Election bannerElection banner
Published:Updated:

“ஆங்க்ரி பேர்ட்ஸ்க்கு சவால் கொடுக்கும் பச்சை மாங்காய்!” - தமிழில் மொபைல் கேம்கள்

“ஆங்க்ரி பேர்ட்ஸ்க்கு சவால் கொடுக்கும் பச்சை மாங்காய்!” - தமிழில் மொபைல் கேம்கள்
“ஆங்க்ரி பேர்ட்ஸ்க்கு சவால் கொடுக்கும் பச்சை மாங்காய்!” - தமிழில் மொபைல் கேம்கள்

“ஆங்க்ரி பேர்ட்ஸ்க்கு சவால் கொடுக்கும் பச்சை மாங்காய்!” - தமிழில் மொபைல் கேம்கள்

"ப்ளீஸ் வெயிட்... கேம் லோடிங்..." என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோடு முழுமையடைவில்லை. அதற்கு மாறாக,

"வணக்கம்... திருக்குறள் விளையாட்டு அமைக்கப்படுகிறது..." என்று சொல்கிறது. 

இன்றைய தேதிக்கு ஆதார் அட்டை எடுக்காத ஜீவன்களைக் கூட பார்க்கலாம்.  ஆனால், ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாத மனிதர்களைப் பார்ப்பது அரிது. சிலிக்கான் வேலி முதல் சிலுக்குவார்பட்டி வரை ஆண்ட்ராய்டு தான் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆன்ட்ராய்டு ஊடுருவிய அளவிற்கு கிராமப்புறங்களில் ஆங்கிலம் இன்னும் ஊடுருவவில்லை. ஆன்ட்ராய்டின் ஆதிக்கத்தை தவிர்க்க முடியாத பல நாடுகள், அதில் தங்கள் மொழிகளைத் தக்கவைக்க பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் மொழியை ஆன்ட்ராய்டில் பல வகைகளில் கொண்டு வரும் முயற்சிகள், பலராலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சியைச் சேர்ந்த செந்தில்வேலனும் ஆண்ட்ராய்டில் தமிழ் வளர்க்க சில புது முயற்சிகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, 1330 திருக்குறளையும் ஒன்றிணைத்து இவர் உருவாக்கியிருக்கும் "திருக்குறள் மொபைல் கேம்" பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

திருச்சிக்குப் பக்கம் தாளக்குடி என்கிற கிராமத்தில் நிலா டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் செந்தில். மொபைல் அப்ளிகேஷன்கள், ரோபாடிக்ஸ் போன்ற துறைகளில் உலகம் முழுவதிலுமிருந்து தங்களுக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர். சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும், கிராமத்து இளைஞர்களே இந்த நிறுவனத்தில் பெரும் பகுதியாகப் பணி செய்கிறார்கள். 

உங்களைக் குறித்த அறிமுகம்?

“நான் படித்து, வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். 12ம் வகுப்பு வரை தமிழ் மீடியத்துல தான் படிச்சேன். கல்லூரிக்கு வந்த போது, ஆங்கிலத்தில் பேச மிகவும் சிரமப்பட்டேன். இருந்தும், கஷ்டப்பட்டு பிட்ஸ் பிலானியில் படித்து பட்டம் பெற்றேன். படித்தவுடன் பெரிய வேலை, 12 வருடங்கள் பல இடங்களில் வேலை. கைநிறைய சம்பளம். எல்லாம் இருந்தும் ஏனோ முழுமயடைந்த உணர்வே இல்லாமல் இருந்தது. அதுமட்டுமில்லாமல், தமிழ் மீது எனக்குப் பெரிய ஆர்வமும் உண்டு. என்னைப் போன்றே சிந்தித்துக் கொண்டிருந்த என் நண்பன் ராஜுவோடு சேர்ந்து இந்த நிறுவனத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் தொடங்கினேன். சர்வதேச வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும் கூட, தமிழிலேயே நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக நிலா என்று வைத்தோம்."

தமிழில் மொபைல் கேம்களை கொண்டு வர என்ன காரணம்?

"இன்னிக்கு கிராமங்கள் வரை ஆன்ட்ராய்டு சென்றடைந்திருந்தாலும், எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது. அவர்களுக்குத் தமிழில் எளிதாக புரியும் வகையில் இந்த ஆப்களைக் கொண்டு போக வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதைச் செய்தோம்.  ஆங்க்ரி பேர்ட்ஸ் ரொம்ப பிரபலமாக இருந்ததால், அதை அடிப்படையாகக் கொண்டு " மாங்காய் " என்றொரு மொபைல் விளையாட்டை உருவாக்கினோம். ஒரு பறவை... அது பழிவாங்கும் பன்றிக் குட்டிகள், என இருக்கும் அந்த விளையாட்டை, நம் ஊருக்கு ஏற்ற மாதிரி 'ஒரு கல் சில மாங்காய்கள்' என மாற்றி வடிவமைத்தோம். இதில் வன்முறை உணர்வைத் தூண்டும் எந்த விஷயங்களும் இருக்காது. அதேபோல், தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் ' புதிர்நானூறு ' , தமிழ் வார்த்தை விளையாட்டான ' சொல்லினம் ', எல்லாவற்றிற்கும் மேலாக திருக்குறள் விளையாட்டை உருவாக்கியது தான் எங்களுக்கான பெரிய அடையாளமாகப் பார்க்கிறோம். "

திருக்குறள் சம்பந்தப்பட்ட ஆப்கள் நிறைய இருக்குபட்சத்தில் உங்கள் "திருக்குறள் விளையாட்டு" எந்த வகையில் ஸ்பெஷல்?

“இதை முழுக்க, முழுக்க ஒரு விளையாட்டாக உருவாக்கியிருக்கிறோம். கிராபிக்ஸிற்கும் நிறைய மெனெக்கெட்டிருக்கிறோம். மாணவர், ஆசிரியர், பேராசிரியர் என மூன்று பிரிவுகளை உருவாக்கியிருக்கிறோம். அதாவது, Easy, Hard, Difficult என இருப்பது போல். இதுபோல திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு சிலர் சில விளையாட்டுக்களை உருவாக்கியிருந்தாலும் கூட, 1330 திருக்குறளையும் உள்ளடக்கியதாக ஏதுமில்லை. பெரும் மெனெக்கெடுலுக்குப் பின்னர், இந்த விளையாட்டில் 1330 குறள்களையும் இணைத்திருக்கிறோம். ஒவ்வொரு விளையாட்டை முடிக்கும் போதும், அந்தக் குறளுக்கான விளக்கமும் வழங்கப்படும். "

இதிலும் உங்களுக்கு வருமானம் வரும் தானே. வியாபாரத்தை மீறி இதில் என்ன நோக்கம் இருக்கிறது?

"தமிழ் மீதான என் ஆர்வம், ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்பத்தில் தமிழுக்கான இடத்தைத் தேட வேண்டும் போன்றவைகள் என் நோக்கமாக இருக்கலாம். ஆனால், இது கொண்டு பணம் பண்ணுவது என் நோக்கமுமல்ல, அது அத்தனை சாத்தியமும் அல்ல. 'திருக்குறள் விளையாட்டை' உருவாக்க கிட்டத்தட்ட நான்கு மாதங்களை செலவிட்டுள்ளேன். அந்த நேரத்தில் என் வாடிக்கையாளர்களுக்கான வேலைகளைச் செய்திருந்தால் பல லட்சங்கள் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், இதன் மூலம் மிக சொற்ப வருமானமே கிடைக்கும். இதை சும்மா கடமைகாக செய்திராமல் நிறைய விஷயங்களில் கடுமையாக உழைத்தோம். 

1330 குறள்களையும் இணைத்தால், அதனுடைய மெமெரி அதிகமாகப் பிடித்தது. பின்னர், பல முயற்சிகளுக்குப் பிறகு தற்போது அதை 6 MBக்கும் குறைவாக உருவாக்கியிருக்கிறோம். அதே போல், அந்த கிராபிக்ஸிற்கும், எழுத்துக்களுக்கும் நிறையவே உழைத்தோம். இந்த எழுத்துக்களுக்கென தனி லாஜிக் மற்றும் இண்டர்ஃபேஸை ( Logic & Interface ) உருவாக்கினோம். இது சும்மா, போதிக்கும் செயலியாக இல்லமால், எல்லோரும் விரும்பும் ஒரு விளையாட்டாக உருவாக்கியுள்ளோம்."

எதிர்காலத் திட்டங்கள் என்ன?

" தற்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம்  சுற்றுவட்டாரத்திலுள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைகளை சொல்லித் தருகிறோம். ரோபாடிக்ஸ் துறையின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்து வருகிறோம். வளர்ந்து வரும் தொழில்நுட்பமான 'விர்ச்சுவல் ரியாலிட்டி'க்காக தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். டெஸ்லா போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இதையும், எளிய தமிழில் மாணவர்களுக்குப் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் கல்வெட்டுகள் குறித்த ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறேன். தமிழையும், தொழில்நுட்பங்களையும் ஒண்றிணைத்து, அதை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பெருங்கனவு இருக்கிறது எனக்கு." என்று சொல்லி சிரிக்கிறார். 

நல்ல கனவுகள் நிச்சயம் பலிக்கும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு