Published:Updated:

சாம்சங், விவோ, ரெட்மீ ஓனர்களே... ஒரு நல்ல ஸ்மார்ட்போனில் நாங்கள் எதிர்பார்ப்பது இவைதாம்!

சாம்சங், விவோ, ரெட்மீ ஓனர்களே... ஒரு நல்ல ஸ்மார்ட்போனில் நாங்கள் எதிர்பார்ப்பது இவைதாம்!
சாம்சங், விவோ, ரெட்மீ ஓனர்களே... ஒரு நல்ல ஸ்மார்ட்போனில் நாங்கள் எதிர்பார்ப்பது இவைதாம்!


வெள்ளிக்கிழமை ஆனால் புதுப்படம் வருகிறதோ இல்லையோ, வாரம் ஒரு புது மொபைல் மாடல் சந்தைக்கு வருகிறது. டீக்கடைகளில் வாசிக்கும் நாளிதழின் முதல் பக்கத்தில் இருந்து தொடங்கும் விளம்பரச் சூறாவளி நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு எல்லா இடங்களிலும் நம்மைத் துரத்தி வருகிறது. ஸ்மார்ட்போன் என்பது இன்றைக்கு ஒருவருக்கு அத்தியாவசியமான பொருள்தான். ஆனால், இத்தனை மாடல்களை களம் இறக்கும் நிறுவனங்கள் பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்களா? முதலில் தெரிந்து வைத்திருக்கிறார்களா? இல்லை என்பதுதான் உண்மை. 10,000 ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கும் ஒரு ஸ்மார்ட்போனில் ஒரு வாடிக்கையாளர் எதிர்பார்ப்பது எளிமையான விஷயங்கள்தாம்.

1) பேட்டரி:

ஒருவர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம் என்பது தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவ்வளவு விஷயங்களை கொட்டி கொடுக்கிறார்கள். டி.வி நிகழ்ச்சிகளைக் கூட மொபைலில் பாருங்கள் என்கிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு பேட்டரி பவர் இருக்கிறதா? 3000, 4000 mAh என நம்பர் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், வாங்கிப் பார்த்தால் “பிம்பிளக்கி பிலாப்பி” என்கிறது. இது அனைத்து மொபைல்களுக்கும் பொருந்தும். பல நாட்கள் நிற்கும் பேட்டரி இருந்தால், அதன் ரேடியேஷனில் நாமே வெந்து போவோம் என பயமுறுத்துகிறார்கள். அல்லது, சென்னை வெயிலை விட அந்த மொபைலின் சூடு அதிகமாக இருக்கிறது. நிலாவில் விவசாயம் எல்லாம் செய்கிறீர்கள். ஒரு வாரம் தாக்குப்பிடிக்கும் ஒரு பேட்டரியை உங்களால் கண்டுபிடிக்க முடியாதா? 

2) கொஞ்சம் ஸ்ட்ராங்கான மொபைல்:

சிக்னலில் 20 செகண்ட் மேல் நிற்க வேண்டியிருந்தால் கூட ஸ்மார்ட்போனில் மூழ்கிவிடுகிறோம். அந்த அளவுக்கு எங்களை அடிக்ட் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். நல்லது. ஆனால், அதனாலே பல சமயம் மொபைல் கீழே விழுந்துவிடுகிறது. டிஸ்ப்ளே உடைந்தால் தீர்ந்தது விஷயம். 10,000 ரூபாய் மொபைலின் டிஸ்ப்ளே 6000 ரூபாய். டெம்பர்டு கிளாஸ், ஸ்ட்ராங் கேஸ் என அதற்கு ஒரு சந்தையை உருவாக்கிவிட்டீர்கள். ஆனால், அது சரியான தீர்வாகாதே. ஆப்பிள் 6S அவ்வளவு அழகு என்கிறீர்கள். உண்மைதான். ஆனால், கேஸிங் போட்டால் அது என்ன மொபைல் என்றே தெரியாது. அந்த 150 ரூபாய் டெம்பர்டு கிளாஸ் டெக்னாலஜியை மொபைலிலே சேர்த்துவிட்டால் நல்லதுதானே? அவ்வளவு எளிதில் உடையாத ஒரு மொபைலை உங்களால் தயாரிக்க முடியாவிட்டால், நீங்கள் விடும் “best ever smartphone", "Rethink what a smartphone can do" வகை விளம்பரங்களை நாங்கள் எப்படி நம்புவது? விக்ரம் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் தனுஷ் அளவுக்காவது ஸ்ட்ராங்கான போனை கொடுங்க பாஸ்.

3) பாதுகாப்பான மொபைல்:

மொபைல் திருடு போனால் இன்ஷூரன்ஸ் என வாங்கும்போதே எக்ஸ்ட்ரா செலவு வைக்கறீர்கள். ஃபிங்கர் பிரிண்ட் சென்ஸார், ஃபேஸ் டிடெக்‌ஷன் என ஸ்மார்ட்போனில் ராக்கெட் சயின்ஸ் விஷயங்களை சொல்கிறீர்கள். ஆனால், ஜஸ்ட் லைக் தட் ஹேக் செய்துவிடுகிறார்கள்.100ரூபாய் கொடுத்தால் ஆண்ட்ராய்டு மொபைலை பின் லாக்-ஐ திறந்து கொடுக்க தெருவுக்கு ஐந்து கடைகள் இருக்கின்றன. என்னத்த செக்யூர்டோ, என்னத்த சேஃப்டியோ என புலம்பத்தான் வேண்டியிருக்கிறது. மூன் லைட் செல்ஃபி ஆடம்பரம். பாதுகாப்பான மொபைல் அத்தியாவசம்

4) உண்மையா இருங்க

கேமரா குவாலிட்டிக்கும் மெகா பிக்ஸலுக்கும் தொடர்பே இல்லையோன்னு யோசிக்க வைத்துவிட்டீர்கள். 42 மெகா பிக்ஸல் கேமரா மொபைல் எல்லாம்... சரி விடுங்க. அது ஏன், மொபைலில் பார்க்கும்போது “வாவ்” தரத்தில் இருக்கும் புகைப்படங்கள் கணினிக்கு வந்ததும் டொக்கு ஆகின்றன? அப்படியென்றால், உங்கள் டிஸ்ப்ளே எங்களை ஏமாற்றுகிறது என்றுதானே பொருள்? 8 மெகா பிக்ஸல் கேமரா ஏன் 20 மெகா பிக்ஸல் கேமராவை விட அழகாய் படம் பிடிக்கின்றது? 22 காரட் கோல்டு என்றால் தரம் ஒன்றுதானே? மெகா பிக்ஸலில் ஏன் அது நடப்பதில்லை?

5) ரேம்:

இது இன்னொரு ஏமாற்று வேலை. 2ஜிபி ரேம் கொண்ட மொபைல்கள் வாங்கினோம். சில நாட்களில் ஹேங் ஆனது. ஆறே மாதங்களில் 3 ஜிபி ரேம் மொபைல் விட்டீர்கள். தொலைகிறது என மொபைலை மாற்றினோம். அதுவும் ஹேங் ஆனது. இப்போது 6 ஜிபி ரேம் என்கிறீர்கள். அதுவும் ஹேங்தான் ஆகிறது. என்னதான் பிரச்னை? ஹேங் ஆகாமல் இருக்க இதை இதை செய்யுங்கள் என்றாவது சொல்கிறீர்களா? அதுவும் கிடையாது. பார்த்துக் கொண்டே இருங்கள். மொபைல் ஹேங் ஆனதால் கடுப்பான யூஸர், தீவிரவாதி ஆகிவிட்டார் என ஒரு நாள் செய்தி வரும். வந்தே தீரும். 

அடுத்த மாடலை தயாரிக்கப் போகும் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது இவைதாம்.
ஹேங் ஆகாத, எளிதில் உடையாத, இரண்டு முழு நாட்கள் நிற்கும் பேட்டரி கொண்ட, ஒரு நல்ல கேமரா ஃபோனை கொடுங்கள். விலையில் 2000 ரூபாய் கூடினாலும் ஓ.கே. தான். அயர்ன் பாக்ஸ் அளவுக்கு சூடாகும் இன்னொரு மொபைலை எங்கள் தலையில் கட்டாதீர்கள்.