Published:Updated:

பட்ஜெட் குறைத்து மகிழ்ச்சியைக் கூட்டலாம் டெக்னாலஜியால்..! எப்படி?

பட்ஜெட் குறைத்து மகிழ்ச்சியைக் கூட்டலாம் டெக்னாலஜியால்..! எப்படி?
பட்ஜெட் குறைத்து மகிழ்ச்சியைக் கூட்டலாம் டெக்னாலஜியால்..! எப்படி?

பட்ஜெட் குறைத்து மகிழ்ச்சியைக் கூட்டலாம் டெக்னாலஜியால்..! எப்படி?

90களின் இறுதி அது. திண்டிவனத்தைச் சேர்ந்த நான் சென்னையில் டிப்ளோமா படித்துக் கொண்டிருந்தேன். வார இறுதியில் ஊருக்குச் சென்றுவிடுவேன். என்னுடன் தங்கியிருந்த மற்ற நண்பர்கள் தென்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறைதான் ஊருக்கே செல்வார்கள். தொலைபேசியும் அடிக்கடி பேச மாட்டார்கள். அப்போது, அதெல்லாம் அதிகச் செலவு எடுக்கும் விஷயங்கள். ஒரு குடும்பத்தின் வருமானத்தில் தொலைபேசியும், பயணச் செலவும் மிக முக்கியமான செலவாக இருந்த காலம் அது.

சென்ற மாதம், நான் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு ஒருமுறை சென்று வரலாம் என நினைத்தேன். அங்கு கேட்டால், நெல்லை மாணவனே இப்போது மாதம் ஒருமுறை வீட்டுக்குச் செல்கிறார். தொலைபேசியெல்லாம்... செலவுப் பட்டியலிலே வரவில்லை. தினமும் அம்மாவுடன் வீடியோ காலிங் செய்கிறார்கள். அல்லது வாய்ஸ் நோட்டில் ஒரு நாளையச் சம்பவங்களை அடுக்கி விடுகிறார்கள். வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது. அதற்கான செலவும் குறைந்திருக்கிறது. காரணம் டெக்னாலஜியின் வளர்ச்சி.

இங்கே, தமிழ் மாஸ் படங்களைக் கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். “இந்த அநியாயத்தை எல்லாம் தட்டிக் கேட்க ஒருவன் வருவாண்டா” என்றதும் புழுதி பறக்க ஹீரோ அறிமுகம் ஆவாரே... அப்படி உலகுக்கு வந்த சூப்பர் ஹீரோதான் டெக்னாலஜி. டெக்னாலஜி நம் வாழ்வை சிக்கல் ஆக்கவில்லை. சூப்பர் ஆக்கியிருக்கிறது. எளிதாக்கியிருக்கிறது. முக்கியமாக மலிவாக்கியிருக்கிறது. நம்ப முடியவில்லையா?

50 வருடங்களுக்கு முன்பு ஒரு சராசரி இந்தியன் அவன் வருமானத்தில் கீழ்வரும் விசயங்களுக்கு செலவழித்ததில் இன்று கால்வாசி கூட செலவழிக்கவில்லை என்று சொன்னால் ஏற்பதற்கு கொஞ்சம் கடினம்தான். 

  • வீடு  
  • பயணச் செலவு
  • கல்விக்கட்டணம்
  • பொழுதுபோக்கு செலவு
  • செய்தி ஊடகங்கள், பத்திரிகைகள்
  • ஆடைகள்
  • உடல்நலம்
  • தொலைத்தொடர்பு

எப்படி என்பதையும் பார்த்துவிடுவோம்.

வீடு:

1000 சதுர அடியில் ஒரு வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? இடத்தில் விலையை தனியே வைப்போம். கட்டுவதற்கு மட்டுமென்றால் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஆகும் என்கிறது இன்றைய கட்டடத்துறை. இது ஒரு இந்தியக் குடும்பத்தின் 12 வருட வருமானம் என்கிறது இந்திய அரசின் புள்ளி விவரங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விலை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், அதே 12 வருட வருமானம் என்பதில் மாற்றமில்லை.

இங்குதான் டெக்னாலஜியை துணைக்கு அழைக்கிறேன். பாரம்பர்ய கான்க்ரீட் கட்டடங்களுக்கு மாற்றாக ஜிப்ஸம் வீடுகள், ஸ்டீல் வீடுகள், 3டி பிரிண்டிங் வீடுகளை அறிமுகம் செய்கிறது தொழில்நுட்பம். அது, பாதுகாப்பையும், கட்டடத்தின் பலத்தையும் கொஞ்சமும் குறைக்காமல் அதே நேரம் விலையையும், கட்டடம் கட்டத் தேவையான நேரத்தையும் குறைக்கிறது. 5-6 லட்சத்தில் அதே 1000 சதுர அடி வீட்டை கட்டலாம் என்கிறது. அதாவது ஒரு சராசரி இந்தியனின் 2 ஆண்டு வருமானத்தில் வீடு கட்ட உதவுகிறது. 

பயணச்செலவு

1967இல் டாக்ஸி என்பது பணம் படைத்தவர்களின் வாகனம். சராசரி நடுத்தரவர்க்கத்துக்கு ரிக்ஷாவே ஆடம்பரம். ஆனால் இன்று தொழில்நுட்பம் உபேர், ஓலா என்று தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு கட்டணத்தைக் குறைக்க கார் பயணம் குறைந்த விலையில் எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது.

அடையாறில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார் அந்தப் பாட்டி. அங்கிருந்து அவர் கொட்டிவாக்கம் பகுதியில் இருக்கும் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். 4 கிமீ தூரம். இரவு 10 மணிக்கு மேல் பேருந்து கிடைப்பதும் சிரமம்தான். ஷேர் ஆட்டோவில் சென்றாலும் இரவு நேரம் என 20 ரூபாய் ஆகும். அங்கிருந்து 1 கிமீ நடக்க வேண்டும். அந்தப் பாட்டி ஷேர் டாக்ஸியில் ஒருநாள் சென்றார். 40 ரூபாய்தான். ஆனால், வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டார். அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்டார். 

இன்று ஆயிரம் கி.மீ பயணம் என்றால் விமானக்கட்டணம் 2000 ரூபாயில் கூட முடிகிறது. இன்னும் இருபது வருடத்தில் சூரியஒளியில் இயங்கும் வாகனங்கள் வரும்போது இலவச பயணம்கூட சாத்தியமே. அதற்கு கட்டணமாக அவர்களின் தொலைக்காட்சியில் ஓடும் விளம்பரத்தை பார்த்தால் மட்டுமே போதும் என்று கூட வரலாம். 

கல்விக்கட்டணம் 

தமிழ்நாட்டை பொறுத்தவரை, கல்வி காமராஜர் காலத்திலேயே இலவசமாக்கப் பட்டுவிட்டது. ”என்னப்பா இப்படி சொல்ற... ஸ்கூல் பீஸ் ஒரு லட்ச ரூபாய் தெரியுமா” என்று கேட்பீர்கள் தெரியும். இது அடிப்படை கல்வியின் கட்டணம் அல்ல. ஆசையின் கட்டணம். 50 வருடத்துக்கு முன்பு வர்க்கப்பாகுபாடு இல்லாமல் கொடுக்கப்பட்ட கல்வி இன்றும் இலவசம்தான். இன்று தமிழ்நாட்டில் அரசாங்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விகூட கொடுக்கப்படுகிறது. நம் கௌரவத்தின் விலைதான் ஆண்டுக்கு ஒரு லட்சம். ஸ்மார்ட் வகுப்புகள் வேகமாக பரவி வருகிறது. எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே நினைத்தத்தைப் படிக்கும் சூழல் நிச்சயம் வரும். அதற்கு நாம் தரப்போகும் விலை ஒரு நாளில் நான் உண்ணும் காற்றடைத்த சிப்ஸின் விலை அளவே இருக்கும்.

பொழுதுபோக்கு

ரேடியோ உள்ளங்கையில் இருந்து விரலிடுக்குக்கு வந்துவிட்டது. ஒரு வாரத்தில் தொலைக்காட்சியில் மட்டும் 520 படம் இலவசமாக பார்க்கமுடியும். அதற்கு நீங்கள் செலவழிக்கும் தொகை மாதம் 150இல் இருந்து 300க்குள் அடங்கிவிடுகிறது. இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கேபிள் தொலைக்காட்சி ஒழிந்து இணைய தொலைக்காட்சிகள் மட்டுமே இருக்கும். இப்போதே ஜியோ அந்த ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டது. 

