Published:Updated:

உங்கள் கணினிக்குள் ஹேக்கர்கள் நுழைய சப்டைட்டில் மட்டுமே போதும்! #Alert

உங்கள் கணினிக்குள் ஹேக்கர்கள் நுழைய சப்டைட்டில் மட்டுமே போதும்! #Alert
உங்கள் கணினிக்குள் ஹேக்கர்கள் நுழைய சப்டைட்டில் மட்டுமே போதும்! #Alert

மக்குத் தெரியாத மொழியிலுள்ள திரைப்படத்தை சப்டைட்டில் இல்லாமல் பார்த்தால், திரைப்படத்தின் ஒரிஜினல் கதைக்கும் நாம் புரிந்துகொண்ட கதைக்கும் இடையே குறைந்தது ஐம்பது வித்தியாசங்களாவது கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை சப்டைட்டில் இருந்தால் ஸ்க்ரீனுக்கு மேலும், கீழும் கண்கள் அலைபாய்ந்து காமெடிக் காட்சிக்குக் கூட சில நொடிகள் கழித்துதான் ரியாக்ட் செய்து கொண்டிருப்போம். ஆனால் இவை இரண்டையும் தவிர்த்து, சப்டைட்டிலால் தற்போது புதிதாக இன்னொரு பிரச்னை முளைத்திருக்கிறது.

கணினி, லேப்டாப், டேப்லட், மொபைல் என அத்தனை டிவைஸ்களையும் சப்டைட்டில் ஃபைல் மூலமாக ஹேக் செய்ய முடியும் என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். சப்டைட்டிலைப் பொறுத்தவரை 25-க்கும் அதிகமான ஃபார்மெட்கள் இருக்கின்றன. VLC உள்ளிட்ட பல வீடியோ ப்ளேயர்களும் 25-க்கும் மேற்பட்ட சப்டைட்டில் ஃபார்மெட்களை சப்போர்ட் செய்கின்றன. சப்டைட்டில்களுக்காகவே பல இணையதளங்கள் செயல்படுகின்றன. திரைப்படத்துக்கு ஏற்ற சப்டைட்டிலை நமக்கு விருப்பமான மொழியில் இங்கு தேடிக் கண்டுபிடித்து டவுன்லோடு செய்து பயன்படுத்துவோம். திரைப்படத்தின் பெயர், ஃபார்மட் போன்றவற்றிற்கு ஏற்ப, சப்டைட்டிலைத் தேடி டவுன்லோடு செய்யும் வேலையை சில வீடியோ ப்ளேயர்கள் செய்கின்றன.

சப்டைட்டில் ஃபைலில் சில ஹேக்கிங் கோட்களை எழுதி, ஹேக்கர்கள் இணையதளங்களில் உலவ விடுவதாக வைத்துக் கொள்வோம். அந்த ஃபைல்களை நாம் டவுன்லோடு செய்து ப்ளேயர் மூலமாகத் திறந்ததும், அதிலுள்ள ஹேக்கிங் கோட் தனது வேலையைத் தொடங்கும். சப்டைட்டிலை டவுன்லோடு செய்த கணினியின் முழுக் கட்டுப்பாடும் இணையம் மூலமாக ஹேக்கரின் கைக்கு வரும். அதன்பின், ஹேக்கர் ப்ரெளசரைத் திறந்து தீங்கு தரக்கூடிய மால்வேர் போன்றவற்றை கணினியில் இன்ஸ்டால் செய்யும் அபாயம் இருக்கிறது. மேலும், கணினியிலுள்ள அத்தனைத் தகவல்களையும் அக்சஸ் செய்யும் உரிமையும் கூட ஹேக்கருக்குச் சென்றுவிடும். இதனால் இ-மெயில் பாஸ்வேர்டிலிருந்து, நெட் பேங்கிங் விவரங்கள் வரை அத்தனையையும் ஹேக்கர் தெரிந்துகொள்ள முடியும். கணினி, லேப்டாப் மட்டுமின்றி மொபைலில் கூட இந்த வழியில் சைபர் தாக்குதல் செய்ய முடியும் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். பாதுகாப்பு நிறைந்தது எனக் கருதப்படும் ஐபோன் கூட ஹேக்கர்களிடமிருந்து தப்புவது கடினம்தான்.

ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள்கள் சப்டைட்டில் ஃபைல்களை வெறும் டெக்ஸ்ட் ஃபைலாக மட்டுமே கருதும் என்பதால், அதில் எவ்வித ஆபத்தும் கிடையாது என்ற முடிவுக்கு வரும். எனவே, சப்டைட்டில் மூலமாக ஹேக்கிங் கோட் அனுப்பப்பட்டால் ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள்கள் சுலபமாக ஏமாறக்கூடும். சப்டைட்டில்களுக்கென இருக்கும் இணையதளங்களில், ஹேக்கிங் கோட் எழுதப்பட்ட சப்டைட்டில் ஃபைலை மிக எளிதாகப் பரப்புவதோடு, அவற்றிற்கு டாப் ரேட்டிங் கிடைக்கச் செய்யவும் ஹேக்கர்களால் முடியும். அதன் ஆபத்து தெரியாமல் பயனாளர்கள் டவுன்லோடு செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது. 

இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்த சில தொழில்நுட்ப வல்லுநர்கள், இதன் ஆபத்து குறித்து வீடியோ ப்ளேயர் மென்பொருள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினர். சுதாரித்துக் கொண்ட பல நிறுவனங்கள் உடனடியாக இந்தக் குறைபாட்டை சரிசெய்து, புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளன.

மென்பொருள் நிறுவனங்கள் வெளியிடும் செக்யூரிட்டி பேட்ஜ் ஃபைல்களை உடனடியாக இன்ஸ்டால் செய்வது நல்லது. ஏனென்றால், சமீபத்தில் உலகையே அதிரவைத்த 'வான்னாக்ரை' ரான்சம்வேர் பாதிக்காத வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு செக்யூரிட்டி பேட்ஜ் வெளியிட்டிருந்தது. இதை நிறுவாததால்தான் லட்சக்கணக்கான கணினிகள் ரான்சம்வேரால் பாதிக்கப்பட்டன என்பதை மறக்க வேண்டாம்.

ஒருவேளை சப்டைட்டில் மூலமாக ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் ஈடுபட்டால், அதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். ஏனென்றால், VLC ப்ளேயர் மட்டுமே 234 கோடிக்கும் மேலாக இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. நீங்கள் உங்கள் கணினியில் VLC ப்ளேயர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்தப் பிரச்னை சரி செய்யப்பட்ட VLC ப்ளேயர் லேட்டஸ்ட் வெர்ஷனை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் சைபர் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

அடுத்த கட்டுரைக்கு