Published:Updated:

”இது நிஜமல்ல... நிஜம் மாதிரி” - போலி மின்னணு பொருட்கள் சந்தை!

”இது நிஜமல்ல... நிஜம் மாதிரி” - போலி மின்னணு பொருட்கள் சந்தை!
”இது நிஜமல்ல... நிஜம் மாதிரி” - போலி மின்னணு பொருட்கள் சந்தை!

”இது நிஜமல்ல... நிஜம் மாதிரி” - போலி மின்னணு பொருட்கள் சந்தை!

சினிமா உலகில் எப்படி திருட்டு டிவிடி பிரச்னையோ, அப்படி எலெக்ட்ரானிக்ஸ் உலகில் டூப்ளிகேட் பொருட்களின் பிரச்னை. பெரிய நிறுவனங்களையே அழிக்கும் அளவுக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது இந்த போலி பொருட்களின் சந்தை. 

பிராண்ட் பொருட்கள் போலவே உருவாக்கப்பட்டு சந்தையில் உலாவரும் போலிகளின் இந்திய சந்தை மதிப்பு ஐம்பதாயிரம் கோடி என அதிர்ச்சியூட்டுகிறது ஒரு புள்ளிவிவரம்.  இதில் மின்னணு சாதனங்களில்தான் பிராண்ட் பொருட்களை  நகலெடுத்து விற்கப்படுவது அதிகம். சீனாவில் இருந்து தான் இவற்றில் பாதி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த டூப்ளிகேட் பொருட்கள் கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்து சந்தையை ஆக்கிரமித்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக அமைகிறது.

சீனா போன்ற நாடுகளிலிருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்படும் இந்த மின்னணு கருவிகள் பெரும்பாலும் டெல்லியில் வைத்து அசெம்பிள் செய்து, சாஃப்ட்வேர்கள் பொருத்தப்பட்டு முக்கிய நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சென்னைக்கு ரிட்ச்சி தெரு, டெல்லிக்கு சாந்தினி செளக் போன்று ஒவ்வொரு நகரத்துக்கு இந்த டூப்ளிகேட் பொருட்கள் விற்பனைக்கு தனி ஏரியாக்களே உள்ளன. லேப்டாப், மொபைல் போன்களை மையமாக வைத்து இயங்கும் இந்த பெரிய நெட்வொர்க் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து சரி கட்டி விடுவதால் யாரும் கண்டுகொள்வதில்லை. நிறுவனங்கள் அழுத்தம் தரும் போது மட்டும் சோதனை என்ற பேரில் பத்து இருபது டூப்ளிகேட் ஐபோன், சாம்சங் செல்போன்களை பிடித்ததாக போட்டோக்கு போஸ் கொடுப்பார்கள்.   

"பிராண்ட் ஐட்டங்களை பல ஆயிரம் கொடுத்து வாங்க முடியாதவர்கள், பல வசதிகளோடு விலையும் குறைவாக பிராண்ட்கள் போலவே இருக்கும் டூப்ளிகேட் போன்கள், லேப்டாப்கள்  வாங்கி பயன்படுத்துகிறார்கள். கியாரண்டி, வாராண்டி என்று இதற்கு எதுவும் கிடையாது என்று தெரிந்தே தான் வாங்குகிறார்கள். காரணம், நாற்பதாயிரம் போன் கூட நாலாயிரத்துக்கு கிடைக்கிறது. பழுதானால் தூக்கிப்போட்டு வேறு போன் வாங்குகிறார்கள். இப்படி டூப்ளிகேட் என்று தெரிந்தே வாங்குவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஆன்லைன் கடைகளில் பிராண்ட் பெயர்களை போட்டு விலையைக் குறைத்து காட்டி மோசடியாக விற்பனை செய்வதும் நடக்கிறது. பிரபல ஆன்லைன் ஸ்டோர்களுக்கு சப்ளையர்களாக இருப்பவர்கள் மூலம் டூப்ளிகேட் பொருட்கள் உள்ளே நுழைக்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்கள் பல முறை சோதனை செய்த பிறகே பொருட்களை விற்பனைக்கு வைக்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டிருக்கிறது" என்கிறார்கள் நுகர்வோர் அமைப்பினர்.  

"எப்படி டூப்ளிகேட் பொருட்கள் சக்கை போடு போடுகின்றன, யார் இதன் வாடிக்கையாளர்கள்?" என்று சென்னை ரிட்ச்சி தெருக்காரர்கள் சிலரிடம் விசாரித்தோம். "மார்கெட்டிங் செலவு என்று எதுவும் கிடையாது, உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற விஷயங்கள் கிடையாது, தரமும் குறைவு என்பதால் இரண்டாயிரத்துக்கு கூட பத்து மெகாபிக்சல் கேமரா, பதினாறு ஜிபி மெமரி என கொடுக்க முடிகிறது. இளைஞர்கள் பெரும்பாலும் இந்த மாதிரி போன்களைத் தேடி வருவதில்லை.  சிலர் பந்தாவிற்காக ஐந்தாயிரத்துக்கு ஐபோன் போல் இருப்பதை வாங்கிப் பயன்படுத்துவார்கள். மற்றபடி அடித்தட்டு மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்களைக் குறி வைத்து தான் இந்த டூப்ளிகேட்டுகள் உண்டாக்கப்படுகிறது. மொபைல் போனில் தொடங்கி.. சார்ஜர்கள், ஹெட்செட்கள் வரை அவர்களுக்கு விலை குறைவாக இருக்க வேண்டும் அதை மட்டும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படுகிறது. சல்லிசான விலையில் கிடைக்கும் டூப்ளிகேட்டுகளை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதால் பெரிய நிறுவனங்களும் எப்படி விலையை குறைத்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறது" என்றார்கள்.

டூப்ளிகேட் கேட்ஜெட்கள் என்று தெரிந்து வாங்குபவர்கள் ஒரு பக்கம் என்றால்.. பிராண்டட் பொருள் என்று ஏமாற்றி விற்பது இன்னொரு பக்கம் நடக்கிறது.. இவற்றை அடையாளம் கண்டுபிடிப்பதும் சிரமமானது. பெயர், லோகோ முதல் பேக்கேஜிங் வரை அசல் பொருள் போலவே காட்ட, தகுந்த தொழில்நுட்பங்களை வைத்துள்ளனர்.  இதைத் தவிர்க்க சிரமம் பார்க்காமல் அந்தந்த பிராண்ட்களின் ஷோரூம்களில் சென்று வாங்கலாம், வாங்கும்போது பிராண்ட் பெயர், தயாரிப்பு முகவரி போன்றவைகளைக் கவனிக்க வேண்டும். அரசும் டூப்ளிகேட் பொருட்கள் சந்தையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு