Published:Updated:

இந்த "ட்ரிக்" தெரிந்தால் போதும்... மொபைல் இல்லாமலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவேற்றலாம்!

இந்த "ட்ரிக்" தெரிந்தால் போதும்... மொபைல் இல்லாமலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவேற்றலாம்!
இந்த "ட்ரிக்" தெரிந்தால் போதும்... மொபைல் இல்லாமலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவேற்றலாம்!

இந்த "ட்ரிக்" தெரிந்தால் போதும்... மொபைல் இல்லாமலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவேற்றலாம்!

ன்ஸ்டாகிராம் பற்றிய கதைக்குச் செல்வதற்கு முன் ஒரு குட்டி பிளாஷ்பேக்.

ஆர்குட் கோலோச்சிய காலத்தில், ஸ்டுடியோவுக்குப் போய் போட்டோ எடுத்து, 'அண்ணே! முகத்துக்குக் கொஞ்சம் கலர் ஏத்துங்க... அதைப் பண்ணுங்க... இதைப் பண்ணுங்க...' அப்படியெல்லாம் அலப்பறை செய்து, சாஃப்ட் காப்பி வாங்கி அதை புரொஃபைல் படமா வைத்த ஆட்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அது நீங்களாக் கூட இருக்கலாம்.

VGA கேமராக்கள் (நோக்கியா 6610 நினைவிருக்கிறதா) காலாவதியான பிறகு, 3.2 மெகா பிக்சல் கேமராக்கள், அதுவும் பின் பக்க கேமராக்கள் வந்த பிறகு, ஏதோ ஒரு ஆங்கிளில் திருப்பி எடுத்தா பாதித் தலை தெரியாது. போன ஜென்மத்துல நீங்க பாவம் செஞ்சிருந்தா பாதி முகமே தெரியாது. கொஞ்சம் கொஞ்சமா அசைச்சு அசைச்சு ஒரு படம் எடுத்து முடிக்குறதுக்குள்ள அந்த போன் மெமரியே தீர்ந்து போயிருக்கும். அதுக்குப்பிறகு PC Suite மாதிரியான விஷயங்களோட போராடி, போட்டோஷாப்ல எக்கச்சக்க நகாசு வேலைகள் பார்த்து... இவ்வளவும் எதுக்குன்னா ஃபேஸ்புக்ல புரொஃபைல் பிக்சர் வைக்குறதுக்குத்தான். 

செல்ஃபி கலாசாரம் ஆரம்பித்ததெல்லாம் அதன் பிறகான காலம். மொபைல்களில் வீடியோ காலிங்கிற்காகக் கொண்டுவரப்பட்டு, செல்ஃபிக்கான கேமராவாக பரிணாம வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் இவை இரண்டையும் அட்டகாசமாகப் பயன்படுத்திக்கொண்டது இன்ஸ்டாகிராம்

30 படங்களை க்ளிக்கி, அவற்றில் மூன்று படங்களை ஒரு மனதாக முடிவு செய்து, அதற்கு முப்பது ஃபில்ட்டர் போட்டு பச்சக்குனு அப்லோட் செய்யும் இன்ஸ்டாகிராம், இளசுகளிடம் ஹிட்டடித்தது. இன்ஸ்டாகிராம் வருகைக்குப் பிறகு ஃபில்டர்கள் ராஜ்ஜியம் தான். ட்விட்டரும் படங்களை அப்லோட் செய்யும்போது ஃபில்டர்கள் பயன்படுத்தும் வசதியைக்கொண்டு வந்தது. ஃபேஸ்புக் "அப்ப நாங்கனாப்ள யாரு" என ஒரு படி மேலே போய், இன்ஸ்டாகிராமை ஒட்டுமொத்தமாக வாங்கியது. 

இந்த ஃபில்டர்களின் அட்டகாசம் எந்தளவுக்குச் சென்றது என்றால், சில எதார்த்தவாதிகள் இந்த அட்டகாசம் பொறுக்க முடியாமல், "நான் எந்த ஃபில்டரும் பயன்படுத்தவில்லை" எனக் கத்தி #NoFilter என ஒரு ஹேஷ்டேக்கே உருவாக்கி ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

இன்ஸ்டாகிராம், கொடி கட்டிபறப்பது மொபைல் பயனர்களிடம் மட்டும்தான். இதற்குக் காரணம், 'சட்டென ஒரு க்ளிக், நொடியில் சில ஃபில்டர்கள், அப்படியே அப்லோட், எத்தனை ஹார்டின்கள் லைக்குகளாகப் பறந்தன என பார்ப்பது' அவ்வளவுதான். பயனர்களின் இந்த மனநிலைக்கு இன்ஸ்டாகிராம் மொபைல் உலகை மட்டுமே கட்டி ஆண்டது. கூடவே 'ஸ்னாப்சாட்'டின் வருகையும் அமைய அதற்குப் போட்டியாக இன்ஸ்டாகிராமை மொபைல் உலகில் மட்டுமே ஆதிக்கம் செலுத்த மேம்பாடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. 

இன்ஸ்டாகிராமின் இந்த மொபைல் ஃபிரண்ட்லினஸில் என்ன பிரச்னை என்றால், தனிநபர்களின் கணக்குகளுக்கு ஏற்றதாக இருந்தாலும், நிறுவனங்கள், பிராண்டுகள் போன்றவற்றின் வடிவமைப்புகளில் இன்ஸ்டாகிராமுக்காகவே தனியான டிசைன் செய்வதும் பிறகு மொபைலுக்கு மாற்றி அப்லோட் செய்வது அல்லது சிக்கலான Third Party Apps மூலமாக அப்லோட் செய்வது, அவற்றின் பிரிமீயம் சர்வீஸ்களுக்க்ச் செலவழிப்பது என்று எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட ஒரு வசதி பிராண்டுகளுக்குப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் வாய்ப்பை லேசாக கோடிட்டுக்காட்டியது. 

இன்ஸ்டாகிராம் ஆப் வழியாக மட்டுமல்லாமல், 'மொபைல் பிரவுசர்' வழியாகவும் படங்களை அப்லோட் செய்யும் வழியை அறிமுகப்படுத்தியது. அதாவது, இனி நீங்கள் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனே இல்லாமலும், பிரவுசர் மூலமாகவே படங்களைப் பதிவேற்றம் செய்து இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் வாங்கலாம்.

இப்பதான் கதைக்கே வருகிறோம். குறுக்கு வழியைப் பயன்படுத்தி, கணினியில் வடிவமைக்கப்பட்ட ஒரு படத்தைக் கணினியின் பிரவுசர் மூலமாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யலாம். எப்படி?

1) இன்ஸ்டாகிராமை உங்கள் பிரவுசரில் திறந்தபிறகு 'F12' அல்லது அந்தப் பக்கத்தில் எங்காவது Right Click செய்து 'Inspect Element' கொடுக்கவும்

2 A) க்ரோம் பிரவுசரில் சிவப்பு வட்டமிட்ட இடத்தை அழுத்தினால், உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் மொபைல் பிரவுசரில் திறந்தது போல மாறிவிடும். 

2 B) ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் சிவப்பு வட்டமிட்ட இடத்தை அழுத்தி, Devices-ல் ஏதாவது ஒரு மொபைல் மாடலைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் மொபைல் பிரவுசரில் திறந்தது போல மாறிவிடும்.

3)  அதன் பிறகு வட்டமிட்ட இடத்தில் உள்ள கேமரா பட்டனை க்ளிக் செய்து படங்களை அப்லோட் செய்யலாம்.

தற்போது இந்த வழிமுறையில் நீங்கள் எதார்த்தவாதியாக மட்டுமே செயல்பட முடியும், #NoFilter டேக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஒரு படம் மட்டுமே ஒரு நேரத்தில் அப்லோட் செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் இப்போதைக்குச் செய்ய முடியாது. 

இப்படி ஒரு குறுக்கு வழி இப்போது கிடைத்திருக்கிறது. இணைய உலகின் சூரப்புலிகள், இந்த வசதியைப் பயன்படுத்தி முந்தைய பத்தியில் முடியாது எனச் சொல்லியதை எல்லாம் Third Party Apps மூலமாக விரைவில் முடியும் எனச் சொல்ல வைத்துவிடுவார்கள். 

'புதிதாக  பாதை உருவாக்கப்படும் வரை குறுக்கு வழியைப் பயன்படுத்தலாம். தவறில்லை...' என புக்கோவ்ஸ்கியா அறிஞர் மெஸ்லாவ்க்ஸ்கி சொல்லி இருக்கிறார் அல்லவா? :-)

டெக்னாலஜி உலகைச் சமாளிக்க ஒரு விஷயம் சொல்கிறேன். ஒரு புதிய வசதியோ, புராடக்டோ வருகிறது என்றால் அதை நாம் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு