Published:Updated:

”இந்த ஆப் உருவாகக் காரணமே நம்மாழ்வார்தான்!” - கணினித் தமிழ் விருது பெற்ற செல்வமுரளி

”இந்த ஆப் உருவாகக் காரணமே நம்மாழ்வார்தான்!” - கணினித் தமிழ் விருது பெற்ற செல்வமுரளி

”இந்த ஆப் உருவாகக் காரணமே நம்மாழ்வார்தான்!” - கணினித் தமிழ் விருது பெற்ற செல்வமுரளி

”இந்த ஆப் உருவாகக் காரணமே நம்மாழ்வார்தான்!” - கணினித் தமிழ் விருது பெற்ற செல்வமுரளி

”இந்த ஆப் உருவாகக் காரணமே நம்மாழ்வார்தான்!” - கணினித் தமிழ் விருது பெற்ற செல்வமுரளி

Published:Updated:
”இந்த ஆப் உருவாகக் காரணமே நம்மாழ்வார்தான்!” - கணினித் தமிழ் விருது பெற்ற செல்வமுரளி

கணினி வழியில் தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையானது “முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது” என்ற பெயரில் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள குறுஞ்செயலிக்காக 2015ம் ஆண்டுக்கான  முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதானது கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்த கணிணிப் பொறியாளர் செல்வ முரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இது பற்றி பேசினேன்.

பல ஆண்டுகால உழைப்பின் காரணமாக இந்த விருதை பெற்றுள்ளீர்கள், எப்படி உணருகிறீர்கள்?

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ளது. அப்பகுதியிலுள்ள மக்கள் எங்கள் நிறுவனத்தை ஒரு சாதாரண கணினி கடையாகத்தான் பார்த்தார்கள். இது சாப்ட்வேர் நிறுவனம் என்று கூறினால் கூட யாரும் நம்பவில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த விருது மக்களிடையே அங்கீகாரத்தையும் மற்றும் எங்களை மேலும் சிறந்த வகையில் பணி செய்ய உற்சாகப்படுத்துகிறது.

நீங்கள் விருது பெறுவதற்கு காரணமான  குறுஞ்செயலியின் பயன்பாடு பற்றி கூறுங்கள்?

 தற்போது விவசாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு நமது பாரம்பர்ய வழிமுறைகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை,  தொழில்நுட்பத்தை கொண்டு விவசாயிகளிடமும், தொழில் முனைவோரிடம் கொண்டு சேர்ப்பதே இந்த குறுஞ்செயலியின் நோக்கமாகும். மேலும், விவசாயம் சார்ந்த பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட தொழில் வாய்ப்புகளையும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படும் விவசாயம் சார்ந்த நடப்பு செய்திகளையும் “Vivasayam in Tamil - விவசாயம்” என்னும் ஆண்ட்ராய்டு செயலியின் மூலம் பெறலாம்.

இந்த குறுஞ்செயலியை உருவாக்குவதற்கான காரணம் மற்றும் உருவாக்கும்போது சந்தித்த சவால்கள் என்னென்ன?

 முற்றிலும் விவசாயம் குறித்த இந்த செயலியை உருவாக்குவதற்கான முக்கிய காரணமே நம்மாழ்வார் ஐயாதான். அவர் அளித்த தன்னம்பிக்கைனாலேயே இதை எங்களால் செயற்படுத்த முடிந்தது. விவசாய தொழில்நுட்பங்கள் சார்ந்த பல்வேறு தகவல்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே இருப்பதால் மொழிப்பிரச்சனையின் காரணமாக நமது விவசாயிகளால் அவற்றை அறிய முடிவதில்லை. எனவே, தமிழ் மொழியில் விவசாயிகள் எளிதான முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த செயலியானது வடிவைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் குறுஞ்செயலிக்குத் தேவையான தரவுகளை பெறுவதிலும், செயலியை விவசாயிகள் எப்படி பயன்படுத்துவார்கள் என்ற கேள்வியும், பிரச்சனையும் பெரிய சவாலாக இருந்தாலும் அவற்றை மீறி வெற்றிக்கண்டோம்.

