Published:Updated:

சம்மர் சுற்றுலாவுக்கு உதவும் கூகுள்! #GoogleTrips

சம்மர் சுற்றுலாவுக்கு உதவும் கூகுள்! #GoogleTrips
சம்மர் சுற்றுலாவுக்கு உதவும் கூகுள்! #GoogleTrips

ங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஊருக்கு, நீங்கள் சுற்றுலா செல்லத் திட்டமிட்டால், அந்தப் பயணம் குறித்து திட்டமிடுவதற்காகவும், அங்கே உங்களுக்கு வழிகாட்டவும் நிச்சயம் ஒரு உதவியாளர் தேவைப்படுவார் . 'இனி அது நான்தான்' என்கிறது கூகுள் ட்ரிப்ஸ். கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய ஆப் தான் இந்த கூகுள் ட்ரிப்ஸ். இந்த கோடை காலத்தில் குளிர்பிரதேசங்களுக்கு ஜாலி ட்ரிப் அடிக்க அல்லது உலகம் சுற்ற ஏதேனும் ப்ளான் இருந்தால், கூகுள் ட்ரிப்ஸ் ஆப்பை  ஒருமுறை இன்ஸ்டால் செய்து பார்த்துவிடுங்கள். 

என்ன செய்யும் கூகுள் ட்ரிப்ஸ்?

முதல்முறை ஆப்-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டு, நமது கூகுள் அக்கவுன்ட் கொடுத்து வழக்கம்போல இதனைப் பயன்படுத்தலாம். சிக்கலான சேவை என்றாலும் கூட, எளிமையாக இருக்கும்படி ஆப்பை டிசைன் செய்துள்ளது கூகுள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் பெயரை கொடுத்தால் போதும். அந்த ஊரின் முழு விவரத்தையும் உங்கள் முன்னர் கொண்டுவந்து கொட்டுகிறது. தற்போது உலகின் டாப் 200 நகரங்களுக்கு மட்டும் இதனை முழுமையாக அமல்படுத்தியுள்ளது கூகுள்.

ஆப்-ஐ திறந்ததுமே, நீங்கள் செல்லவிரும்பும் ஊரின் பெயரைத் தரவேண்டும். அதன் பிறகு ஆப் உங்களுக்கான விவரங்களைக் காட்டும். உதாரணமாக சென்னை என டைப் செய்தால், Reservation, Things to do, Saved places, Day plans, Food & Drink, Getting Around. Need to know என்னும் 7 ஆப்ஷன்களை தருகிறது ட்ரிப்ஸ். கொஞ்சம் பிரபலமில்லாத நகரங்களை இதில் தேடும் போது, இந்த ஆப்ஷன்களின் எண்ணிக்கை குறையலாம். நாம் செல்லும் இடங்களில் பகலில் எந்தெந்த இடங்களில் சுற்றிப் பார்க்கலாம், எங்கே செல்ஃபி எடுக்கலாம், காலனி ஆதிக்கத்தின் நினைவாக இருக்கும் நினைவு சின்னங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், இயற்கை வாசஸ்தலங்கள், கட்டிடங்கள், ஆன்மீகத் தலங்கள், பிரபல ஷாப்பிங் மால்கள், அருங்காட்சியகங்கள், பிரபல உணவகங்கள், பூங்காக்கள், நீங்கள் நிற்கும் இடத்திற்கு வெகு அருகில் இருக்கும் இடங்கள் என வகை வகையாக சென்னையின் விவரங்களை நமக்குத் தருகிறது ட்ரிப்ஸ். நாம் சுற்றுலா என்னும் ஒரு வார்த்தைக்குள் அடக்கும் அனைத்து விஷயங்களையும் தனித்தனியே பிரித்து, நமக்கு ஏற்றவாறு காட்டி அப்ளாஸ் வாங்குகிறது கூகுள். 

எந்தெந்த இடங்கள் எத்தனை மணி வரை திறந்திருக்கும், போன் எண்கள், செல்லும் இடத்தில் இணைய வசதி இருக்கிறதா என்ற அடிப்படை விஷயங்களையும் வழங்குவதால், ஈஸியாக ஸ்கோர் செய்கிறது ட்ரிப்ஸ். நாம் பயணம் செய்யும் நகரத்தில், நாம் எங்கே, எப்படி செல்ல வேண்டுமென கூகுள் மேப்ஸ் மூலம் உதவுகிறது. இணையவசதி அங்கே கிடைக்காது என்றாலும் பிரச்னை இல்லை. நீங்கள் செல்லும் நகரத்தின் மொத்த நகரத்தையும் மேப்பாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். இதனால் ஆஃப் லைனிலேயே நகர்வலம் வரலாம்.

