Published:Updated:

போர் அடிக்குதா பாஸ்? அப்போ எளிமையா AI கத்துக்கலாம் வாங்க..! #GoogleAI

போர் அடிக்குதா பாஸ்? அப்போ எளிமையா AI கத்துக்கலாம் வாங்க..! #GoogleAI
போர் அடிக்குதா பாஸ்? அப்போ எளிமையா AI கத்துக்கலாம் வாங்க..! #GoogleAI

ந்த வருட கூகுள் IO நிகழ்வில் அதிகம் ஹைலைட்டான விஷயம் கூகுள் லென்ஸ். மொபைல் கேமரா மற்றும் AI இரண்டையும் இணைத்து விரைவில் இதில் மேஜிக் காட்டவிருக்கிறது கூகுள். இப்படி தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI-யின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கூகுள் அதனை இன்னும் மெருகேற்றும் பணிகளைச் செய்துவருகிறது. பொதுவாக AI என்பது மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் என்றாலும் கூட, மக்களிடையே பிரமிப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பமும் கூட. காரணம் நமது அன்றாட வாழ்வில் இதன் பயன்பாடு அப்படிப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை எளிதாகப் புரிந்து கொள்வதற்காக இணையதளம் (https://aiexperiments.withgoogle.com) ஒன்றினை நடத்திவருகிறது கூகுள். கடந்த வருடம் கூகுள் அறிமுகப்படுத்திய இந்த இணையதளத்தில் இருக்கும் விளையாட்டுகள் அனைத்துமே AI மூலம் இயங்குபவை. விளையாடும் ஆர்வத்தைத் தூண்டுபவை. ஒருவேளை நீங்கள் கோடிங் தெரிந்தவராக இருந்தால், ஓப்பன் சோர்ஸில் கிடைக்கும் இந்த கோட்களை பயன்படுத்தி புதிதான விஷயங்களையும் அறிமுகம் செய்யலாம். அதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது கூகுள். மெஷின் லேர்னிங் பற்றிய சில சோதனைகளின் விவரங்கள் இங்கே...

ஓப்பன் ட்ரா:

கூகுளின் AI ஆராய்ச்சிகளுக்கான தரவுகளைத் தரும் தளங்களில் இதுவும் ஒன்று. கணினியில் இருக்கும் பெயின்ட் போலத்தான் இதுவும். ஜாலியாக இதில் டூடுல்களை வரையலாம். ஆனால் ஒவ்வொரு ஓவியமும் கூகுளுக்கு ஒரு டேட்டா. ஆட்டத்தின் ரூல்சே அதுதான். கூகுள் ரேண்டமாக ஆறு பெயர்களைச் சொல்லும். அது பொருளாக இருக்கலாம்; விலங்காக இருக்கலாம்; எதுவாகவும் இருக்கலாம். அந்தப் படங்களை நீங்கள் வரைய வேண்டும். ஒரு படம் வரைய உங்களுக்கு 20 நொடிகள் தரப்படும். அதற்குள் நீங்கள் வரையப்படும் படத்தை கூகுளின் AI புரிந்துகொள்ள வேண்டும். "சரியாக கண்டுபிடித்து விட்டால் உங்களுக்கு வெற்றி. இல்லையெனில் கூகுளுக்கு வெற்றி" என்றுதானே நீங்கள் நினைப்பீர்கள்? ஆனால் இங்கே, இரண்டிலுமே கூகுளுக்குத்தான் வெற்றி. காரணம் நீங்கள் ஒவ்வொரு முறை படம் வரையும்போதும், கூகுளின் AI ஒரு புதிய டேட்டாவை எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக நீங்கள் புத்தகம் என டைப் செய்தால், 111,206 படங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இவை அனைத்தும் இந்த தளத்தில் பயனாளர்கள் வரைந்த படங்கள். இப்படி 345 பிரிவுகளில், சுமார் 50 மில்லியன் படங்களை தன் டேட்டா சென்டரில் வைத்திருக்கிறது கூகுள். இந்த கேமில் இருக்கும் சுவாரஸ்யம் மட்டுமின்றி, இன்னொரு விஷயமும் இதில் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு முறை நீங்கள் படம் வரையும்போதும் அதனை கூகுள் AI எப்படி எடுத்துக்கொள்கிறது, எப்படி வரைந்தால் AI-யுடன் ஒன்றிப்போக முடியும் போன்ற விஷயங்களை எல்லாம் நீங்கள் கவனிக்க முடியும். நீங்கள் தவறாக வரைந்த படங்களை AI எப்படி எடுத்துக்கொண்டது, அந்தப் பொருளை மற்றவர்கள் எப்படி வரைந்தார்கள் போன்ற விவரங்களையும் நீங்கள் காணலாம். சுருக்கமாக சொன்னால் AI பற்றிய ஒரு தெளிவுக்கு இந்த விளையாட்டு உதவுகிறது. கணினி, டேப்லட், மொபைல் ஆகியவற்றில் இதனை விளையாடலாம். 

இணையதளம் : https://quickdraw.withgoogle.com/#

ஆட்டோட்ரா:

ஓப்பன் ட்ரா போலவே இதுவும் கூகுளின் AI உடன் தொடர்புடைய விளையாட்டுதான். ஆனால் இதில் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவு. இதன் அடிப்படை நோக்கம் விளையாட்டு அல்ல. இந்த தளம் மூலம், ஒரு ஓவியர் போலவே உங்களால் ஒரு உருவத்தை வரையவோ, வாழ்த்து அட்டையையோ டிசைன் செய்ய முடியும். உதாரணமாக ஆட்டோ ட்ரா மூலமாக ஒரு வட்டம் வரைந்தால், வட்டத்துடன் தொடர்புடைய பந்து, கடிகாரம், கோள்கள் போன்ற உருவங்கள் எல்லாம் AI உதவியுடன் காட்டப்படும். அவற்றைத் தேர்ந்தெடுத்து வண்ணமிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு பெயின்ட்டிங் புக் வாங்கித் தருவதற்குப் பதிலாக இந்த தளத்தைக் கூட அறிமுகம் செய்யலாம். இதுவும் கூகுள் AI டேட்டாவுடன் இணைந்து செயல்படும் தளம்தான்.

இணையதளம்: https://www.autodraw.com/

பேர்ட் சவுண்ட்ஸ்:

குயில், காகம் என நாம் அன்றாடம் பார்க்கும் பறவைகளின் ஓசை எப்படி இருக்கும் எனத் தெரியும். ஆனால் இந்த உலகத்தில் எத்தனை வகையான பறவைகள் இருக்கின்றன? அதில் நூறு பறவைகளின் ஓசையாவது நாம் கேட்டிருப்போமோ? அதற்காக உதவுகிறது இந்த பரிசோதனை. பெரும்பாலான பறவைகளின் ஓசைகளை இந்த தளத்திலேயே கேட்கலாம். AI மூலமாக இதனைத் தொகுத்துள்ளது கூகுள். வருங்காலத்தில் நீங்கள் காட்டிற்குள் இருந்து கொண்டு ஏதேனும் பறவையின் ஓசையைக் கேட்டீர்கள் என்றால், அதனை மொபைலில் ரெக்கார்ட் செய்தாலே போதும். உடனே தனது AI கிளவுட் உடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்த பறவைதான் என சொல்லிவிடும் கூகுள். தற்போது இது கொஞ்சம் மிகையாகத் தெரிந்தாலும், அதற்கான முயற்சிகளில் ஒன்றாகத்தான் இது இருக்கிறது. 

A.I.டூயட்:

இந்த தளத்தில் ஒரு விர்ச்சுவல் பியானோ உங்கள் முன் தோன்றும். இதனை நீங்கள் வாசித்தால், உங்களின் இசைக்கு ஏற்ப, இணையான ஒரு இசையை கூகுள் மீட்டும். எளிதாக சொன்னால் உங்களின் பாட்டிற்கு எசப்பாட்டு பாடும் தளம்தான் இது. மற்ற விளையாட்டுக்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சுமார்தான். போர் அடித்தால், ஒரு விசிட் அடிக்கலாம்.

இதுமட்டுமின்றி சவுண்ட் மேக்கர், வித்தியாசமான ஓசைகளை கேட்பதற்கான ட்ரம் மெஷின், கேமரா மூலமே பொருட்களை கண்டறியும் தொழில்நுட்பம் போன்றவற்றிற்கான இணைய பக்கங்களும் இருக்கின்றன. இவை அனைத்துமே வெறும் விளையாட்டு மட்டுமே கிடையாது. அனைத்துமே AI புராஜெக்ட்கள். இதற்கான கோட்களும் ஓப்பன் சோர்ஸ் என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வோர் AI சோதனைகளுக்குமே தெளிவான வீடியோக்களும் இந்த தளத்திலேயே இருக்கிறது என்பது ப்ளஸ். ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாங்க பாஸ்!

வீடியோ: 

அடுத்த கட்டுரைக்கு