Published:Updated:

ஆர்குட்டுக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பு "ஹலோ"வுக்கு கிடைக்குமா? #HelloApp

ஆர்குட்டுக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பு "ஹலோ"வுக்கு கிடைக்குமா? #HelloApp
ஆர்குட்டுக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பு "ஹலோ"வுக்கு கிடைக்குமா? #HelloApp

ரு காலத்தில் தற்போதைய ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களுக்கு இணையான புகழுடன் விளங்கிய தளம் ஆர்குட். ஆனால், மற்ற சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பின்னர் திரைப்படங்களில் வரும் வாழ்ந்துகெட்ட ஜமீன்களைப் போலவே, தன் மவுசை இழந்து தத்தளித்தது ஆர்குட். பயனாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைய இறுதியில் 2014-ம் ஆண்டோடு தன் பயணத்தை முடித்துக்கொண்டது. ஆர்குட் தன் மூச்சை நிறுத்திக் கொண்டாலும், ஆர்குட்டின் நிறுவனர் புயுக்கோக்டன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை. உடனே இன்றைய ட்ரெண்ட்டிற்கு ஏற்ப ஹலோ நெட்வொர்க் என்னும் சோஷியல் மீடியாவை உருவாக்கி கம்பேக் கொடுத்துவிட்டார். கடந்த ஆண்டு இந்த ஆப்-ஐ சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்தியாவிலும் இதன் பீட்டா வெர்ஷன் கிடைக்கத் துவங்கிவிட்டது.

என்ன இருக்கிறது 'ஹலோ'வில்?

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்கள் அனைத்தும் உங்களைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையும் கொண்டுவந்து உங்கள் டைம்லைனில் கொட்டும். ஆனால் ஹலோ உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே உங்களிடம் காட்டும். இதற்காக ஆப்-ல் லாக்-இன் செய்தவுடனே உங்களுடைய சொந்த விருப்பங்களை பெர்சனோ என்ற பெயரில் வாங்கி வைத்துக்கொள்கிறது ஹலோ. இதற்காக பாலிவுட் ரசிகர், கிரிக்கெட் ரசிகர், விலங்குகள் பிரியர், போட்டோகிராபி என இருக்கும் பல பிரிவுகளில் ஏதேனும் ஓர் ஐந்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஐந்து பிரிவுகளின் கீழ், உங்கள் நண்பர்கள் மற்றும் மற்றவர்கள் செய்யும் போஸ்ட்டுகள் உங்கள் கண்ணில் படும். இந்த விருப்பங்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் விளையாட்டு என்ற ஒன்றையே கிரிக்கெட், கால்பந்து, புட்பால் என்றெல்லாம் பிரித்து வைத்திருப்பதால் ஐந்தே ஐந்திற்குள் உங்கள் மொத்த விருப்பங்களையும் அடக்குவது கஷ்டம்தான். இதனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்பது மட்டுமே ஆறுதல்.

கர்மா இஸ் பூமராங் என்பார்கள். அதை நிரூபிக்கவோ என்னவோ... பூமராங் வடிவத்திலேயே கர்மா என்னும் ஓர் ஆப்ஷனைத் தந்துள்ளது ஹலோ. இந்த ஆப்-ல் உங்களுடைய நடவடிக்கைகளைப் பொறுத்து உங்களுக்கான கர்மா பாயின்ட்ஸ் வழங்கப்படும். இந்த பாயின்ட்ஸ்  மூலமாக ஆப்-ல் நிறைய புது வசதிகளைப் பயன்படுத்த முடியும். எனவே ஆப்-ஐ முதன்முதலாகப் பயன்படுத்துபவர்கள் யாருமே ஆப்-ன் முழுவசதிகளைப் பயன்படுத்த முடியாது. போஸ்ட், கமென்ட், லைக்ஸ் என உங்களது ஆக்டிவிட்டிகளைப் பொறுத்து உங்களின் லெவல் அதிகமாகிக் கொண்டே செல்லும்.

எப்படி செயல்படுகிறது?

வாட்ஸ்அப் போல, ஃபேஸ்புக் போல புதிதாக இணைபவர்கள் எடுத்தவுடன் 'ஹலோ'வை எளிதாகக் கையாள முடியாது என்பது இதன் மைனஸ். காரணம் ஜாட், டெக்ஸ்ட் ஜாட், கர்மா, பெர்சனோ என இதிலிருக்கும் ஆப்ஷன்கள் அனைத்துமே புதியவை. எனவே புதிதாக ட்விட்டர் அக்கவுன்ட் ஓபன் செய்துவிட்டு, திருதிருவேனே முழிப்பவர்களைப் போல, இதிலும் சில ஆரம்ப கால சிக்கல்கள் இருக்கும். மேலும் ஃபேஸ்புக், ட்விட்டர் என வகைவகையான டைம்லைன் பார்த்த நமக்கு மிகக் குறைவான அல்லது தேர்ந்தெடுத்த போஸ்ட்களை மட்டுமே காட்டுவதால் வெரைட்டி கொஞ்சம் குறைவு. ஆனால் இந்தியாவில் முழுமையாக அறிமுகம் ஆன பிறகு, பயனாளர்கள் அதிகரித்தால் இந்நிலை கொஞ்சம் மாறலாம். மேலும் உங்களைப் போலவே சிந்தனை கொண்ட நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள் என்பதால் இந்த பிளாட்பார்ம் புதிய அனுபவமாகவும் இருக்கும். 

இவை தவிர கம்யூனிட்டி, சாட் வசதி, நோட்டிஃபிகேஷன் டேப் என மற்ற சமூக தளங்களில் இருக்கும் அனைத்தும் இதிலும் இருக்கின்றன. ஃபேஸ்புக் போலவே இதிலும் நண்பர்களை இணைத்துக் கொண்டால், இன்னும் நிறைய ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. ஆப்-ன் இன்டர்ஃபேஸ், வேகம் இரண்டும் அசத்துகின்றன. இப்படி ஆர்குட் நிறுவனரிடமிருந்து வந்த இன்னொரு ஆப் என்பதைத் தாண்டியும் சொல்ல சில ப்ளஸ் பாயின்ட்கள் இதிலிருக்கின்றன. சமீபத்தில் புயுக்கோக்டன் அளித்துள்ள ஒரு பேட்டியில் "இந்த ஆப் இந்தியர்களுக்கு அதிகம் பிடிக்கும்" எனக் கருத்து தெரிவித்துள்ளார். பிரேசிலுக்கு அடுத்து, ஆர்குட் தளத்திற்கு அதிக பயனாளர்கள் இருந்த நாடு இந்தியாதான். ஆனால் அதே வரவேற்பு 'ஹலோ'விற்கு கிடைப்பது மிகக் கடினம்!

இணையதளம் : http://www.hello.com/en/index.html