Published:Updated:

2000 ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ஃபிட்னஸ் பேண்டுகள்! #Fitnessband

2000 ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த  ஃபிட்னஸ் பேண்டுகள்! #Fitnessband
2000 ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ஃபிட்னஸ் பேண்டுகள்! #Fitnessband

ஆடம்பரமாக மட்டுமே இருந்த ஃபிட்னஸ் பேண்ட்கள் இன்று பலரின் விருப்பமான கேட்ஜெட்களில் ஒன்றாக மாறிவிட்டது. உடற்பயிற்சி, ஜிம், டயட், தூக்கம் போன்ற ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அக்கறை கொண்ட பலரும் ஃபிட் பேண்ட்களை விரும்பத் துவங்கிவிட்டனர். ஒருபக்கம் ஸ்மார்ட்வாட்ச்களின் மீதான் மோகம் குறைந்து கொண்டே போக, இன்னொரு பக்கம் ஃபிட்னஸ் டிராக்கர்கள் மற்றும் பேண்ட்களின் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறைந்த பட்சமாக ரூ.700-ல் தொடங்கி ரூ.12,000 வரையிலான விலைகளில் இவை கிடைக்கின்றன. ஆனால் 1000 முதல் 2000 ரூபாய்க்குள்ளாகவே நம்மால் தரமான ஃபிட் பேண்ட்களை வாங்கிவிட முடியும். அப்படி நல்ல ரெவ்யூஸ் குவித்த சில ஃபிட் பேண்ட்களின் தொகுப்பு இது...

MI பேண்ட் 2:

எம்.ஐ பேண்ட்டின் முதல் மாடல் ஹிட் ஆகவே, அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது மாடலை வெளியிட்டது எம்.ஐ நிறுவனம்; அதுதான் இது. முதல் பேண்ட்டில் இல்லாத எல்.இ.டி டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. 0.42 இன்ச் OLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் 4.0 LE, 70 mAh பேட்டரி, 19 கிராம் எடை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது பேண்ட் 2. இதன் பேட்டரி திறன் 20 நாட்கள் வரை தாங்கும். Mi ஃபிட் ஆப் மூலமாக இதனை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என இருவகை ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட, போன்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிங்கிள் டச் பட்டன், பேண்டின் டிஸ்ப்ளே மீது இருக்கிறது. திடீரென மணி பார்க்க வேண்டுமென்றால், வாட்ச் போல கையை உயர்த்திப் பார்த்துக் கொள்ளலாம். அப்போது சிங்கிள் டச் பட்டனை அழுத்துவதன் மூலமாக, உங்களது இதயத் துடிப்பு மற்றும் நீங்கள் அன்று நடந்த அடிகளை பார்க்கலாம். அதே போல மொபைலுக்கு வரும் இன்கமிங் கால்கள், மெசேஜ்கள், நோட்டிபிகேஷன்களையும் வைப்ரேஷன் மூலமாக நமக்கு கடத்துகிறது. எனவே போன் பாக்கெட், பை என எங்கிருந்தாலும் எந்த அழைப்பையும் தவறவிடாமல் இருக்கலாம்.

கறுப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீலம் என நான்கு நிறங்களில் இந்த  பேண்ட் 2 கிடைக்கிறது. போன் டிஸ்ப்ளே லாக் ஆகி இருக்கும்போது, நமது பேண்டை, போனுக்கு அருகில் கொண்டு சென்றாலே போதும். போன் அன்லாக் ஆகிவிடும். மேலும் PPG எனப்படும் இதயத்துடிப்பை கண்காணிக்கும் சென்சார் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

விலை : ரூ.1,999 

ஃபாஸ்ட்டிராக் ரெப்ஃப்ளக்ஸ்:

டைட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம்தான் இந்த ரெஃப்ளக்ஸ். 

கால் நோட்டிஃபிகேஷன், வைப்ரேஷன் அலாரம், ஸ்டெப்ஸ் கவுன்ட்டர், OLED டிஸ்ப்ளே என மற்ற ஃபிட்னஸ் பேண்ட்களில் இருக்கும் டெம்ப்ளேட் அம்சங்கள் இதிலும் இருக்கின்றன. ஆனால் முதல் ஃபிட்னஸ் டிராக்கர் என்பதாலோ என்னவோ? டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் கொஞ்சம் பின்தங்கிவிட்டது ஃபாஸ்ட்டிராக். காரணம் இதன் டிஸ்ப்ளே, ஹோரிசான்டலாக மட்டுமே இருப்பதால், டிஸ்ப்ளேவில் இருக்கும் எழுத்துக்களை வெர்டிக்கலாக நீங்கள் படிக்க முடியாது. எனவே வாக்கிங்கின் போது, டிஸ்ப்ளேயில் விவரங்களைப் பார்ப்பது என்பது கொஞ்சம் சிரமமே. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் டிவைஸ்களை இதனை இணைப்பதற்காக Fastrack Reflex என்ற ஆப் இருக்கிறது. இதன் மூலமாக பிட்னஸ் டிராக்கரின் விவரங்களை மொபைலிலேயே பார்க்கவும், நிர்வகிக்கவும் முடியும். 

OLED டிஸ்ப்ளேயின் திறன் நன்றாக இருக்கிறது. இருநிறங்கள் அடங்கிய டிசைன் மற்றும் பேண்டின் தரம் ஆகியவை ஓகே என்றாலும், மற்ற பிட்னஸ் டிராக்கர்கள் போல இல்லாமல் அளவில் பெரிதாக இருக்கிறது. இது கொஞ்சம் அசௌகரியமான உணர்வைக் கொடுக்கும். இதனை USB சார்ஜிங் செய்ய முடியும் என்பதால் உங்களின் லேப்டாப் மூலமாகக் கூட சார்ஜ் போடலாம். பேட்டரி திறன் நன்றாக இருக்கிறது. பர்ப்பிள், நீலம் மற்றும் கறுப்பு என மொத்தம் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

விலை: ரூ. 1995 

லெனோவா ஸ்மார்ட்பேண்ட் HW01:

சமீபத்தில் லெனோவோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்பேண்ட்தான் இந்த HW01. 0.91 இன்ச் OLED டிஸ்ப்ளே, 22 கிராம் எடை, ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர்,  v4.2 ப்ளூடூத் வசதி, வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் டஸ்ட் ப்ரூப் என முழு பிட்னஸ் பேண்ட் ஆக இருக்கிறது HW01. 

நார்மல் மோட் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் என இரு ஆபரேட்டிங் 'மோட்'-கள் இதில் இருக்கின்றன. போனுக்கு வரும் அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கும் வசதி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் டிவைஸ்களை இணைக்கும் வசதி, ஆன்ட்டி-ஸ்லீப் மோட், 5 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கக் கூடிய 85 mAh பேட்டரி போன்றவை இதன் ஹைலைட்ஸ். ஃபாஸ்ட்டிராக் ரெஃப்ளக்ஸ் போலவே இதிலும் OLED ஸ்க்ரீன் ஹோரிசான்டலாக இருக்கிறது. மொபைல் டிவைஸ்களுடன் கனெக்ட் செய்வதற்காக 'Lenovo Smart Bracelet' என்ற ஆப்-ஐ வெளியிட்டுள்ளது லெனோவா. இதனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே வாங்கும்படி எக்ஸ்க்ளூசிவ்வாக வெளியிட்டுள்ளது லெனோவா நிறுவனம். 