“வீட்டுக்கு ஒரே ஒரு ஆப்ட்டிக்கல் ஃபைபர் கேபிள் வந்தால் போதும்” என்கிறார் டெக்னாலஜி ஆர்வலர் ராம். “அந்த பிராட்பேண்டு மூலமாகவே டி.வி, இணையம், தொலைபேசி என எல்லா வசதிகளும் வந்துவிடும். மாதம் 1000 ரூபாயில் 24 மணி நேரமும் தடையில்லை, அன்லிமிட்டெட் இசை, படங்கள், தொலைக்காட்சி என அனைத்துப் பொழுதுபோக்கும் சாத்தியம் ஆகும்” என்கிறார் ராம்.

ஆடைகள்

ஆடைகளைப் பொறுத்தவரை, அது பிரிட்டிஷ் காலத்திலேயே விலை குறைய ஆரம்பித்துவிட்டது. நாம் ஆடை வடிவமைப்புக்கும், பிராண்ட் என்ற பெயரில் விளம்பரத்துக்கும்தான் இன்று காசைக் கொடுக்கிறோம். பேஷன், பிராண்ட் என்ற பொதுபுத்தி இல்லாவிட்டால் எளிய ஆடைகளின் விலை மிகக்குறைவே. விளம்பரங்கள் தாங்கிய டீசர்ட்கள் பல இடங்களில் கொடுக்கப்படுவதை நாம் அறிவோம். இன்னும் பத்து வருடத்தில் ஆடி மட்டுமல்லாது சித்திரை முதல் பங்குனி வரை தள்ளுபடி விலையில் ஆடைகள் விற்கப்படலாம். 

உடல்நலம்

ஏற்கெனவே அரசு மருத்துவமனை இலவச சிகிச்சை கொடுத்தபோதும் நமது மத்திய, மாநில அரசுகள் மக்களை நிறைய மருத்துவ, விபத்து காப்பீட்டு திட்டங்களுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். போலியோ முதல் தட்டம்மை உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்கு தடுப்பூசி இலவசமாகவே போடப்படுகிறது. மேலும் ஒரு இருதய அறுவை சிகிச்சை என்றால் ஐந்து டாக்டர்கள் சுற்றிலும் நின்று செய்யும் காலம் மலையேறி வருகிறது. மைக்ரோ ரோபாட்டுகள் இன்னும் துல்லியமாக செய்து முடிக்கும். மருத்துவர்கள் அதை கணினி திரையில் இருந்து கண்காணிப்பது மட்டுமே. ஆக இதற்கு ஆகும் செலவும் மிக மிக குறையத் தொடங்கும்.

தொலைத்தொடர்பு

இன்று, ஸ்மார்ட் போனில் 4G கனெக்சன் போட்டுக்கொண்டு மணிக்கணக்கில் Skype, Facebook Messenger, Google Talk என்று எண்ணற்ற VOIP ஆப்கள் மூலம் பேசலாம். பேசி முடித்த பிறகு அவை கட்டணம் வசூலிப்பதில்லை மாறாக நல்லா பேசிருபீங்க Five Star ரேட்டிங் கொடுக்க முடியுமா என்று கெஞ்சுகிறது. இன்னும் பத்துவருடத்தில் சிம் போட்டு அலைபேசி எண்களை அழைத்து பேசும் காலமும் போய்விடும். எல்லா பொது இடங்களிலும் இலவச WIFI வந்துவிடும். இணையம் எங்கும் வியாபித்து இருந்தால் சிம்மே தேவையில்லை. ஒரு மொபைலும் அதில் ஏதேனும் ஒரு VOIP Service App இருந்தால் அமெரிக்காவோ ஆண்டிபட்டியோ இரண்டும் ஒரு தொலைவுதான்

கிட்டத்தட்ட ஆறுகோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்/வசதிகள் இன்று இலவசமாக கிடைக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். சரி. அப்படி என்றால் நாம் சம்பாதிப்பதெல்லாம் எதற்காக? எதற்குதான் செலவழிக்கிறோம்?

நாம் செலவழிப்பதெல்லாம் ஆசைக்குத்தான், தேவைக்கு அல்ல. ஆனால் இன்று ஆசையாக இருப்பது பத்து ஆண்டுகளில் அத்தியாவசியத் தேவையாக மாறி விடுகிறது. ஆகவே விலைவாசி விஷம் போல ஏறுகிறது என்று யாரேனும் சொன்னால் அவர்கள் ஆசைதான் அவ்வாறு ஏறுகிறது என்று சொல்லலாம்.

அடுத்த கட்டுரைக்கு