Published:Updated:

'சிட்டி' ரஜினி துப்பாக்கியை பிடுங்கி அக்‌ஷய்குமார் சுட முடியாது..! ஏன்? #SmartGun

'சிட்டி' ரஜினி துப்பாக்கியை பிடுங்கி அக்‌ஷய்குமார் சுட முடியாது..! ஏன்? #SmartGun
'சிட்டி' ரஜினி துப்பாக்கியை பிடுங்கி அக்‌ஷய்குமார் சுட முடியாது..! ஏன்? #SmartGun

சீனர்கள்தான் முதலில் துப்பாக்கியை கண்டுபிடித்தனர் என்கிறது வரலாறு.

மூங்கில் குழலின் ஒரு புறத்தில் வெடிமருந்தை நிரப்பி மறுபுறம் தோட்டாவை வைத்துவிட்டு பற்ற வைத்தால் ஆதிகாலத்து துப்பாக்கி தயார். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய மூங்கில் குழல் தேவைப்பட்டதால் குழல் இரும்பாக மாறியது. பின்பு கைகளை பாதித்ததால் இரும்பு குழல்களில் மரக்கட்டைகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன. பின்பு முழுமையாக உலோகத்தில் உருவாக்கப்பட்டன. இது போல காலத்திற்கு தகுந்தவாறு துப்பாக்கிகளின் வடிவம் மாறினாலும் அது செயல்படும் தொழில்நுட்பம் மட்டும்  இன்றுவரை மாறவில்லை. துப்பாக்கியை இயக்க விசையை அழுத்தினால் போதுமானது. அதன் எதிரில் இருப்பது நல்லவரா கெட்டவரா,மனிதனா விலங்கா எதுவும் கிடையாது அழுத்தினால் சுடும் என்பதே அதன் பலமும் பலவீனமும்.

நல்லவர்கள் கையில் இருக்கும் வரை பிரச்னை இல்லை தீயவர்களின் கையில் கிடைத்தால் கொஞ்சம் சிக்கல்தான். எடுத்துக்காட்டாக
நமது பாதுகாப்புக்காக ஆயுதங்கள் தயாரிப்பது அவசியம் என்றால் அதை பாதுகாத்து வைப்பது அதைவிட அவசியம். எதிரிகளோட முதல் இலக்கு ஆயுதக்கிடங்குகள் தான். ஒன்று ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் அல்லது அங்கே இருப்பதை அள்ளிச்செல்ல வேண்டும். எடுத்துச்சென்று நமது ஆயுதங்களை நமக்கு எதிராகவே பயன்படுத்துவதுவார்கள். ஆயுதங்கிடங்கில் அதிகமாக இருக்கும் ஆயுதம் துப்பாக்கிகளாகத்தான் இருக்கும்.

துப்பாக்கிகள் நாம் நினைப்பதை விடவும் ஆபத்தானவை. அமெரிக்காவில் ஒருவர் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவரது நண்பர் அவரை விளையாட்டாக பயமுறுத்த நினைத்து  துப்பாக்கியை அழுத்த, அது வெடித்து நிஜமாகவே அவரது உயிரை பறித்துவிட்டது. போலீஸ் விசாரணையில் அவரது நண்பர் தெரிவித்த பதில் ”நான் விளையாட்டாத்தான் சுட்டேன்”. துப்பாக்கியின் மிகப்பெரிய குறை யார் சுட்டாலும் சுடும் என்பதே. நீங்கள் உங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருந்தாலும் கூட ஒருவேளை எதிரியை தாக்க நினைக்கும் போது எதிரியின் கைகளுக்கு சென்றுவிட்டால் அவ்வளவுதான்..

ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு குறையும் என்று தாராளமாக நம்பலாம் அமெரிக்காவில் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்யும் Michael Timlin என்பவர் கண்டுபிடித்திருக்கும் தொழில்நுட்பம் அப்படி. இதுவும் துப்பாக்கிதான் ஆனால் ஸ்மார்ட் துப்பாக்கி.

இந்த ஸ்மார்ட் துப்பாக்கி ஒருவரின் கைரேகை மூலமாக மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் அந்த துப்பாக்கிக்கு யார் சொந்தக்காரரோ அவர் மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்த முடியும்.

மேலே குறிப்பிட்டது போன்ற ஒரு சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டதால் இது போன்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் எண்ணம் உருவானதாக கூறுகிறார் Michael Timlin.

இந்த ஸ்மார்ட் துப்பாக்கியில் இருக்கும் சென்சார்கள் துப்பாக்கியை உபயோகிக்கும் போது பயன்படுத்துபவரின் கைரேகைகளை ஆராயும். உரிமையாளரை தவிர வேறு யாராவது உபயோகிக்க நினைத்தால் விசையின் செயல்பாட்டை நிறுத்தி விடும். இந்த தொழில்நுட்பம் இயங்குவதற்கு மின்சாரம் தேவையிருக்காது என்பதும் இதை எளிதில் ஹேக் செய்ய முடியாது என்பதும் இதன் சிறப்பம்சங்கள்.

பொதுவாகவே அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகம். அங்கே பணம் இருந்தால் போதும் துப்பாக்கி வாங்குவது எளிது என்பதால் அவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் உதவும்.

கைகளில் இருக்கும் மோதிரம் மூலமாகவும், உடலில் பொருத்தப்பட்ட சிப்கள் மூலமாகவும், வெளிவரும் அலைவரிசையின் மூலமாகவும் துப்பாக்கிக்கு உரியவரை அடையாளம் காணும் தொழில்நுட்பங்கள் முன்னரே இருந்தாலும் அதை விட சிறப்பாக செயல்படுகிறது கைரேகை மூலமாக இயங்கும் ஸ்மார்ட் துப்பாக்கி தொழில்நுட்பம்..

அப்புறம் இந்த தொழில்நுட்பத்தால இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய பலன் என்னனு கேட்டீங்கன்னா இனிமேல்
படத்துல ஹீரோ வில்லனோட துப்பாக்கிய பிடுங்கி சுடவும் முடியாது. அப்புறமா துப்பாக்கியால சுட்டுட்டு கைரேகைய அழிப்பாங்களே... அந்த சீனும் இருக்காது.

சரி, ஃபின்கர் ப்ரின்ட்டுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க யோசிக்கலாம். ஆமா, ரோபோட்டுக்கு ஏது ஃபிங்கர் ப்ரின்ட்னு யோசிக்கறீங்களா?. இந்த எந்திரன் 2.0 படத்தோட க்ளூவா வச்சுக்கோங்களேன். 

-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்