Published:Updated:

வீட்டில் இருந்தபடியே ஹாரிபாட்டர் உலகில் பறக்கலாம் - #F8 மாநாட்டில் மார்க் காட்டிய மேஜிக்!

வீட்டில் இருந்தபடியே ஹாரிபாட்டர் உலகில் பறக்கலாம் - #F8 மாநாட்டில் மார்க் காட்டிய மேஜிக்!
வீட்டில் இருந்தபடியே ஹாரிபாட்டர் உலகில் பறக்கலாம் - #F8 மாநாட்டில் மார்க் காட்டிய மேஜிக்!

வருடா வருடம் ஃபேஸ்புக்கின் #F8 மாநாட்டை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் நடத்துவது வழக்கம். இந்த முறை நகைச்சுவையாகவும், எமோஷனலாகவும்  உணர்ச்சிக்குவியலாய் 23 நிமிடங்கள் கெத்தான உரையை நிகழ்த்தினார் மார்க் சக்கர்பெர்க். 

தனது பேச்சில் இந்த நிகழ்வையும், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தையும் இணைத்து பேசி ஆரம்பித்தது கலகலப்பான துவக்கமாக அமைந்தது. '' வணக்கம் அனைவரையும் F8 நிகழ்வுக்கு வரவேற்கிறேன். இது இந்த வாரத்தில் நடக்கும் இரண்டாவது மிகப்பெரிய F8  நிகழ்வு. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 வெளியாகியுள்ளது. நாமும் F8 நிகழ்வில் இணைந்திருக்கிறோம். இதுவே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 வெளியாகியிருந்தால் என்ன கூறியிருப்பேன் என்று தெரியவில்லை. இங்கு நம்மோடு படத்தில் உள்ள ராக் இல்லை, ஆனால் இந்த டெக் நிகழ்வை நடத்த டேவிட் தி ராக் மார்கஸ் இருக்கிறார்.  ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸின் டேக்லைன் "Never Give Up on Family" 'ஃபேஸ்புக்கின் டேக்லைன் "Never Give Up on the Family of apps" என்ற மாஸ் துவக்கம் அளித்த மார்க் ஃபேஸ்புக் பற்றி விரிவாக பேசத்துவங்கினார். 

இந்த மாநாட்டை நீங்கள் எல்லாம் டெக் நோட் என்று கூறுகிறீர்கள். இதனை நாங்கள் எதிர்காலத்துக்கான தொழில்நுட்பத்துக்கான முதல் படியாக பார்க்கிறோம். நாங்கள் எங்கள் ஆப்ஸில் கேமராக்களை அதிக கவனத்துடன் கையாண்டுள்ளோம். ஏனேன்றால் இன்று ஒரு விஷயத்தை எழுத்துக்கள் மூலம் தெரிவிப்பதைவிட புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தெரிவிப்பது அதிகரித்துள்ளது. அதனால் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். 

இன்று நாம் Act Two பற்றி பேச இருக்கிறோம். இது தான் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்த சரியான நேரம். முதலில் ஆக்மெண்டட் ரியாலிட்டி பற்றி பார்ப்போம். அதற்கு முன்னால் சென்ற மாதம் நான் சமூகங்களை உருவாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் சில பகுதிகளுக்கு சென்ற போது அவர்கள் கூறிய விஷயங்கள் அதிகம். அது 6000 வார்த்தைகள் கொண்ட மிகப்பெரிய புத்தகமாக உள்ளது. இதிலுள்ள அனைத்து வார்த்தைகளையும் படிப்பது அவ்வளவு கடினம். நான்  நகைச்சுவைக்காக இப்படி சொன்னாலும், இது கொஞ்சம் அக்கறையோடு அணுக வேண்டிய விஷயம்.  இது தான் சமூகங்களை உருவாக்க வேண்டிய சரியான தருணம். 