தங்களது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை பற்றி கூறுங்கள்?

பள்ளிப்படிப்பை அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியிலும், அதன் பிறகு குடும்ப சூழ்நிலையின் காரணமாக சில தமிழ் நாளிதழ்களில் கணினிப்பொறியாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆக வேலை பார்த்துக்கொண்டே அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொலைத்தூரக் கல்வியின் மூலம் இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் பெற்றேன்.  

கணினி மீதான ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

நான் பதினோராம் வகுப்பு சேரும்போது கணினி சார்ந்த படிப்புகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது. எனவே, மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியலை தேர்ந்தெடுத்தேன். அப்போது தொடங்கிய கணினியின் மீதான ஆர்வம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து வருகிறது என்று கூறலாம்.

கணினிப் பொறியியல் படித்தவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் மென் பொறியாளராக பணிபுரிவதையே அதிகளவில் பார்த்து வருகிறோம். ஆனால் நீங்கள் எவ்வாறு வேறு வழியை தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது தந்தையின் தொழிலில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அந்நிலையில் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அளிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டப்போது என் சகோதரிதான் வேலைக்கு சென்று என் படிப்பை தொடருவதற்கு காரணமாக இருந்தார். எனவே, வருங்காலத்தில் ஒரு தொழில்முனைவராகி பலருக்கும் வேலையளிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் நான் நடத்தி வரும் விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம். தற்போது எங்கள் கிளை நிறுவனங்கள் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் தொடங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பத்தையும் தமிழையும் ஒன்றிணைப்பதற்காக நீங்கள் செய்த குறிப்பிடத்தக்க பணிகள் பற்றி?

தமிழ் மொழியின் மீதும், கணினித் தொழில்நுட்பத்தின் மீதும் எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆரம்பத்தில் இணையதளங்களையும், விசைப்பலகையையும், எழுத்துருக்களையும் உருவாக்கியிருந்தேன். அதன் பிறகு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தமிழ் எழுத்துக்களை படிக்க முடியாத சூழல் இருந்தபோது அதற்குக்கான தீர்வையும், 2011-ல் எளிதாக தமிழில் பயன்படுத்த கூடிய சிபேடு என்னும் கையடக்கக்கணினியையும், 200க்கும் மேற்பட்ட மென்பொருள்களை கணினியில் நிறுவாமலேயே பயன்படுத்தும் வகையிலான சிடிரைவையும் உருவாக்கினோம். தமிழ் பல்கலைக்கழகத்தில் தன்னார்வலராக ஒலைச்சுவடி மின்னாக்கப் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். அதைத் தொடர்ந்து, மளிகை வணிகர்கள் கையடக்கணினிகளில் பயன்படுத்தக்கூடிய தமிழ் மென்பொருள், விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்கள், நிலத்தடி நீர் குறித்த குறுஞ்செயலி என 100க்கும் மேற்பட்ட குறுஞ்செயலிகளை உருவாக்கியுள்ளோம்.

ஒரு மொழியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அம்மொழியின் தொழில்நுட்ப தழுவல் அவசியம் என்ற கூற்றை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த கூற்றை முற்றிலுமாக ஏற்கின்றேன். ஏனெனில் தற்போது உலகம் முழுவதும் ஆங்கில மொழி பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணம் அது வர்த்தக மொழியாக இருப்பதுதான். தமிழ் உள்பட எந்தொரு மொழியாக இருந்தாலும் அதை அடுத்த படிக்கு எடுத்து செல்வதற்கு தொழில்நுட்பம் அவசியமாகும். எந்தொரு மொழி மாறிவரும் தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப தன்னை தயார்ப்படுத்தி கொள்கிறதோ அதுவே நிலைத்து நிற்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கணினித் தமிழுக்காக தாங்கள் செய்யவிருக்கும் எதிர்கால திட்டங்கள் என்னென்ன?

