு “ஆடியோ ஃபைல்”. ஆம், .M4A ஆடியோ ஃபைல்கள் மூலம் ஒற்றனை ஆப்பிளுக்குள் அனுப்பலாம் என கண்டறிந்தார் அந்த விக்ரமாதித்தன்.

அனைத்து வசதிகளையும் ஆப்பிளை பார்த்து பிரதி எடுப்பது ஆண்ட்ராய்டின் வழக்கம். அப்படி என்றால், ஆண்ட்ராய்டை ஃபாலோ செய்தால் க்ளு கிடைக்கலாம் என நினைத்திருக்கிறான் அந்த ஹேக்கர். 2015ல் இப்படித்தான் பாடல்கள் வழியே வேண்டியை code-ஐ ஆண்ட்ராய்டு மொபைலுக்குள் நுழைத்து ஹேக் செய்தார்கள். அந்த ஐடியாவை பின்பற்ற, ஆப்பிளும் பாடல் வழியே மால்வேரை மொபைலுக்குள் அனுமதித்தது. “வெற்றிவேல் வீரவேல்” என ஹேக்கரும் கொக்கரித்திருக்கிறான்.

நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரிதானே தீர்மானிக்கிறான்? எனவே ஆப்பிளும், பிரச்னை நடந்தபோது ஆண்ட்ராய்டு என்ன ஆக்‌ஷன் எடுத்ததோ, அந்தப் பாதையிலே சென்றிருக்கிறது. ஆடியோ பைல் உள்ளே வரும் வழியில் ஒரு மிகப்பெரிய இரும்பு கேட்டை உருவாக்கியிருக்கிறது. அந்த கேட்டை நம் மொபைலுக்குள் இறக்குவதற்குதான் IOS10.3 அப்டேட்.

இந்த அப்டேட்டில் இந்த இரும்பு கேட் மட்டுமல்ல. இன்னும் 82 சின்ன சின்ன ஓட்டைகளை ஆப்பிள் அடைத்திருக்கிறது. அதில் இன்னொரு ஓட்டைக்கு காரணம் jpeg இமேஜ். மால்வேர் அடங்கிய jpeg படங்களை சிலர் ரவுண்ட்ஸீல் விட்டிருக்கிறார்கள். அந்த இமேஜை நாம் ஆப்பிள் மொபைலில் திறந்தால், அந்த மால்வேர் கோட் மொபைலில் இயங்கத் தொடங்கிவிடும். அந்தப் பிரச்னைக்கும் தீர்வு கண்டறிந்து, அந்த ஓட்டையையும் கான்க்ரீட் போட்டு பூசியிருக்கிறது ஆப்பிள்.
இது மட்டுமில்லை. இன்னும் எங்கெல்லாம் எதிரிகளால் ஓட்டைப் போட முடியும் என்பதை கவனமாக ஆராய்ந்த ஆப்பிள் நிறுவனம் “encrypted Apple File System (APFS)” ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இது ஆப்பிளின் பாதுகாப்பை இன்னும் உறுதி ஆக்கியிருக்கிறது. IOS 10.3.1 அப்டேட் மூலம் இதுவும் நம் ஆப்பிள் மொபைலுக்கு வந்துவிடும்.


அப்படி என்றால், இனிமேல் ஆப்பிள் மொபைலை யாரும் ஹேக் செய்ய முடியாதா?

இந்தக் கேள்விக்கு இல்லையென உறுதியாக சொல்லிவிட முடியாது. டிஜிட்டல் உலகில் தீர்வுகளை விட பிரச்னைகளை தான் வேகமாக உருவாக்குகிறார்கள். முடிந்தவரை நிறுவனங்களும் அதற்கான தீர்வுகளை வேகமாக கொடுத்து வருகிறார்கள். ஆனால், பயனர்கள்தான் கொஞ்சம் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். தெரியாத, சந்தேகத்துக்கு இடமான ஃபைல்கள் எது இருந்தாலும் திறக்க வேண்டாம். கூகுள் செய்து அது ஆபத்தில்லாத பொருள்தானா என்பதை பார்த்து திறக்கவும். இந்த வைரஸ் வெடிகுண்டுகளை அழிக்கும் வேலாயுதம் வரும்வரை நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். 

-கார்க்கிபவா