ரயில் டிக்கெட், விமான டிக்கெட் ஆகியவை பதிவு செய்துவிட்டு, ஜி-மெயில் மூலம் இந்த ட்ரிப்ஸில் இணைத்துக் கொள்ள முடியும். உங்கள் மொத்த டூர் பிளானையும், நீங்கள் கிளம்பும் முன்னரே திட்டமிட்டு விட்டால் போதும். அதன்பிறகு இணையம் கூட தேவைப்படாது. ஒரு நாளில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை, ஆப்பைத் திறந்து சில ஸ்வைப்களில் முடிவு செய்துவிடலாம். பிறகு நீங்கள் அந்த ஊருக்கு சென்ற பிறகு அதன் படியே ட்ரிப்ஸ் உங்களை வழிநடத்தும். 

அதே போல நீங்கள் செல்லும் நகரங்களில் இருக்கும் பஸ், ரயில், மெட்ரோ ரயில், டாக்ஸி போன்ற போக்குவரத்து வசதிகள், நகரின் அவசர உதவி எண்கள், கரன்சி போன்ற தகவல்களும் பெரும்பாலான நகரங்களுக்கு கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சென்னை நகரத்திற்கு தேடினால், சாப்பாடு எனும் மீல்ஸ், கையேந்தி பவன் உணவு போன்றவற்றையும் இதில் கொடுத்து லோக்கல் டச் கொடுத்துள்ளது கூகுள்.

பயணம் செல்பவர்களுக்கு மட்டுமின்றி, அனைவருமே இதனைப் பயன்படுத்தி ஒரு விர்ச்சுவல் டூர் சென்றுவர முடியும். உலகில் இருக்கும் பிரபல நகரங்கள் பற்றியெல்லாம் ஒரே ஆப்பில் அறிந்து கொள்ளவும் உதவுகிறது. சுற்றுலா செல்லும் இடத்தில் வழிகாட்ட, என்ன ஸ்பெஷல் என எடுத்து சொல்ல ஒரு ஆள் தேவையே இல்லாமல் செய்கிறது இது. ஹோட்டல், ரயில், விமானம், பேருந்து  என நாம் மின்னணு முறையில் டீல் செய்யும் அனைத்தையுமே, இந்த ட்ரிப்ஸில் இணைத்துக் கொள்ள முடியும். தற்போது பெரும்பாலான சேவைகள் இணையத்தில் கிடைப்பதால், இதில் எந்த சிக்கலும் இல்லை. நமது இ-மெயில், மேப்ஸ் என வழக்கம் போல கூகுளின் பிற சேவைகளே, இதன் வசதிக்கும் கை கொடுக்கிறது. இதனால் நமது எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் ஒன்றிணைத்து, ஒரு மேனேஜராக செயல்படுகிறது.

என்ன ஸ்பெஷல்?

உதாரணமாக ஒரு நகரத்திற்குள் நீங்கள் பேருந்தில் செல்ல வேண்டியது இருக்கும்; மற்றொரு நகரத்திற்கு செல்ல ரயில், விமானம் எனப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இப்படி அனைத்து டிராவல் விவரங்களையும் ஒரே இடத்தில் காண்பிப்பது எளிதாக இருக்கிறது.

மேலும் எங்கே டூர் போகலாம் என யோசிப்பவர்கள், இதிலேயே ஒவ்வொரு நகரங்களாக குறிப்பிட்டுத் தேடலாம். நீங்கள் செல்ல வேண்டிய நகரங்களின் விவரங்களை முன்னரே படித்துத் தெரிந்துகொள்ளவும் முடியும்.  பல டூரிஸ்ட் ஆப்ஸ்கள் இருந்தாலும், பலவற்றில் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் இது இலவச சேவை என்பது இதன் இன்னொரு ப்ளஸ்.

கூகுள் ட்ரிப்ஸ் வீடியோ...