தற்போது விசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையே வறட்சியும், நிதிப் பற்றாற்குறையுமே ஆகும். எனவே, விவசாயிகளை திரட்டி ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்குத் தேவையான நிதியையும், தொழில்நுட்ப ஆலோசனையையும் வழங்கி, அவர்கள் உற்பத்தி செய்யும் பயிரை நாங்களே விற்பனையும் செய்து அதில் குறிப்பிட்ட தொகையை எங்களின் சேவைக்கட்டணமாக பெற்றுக்கொண்டு மீதியை விவசாயிகளுக்கு அளிக்கும் ஒரு மிக பெரிய திட்டத்தை இணையதள வணிகம், செய்திப்பரிமாற்றம் போன்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சிறப்பம்சங்களோடு தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கு “அக்ரி சக்தி” என்று பெயரிட்டுள்ளோம். மேலும் நவீன தொழில்நுட்ப வரவான சாட்-பாட் எனப்படும் தானியங்கி இருவழி தகவல் பரிமாற்ற செயலியின் மூலம் விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்க முயற்சித்து வருகிறோம்.  

மற்ற இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ் மொழியின் தொழில்நுட்ப மற்றும்  இணையதள பயன்பாட்டு நிலை எந்தளவில் உள்ளது?

கடந்த சில வருடங்களாவே தமிழ் மொழியின் இணையதள பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில்  வளர்ச்சியை கண்டு வருகிறது. குறிப்பாக தமிழ் விக்கிப்பீடியாவை பொறுத்தவரை தமிழ் மொழியானது மற்ற இந்திய மொழிகளுள் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும், கூகிள் போன்ற நிறுவனங்கள் கூட தற்போது ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ் போன்ற பிராந்திய மொழிகளிலும் அதிக கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மென் பொறியாளர்கள் இருந்தாலும், அவர்களை தமிழ்மொழி சார்ந்த முன்னேற்ற பணிகளில் ஈடுபடுவதை எது தடுப்பதாக நினைக்கிறீர்கள்?

என்னைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ் மொழியையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியில் உலகம் முழுவதும் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் தமிழ் மொழியில் மென்பொருள் மேம்பாடு மற்றும் உருவாக்க பணியில் ஈடுபடுவோருக்கு உரிய அங்கீகாரமும், நிலையான வருமானத்திற்கான வழியோ கிடைப்பதில்லை. மேலும், நாங்கள் உருவாக்கும் மென்பொருளையோ, செயலியையோ மக்களிடையே கொண்டு சேர்க்கும், சந்தைப்படுத்தும் சூழ்நிலை இங்கு இல்லாத காரணத்தினால்தான் பலர் ஈடுபடவும், ஏற்கனவே ஈடுபட்ட சிலர் விலகுவதற்கு காரணமாக உள்ளது. தமிழ் மொழியை வர்த்தக மொழியாக மாற்றும் வகையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து மென்பொருள் மற்றும் பல்வேறு மின்னணுப் பொருட்களில் தமிழ் மொழியில் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டால் அது மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தையும், தமிழ் மென்பொருள் வடிவமைப்பாளர்களிடையே உற்சாகத்தையும் உண்டாக்கும்.

வெறும் அரசாங்கமும், இது போன்ற மென்பொருள் வடிவமைப்பாளர்களும் ஒண்றிணைந்தால் மட்டும் தமிழ் மொழி வளருவதற்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு தமிழ் மக்களும் ஏடிஎம்மில் பணம் எடுப்பது முதல், அதிக நேரத்தை செலவிடும் பேஸ்புக் வரை தங்களால் இயன்ற இடங்களிளெல்லாம் தமிழ் மொழியைப் பயன்படுத்தினால்தான் முரளி போன்ற சமூக தொழில்முனைவோரின் கனவு நனவாகும், நமது மொழியின் நிலையும் முன்னேறும் என்பதில் ஐயமில்லை!

செல்வ முரளிக்கு விருது பெற்று தந்த செயலியை பதிவிறக்கம் செய்ய -