ஒரு சமூகமாக நாம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளோம். பொருளாதார பிரச்னைகளை தாண்டி சமூகப்பிரச்னைகள் என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. நிறுவனங்கள், தேவாலயங்கள், விளையாட்டு அணிகள் என நமது சமூகத்தில் பல்வேறு காலங்களில் சமூகங்கள் உருவாக காரணமாயிருந்துள்ளன. ஆனால் கடந்த 10 வருடங்கள் இது போன்ற சமூகங்கள் உருவாகுவது குறைந்துள்ளது. மக்கள் பிரிந்து இருக்கிறார்கள். 

ஃபேஸ்புக் ஆரம்பிக்கப்பட்ட முதல் 10 வருடங்களில் நண்பர்களையும், உறவினர்களையும் இணைக்கும் பணியை முதன்மையாக கொண்டிருந்தது. ஆனால் தற்போது சமூகங்களை உருவாக்கும் பொறுப்பில் உள்ளது. கருத்துக்களால் வேறுபட்டுள்ள மக்கள், தங்கள் கருத்தை ஏற்கும் மக்களோடு இணைப்பில் இருக்க ஃபேஸ்புக் போராடி வருகிறது. க்ளீவ்லாண்டில் நடைபெற்ற சம்பவம் ஒரு சோகமான சம்பவம், அது இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

டெவலப்பர்கள் கருத்தரங்கில் நீண்டகாலத்துக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். அதன் படி 10 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி ஃபேஸ்புக் இருக்கும் என்பது குறித்த பார்வையை உருவாக்கியுள்ளோம். இதன் அடிப்படையாக ஆக்மெண்டட் ரியாலிட்டியை கையில் எடுத்துள்ளோம். இதன் மூலம் மொத்த உலகில் நடக்கும் அனுபவத்தை டிஜிட்டலாக கொண்டு வர முடியும். இது பல பகுதிகளை டிஜிட்டலாக இணைப்பதற்கான முயற்சி.

எகிப்தின் நகரங்களுக்கு இருந்த இடத்திலிருந்தே சுற்றிவர முடியும், உங்கள் மகள் ஹாரிப்பாட்டர் ரசிகை என்றால் அவளது பிறந்த நாள் அன்று உங்கள் வீட்டை ஹார்வர்டாக மாற்ற முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இதனை தான் ஆக்மெண்டட் ரியாலிட்டி மூலம் ஃபேஸ்புக் நிகழ்த்தும் முனைப்பில் உள்ளது.

இந்த விஷயத்தை செய்ய மூன்று முக்கியமான விஷயங்கள் தேவை. முதலில் தகவல்கள். அதாவது ஒரு புகைப்படம். அதில் நாம் சொல்ல நினைக்கும் விஷயங்களை செய்ய எழுதி தற்போது அனுப்ப முடிகிறது. அடுத்தது டிஜிட்டல் பொருட்கள். ஒரு இடத்தில் டிஜிட்டலாக ஒரு பொருளை நிறுவுவது. இதன் மூலம்தான் போக்கிமான் கோ பிக்காசுக்களை தெருக்களில் ஓடவிட முடிந்தது. நாம் புகைப்படம் எடுக்கும் நேரங்களில்  அதன் மேல் அனிமேஷன்களை செய்ய முடிகிறது. இப்படி எல்லாம் செய்ய ஆக்மெண்டட் ரியாலிட்டியால் முடியும்.

உலகின் முதல் ஆக்மெண்டட் ரியாலிட்டி கேமராவை நாம் தான் உருவாக்கியிருக்கிறோம் என்பதை இங்கு பெருமையாக தெரிவித்து கொள்ளலாம். இதில் 1000க்கும் மேற்பட்ட அனிமேஷன்களை சேர்த்துக் கொள்ள முடியும். வீட்டில் ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு..அதனை 3டியாக, வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் லைட்டிங்கை மாற்றி அமைத்து என பல விதமான விஷயங்களை சர்வசாதாரணமாக செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அடுத்த தலைமுறையை டிஜிட்டல் உலகில் திளைக்க வைப்போம் என்றார் மார்க்.  ஒற்றை குடையில் கீழ் உலகை ஆள நினைக்கும் மார்க்கின் அடுத்த மிகப்பெரிய ஆயுதமாக மாறி இருக்கிறது ஆக்மெண்டட் ரியாலிட்டி...

-ச.ஸ்ரீராம்