Published:Updated:

இனி தாவரங்களிடம் “ஹவ் ஆர் யூ” என்று பேசலாம்... பதில் பெறலாம்! #ProjectFlorence

இனி தாவரங்களிடம் “ஹவ் ஆர் யூ” என்று பேசலாம்... பதில் பெறலாம்! #ProjectFlorence
இனி தாவரங்களிடம் “ஹவ் ஆர் யூ” என்று பேசலாம்... பதில் பெறலாம்! #ProjectFlorence

கிளி பாஷை தெரியும்; செடி பாஷை தெரியுமா? அதென்ன செடி பாஷை என்று கேட்கிறீர்களா? தாவரங்களும் ரியாக்ட் செய்யும். அதெப்படி?

(Photo Credit: Project Florence)

இயற்கையின் மீது அதிக ஈடுபாடுள்ள ஆர்வலர்கள், தோட்டக்காரர்கள், விவசாயிகள் போன்றோரை கவனித்தால் தெரியும். மரம், செடி, கொடிகளுடன் ஒருவித வசை மொழி பேசுவார்கள். உதாரணமாக வறட்சி காலங்களில் ‘தெனமும் உனக்கு தண்ணி காட்டுறேனே; என் கண்ணுல மழைய காட்ட மாட்டியா?” , “இத பாரு... இப்படியே பண்ணுன.. அப்புறம் அவ்ளோ தான் சொல்லிபுட்டேன்” என்றெல்லாம் புலம்புவார்கள். இதற்கு தாவரங்கள் எந்த பதில்களும் கொடுப்பதில்லை. அதனால் எல்லா வகையிலும் இயங்குகின்ற தொழில்நுட்பங்கள் இதன் பக்கமும் கொஞ்சம் சாய்ந்துள்ளன.

மைக்ரோசாஃப்ட் ஸ்டுடியோவின் 99-வது நிகழ்வில் பணிபுரிகின்ற ஒரு கலைஞர் ஹெலன் ஸ்டைனர். இவர் தாவரங்களிடமிருந்து வெளிவரும் மின்வேகத்தையும் ரசாயனக் குறியீடுகளையும் தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார். . Project Florence எனப்படும் இவரது செயலியில் ஒரு செய்தியை தட்டச்சிட அது தாவரங்களுக்கு புரியும் பாஷையில், ஒளி மூலம் கடத்தப்படும். அதற்கு தாவரங்கள் பதில் அளிக்கும். தாவரங்கள் தரும் கெமிக்கல் பதில்களை Project florence மனிதர்களுக்கு புரியும் பாஷைக்கு மாற்றித் தரும். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனப் பொறியியலாளர்கள் சுற்றுச்சூழலுடன் மனிதர்களுக்கு இணைப்பை ஏற்படுத்துவதற்காகப் புதுமையான இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது பல்வேறு காரணிகளால் பிரிந்து கிடக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் என்கிறார்கள். எஞ்சினியர்களும், விவசாயிகளும், மென்பொருள் வல்லுநர்களும் கூட்டாக செய்யும் புராஜெக்ட் இது.  இந்த மாதிரியான கூட்டு முயற்சிதான் டெக்னாலஜியின் வளர்ச்சிக்கு முக்கியம் என்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல்வர் ஆஸ்டா ரோஸ்வே.

ஈக்கள் தனது உடலில் உள்ள சிறிய அளவிலான முடிகளைப் பயன்படுத்தி மலர்கள் அனுப்பும் மின் குறியீடுகளை புரிந்துகொள்ளும். தாவரங்களும் பலவிதமான ரசாயனக் குறியீடுகளை விலங்குகளுடன் உரையாடவும் எச்சரிக்கைக்காகவும் பயன்படுத்தும்.

தாவரங்களுக்குத் துன்பம் ஏற்பட்டாலோ அவை பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலோ அவை ரசாயனங்களை வெளியேற்றி மற்ற தாவரங்களை உதவிக்கு அழைக்கும். அல்லது எச்சரிக்கை விடுக்கும். இந்த ரியாக்‌ஷன்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறார்கள். தாவரத்தின் ஒவ்வொரு கெமிக்கல் வெளியீடுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதை Project florence பயன்படுத்துகிறது. Project Florence  பயன்படுத்தி ஒருவர் தாவரத்துக்கு குறுஞ்செய்தியை அனுப்பலாம். பதிலுக்கு தாவரங்கள் வெளியிடும் கெமிக்கல் பதிலை சிஸ்டம் மொழிப்பெயர்த்து சொல்லும். 

நாம் பேசுவது ஒன் வே என்றாலும், தாவரங்களுடன் பேச முடியும் என்பதே சுவாரஸ்யமானது. தாவரங்கள் பேசாது. தனக்கு சுற்றி இருப்பதற்கு ரியாக்ட் செய்யும். அதை வைத்து அத்தாவரத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். அந்தச் செடி சந்தோஷமாக இருக்கிறதா அல்லது நம்மைப்போல அது மன அழுத்தத்தால் தவிக்கிறதா என்பதை கூட அறிய முடியும்.  

நம் முன்னோர்கள் இதையெல்லாம் தங்களது நுண்ணர்வு கொண்டு செய்தார்கள். இயற்கையை விட்டு விலகிச்செல்லும் இந்தத் தலைமுறைக்கு தொழில்நுட்பம் அதை சாத்தியாமாக்குகிறது. எது எப்படியோ... மீண்டும் நாம் இயற்கயோடு உரையாட வேண்டும். அது அவசியமானது.

 -பா.பிரியதர்ஷினி (மாணவப் பத்திரிக்கையாளர்)