Published:Updated:

கடலில்‌ மூழ்கும் வியட்நாம்... காக்கும் ஒரே வழி இதுதான்!

கடலில்‌ மூழ்கும் வியட்நாம்... காக்கும் ஒரே வழி இதுதான்!
கடலில்‌ மூழ்கும் வியட்நாம்... காக்கும் ஒரே வழி இதுதான்!

வியட்நாம் ரொம்ப அழகான நாடு. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்ன்னு சொல்ற விஷயம் இன்னிக்கு வியட்நாமுக்கு அப்படியே பொருந்திப் போகிறது. கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வியட்நாம் நாட்டின் பல பகுதிகள் விரைவில் கடலுக்குள் மூழ்கிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. 

வியட்நாமின் கடற்கரை நகரம் "ஹொய் ஆன்". 1700களில் சர்வதேச துறைமுகமாக இருந்த ஓர் நகரம். வியட்நாமில் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறுகளின் எச்சங்கள், இந்தப் பகுதிகளில் தான் மிச்சங்களாக இருக்கின்றன. ஹொய் ஆன் நகரம் தென் சீனக் கடலும், து பான் ஆறும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. சில வருடங்களாகவே மழைக்காலங்களில் இந்தப் பகுதிகளில் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான வெள்ளம் வந்துவிடுவதால், மக்கள் இடம் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். 2100ம் ஆண்டிற்குள் இந்தப் பகுதியின் முக்கால் பங்கு முற்றிலுமாக கடலுக்குள் மூழ்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், வியட்நாமில் நெற்பயிர் அறுவடை அதிகமாக நடக்கும் "மெகாங் டெல்டா " பகுதியும் அடுத்த நூறாண்டுகளுக்குள்ளாக கடலில் மூழ்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மோசமான வானிலை மாற்றங்கள், குறைந்த அளவிலான வளங்கள், நடுத்தரமான பொருளாதார பின்புலம் என இருக்கும் வியட்நாம், இந்த அபாயத்தைக் கையாள பல வகைகளில், பல யோசனைகளை செயல்படுத்த முயற்சித்தாலும், எதுவும் சரியான தீர்வைக் கொடுக்கும் வகையில் இல்லை. இறுதியாக, இந்தப் பிரச்னையைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி சதுப்பு நிலக் காடுகளை உருவாக்குவது தான் என்ற முடிவுக்கு வந்தது வியட்நாம் அரசு. 

உலகில் இருக்கும் பல வகைக் காடுகளில் "சதுப்பு நிலக் காடுகள்" ஒரு சூப்பர் ஹீரோ. நீர்ப்பகுதியை ஒட்டி இருக்கும், சொதசொதப்பான நிலப்பரப்பில் உருவாவது தான் சதுப்பு நிலக்காடுகள். சற்றே மெலிதான தண்டு, பின்னிப் பிணைந்து வளரும் கிளைகள், பரவலாய்ப் படரும் வேர்கள், நெருங்கி வளரும் மரங்கள், என அடர்த்தியாக இருக்கும் இந்த சதுப்புநிலக் காடுகள், கடல் சீற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடிய வலிமைப் பெற்றது.

புயல்களைத் தடுப்பது, கடற்கரையை ஒட்டியிருக்கும் விவசாய நிலங்களில் உப்புத்தன்மை கலக்காமல் பாதுகாப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக வளிமண்டலத்திலிருக்கும் அதீத கார்பனை இழுத்து, காற்றை சுத்தப்படுத்துவது போன்ற விஷயங்களை வெகு சிறப்பாக செய்யக்கூடியவை இந்த சதுப்பு நிலக்காடுகள். 

இப்படி  இயற்கை சுழற்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சதுப்புநிலக்காடுகள் வியட்நாமில் 1940ல் இருந்ததுடன் ஒப்பிட்டால் இன்று, பாதியளவிற்கே இருக்கிறது. வியட்நாமின் கடல் மட்டம் உயர்ந்து, நகரங்கள் மூழ்குவதற்கு முக்கிய காரணமாக இந்த சதுப்பு நிலக்காடுகள் அழிப்பு இருக்கிறது. எனவே, தற்போது சதுப்பு நிலக்காடுகள் உருவாக்குவதை முக்கியப் பணியாகக் கருதி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

இறால் பண்ணைகள் அமைக்கப்படுவது, இந்தக் காடுகளின் அழிவிற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. உலகிலேயே அதிகப்படியான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் வியட்நாம் முன்னணியில் இருக்கிறது. இந்த முயற்சிகளினால், ஏற்றுமதி வர்த்தகங்கள் சற்றே பாதிக்கப்பட்டாலும் கூட, நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அது சீரான வளர்ச்சியை அடையும் என்றே நம்பப்படுகிறது. 

சதுப்புநிலக்காடுகள் கடலில் உப்புத்தன்மையைக் குறைத்து, பல்லுயிர்ச்சூழலுக்கான வசதியை மேம்படுத்துகிறது. இதன் மூலம், நீர் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவு பெருகும். மக்களை ஒதுக்கிவிட்டு இங்கு எந்தத் திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்திட முடியாது. கால் வயிறு கஞ்சிக்கே போராடிக் கொண்டிருப்பவனிடம் போய், இயற்கையைக் காக்க வா என்றால் நிச்சயம் வர மாட்டான். அவனுக்கான பொருளாதார சிக்கல்களை களைய கை கொடுக்க வேண்டியதும் முக்கியமாக இருக்கிறது. அந்த முயற்சிகளையும் வியட்நாம் அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. 

அந்தப் பகுதியில் இருக்கும் மீனவர்களைக் கொண்டு அவர்கள் படகுகளிலேயே சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வசதி வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கும், வீட்டின் சிறு பகுதியை தங்கும் விடுதியாகவோ, உணவகமாகவோ நடத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் அந்தப் பகுதி மக்களுக்கு பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களின் இயற்கை வாழ்வு மட்டுமல்ல, பொருளாதார வாழ்வும் இந்தக் காடுகளின் நலத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து அந்த மக்கள் அதீத அக்கறையோடு தங்கள் காடுகளைப் பாதுகாக்க முனைகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை நாடு முழுக்க முன்னெடுத்தால், சதுப்பு நிலக்காடுகள் பாதுகாக்கப்படும், இயற்கைக்கு ஏற்படுத்தப்பட்ட காயத்திற்கு சிறு ஆறுதலை அளிக்க முடியும்.

 வியட்நாம் சின்ன நாடு தான். ஆனால், அது கற்றிருக்கும், கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் மிகப்பெரியது. அது... மண்ணின் மக்களை ஒதுக்கிவிட்டு இங்கு எந்த மாற்றத்தையும், ஏற்றத்தையும் கண்டிர முடியாது என்பது தான்... 

- இரா. கலைச் செல்வன்.