விலை : ரூ. 1,999 

ஜெப்ரானிக்ஸ் ZEB-FIT100 

1.24 செ.மீ OLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் 4.0, 7 நாள்களுக்கான டேட்டா ஸ்டோரேஜ், 25.8 கிராம் எடை என இருக்கிறது இந்த ஜிப் ஃபிட்100. வடிவமைப்பிலும், தரத்திலும் நேர்த்தியாக இருக்கிறது. மற்ற ஃபிட் பேண்டுகள் போன்றே இதனை, ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு ஆப் மூலம் நிர்வகிக்கலாம். இதற்காக ZEB-FIT என்னும் ‘ஆப்’பை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். இதனை ப்ளூடூத் மூலம் உங்கள் போனுடன் இணைத்துவிட்டால் போதும், உங்கள் தகவல்கள் சிங்க் ஆகத் துவங்கிவிடும்.

இந்த பேண்டின் இடதுபுறம் இருக்கும் பட்டன் மூலம் வெவ்வேறு மோட்களை மாற்றலாம். பேட்டரி ஸ்டேட்டஸ், நேரம், தேதி ஆகியவை டிஸ்ப்ளேயில் எப்போதும் தெரியும். ஆனால், சூரிய ஒளியில் டிஸ்ப்ளே விவரங்களைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை என்பது கொஞ்சம் அசெளகரியம்தான். பேட்டரி 15 நாள்கள் வரை தாங்கும் என்கிறது ஜெப்ரானிக்ஸ். இதன் ‘ஆப்’பை பொறுத்தவரை, வடிவமைப்பில் எளிதாகவும், பயன்படுத்த வசதிகளுடனும் இருக்கிறது. உங்களது தூக்கம், காலடிகள் ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயித்துக்கொள்ளவும், உங்கள் செயல்பாடுகளை எளிதாக்கிக்கொள்ளவும் முடியும். 

விலை: ரூ.1,414 

இன்டெக்ஸ் ஃபிட்ரிஸ்ட் கார்டியோ 

1500 ரூபாய் விலைக்கு இன்டக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஃபிட்னஸ் பேண்ட்தான் இந்த ஃபிட்ரிஸ்ட் கார்டியோ. 2.18cm OLED டிஸ்ப்ளே, 26 கிராம் எடை, ப்ளூடூத் 4 கனெக்டிவிட்டி, 7 நாட்கள் வரை தாங்கக் கூடிய 80 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது இந்த பேண்ட். ஸ்டெப் கவுன்ட்டர், ஸ்லீப் மானிட்டர், ஹைட்ரேஷன் அலாரம், ஹார்ட் ரேட் சென்சார் ஆகியவை இதன் ஹைலைட்ஸ்.

மற்றவற்றைப் போலவே இதையும் ஆப் மூலமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் டிவைஸ்களில் இணைத்துப் பயன்படுத்தலாம். போன்களில் வரும் நோட்டிபிகேஷன்களை இதிலேயே பார்க்கவும், போனின் மியூசிக் ப்ளேயரை இதன் மூலம் கட்டுப்படுத்தவும் கூட முடியும். கறுப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும் இதனை அமேசான் தளத்தில் மட்டுமே வாங்க முடியும். சரியான விலை, நல்ல டிசைன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்றவை எல்லாம் இதன் ப்ளஸ் பாயின்ட்ஸ்.

விலை: ரூ. 1,499

முன்னொரு காலத்தில் இருந்ததைப் போல இன்று இந்த பிராண்ட், இந்த மாடல்தான் வாங்கவேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இப்போது இல்லை. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இன்னும் பல ஃபிட்பேண்ட்கள் மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள் கிடைக்கின்றன. எனவே மேலே சொன்னவைகளில் உங்களுக்கு சரியான சாய்ஸ் கிடைக்கவில்லை என்றால் அவற்றிற்கு சென்று ஒரு விசிட் அடிக்கலாம். பட்ஜெட், உங்களின் தேவை, ஃபிட் பேண்ட்களின் தரம், ஃபிட் பேண்ட்களின் சிறப்பம்சங்கள், பெர்பார்மன்ஸ் ஆகிய அனைத்தையும் பார்த்துவிட்டே உங்களுடையதை தேர்வு செய்யுங்க பாஸ்! 

அடுத்த கட்டுரைக்கு