Published:Updated:

பானையில் ஒரு ஃப்ரிட்ஜ்... மின்சாரம் தேவையில்லை என்கிறது ‘மிட்டிகூல்'!

பானையில் ஒரு ஃப்ரிட்ஜ்... மின்சாரம் தேவையில்லை என்கிறது ‘மிட்டிகூல்'!
பானையில் ஒரு ஃப்ரிட்ஜ்... மின்சாரம் தேவையில்லை என்கிறது ‘மிட்டிகூல்'!

உணவு…. இன்று உணவுக்கு தான் எவ்வளவு கட்டுப்பாடுகள் இங்கே? இதைச் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என ஆங்காங்கே பலப்பல பிரசாரங்கள். இயற்கை உணவு முறைக்கு எல்லோரும் நகர முற்படும் இந்த வேளையில், சுற்றுச்சூழலை காக்கும் விதத்தில் தீமை விளைவிக்காத உற்பத்தி பொருட்களை தயாரிக்க ஒரு நிறுவனம் தொடங்கி உள்ளது! ஆம். அலுமினியம் போன்ற கெமிக்கல் கோட்டிங்கில் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக்கும் போது பொருட்களில் உள்ள சத்துகள் குறையும் என்பதால், எவ்வித கோட்டிங்கும் இல்லாமல், முழுக்க முழுக்க இயற்கையால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

அவை எல்லாம் மிட்டிக்கூல் என்ற நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள். மிட்டிக்கூல் என்ற நிறுவனம், பல்வேறு விதமான சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. உதாரணமாக, ஃபேன், தவா, குக்கர், ஃப்ரிட்ஜ் போன்றவை. இதில் என்ன ஆச்சர்யம், இந்தியாவில் உற்பத்திக்கா பஞ்சம் என்கிறீர்களா? சரிதான், ஆனால், இந்த உற்பத்திகள் யாவும் சற்றே வித்தியாசமானவை. மின்சாரம் என்ற வார்த்தைக்கே இடமளிக்காத ஒன்று தான் இந்நிறுவனம்! ஆம், மிட்டிக்கூல் நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் மின்சாரம் இல்லாமல் இயங்கக்கூடியவை.

களிமண்னும் நோ-கரண்ட்டும்:

மன்சுக் என்பவர்தான் மிட்டிக்கூலின் தலைவர். மார்பி என்ற ஊரின் அருகே இருக்கக்கூடிய நிச்சிமந்தல் என்ற சிறு கிராமத்தை சேர்ந்த இவர், சிறு வயது முதலே மின்சாரத்தை சார்ந்து இருக்கும் பொருட்களை வேறுபடுத்துவதில் அதிக முனைப்பு காட்டியுள்ளார். க்ளே(Clay) எனப்படும் களிமண்ணின் மூலம் பொருட்களை உருவாக்க வேண்டும் என்றும் முனைந்துள்ளார். (மிட்டி என்றால் ஹிந்தியில் களிமண் என்று அர்த்தம்).

எங்கிருந்தது வந்தது இந்த ஐடியா?

2001 ஜனவரி…..குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த சமயம் அது. அந்த சமயத்தில் மிட்டிக்கூல் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பெரிய நஷ்டம். சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு, மீதமிருந்த பொருட்களை பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இனாமாக கொடுத்துக் கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் வந்த ஒரு நாளிதழில், ஒரு புகைப்படம் ஒன்று வெளியானது. அதன் அடியில், ‘ஏழை ஒருவரின் உடைந்த குளிர்சாதனப்பெட்டி’ என்று எழுதியிருந்தது. அதனை கண்டவர், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ஒரு குளிர்சாதனப்பெட்டியை உருவாக்க வேண்டும் என்று நினைத்து, அதனை நோக்கிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துகிறார். 2002ம் ஆண்டு, GIAN (Grassroots Innovation Augmentation Network) நிறுவனத்தோடு சேர்ந்து அதற்கான களப்பணியில் நேரடியாக மிட்டிக்கூல் நிறுவனம் ஈடுபட்டது.

என்னவெல்லாம் இருக்கிறது இக்குளிர்சாதனப் பெட்டியில்?

பொதுவாகவே ஒரு பொருளை குளிர்சாதன பெட்டியின் முக்கிய பங்கு, பொருட்களை குளிரான நிலையில் வைத்து, அது கெடாமல் பாதுகாப்பது தான். அவ்வகையில், இந்த மிஷினில், மண்பானைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், மின்சார இணைப்பு தேவைப்படுவதில்லை. உள்ளே வைக்கப்படும் காய், கனி வகைகள் யாவும் கெடாமல் அப்படியே இருக்கின்றன. இந்தக் குளிர்சாதன பெட்டியை பரிசோதித்து பார்த்தபோது, இதில் வைக்கப்படும் பொருட்கள் 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றதாம். ரூம் டெம்பரேச்சர் எனப்படும் அறை வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன பெட்டியில் தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய் முதலிய பழவகைகள் யாவும், 5,6 நாட்கள் வரை கெடாமல் இருக்கிறதாம்.

ஆடம்பர பொருட்கள் எளியவர்களுக்கான வடிவில்…..

அஹமதாபாத்தின் நேஷனல் இன்சிட்டியூட் ஆஃப் டிசைனின் (NID) உதவியோடு GIAN நிறுவனம் குளிர்சாதனப்பெட்டியை தயார் செய்து முடித்து, அதனை யு.கே.வில் மே மாதம் 2009ம் ஆண்டு நடைபெற்ற கான்ஃபரன்சில் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. NIF இந்தியாவின் சார்பில், ஃப்ளாஸ்க் ஒன்றை உருவாக்கும் ஐடியாவையும் தந்துள்ளது. அதன்படி உற்பத்தி செய்யப்பட்டது மிட்டிகூலின் ஃப்ளாஸ்க். இதில், 1 முதல் 2 லிட்டர் வரை பொருட்களை சேமிக்கலாம். தற்போது, ஃபுட் ப்ளெட், குக்கர், தவா, ஃப்ளாஸ்க் என பல களிமண் உபயோக பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார். மேலும் அதனைப் பிரசாரம் செய்வதற்காக நாடு முழுவதும் உலா வருகிறார். எவ்வித பராமரிப்பு செலவுகளும் தேவைப்படாத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இந்த வகை பொருட்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகிய வண்ணம் உள்ளது. ஆடம்பர பொருட்களாக கருதப்படும், அதிக மின்சாரம் தேவைப்படும் பொருட்கள் யாவையையும், அதனை வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, அவர்களுக்கு சவுகரியம் தரும் விதத்தில் உற்பத்தி செய்வது இவர்களது முக்கிய நோக்கமாக தற்போதைக்கு இருந்து வருகிறது.

-ஜெ.நிவேதா,

மாணவப் பத்திரிகையாளர்.