Published:Updated:

பேடிஎம் காலத்தில் லட்டுக்குள் மோதிரமா? அரசியல்வாதிகளுக்கு சில டெக் டிப்ஸ்!

பேடிஎம் காலத்தில் லட்டுக்குள் மோதிரமா? அரசியல்வாதிகளுக்கு சில டெக் டிப்ஸ்!
பேடிஎம் காலத்தில் லட்டுக்குள் மோதிரமா? அரசியல்வாதிகளுக்கு சில டெக் டிப்ஸ்!

ஆர்.கே. நகரில் நடக்கவிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை அறிவித்திருக்கிறது. பிரதமர் மோடி கேஷ்லெஸ் டிரான்ஸக்‌ஷனுக்காக இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இங்கே இன்னும் லட்டுக்குள் மோதிரம், நள்ளிரவில் பணம் கொடுப்பது என எம்.கே.டி காலத்திலே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டாமா நமது அரசியல்வாதிகள்? ஃபேஸ்புக், பேடிஎம் என ஏகப்பட்ட டெக்னாலஜி விஷயங்கள் இருக்கிறதே... அவர்களுக்காக சில டெக் டிப்ஸ்...

1) பேடிஎம் கரோ பாய்ஸ். 100 கோடி, 50 கோடிகளை எல்லாம் அசால்ட்டாக டீல் செய்யும் அமைச்சர்களே... உடனே பேடிஎம் கூட பேசுங்க. லொகேஷன் அடிப்படையில் ஆர்.கே நகர் எல்லைக்குள் இருக்கும் மொபைலில் பேடிஎம் மூலம் ஆஃபர் கொடுங்க. இரட்டை மின் விளக்கோ... தொப்பியோ... உதயசூரியனோ... உங்கள் சின்னத்துக்கு ஆதரவாக மெஸெஜ் அனுப்பினாலோ, ட்வீட் போட்டாலோ... அதை கண்டறிந்து அவர்கள் பேடிஎம் வாலட்டில் பணம் ஏற்றுங்கள். இந்த ஆஃபர் ஆர்.கே நகர் எல்லைக்குள் மட்டுமே என கண்டிஷனை போட்டுக்கொள்ளுங்கள். “பாகுபலியில் கட்டப்பாவாக நடித்தவர் சத்யராஜா, சகாயாராஜா” என கேள்வி கேட்டு, ரெடியோவில் டிக்கெட் தருவதில்லையா? அந்த லாஜிக் தான் பாஸ்.

2) பேடிஎம் காரன் மோடியின் ஆள். எனவே அது வேலைக்காவாது என்கிறீர்களா? உங்களுக்காகவே இருக்கிறது ஓலாவும் ஊபரும். ஆர்.கே நகர் முழுவதும் கால் டாக்ஸிகளை இறக்குங்கள். யார், எங்கு ஏறினாலும் கட்சி ஆபீஸ்க்கு தான் வண்டி போகும். அங்கே வந்ததும் அவர்கள் ஓலா அக்கவுண்ட்டில் 1000ரூபாய் இனாமாக கொடுத்துவிடலாம். நகைக்கடைக்கு சென்றால், ஓலா சார்ஜில் டிஸ்கவுண்ட் தருகிறார்களே.. அந்த லாஜிக்தான். அனைத்து டாக்ஸியிலும் உங்கள் சின்னத்தையும் ஒட்டிவிடலாம். பிற்காலத்தில் ரெய்டு வந்தாலும் பிரிண்ட் அவுட் எல்லாம் மாட்டாது, மொபைல்தான். அதிலும் பாஸ்வேர்டு மாற்றி போட்டால், எல்லா டேட்டாவும் அழிந்துவிடும். இந்த ரகசியத்தை மென்பொருள் அமைப்பு கட்டுமான நிபுணரான சிவாஜி, ஏற்கெனவே நமக்கு செய்து காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3) இலவசமாக கொடுப்பதென ஆகிவிட்டால், நாம் பேச வேண்டிய அடுத்த நிறுவனம் ரிலையன்ஸ்.  ஜியோவுடன் அரசியல் கட்சிகள் கைகோத்து கொள்ளலாம்.வெறும் ஆதார் கார்டு நம்பரை வைத்தே 6 மாதம் இலவசமாக கால்கள், நெட் கொடுத்தது ஜியோ. வோட்டெல்லாம் அவர்களுக்கு ரொம்ப சாதாரணம். கொஞ்சம் யோசித்தால் அவர்கள் கைரேகையை வாங்கும் போதே அதை மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்துடன் இணைக்கலாம். ஜியோவிலும், டிஜிட்டல் இந்தியாவிலும் இவை எல்லாமே சாத்தியம் பாஸ்.

4) இதெல்லாம் வேலைக்காவாது வால் போஸ்டர், பிட் நோட்டீஸ் ரேஞ்சுக்கு ஏதாவது ஐடியா கேட்கறீர்களா? இருக்கவே இருக்கிறது ஒரு க்யூ.ஆர். கோடு. எல்லா போஸ்டர்களிலும், நோட்டிஸ்களிலும் ஒரு க்யூ.ஆர். கோடை பிரிண்ட் செய்யுங்கள். அதை ஸ்கேன் செய்பவர்களுக்கு அதிர்ஷட குலுக்கல் மூலம் பரிசு கொடுங்கள். என்ன... அந்த அதிர்ஷ்டத்தை ஸ்கேன் செய்யும் எல்லோருக்கும் கொடுத்துவிடுங்கள்.

இன்னும் ஃபேஸ்புக், இன்ஸ்டா என ஏகப்பட்ட ஐடியாக்கள் உண்டு. உடனடியாக இதை ஷேரோ, லைக்கோ செய்தால் அதையும் சொல்லிவிடுகிறேன்.

-கார்க்கிபவா